Wednesday, November 11, 2020

மதுரை சாப்பாட்டுப் புராணம்




இரண்டு நாட்கள் முன்பாகத்தான் நெல்லையின் உணவுப் பாரம்பரியம் குறித்த பதிவை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இது போல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் எழுதியிருந்தேன்.

அதற்கும் முன்பாக மதுரை நகரத்து உணவகங்களின் சிறப்பம்சம் குறித்து பேராசியர் ஆர்.வி.ராஜூ முகநூலில் பகிர்ந்து கொண்டதை பார்த்தேன். நெல்லைக்கு சற்றும் சளைத்தது அல்ல மதுரை என்பதை இப்பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

1982-85 ல் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் பி.பி.ஏ படிக்கையில் ஆறு செமஸ்டர்களிலும் எனக்கு பாடம் எடுத்தவர் பேராசியர் ஆர்.வி.ராஜூ என்பதை சொல்லியாக வேண்டும்.

இந்த பதிவில் விடுபட்ட மூன்று உணவகங்கள் பற்றி பதிவின் இறுதியில் எழுதியுள்ளேன். 

தஞ்சைக் காரர்கள் எப்போது களம் இறங்குவார்கள் ?



 பரண் : ருசி உணர்ந்தவர்கள் கொறிக்கலாம்

பெரியாரும்,பிரபாகரனும் சாப்பிட்ட ஹோட்டல்கள்!
சொந்த ஊரில் நிதானமாய்ச் சுவைத்துச் சாப்பிடுவது தனி சுகம்! இசையை ரசிப்பதற்குத் தனி ஈடுபாடு இருப்பதைப் போல சாப்பிடுவதும் கூடத் தனி ரகம் தான்! எதற்கெடுத்தாலும் அரவை மிஷினுக்குள் தள்ளிவிடுவதைப் போல வாய்க்குள் தள்ளுகிறவர்கள் கொஞ்சம் நகர்ந்துவிடலாம்.

குமுதம் (9.7.98) சிறப்பிதழ் இணைப்பில் வெளிவந்த ‘ருசியான’ கட்டுரை இது :
தலைப்பு : ‘’மூக்குப் புடைக்க’’
தூக்கத்தில் நடக்கிற வியாதி இருக்கிறதா உங்களுக்கு?அப்படியே படுக்கையை விட்டு ‘ ஸ்லோ மோஷனில்’ ஒரு நடையாக மதுரைத் தெருவுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிறம் மங்கிய அந்த நேரத்தில் கூட காரசாரமாகக் கடகடவென்ற சத்தத்துடன் யாராவது புரோட்டாவைக் கொத்திக் கொண்டிருப்பார்கள்.

அதே மாதிரி தோசைச்சட்டியில் பன்ரொட்டியை இரண்டாக்கி –நடுவில் பட்டரைத் தடவி நல்ல பதத்தில் வேகவிட்டு இளம் சூட்டில் உள்ளே தள்ளிப் பின்னாடியே மசாலாப்பாலை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கால ஃபென்னர் ஆலைக்குப் பக்கத்தில் நல்ல அகலமான வெண்கலக் குண்டாவில் பருத்திப்பாலைக் கண் கிறக்கத்தோடு குடித்துக் கொண்டிருப்பார்கள். ராத்திரி கடக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளைச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும் மதுரையில்!

நாக்கின் மீது மதுரைக்காரர்கள் வைத்திருக்கிற விசுவாசமே தனி! அதை வீணாக நோகடிக்க மாட்டார்கள். வெள்ளையாய் இட்லி, சாம்பார்,தொட்டுக் கொள்ள நான்கு வகைச் சட்னியுடன் ஆவி பறக்கப் பரிமாறப்பட்டு ஆளாளுக்கு ஒரு பிடி பிடிப்பதெல்லாம் எங்கே என்கிறீர்கள்?

மதுரையில் பல இடங்களில் அங்கங்கே பரவிக்கிடக்கிற ரோட்டாரக் கடைகளில் தான். அதிலும் சௌராஷ்டிர சமூகத்தினர் நடத்தும் ரோட்டோரக்கடைகளிலேயே மெல்லிசான இடியாப்பம், குழாய்ப்புட்டு, சர்க்கரைப் பொங்கல் இத்யாதி எல்லாம் கிடைக்கும். இதுதவிர புளியோதரை,தக்காளிச்சாதம் இப்படி எல்லாமே குறைவான விலையில் கமகம மணத்துடன் ! நெய் மணக்கும் பன் அல்வா, பாதாம் அல்வா இவர்களுடைய தனித்துவம் !தெப்பக்குளம் பகுதியில் வெல்லம் உருகிய போளியும், சுண்டலும் சுவையின் மகத்துவங்கள் ! இந்தப் பக்கம் போனாலே போதும், மிகக்குறைந்த விலையில் வயிறாரச் சாப்பிட்டுச் சுதந்திரமாக ஏப்பம் விட்டுவிடலாம்.

மீனாட்சியம்மன் கோவில் பக்கம் ஒரு நடை போய்விட்டுச் சாவகாசமாய் உலாத்துகிறீர்களா? மேலக் கோபுர வாசலை அடுத்து அந்தக் கால நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை-கிட்டத்தட்ட நம்ம நெல்லை இருட்டுக்கடை அல்வாக்கடையைப்போலத்தான். அந்தக் காலப் பழமை மாறாத கடை..இங்கு என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? நல்ல கெட்டியாக நெய் மொறுமொறுவென்று கெட்டியாக நிற்கும் பதத்தில் அல்வா அவ்வளவு சுவை! மஞ்சள் கலர் பூந்தியும், காராசேவும் பிரபலம். எம்.எஸ். சுப்புலெட்சுமியிலிருந்து பத்மினி, நேரு வரை இங்கு ருசி பார்த்தவர்கள் பட்டியல் நீ…ளம்!

நியூ சினிமா பக்கம் நகர்ந்தால்- இருக்கிற மாடர்ன் ரெஸ்டாரண்டில் காலையிலிருந்து மதியம் துவங்குவதற்குள் கிடைக்கும் ரவாகேசரியும், காராபூந்தி தூவிய தயிர்வடையும் நாவின் அற்புதங்கள்!

இதையெல்லாம் விட ஸ்பெஷல் ஐட்டம் ஜிகர்தண்டா. மஹால் அருகில் இதற்கென்றே தனிக்கடைகள். சுற்றி அவ்வளவு கூட்டம். கடல் பாசி, கெட்டியான பால், சர்க்கரைப் பாகு, மேலே ஐஸ்கிரீம் போட்டு ஜில்லென்று கிடைக்கும் மதுரைக்கே உரித்தான ஸ்பெஷல்! ( இப்போது தமிழகம் தாண்டியும்) தெருவில் கடைக்கு முன்னால் குளிர்ச்சி கையில் ஒட்ட வாங்குகிறவர்கள் குடிக்கும்போது சிலர் கண்ணை மூடித் தியானம் பண்ணுவது மாதிரி மெதுவாக ரசித்துக் குடிக்கும் அழகே தனி !

சைவத்திலேயே இப்படி என்றால் அசைவத்தில் அடித்துக் கொள்ள முடியுமா?

சாலையோரம் போகும்போதே அந்த மசாலா மணம் பட்டதுமே பலருக்கு மூக்கு சுறுசுறுப்பாகி நாக்கில் வேர்த்துவிடும். வித்தியாசமான கலவையோடு சுள்ளென்று தயாராகும் மண்பானைச் சமையலான அயிரை மீன்குழம்பு ரொம்ப ஃபேமஸ். கலைஞர் துவங்கி சிவாஜி வரை மதுரைக்கு வந்தால் ஆஜராகி விடும் அயிரை மீனுக்கு பிரபலமாக இருந்த இன்னொரு வாடிக்கையாளர் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவரான பிரபாகரன். நெடுமாறனின் அச்சக்கத்திற்கு அருகில் தங்கியிருந்த பிரபாகரன் பொடி நடையாக மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த சாரதா மெஸ்ஸூக்கு வந்து அயிரை மீனையும், சுக்கா வருவலையும் ரசித்துச் சாப்பிட்டு விட்டுப் போயிருக்கிறார். வைரமுத்துவும், பாரதிராஜாவும் இங்குள்ள சில மெஸ்களின் வாடிக்கையாளர்கள்.

மட்டனைப் பரப்பிப் புரட்டி மணமணக்க வரும் மட்டன் தோசை, கறிக்குழம்புக்கென்றே பிரபலமான அருளானந்தம்,நாடார் மெஸ்கள், கோனார் கடை, பாலையா கடை,பனை மரத்துக்கடைக்கெல்லாம் மேலாக அந்த நாள் ஞாபகமாக ஒரு ஹோட்டல் – சிந்தாமணி தியேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் –அம்சவல்லி பவன்.

காலையிலேயே புரோட்டாவும்,சால்னாவுமாக இயங்க ஆரம்பித்துவிடும் ஹோட்டலில் பிரியாணி அவ்வளவு சுவை. பெரியார் இந்த ஹோட்டலில் ஒரு பொறித்த கோழியைச் சாப்பிடுவதை ஆச்சர்யத்துடன் முன்னாடி இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்த சிறுவர்களில் – இந்தக் கட்டுரையை எழுதும் நானும் ஒருவன். அப்போது பொறித்த முழுக்கோழி ரொம்பவும் ஆச்சர்யம்!

இரவு இரண்டு மணிக்கு மேல் கூட பசியோடு நடமாடுகிறவர்கள் எவருக்கும் அவரவர் ருசி சார்ந்த உணவைச் சாப்பிட முடியும். ராத்திரி வரை மூட்டையும்,வெயிலையும் சுமந்த கறுத்த லோடுமேன்கள் சில ஹோட்டல்களில் சாப்பிடுகிற விகிதாச்சாரத்தைப் பார்த்தால் உங்களுக்கும் பசி தொற்றிவிடும்.

காலை மூன்று மணி இந்த நடமாட்டம். அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் அசந்த மாதிரி இருக்கும். அவ்வளவு தான். நான்கு மணி ஆகிவிட்டதா?

அலுமினியப் பாத்திரங்களைக் கழுவி விபூதிப்பட்டையடித்து ஊதுபத்திக் கொளுத்தி, நீர்டீ தெளித்து கடை களை கட்ட ,

ஸ்டீரியோவில் டி.எம்.எஸ்.ஸின் ‘’ உள்ளம் உருகுதய்யா’’ ரகப்பாடலோ, சீர்காழியின் ‘விநாயகனே’ பாடலோ காதில் மெல்லிய தூறல் மாதிரி விழ ஆரம்பித்துவிடும்.

இரவு நேர மதுரை பலருக்கு அதிசயம்.
ஆனால் மதுரையில் உள்ள பலருக்கோ
- அது இன்னொரு வாழ்க்கை!



இப்பதிவில் சொல்லப்பட்டுள்ள நாகப்பட்டிணம் ஒரிஜினல் நெய் மிட்டாய்க்கடை அல்வா நான் சாப்பிட்டதில்லை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் மதுரைக்கு சென்று வரும் போதெல்லாம் டவுன் ஹால் சாலையின் முனையில் உள்ள பிரேம விலாசிலிருந்து அல்வா வாங்கி வருவார். அதன் ருசி அவ்வளவு அபாரம். கல்லூரியில் படிக்கும் போது பெரும்பாலும் சனிக்கிழமை என்பது திரைப்படம் பார்க்கும் நாளாக இருக்கும். அப்போதெல்லாம் பிரேம விலாசில் ஒரு ஐம்பது கிராம் அல்வா வாங்கி சாப்பிடுவது முக்கியமான பழக்கம். (மேலே உள்ள படத்தில் உள்ளது) இப்போதும் கூட எப்போது மதுரை சென்றாலும் பிரேமவிலாஸ் அல்வா வாங்காமல் வருவதில்லை.

மதுரை ரயில் நிலையத்தை ஒட்டிய கற்பகம் ஹோட்டலில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் "பொடி ஊத்தப்பம்" பிரபலம். சற்று சுற்றளவு அதிகமான மிதமான கனம் கொண்ட ஊத்தப்பத்தின் மேல் பகுதி முழுதும் மிளகாய் பொடி தூவி, நல்லெண்ணையையும் கொஞ்சம் பரப்பி தரும் பொடி ஊத்தப்பத்தை தேங்காய் சட்னியோடு சாப்பிடுவது அவ்வளவு சுவை. ஆனால் சில வருடங்கள் முன்பாக தேடி சென்ற போது ஏமாற்றமே. தரம் மாறி விட்டது.

மூன்றாவதாக சென்ட்ரல் தியேட்டர் எதிரில் இருக்கும் நியூ டெல்லிவாலா ஸ்வீட்ஸ். இனிப்பு, கார வகைகளைத் தவிர அங்கே மிருதுவான சப்பாத்தியும் சுடச் சுட பூரியும் மட்டுமே கிடைக்கும். அதற்கு தருகிற குருமா இப்போதும் நா ஊறவைக்கிறது. சின்ன கிண்ணத்தில் தருவார்கள் என்பதுதான் குறை. சின்ன இடத்தில் மூன்றே மேஜைகள்தான். காத்திருந்து சாப்பிடுவோம்.

அதே போல நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் ஃப்ரூட் மிக்ஸர் என்பதும் அறிமுகமானது. பல பழங்களை கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ப்ளர்களில் தருவார்கள். ஒரு ரூபாய் மட்டுமே விலை. ஒரு டம்ப்ளர் குடித்தால் மூன்று மணி நேரத்திற்கு பசி இருக்காது. பெரிய அண்டாவில் தயாரித்து வைத்திருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் பல கடைகளில் அழுகிய பழங்களையும் சேர்க்க ஆரம்பித்ததால் அதன் மவுசு மங்கிப் போனது.

எங்கள் கல்லூரிக்கு அருகில்தான் திருப்பரங்குன்றம். "மணி, மகாராஜா, (இன்னொரு தியேட்டரின் பெயர் நினைவுக்கு வரவில்லை) என்று மூன்று திரையரங்குகள் உண்டு. இரவுக்காட்சி பார்த்து விட்டு வரும் போதும் இட்லி கடைகள் இருக்கும். கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு பாட்டியிடம் மூன்று வகை சட்னியோடு நான்கு இட்லிகள் சாப்பிட்டு விட்டு காலாற நடந்து விடுதிக்கு வருவோம்.

மதுரை கல்லூரிக் கால நாட்களை நினைப்பதற்கு வாய்ப்பாக இந்த பதிவு அமைந்தது.

2 comments: