எங்கள் கோட்டத்தின் மூத்த தலைவர்கள் தோழர் ஆர்.ஜகதீசன், தோழர் என்.ஏகாம்பரம் ஆகியோர் பல சமயங்களில் பரவசமாக பகிர்ந்து கொண்ட ஒரு பெயர் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன். அஞ்சல் துறை தொழிற்சங்கத்தலைவராக மட்டுமல்லாமல் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்குவதிலும் மார்க்சிய தத்துவங்களை பயிற்றுவிக்கும் ஆசானாக செயல்பட்ட அவர்தான் வேலூர் நகரத்தில் உள்ள பல தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்கும் வழி காட்டியாக இருந்தவர் என்று அவர்கள் கூறுவார்கள்.
தான் 18 வயதை எட்டிய போது அவர் தனக்கு எழுதிய கடிதத்தை தோழர் சி.எஸ்.பி அவர்களின் மகனும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்.
எப்பேற்பட்ட கடிதம் அது!
தோழர் சி.பி.கே அவர்களின் அனுமதியோடு அக்கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்
”உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன்”
”எனது தாயார் நினைவு நாளை ஒட்டி நாங்கள் ஒன்று கூடி பழைய கடிதங்களை எடுத்து படிக்கும்போது எனது தந்தையின் இக்கடிதம் எதேச்சையாக கிடைத்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் இக்கடிதத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கடிதம் எழுதப்பட்ட 1977ஆம் ஆண்டு எனது தந்தை திரு.சி எஸ் பஞ்சாபகேசன் வேலுரில் தபால் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். நான் காரைக்குடியில் பொறியியல் படிப்பு படித்து வந்தேன். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என்பதால் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”
அன்புமிக்க கிருஷ்ணனுக்கு,
அநேக ஆசிகள். நாளையோடு உனக்கு பதினெட்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. நீ ‘major’ ஆகிறாய். சட்ட ரீதியில் உனக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை. பிரச்சனைகள் அனைத்திலும் நீயாகவே சிந்தித்து சரியான முடிவெடுக்கக்கூடிய பருவம் எய்திவிட்டாய் என்பது பொருள். இன்று இரவு படுத்து உறங்கும்போது நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு அந்த தகுதி உன்னை வந்து அடைந்து விடுகிறதா? இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிலும் குறிப்பாக கடந்த 3 - 4 ஆண்டு காலத்தில் பெற்ற அனுபவப் பாடம் உன்னை அத்தகுதி உள்ளவனாக ஆக்குகிறதா? பின்னதுதான் உண்மை என்று கூற தேவையில்லை.
உன்னை ஒத்த வயதுடைய தோழர்களுக்கு உலகத்தைப் பற்றி, நாம் வாழும் சமுதாயத்தை பற்றி அதில் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி தெரிந்திருப்பதைவிட உனக்கு மிகக் கூடுதலாக தெரியும் என்பது என் நம்பிக்கை. ஆக 18 வயது மேஜர் எதையும் தன்னிச்சையாக தீர்மானிக்க திறமையுண்டு என்று கூறுவதின் பொருள் வெறும் 365X18 என்ற நாட்களின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல. அவைகள் வெறும் எண்கள். சட்டத்திற்கு அவை போதுமானது. ஆனால் எதார்த்தத்திற்கு அது மட்டும் போதாது. முன் குறிப்பிட்டது போன்று சமுதாயத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம்தான் உனக்கு இன்று கிடைத்திருக்கும் majority தகுதிக்கு ஏற்றவனாக்குகிறது.
இன்று கடந்தகால நிகழ்வுகளை சற்று சிந்தித்து, அசை போட்டு பார். அது இன்றைய நிலைகளை புரிந்து கொள்ளவும், (தனிப்பட்ட முறையிலும், குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும்) ஒரு சரியான கணிப்பு செய்யவும் பயன்படும். தவறுகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ளலாம். குழப்பம் ஏற்பட்டால் அதுபற்றி மீண்டும் படித்து, கேட்டு, விளக்கம் பெறமுடியும். இனி எதிர்காலத்தில் நமது கடமை எது என்றும், அதை செய்ய தேவையான மனஉறுதியையும் நமக்கு அளிக்கும்.
இன்றைய அரசியல் போக்குகளை பேப்பர் மூலம் விபரம் தெரிந்து வைத்திருப்பாய் என எண்ணுகிறேன். ’நமது’ கணிப்புகள் எவ்வளவு சரியானது, துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு விளக்கப்பட்டது என்பது புரியும். ‘பாபூஜி’யின் (ஜகஜீவன்ராம்) statement ஒன்றே போதுமானது.
வரவிருக்கும் 3 ஆண்டுகள் உனக்கு மிக முக்கியம். படிப்பிற்கு மட்டுமல்ல, மற்றொரு தகுதியை பெறவும்தான். அதாவது இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு ‘ஓட்டர்’ ஆகும் தகுதியை பெற 21 ஆண்டு நிரம்ப வேண்டும். ஆக இந்த 3 ஆண்டுகளில் உன் படிப்பில் முழு கவனம் செலுத்துவதுடன் அரசியல், சமுதாய, பொருளாதார விஷயங்களிலும் கவனம் செலுத்தி பாடம் பெற வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டல் உன் விடுமுறை நாட்களில் நீ பெற வழி செய்து கொள்வது கடினமல்ல.
உலகில் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்துள்ளார்கள். ஆனால் ஒரு சிலரை உலகம் இன்றளவும் மறக்கவில்லை. அவர்களை மட்டும் ஏன் உலகம் மறக்க முடியவில்லை? அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினின்று அவரக்ள் வேறுபட்டு நின்றார்கள் என்பது மட்டுமல்ல, அந்தந்த காலகட்டத்தில் இருந்த மேடு பள்ளங்களை கண்டு, இனம் கண்டு, அவற்றை போக்க சிறிதளவாவது, அவர்களுக்கு சரி என்று பட்ட வகையில் பாடுபட்டார்கள். அப்பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். அந்த பாதை சரியா தப்பா என்று இன்று விமர்சிக்கிறோம். ஆனால் இன்று விஞ்ஞானம் மிக அற்புதமாக வளர்ந்துள்ள நிலையில், அந்த சமுதாய மேடு பள்ளங்களை பற்றிய அறிவு- அதற்கான காரணம், அவைகளை போக்கும் மருந்து மிக தெளிவாக கிடைத்துள்ளது. இந்த நிலை அன்று கிடையாது. ஆகவே இன்று நமக்கு ஒரு தெளிவான பார்வை இருக்க முடிகிறது. அதை அமுல் நடத்துவதில் எத்தனையோ இடர்பாடுகள், எதிர்ப்புகள், தாக்குதல்கள். ஆனாலும் இவை அனைத்தையம் சமாளித்து முன்னேற முடிகிறது. இந்த தடங்கல்களை கண்டு சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் அவைகளை எதிர்போராடி, வெற்றி கொண்டு மேலும் முன்னேற உத்வேதகத்தோடு செயல்பட வேண்டியுள்ளது. அப்பணியில் நாம் தனித்து நிற்கவில்லை.
நம்மோடு தோளோடு தோள் சேர்ந்து அணிதிரள கோடானுகோடி மக்கள் உள்ளனர். அவர்களை தயார் செய்ய வேண்டிய பெரும் பணியே இன்று நம் முன் உள்ள கடமை. ஓர் இடத்தில் மாமேதை லெனின் கூறுகிறார்:
“ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு முக்கியமானவன்?”
“சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை (சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும்) கணித்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அணுகி, அந்த அநீதியை எதிர்த்து போராட தயார் செய்து, அந்த போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதில் எந்த அளவுக்கு ஒரு மனிதன் வெற்றி பெறுகிறானோ அந்த அளவுக்குதான் அவன் முக்கியமானவன்.”
அதாவது சமுதாய மாற்றம் என்பது ஒரு தனி அவதார புருஷனால் மட்டுமே- அவன் தனிப்பட்ட செயல்கள் மூலமே (உண்ணாவிரதம் etc.) சாதித்துவிட முடியுமென்பது அபத்தமானது.
நமது நாட்டு சுதந்திர போராட்ட வரலாறே அதற்கு ஒரு தெளிவான சான்று.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கேட்டது தவறா? ஆனால் இந்த கோரிக்கையை ஆதரித்து பேரியக்கங்கள் நடத்தாதவரை இதை நாம் பெற முடியவில்லை. 1942-1946 நிகழ்ச்சிகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. 1946 - எத்தனை வேலைநிறுத்தங்கள்- எவ்வளவு பேர் பங்கு கொண்டனர். “சுதந்திரம் தா” என்று கேட்பதைவிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவலையும் விட்டு, இந்நாட்டு உழைப்பாளி மக்களின் பெரும் பகுதி நேரடி போராட்டத்தில் இறங்கி, மற்றொரு பகுதி ஆயுத படையினர் - கப்பற் படையினர் ஆங்கிலேயரின் Union Jack கொடியை ஒவ்வொரு கப்பலின் கொடி மரத்திலிருந்து இறக்கி, மூவர்ண காங்கிரஸ் கொடி, அரிவாள் சுத்தி தாங்கிய பொதுவுடைமை கட்சி கொடி, முஸ்லீம் லீகின் கொடி ஆகியவற்றை ஒவ்வொரு கப்பலிலும் ஏற்றிய மறுநாள்தான் 21.2.46 (from memory – it must be correct) இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற முடிவை லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சி முடிவெடுத்தது.
பின்னர் நடந்தது வேறு கதை. ஆனால் ஒரு பிரச்சனையால், சீர்கேட்டால், அடக்குமுறையால், சுரண்டலால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அதை போக்கிக்கொள்ள பாடுபட வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு Quantity வளருகிறதோ அந்த அளவுக்குதான் கிடைக்கும் பலனின் quality இருக்கும். “அளவு மாற மாற குணம் மாறும்” இந்த குணமாற்றம் மீண்டும் அளவு மாற்றத்தை உண்டாக்கும்.
இவையெல்லாம் நீ முன்பே கூட கேட்டு இருப்பாய். ஆனாலும் இவைகளை இன்று உனது 18 வயது நிறைவு நாளில் கவனப்படுத்த வேண்டியது அவசியம் என நினைத்து எழுதுகிறேன். மேலும் நிறைய எழுத ஆசை. ஆனால் மூன்று நாட்களாக அலுவலகத்தில் மிக அதிகமான எழுத்து வேலை. ஆக கை குடைச்சல். அதிகம் எழுத முடியவில்லை.
முடிவாக பாதகம் செய்வோரை மோதி மிதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் உனக்கும் ஒரு சிறப்பான பங்கு இருக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை, புதிய பாரத யுத்தத்தை நடத்த பாடுபடும் இயக்கத்தில் நீயும் ஒருவனாக இருந்து சிறப்புற செயலாற்றி உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன். இப்பெரும் பணியை நிறைவேற்றவல்ல உடல் வலுவும், மனோதிடமும், நீண்டு வாழும் நிலையும் பெறுவாயாக! எனது நல்லாசிகள் உனக்கு உரித்தாகுக.
பி.கு. எங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் உனக்கு உறுதுணையாக நிற்குமென மல்லிகா* கூறுகிறாள்.
*சி பி கிருஷ்ணனின் மூத்த சகோதரி"
இக்கடிதத்தை படிக்கும் போது எனக்கு பதினோரு வயது இருக்கும் போதே அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்று அரசியல் நிலைமைகள் மீது ஆர்வத்தை வரவழைத்த என் அப்பாவின் நினைவுகள் வராமல் இல்லை.
அது போலவே பல இந்திய, உலக வரலாறுகளைப் பற்றி என் மகனுக்கு விவரித்து, சமூகம் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்ற சுய சிந்தனையை அவனுக்கு உருவாக்கியுள்ளேன் என்பதையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
COM. CSP... நெஞ்சை தொட்டு,பழைய நினைவுகளை தோண்டி,கண்ணீரை சொரிய வைத்து, மறக்க முடியாத தோழமைக்கு இக்கட்டுரை எடுத்துக்காட்டு..
ReplyDelete~விமலா வித்யா.நாமக்கல்
சி. எஸ். பி. அவர்களின் வழிகாட்டலில் அன்றைய வடாற்காடு மாவட்டத்தில் நான் த. மு. எ.க. ச. வில் இணைந்தேன். பின் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி, சி. ஐ. டி. யூ., கட்சி என்று அடுத்தடுத்து ஈடுபட உத்வேகம் தந்தவர். எங்கள் தொழிற்சங்க ஊழியர்களுக்கு வகுப்புகள் நடத்தி வர்க்க உணர்வூட்டியவர். மறக்க முடியாத அந்த நினைவுகள் ஊற்றெடுக்கும் வகையில் அமைந்த பொக்கிஷம் இந்தக் கடிதம். நன்றி தோழர்...
ReplyDelete