Wednesday, September 30, 2020

ஜட்ஜய்யா அது ரொம்ப தப்புங்க

 


காலையில் எழுதிய பதிவிலேயே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வருமே தவிர நீதி கிடைக்காது என்று எழுதியிருந்தேன்.

 ஆகவே இன்றைய தீர்ப்பு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ கொஞ்சமும் அளிக்கவில்லை.

 சதாசிவம், ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொபட், அருண் மிஷ்ரா போன்றவர்கள்  நீதித்துறையில் நிரம்பியுள்ள  இன்றைய சூழலில், அத்வானிக்கும் உமா பாரதிக்கும் தண்டனை கொடுத்திருந்தால் அதுதான் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்திருக்கும்.

 அதே நேரம் “பாஜக தலைவர்கள்  மசூதி இடிப்பை தடுக்க முயன்றார்கள்” என்று ஜட்ஜய்யா சொல்லியதைத்தான் ஏற்க முடியவில்லை.

 இந்த தீர்ப்பிற்கே நிச்சயம் பணி ஓய்வுக்குப் பின்பு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கிற போது  தேவையில்லாத பிட்டுக்கள் அவசியமே இல்லையே!

 காலை எழுதியிருந்த பதிவைப் படித்த பின்பு ஒரு தோழர் அலைபேசியில் அழைத்து 99 % நீதித்துறை கறை படிந்ததாகி விட்டது. மிச்சம் இருக்கிற 1 % ம்தான் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றார்.

 அந்த 1 % நம்பிக்கை கூட இனி அவசியமில்லை என்று இன்று சொல்லி உள்ளார்கள். அவ்வளவுதான் . . .

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்காது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்பதும் உண்மையே . . .

 

Tuesday, September 29, 2020

அயோத்தியில பாபர் மசூதி இருந்ததா?

 


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச் செயலுக்கான வழக்கில் இன்று தீர்ப்பு வரப் போகிறது.

தீர்ப்பு வரும். ஆனால் நீதி வருமா?

பாபர் மசூதி இடத்தை கோயில் கட்ட தாரை வார்த்துக் கொடுத்த தீர்ப்பில் மசூதியை இடித்தது குற்றச் செயல். கிரிமினல் நடவடிக்கை என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றச் செயல் செய்தவர்களிடமே இடத்தை ஒப்படைத்தது நீதிமன்றம்.

இன்றுள்ள சூழலில் அத்வானிக்கு எதிராக தண்டனை வரும் என்ற எதிர்பார்ப்பு சிறிதும் இல்லை. 

"அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததா என்ன?"

என்று கேட்காமலும்

"பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் கிராஃபிக் வேலை" 

என்று சொல்லாமலும் 

இருந்தாலே அதுவே பெரிய விஷயம்.

சேகர் ரெட்டி போன்ற சின்ன லெவல் களவாணிகளே தப்பிக்கையில் அத்வானி மட்டும் மாட்டிக் கொள்வாரா என்ன!


அப்போ அந்த பத்து கோடி ரூபாய்?

  


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலராக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் டிசம்பர் 2016 ல் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். கணக்கில் வராத பணமாக ரொக்கமாக ரூபாய் நூறு கோடியும் தங்கமாக நூறு கிலோவும் கைப்பற்றப்பட்டது என்று அவரை கைது செய்த போது சி.பி.ஐ அறிக்கை கொடுத்தது.

 நூறு கோடி ரூபாய் ரொக்கமும் நூறு கிலோ தங்கமும் ஏன் கணக்கில் வராத பணம் என்பதற்கு எந்த கணக்கும் (அதாவது ஆதாரம்) எங்களிடம் இல்லை என்று சொல்லி சி.பி.ஐ இன்று வழக்கை மூடி விட்டது.

 சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த அதே வேளையில் தமிழகத்திற்கு மிகப் பெரிய இழிவாக அன்றைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறையிலேயே சோதனை நடந்தது.

 ராம் மோகன் ராவ் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் பணி செய்யவும் பணி ஓய்வு பெறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போதே சேகர் ரெட்டி கேஸ் என்ன ஆகும் என்பது தெரிந்து விட்டது. ஆகவே சி.பி.ஐ முடிவில் அதிர்ச்சி அடையவோ, ஆச்சர்யப்படவோ ஏதுமில்லை.

 என்னுடைய கோரிக்கை எல்லாம் ஒன்றுதான்.

 சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற நூறு கோடி ரூபாய் ரொக்கத்தில் பத்து கோடி ரூபாய் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள். அதாவது ஐந்து லட்சம் சிப்பு வைக்கப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுத்தாள்கள்.



 எந்த சமயத்தில் ?

 நிலைமை சீரடையவில்லையென்றால் என்னை உயிரோடு எரியுங்கள் என்று மோடி காலக்கெடு கொடுத்திருந்த ஐம்பது நாட்களுக்குள்.

 ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கூட பார்க்க முடியாமல், பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பாக பைத்தியக்காரர்கள் போல நாம் கால் கடுக்க நின்று, ஏடிஎம், ஏ.டி.எம் மாக திரிந்து கொண்டிருந்த நேரம்.

 வங்கியில் பணம் மாற்ற வந்தவர்களுக்கு அடையாள மை வைத்து அசிங்கப் படுத்திய காலம் அது.

 சேகர் ரெட்டி மேல சி.பி.ஐ. கேஸ் நடத்து இல்ல நடத்தாம அவனுக்கு மறுபடியும் அறங்காவலர் பதவி கொடு.

அது பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

 ஆனா, பத்து கோடி ரூபாய்க்கு ஐந்து லட்சம் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்கு எப்படி வந்தது என்று

 எங்களுக்கு தெரிஞ்சே ஆகனும். ஆமாம், தெரிஞ்சே ஆகனும்.  

ஒரு நாள் போதுமா -எஸ்.பி.பி குரலில்

 இன்றைய காலைப் பொழுது இனிமையாய் தொடங்கியது. 



பாலமுரளிக்கிருஷ்ணாவின் அமரத்துவம் அடைந்த :ஒரு நாள் போதுமா" பாடலை அதே திரைக் காட்சியுடன்  எஸ்.பி.பி குரலில் அளிக்கும் ஒரு காணொளியை ஒரு வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்கள்.

என்ன ஒரு அற்புத உணர்வு!

பாலமுரளி பாடிய ஒரிஜினலுக்கும்  எஸ்.பி.பி பாடியதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றாலும் ஒரு முக்கியமான அம்சத்தில் வேறுபாடு இருந்தது.

திருவிளையாடல் படத்தின் ஹேமநாத பாகவதர் பாத்திரத்தின் தெனாவெட்டை பாலமுரளி பாடலிலும் கொண்டு வந்திருப்பார். எஸ்.பி.பி பாடலில் அந்த தெனாவெட்டு இல்லாமல் குழைந்திருப்பார்.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அக்காணொளியை பகிர்ந்து கொண்டுள்ளேன்.





Monday, September 28, 2020

ஆஜான் ரோலில் சாரு . . .

 


வழக்கமாக கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த எந்த ஒரு ஆளுமை காலமானாலும் அவரை எப்படி புளிச்ச மாவு அசிங்கப்படுத்தப் போகிறதோ அல்லது அவரை முன் வைத்து எத்தனை பேரை இழிவுபடுத்தப் போகிறதோ என்ற அச்சமும் கலக்கமும் வரும்.

நல்ல வேளையாக எஸ்.பி.பி க்கு அவரது படத்தைப் போட்டு அஞ்சலி என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு விட்டார். பிறகு ஒரு இரண்டு நாள் கழித்து எஸ்.பி.பி பாடிய முதல் மலையாளப் பாட்டின் வரிகளையும் தமிழ் அர்த்தத்தையும் போட்டு அமைதியாக இருந்து விட்டார்.

திரைத்துறையோடு வில்லங்கம் செய்ய ஆஜான் விரும்ப மாட்டார் என்பது வைரமுத்து சர்ச்சையில் அடித்த பல்டியிலேயே புரிந்தது. 

என்ன இருந்தாலும் துட்டு முக்கியமல்லவா! ஐந்து நட்சத்திர விடுதி வசதி இன்னும் முக்கியமல்லவா! அதனால் ஆஜான் உஷாராக இருந்து விட்டார். 

ஆனால் அந்த ரோலை சாநி எனப்படும் சாரு நிவேதிதா எடுத்துக் கொண்டு விட்டார். 

ஜெமோவால் பேச முடியாத சந்தர்ப்பங்களில் அவர் குரலாக சாநி இருந்திருக்கிறார். 

எஸ்.பி.பி இறந்து போனதற்கு எழுத்தாளர்கள் ஏனய்யா உருகி உருகி எழுதுகிறீர்கள்? என்பதுதான் அவரது பிரச்சினையாம். 

சாநியின் பொறுமல் கீழே உள்ளது.


என் குழப்பம் சந்தேகம் எல்லாம் என்னவென்றால், ஒரு பக்கம் புதுமைப்பித்தன் பாரதி என்று உச்சத்தில் நிற்கிறீர்கள்.  இன்னொரு பக்கம் சினிமா பாட்டு என்ற மட்டரகப் பொழுதுபோக்கில் கிடக்கிறீர்கள்.  கிடங்கள்.  ஆட்சேபணையே இல்லை.  நானும் அவ்வப்போது கிடப்பேன்.  ஆனால் இதுவே சுவாசம் என்கிறீர்கள்.  என் உயிரே போய் விட்டது என்கிறீர்கள்.  என் வாழ்க்கையே போய் விட்டது என்கிறீர்கள்.  என் ஆன்மாவே கரைந்து விட்டது என்கிறீர்கள்.

எழவு வீட்டில் ஏகடியம் பேசக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவன் அல்ல நான்.  ஆனால் ஒரு பாடகரின் மறைவை  உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது எது?  சொல்லுங்கள்.  நானும் உங்கள் துக்கத்தோடு சேர்ந்து கொள்கிறேன்.  பாமரர்களைப் போலவே காமன்மேன்களைப் போலவே உங்களுக்கும் சினிமாதான் உயிர்மூச்சு.  சினிமாதான் உங்கள் மதம்.  கலை உன்னதம் என்று சொல்வதெல்லாம் வெறும் பகட்டு.  உங்களையும் பாமரரையும் பிரிப்பது கலை ரசனை அல்ல. 

தி. ஜானகிராமனோ, எம்.வி. வெங்கட்ராமோ, க.நா.சு.வோ, ஆதவனோ, ந. பிச்சமூர்த்தியோ, கு.ப. ராஜகோபாலனோ, சுந்தர ராமசாமியோ, புதுமைப்பித்தனோ யாருமே இப்படி வெகுஜன ரசனை சார்ந்த, பாமர ரசனை சார்ந்த பிரமுகர்கள் காலமாகும்போது இப்படி “என் உயிர் போச்சே” என அழுததில்லையே?  ஆனானப்பட்ட காந்திக்கே அவர்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?  காரணம், அப்போது தி. ஜானகிராமனின் ரசனை அரியக்குடி ராமானுஜ அய்யங்காராக  இருந்தது.  சினிமாவின் டம்குடப்பாவாக இல்லை.  

நான் புகார் சொல்லியிருப்பது எழுத்தாளர்களை.  ஒரு சினிமா பாடகர் இறந்து போனால் அதற்கு இலக்கியவாதி கவிதை எழுதுகிறார்.  சிற்பி சிற்பம் உருவாக்குகிறார்.  ஓவியர் ஓவியம் திட்டுகிறார்.  அப்படியானால் நீங்கள் ஏன் ஐயா பாப்லோ நெரூதா, பாரதி என்றெல்லாம் சொல்கிறீர்கள்?  பட்டுக்கோட்டை பிரபாகர் வழியில் எழுத வேண்டியதுதானே?  `கலையில் மேன்மையானது என்று இல்லையா?  எப்போதும் சினிமா பாட்டுதானா? 

என் புகார் அத்தனையும் எழுத்தில் உன்னதத்தைத் தேடி இசையில் டம்குடப்பாவோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான எழுத்தாளர்கள் மீதுதான்.

ஒற்றை வாசகத்தில் சொல்ல வேண்டுமென்றால்

ஏராளமான மக்கள் நேசிக்கும் ஒரு கலைஞன் மீதான பொறாமையில் சர்ச்சையை உருவாக்கி ஒளி வட்டத்தை தன் மீது பாய்ச்ச முயலும் மட்டமான தந்திரம். 

ஆமாம். காமன் மேனை நீங்கள் என்ன ஒசத்தி? ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா அல்லது குறைந்த பட்சம் வாலாவது இருக்கிறதா?

சென்னை புத்தக விழாவிலேயே இவரை யாரும் சீண்டவில்லை என்பதற்கு நேரடி சாட்சியம் நான். 

இந்த படித்தால் அந்த சம்பவம்  என்னவென்று உங்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியே எழுதிக் கொண்டிருந்தால் மேலே சொன்ன சம்பவம் நடந்ததற்கு இரண்டு  வருடங்கள் முன்பு சென்னை புத்தக விழாவில் நடந்ததாக இவர் கதை விட்ட சம்பவத்தை  காமன் மேன்கள் யாராவது செய்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.




மாரிதாஸ் மேல போடுங்கய்யா வழக்கு

 


கொஞ்ச நாள் அடங்கியிருந்த மாரிதாஸ் மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டான். 

இது அவன் போட்டுள்ள பதிவு.








இதிலே அவன் என்ன அயோக்கியத்தனம் செய்துள்ளான் என்பதை வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் வார்த்தையிலேயே சொல்கிறேன்.


Administrator என்பது நீதிமன்றம் நியமிக்கும் பதவி.

அவ்வாறான ஒரு கிறித்துவ ட்ரஸ்ட்டின் Administrator ஆக நீதிபதி( ஓய்வு) ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனே, இந்த போர்டு தாஸ் எனும் மாரிதாஸ்..அவரை கிறித்துவ கைக்கூலி என பதிவிட்டுள்ளான்.
நீதிபதி ஹரிபரந்தாமன், எம்.ஜி. ஆருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில் உள்ள ஜானகி கலைக்கல்லூரி நிர்வாகத்திற்கும் Administrator ஆக நியமிக்கப்பட்டவர். எனவே அவர் அதிமுக வா?
இந்த நாயை கைது செய்ய நீதிபதி அவர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவன் நீதிபதி ஹரி பரந்தாமனை மட்டுமல்ல, அவரை அந்த பொறுப்பில் நியமித்த சென்னை உயர் நீதி மன்றத்தையுமே சேர்த்து இழிவு படுத்தி உள்ளான்.

இதுதான் உண்மையில் நீதிமன்ற அவமதிப்பு.

இதற்குத்தான் அவமதிப்பு வழக்கு போட்டு அவனை உள்ளே தள்ள வேண்டும்.

பிரஷாந்த் பூஷண், சூர்யா ஆகியோர் மீது பாய்பவர்கள், இவனை ஏன் எதுவும் சொல்வதில்லை.

ஆதிசேஷன் மீது பேப்பர் வெயிட்டை எறியும் அளவிற்கான கோபம் எல்லாம் திரைப்படங்களில் மட்டுதான் சாத்தியம் போல . . .

பிகு: மாரிதாஸுக்கெல்லாம் மரியாதை கொடுக்க என் விரல்கள் ஏனோ அனுமதிக்கவில்லை. அதுவே ஸ்பான்டேனியஸாக அவன், இவன் என்றுதான் தட்டச்சுகிறது. இருந்தாலும் தோழர் பிரதாபன் பதிவிலிருந்த எச்.ராசா பிரபல வார்த்த ஒன்றை எடுத்து விட்டேன்






மேகக் கூட்டத்திற்கு நடுவே

 சற்று முன் எடுத்த படம்



Sunday, September 27, 2020

பாடல்களில் அவர் ஸ்டைல் . . .

 


ரஜினிகாந்த்தின் சிறப்பம்சமாக எல்லோரும் சொல்வது அவருடைய வேகத்தையும் ஸ்டைலையும்.

அவரது பாடல்களிலும் அந்த வேகமும் ஸ்டைலும் இருக்கும். அதை அளித்தது எஸ்.பி.பி

ரஜினிக்கு எஸ்.பி,பி குரல் கொடுத்த பதினைந்து பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்


விழியிலே மலர்ந்தது



மை நேம் இஸ் பில்லா



ராகங்கள் 16 உருவான வரலாறு



ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்



சந்தனக் காற்றே



விடிய விடிய சொல்லித்தருவேன்



நம்ம ஊரு சிங்காரி



வா வா பக்கம் வா



காவிரியே கலைக்குயிலே கண்மணியே வா வா



காதலின் தீபம் ஒன்று



ஆண் என்ன? பெண் என்ன?



ராக்கம்மா கைய தட்டு



கொஞ்சி கொஞ்சி அலைகள் மோத



பல்லேலக்கா



மரணம் மாஸு மரணம்










ராஜாவின் ராஜாங்கத்து நாயகர் . . .

 


இந்த பதிவில் இளையராஜாவின் இசையில் பல்வேறு நாயகர்களுக்கு எஸ்.பி.பி குரல் கொடுத்ததிலிருந்து இருபது பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். கமல், ரஜினி மற்றும் மோகன் ஆகியோர் தவிர்த்த நாயகர்கள் இங்கே உள்ளார்கள். இம்மூவருக்கும் தனித்தனியே பாடல்களை பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். 

காட்சிகளில் தோன்றுவது யாராக இருந்தாலும் நாயகராக மனதில் நிற்பது என்னமோ பாலுதான்.

ராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் எஸ்.பி.பி யின் பாடல் கிடையாது. ஆண் குரலில் ஒலிக்கும் ஒரே பாடலை டி.எம்.எஸ் பாடியிருப்பார். பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்தான் அவர்கள் கூட்டணி தொடங்கியது. அந்த படத்து பாடலுடன் தொடங்குகிறேன்.


நான் பேச வந்தேன்


என் கண்மணி, என் காதலி


பூ போலே, உன் புன்னகையில்


மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்


பூந்தளிராட


பூவில் வண்டு கூடும்

நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்


இளமை எனும் பூங்காற்று


ஓ மானே, மானே, உன்னைத்தானே




அந்தி வரும் நேரம்




அடுக்கு மல்லி




ஒரஞ்சாரம் உஷாரு



மாங்குயிலே, பூங்குயிலே



மடை திறந்து பாயும் நதியலை நான்



முத்து மணி மாலை




கேளடி கண்மணி




ஓ பட்டர்ஃப்ளை





தலையை குனியும் தாமரையே




என்னைத் தொட்டு




பொத்தி வச்ச மல்லிகை மொட்டு




நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்







Saturday, September 26, 2020

பாடும் நிலாவிற்கு வயலினில் அஞ்சலி

 


நேற்று மறைந்த பாடும் நிலாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பதினொன்று பாடல்களை எனது மகன் வயலினில் வாசித்துள்ளதை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.


யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது.



"நினைத்தாலே இனிக்கும்" உறவிலிருந்து

 


தமிழில் எஸ்.பி.பி யின் துவக்க கால அற்புதமான பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்தவை. 

இந்த பதிவில் மெல்லிசை மன்னரின் இசையில் எஸ்.பி.பி பாடிய எனக்கு பிடித்த பத்து பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்


பொட்டு வைத்த முகமோ



அவள் ஒரு நவரச நாடகம்



பாடும் போது நான் தென்றல் காற்று



மாதமோ ஆவணி



ராதா காதல் வராதா



வா நிலா நிலா அல்ல



எனக்கொரு காதலி இருக்கின்றாள்



இலக்கணம் மாறுதோ


இந்த பாடல் பதிவு முடிந்து வீட்டுக்கு வந்ததும் எம்.எஸ்.வி தொலைபேசியில் அழைத்து "பாலு கண்ணா" என்று கூப்பிட்டதை மறக்க முடியாது என்று ஒரு பேட்டியில் எஸ்.பி.பி சொன்னது நினைவுக்கு வந்தது.


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது 



நினைத்தாலே இனிக்கும்



மிகச் சிறந்த சில பாடல்கள் விடுபட்டுள்ளது. வேறு விதமான தொகுப்புக்களில் அவை ஒலிக்கும். 



அந்த தேகம் மறைந்தாலும்

 


எஸ்.பி.பி யின் மறைவு அளித்த சோகத்தை அவரது பாடல்களை கேட்பதன் மூலம் குறைக்கலாம் என்று முயன்றால் மனதில் சோகமும் பாரமும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. 

நேற்று நான் சமூக வலைத்தளங்களில் பார்த்த வரை முக நூல் முழுமையாக எஸ்.பி.பி அவர்களுக்கான அஞ்சலியால் நிரம்பியிருந்தது. இதுவரை எதுவுமே எழுதாத ஒரு தோழர் உணர்ச்சிக் கொந்தளிப்போடு இரண்டு அஞ்சலி செய்திகள் எழுதியிருந்ததே அவர் மீது கொண்ட நேசத்திற்கான சான்று. 

அநேகமாக ஒவ்வொருவரும் பாடலை, இசையை ரசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவர்கள் எஸ்.பி.பி யோடு இணைந்தே இருக்கிறார்கள். எல்லா சூழல்களுக்கும் அவரது குரல் பொருந்தியிருக்கிறது. எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அந்த நடிகர்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் வயதிற்கு பொருந்தியிருக்கிறது. அந்த பாத்திரத்தின் குணாம்சத்திற்கும் பொருந்தியுள்ளது.

எத்தனையோ மொழிகளில் அவர் பாடியுள்ளார். அத்தனை மொழிகளையும் துல்லியமான உச்சரிப்போடு பாடியுள்ளார். அவரது தாய்மொழி தமிழ் கிடையாது. ஆனால் அவர் தமிழ்ப்பாடல்கள் அவ்வளவு சரியான உச்சரிப்போடு இருக்கும். 

பாடல்கள் மட்டுமல்ல டப்பிங் கலைஞராகக் கூட அவர் இருந்திருக்கிறார். சத்யா படத்து வில்லன் கிட்டி ஞாபகம் இருக்கிறதா? மென்மையான தோற்றம் கொண்ட கொடூரமான ஆள். நிஜமாகவே நல்லவரோ என்று நினைக்கத் தோன்றியதற்கு எஸ்.பி.பி யின் குரல் ஒரு முக்கிய காரணம். 

என் பயணங்களை எப்போதும் அவர் ஆக்கிரமித்துக் கொள்வார். இளையராஜா பாடல்கள், எம்.எஸ்.வி பாடல்கள்,கண்ணதாசன் பாடல்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் என்று எப்படிப்பட்ட தொகுப்புக்கள் கொண்ட எம்.பி 3 சிடி யாக இருப்பினும் அதிலே அவர் இருப்பார். நம் பயணத்தை இனிமையாக்குவார். 

இன்றும் நாளையும் எஸ்.பி.பி க்கான இசை அஞ்சலி நாளாகவே பதிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த பதிவில் அவரை தமிழகம் ஆசையாக அரவணைக்க காரணமாக இருந்த இரு பாடல்கள், அவர் தேசிய விருது பெற்ற பாடல்களை ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன். 

ருத்ர வீணா, சாகர சங்கமம் ஆகியவற்றுக்கு மட்டும் தெலுங்கு பாடல்களுக்கு பதிலாக தமிழ்ப் பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

"புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு"  பாடல் வரிகள் நேற்றைக்கு நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதும் கூட ருத்ர வீணா விற்கு பதிலாக உன்னால் முடியும் தம்பி பாடலை தேர்வு செய்ததற்கான காரணம்

ஆயிரம் நிலவே வா


இயற்கையென்னும் இளைய கன்னி


ஒங்கார நாதானு


தேரே மேரே பீச்சுமே


தகிட தகிட தந்தானா


புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு


தங்கத்தாமரை மகளே


சங்கீத மேகம் பாடலின் "இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்ற வரிகள் இப்போது நிஜமாகி விட்டது.  


இசையஞ்சலி தொடரும்




Friday, September 25, 2020

பொன் மாலைப் பொழுது போனதுவே!

 


மனங்கவர்ந்த  பாடகர், மனதில் நிற்கும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர், என்றும் இனிய குரலுக்குச் சொந்தக்காரர், பாடும் நிலா எஸ்.பி.பி அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.

 தேறி வருகிறீர்கள் என்ற செய்தி நம்பிக்கை அளித்தது. இன்று அந்த நம்பிக்கை பொய்த்தது.

 கொரோனா காலத்தின் மிகப் பெரிய துயரமாக உங்கள் இழப்பு அமைந்து விட்டது.

 





ஆயிரம் நிலவேயும்
பொட்டு வைத்த முகமும்
பொன் மாலைப் பொழுதும்
பனி விழும் மலர் வனமும்

இளைய நிலாவும்

இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களும்

 

உங்கள் நினைவை எங்கள் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும்.

எலிகளுக்கு இனி நல்ல வேட்டை

 

மோடி, அந்தச் சட்டம் அத்தியாவசியமானதுதான் . . .



  அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் நீக்கப்பட்டால் அது கார்ப்பரேட் எலிகளுக்குத்தான் சாதகமாக அமையும் என்பதை சொல்லும் முக்கியமான கட்டுரையை அவசியம் படியுங்கள். பதுக்கலுக்கு சட்ட பூர்வ உரிமை அளிக்கிறார் மோடி. 

இந்து நாளிதழில் திரு சுரேந்திரா முன் எப்போதே வரைந்த கேலிச் சித்திரம் இந்த கார்ப்பரேட் எலிகளில் கொள்ளையை உணர்ந்து கொள்ள உதவும். 

*நாளொரு கேள்வி: 24.09.2020*

  இன்று நம்மோடு பொருளாதார நிபுணர் *டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா*

####################

 *கேள்வி:* மத்திய அரசின் விவசாயம் சார்ந்த திருத்த சட்டங்கள் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. அதில் ஒன்று, அத்தியாவசிய பொருள்கள் சட்டம்.  1950, 60-களில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல் இருந்தது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தச் சூழலில், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்தானே?

 *வெங்கடேஷ் ஆத்ரேயா*

 அத்தியாவசிய பொருள்கள் சட்டம் என்பது மிக *முக்கியமான பண்டங்களை தனியார் பெரு வியாபாரிகள், நிறுவனங்கள் பதுக்கிவைப்பதைத் தடுக்கவே உருவாக்கப்பட்டது.* இது போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். தற்போதைய சூழலுக்கு இது தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். இதிலிருந்து நான் மாறுபடுகிறேன்.

 காரணம், இந்தியா போன்ற நாடுகளில் *கிராக்கிக்கும், உற்பத்திக்கும் இடையே மெல்லிய இடைவெளிதான் உள்ளது என்பதால்  சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் விலைவாசியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.* அதேபோல், நுகர்வோர் என்கிறபோது அதில் விவசாயிகளும் அடங்குவார்கள். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்று, தனது தேவைக்கேற்ப பின்னர் நுகர்வு செய்கின்றனர். எனவே, இந்த விலைவாசியின் தாக்கம் அவர்களையும் பாதிக்கும். ஆகவே பதுக்கலுக்கு வழி வகுப்பது இந்திய உணவுப் பொருள் சந்தையில் ஏற்படுத்துகிற பாதிப்பு எல்லா ஏழை எளியோரையும்- விவசாயிகளையும் உள்ளிட்டு- பாதிக்கும்

 *இச் சட்டங்களை திருத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து வருவதில்லை. தனியார் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் சார்பில்தான் இதுபோன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.* தற்போது இந்தியா உணவுத் தன்னிறைவு பெற்று சுமார் 7 கோடி டன் தானியம் எஃப்.சி..இல் அதாவது இந்திய உணவுக் கழகத்தில், உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவே அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முறையை உருவாக்கியதே ஆகும். *ஆனால் உணவுக் கழக கிட்டங்கிகளில் தானியங்கள் நிரம்பி வழிவதால் உணவு தன்னிறைவை எட்டி விட்டோமென்ற முடிவுக்கு வரலாமா?*

 2008, 2010ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற, கிராமப்புற உணவுப் பாதுகாப்பின்மை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அது தொடர்பாக இரு புத்தகங்கள் எழுதி .நா. சபையின் WSP திட்டத்தின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது நாங்கள் உணர்ந்த விஷயம் என்னவென்றால், இந்த *இலக்குசார் பொது விநியோகமுறை* என்பது ஏழை மக்களின் வாங்கும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. *உதாரணமாக ஆந்திராவை* அரிசி உற்பத்தியில் உபரி மாநிலமாகக் கூறுவோம். அதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் அனைவரும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகப் பொருள் அல்ல. எனவே, கிடங்கில் உணவு தானியம் குவிந்துள்ளது மக்களுக்கான பொது விநியோகம் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது

 மேலும், *வேளாண்மை என்பது பருவநிலை சார்ந்து இயங்கக்கூடியது* என்பதால் இதில் உள்ள நிலையற்றத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றம் காலத்தில் ஒரு டிகிரி வெப்பம் அதிகரிப்பதாலும் உற்பத்தியில் குறைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். *உணவு போன்ற அத்தியாவசிய விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று கருதும் அலட்சியப் போக்கு ஆபத்தானது.* எனவே, அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை காலாவதியானது எனப் புறக்கணிப்பது முறையல்ல.

 *****************

*செவ்வானம்*