Monday, November 16, 2020

ஆமாம், யாரு இவரு?

 

புமா ஆஜான் யார்?

 தமுஎகச வின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் சிந்தனையாளரும், எழுத்தாளருமான தோழர் அருணன் அவர்களின் பதிவு இது. இதைப் படித்து முடித்தவுடன் எழுந்த கேள்வியே தலைப்பு.

 ராஜாராணி படத்தில் ஒரு வசனம் வரும்.

 “நண்பன்ல ஏதும்மா நல்ல நண்பன்? கெட்ட நண்பன்? நண்பன்னாலே அவன் நல்லவன்தாம்மா”

 அது போல தன்னுடைய கருத்திற்கு எழுத்து வடிவம் தருபவர் யாரோ அவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள்தான்.

 அதிலே

 யார் சிறந்த எழுத்தாளர்? யார் பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்? யார் ,மொண்ணை எழுத்தாளர்? யார் முச்சந்தி எழுத்தாளர்? யார் சிறந்த வாசகர்? யார் மொண்ணை வாசகர்?

 என்றெல்லாம் தரம் பிரிக்க இவர் யார்?

 எந்த எழுத்து நீடிக்கும், நிலைக்கும் என்பதையெல்லாம் காலமும் களமும் நிர்ணயம் செய்யும். இவருடைய கருத்தை மற்றவர் மீது திணிக்கிறாரே, அது கருத்துரிமைக்கு ஆபத்து கிடையாதா? இப்படி தரம் பிரிப்பதன் மூலம் இவர்தான் இளம் படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்குகிறார்.

 

 


ஜெயமோகனின் கொலைப்

பழியிலிருந்து தப்பித்தார்

அந்த வாசகர்!

_____________________________

 தமுஎகச என்கிற மகத்தான கலை -இலக்கிய அமைப்பை, பண்பாட்டு இயக்கத்தைமாஃபியா கும்பல்என்றும், “அறிவிலிகளின் கூடாரம்என்றும் நரகல் நடையில் வசை பாடியிருக்கிறார் ஜெயமோகன். எல்லாம் எதற்காக என்றால் அதன் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவருக்கு அனுப்பிய ஒரு வக்கீல் நோட்டீசுக்காக.

 தனக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓர் அமைப்பு பற்றியே தரங்கெட்ட மதிப்பீட்டிற்கு வருவது என்ன வகை நியாயம்? இந்த நோட்டீஸ் மட்டும் போகாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பாரா அவர்? தன் அக நோக்கிலிருந்து ஒரு புறவுலகக் கூறை அவதானிக்கும் இந்த மனிதர்தான் ஊருக்கெல்லாம் அறம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

 ஓர் அமைப்பை பற்றி மட்டுமல்ல ஓர் எழுத்தாளர் பற்றிய கணிப்பிற்குமே இவரது அகம் எழுப்பும் குரலே ஆதாரமாக இருக்கிறது. “இன்று சொல்லும்படியான எந்த எழுத்தாளரும் இவர்களின் அணியில் இல்லைஎன்று தீர்ப்பு எழுதியிருப்பது இதற்கு உதாரணம். இந்த வக்கீல் அறிவிக்கை வந்ததும் சட்டென்று தமுஎகச அணியில் உள்ள சகல எழுத்தாளர்களையும், அவர்களது சகல படைப்புகளையும் மனக்கண்ணில் நிறுத்தி தனது தராசைத் தூக்கி எடைபோட்டும்ம்.. சொல்லும்படியாக யாரும் இல்லைஎன்று முடிவுக்கு வந்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் இதை எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தோழர்கள் .தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன் பற்றி எல்லாம் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்.

 அந்த தமுஎகசவின் கௌரவத் தலைவரும், தலைவரும் கூட இப்போது சொல்லும்படியானவர்கள் இல்லை. இவர்களுக்கே இந்த கதி என்றால் ஆதவன் தீட்சண்யாவை விடுவாரோ? “ஒரு வரி எழுத ஆற்றலில்லாத முச்சந்திப் பேச்சாளர்என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார். ஒரு வக்கீல் கடுதாசி ஓர் அருமையான சிறுகதைப் படைப்பாளியைமுச்சந்திப்பேச்சாளராகமாற்றும் அசாத்திய பலம் உள்ளது என்பதை நான் இப்போதுதான் அறிந்தேன். ஜெயமோகனை நடுநிலையான இலக்கிய விமர்சகர் என நம்பிக் கொண்டிருப்பவர்களை நினைக்கும் போது மெய்யாலும் அனுதாபம் பிறக்கிறது. அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இவர் தனது நாவல் ஒன்றின் விற்பனைக்காக ஆர்எஸ்எஸ்சின் உதவியை நாடிக் கடிதம் எழுதியதை அரவிந்தன் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்பதை. வகுப்புவாதிகளின் உதவியை நாடக் கூடியவர் எப்படி நடுநிலையாளராக இருப்பார்.

 இந்த விவகாரம் முழுக்க சுந்தரராமசாமியின்பிள்ளைகெடுத்தாள்விளைஎனும் சிறுகதையிலிருந்து ஆரம்பமானது. அது, இப்போதுதான் புத்துயிர்ப்பு பெற்றுவரும் விளிம்புநிலை மக்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆதவன் தீட்சண்யா விமர்சனம் செய்திருந்தார். அந்த விமர்சனம் தவறு என்று பட்டால் அதைச் சொல்லும் உரிமை ஜெயமோகனுக்கு உண்டு. ஆனால் அவர் முன்வைத்தது பதில் விமர்சனம் அல்ல, அவதூறு, எவரையும் திடுக்கிட வைக்கும் பயங்கரமான குற்றச்சாட்டு.

 பிள்ளைகெடுத்தாள்விளை என்னும் கதை தொடர்பாக சுந்தரராமசாமியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளருடன் ஒரு குழு கிளம்பியது. முதிய வயதில் சுந்தரராமசாமியை கலங்க வைத்த நிகழ்வு அது. வசை அவருக்கு புதிது அல்ல. ஆனால் கைது செய்யப்படலாம், சிறுமை செய்யப்படலாம் என்னும் அச்சம் அவரை அலைக்கழித்தது. அவர் நீண்டகாலம் அமெரிக்காவிலேயே இருக்க நேர்ந்தது. ஒரு வகையில் அவர் உளச் சோர்வடைந்து சாவை நோக்கிச் செல்ல அது ஒரு காரணம்என்று கொலைப்பழியைச் சுமத்தியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதற்கு அது எழுதியவரது ஊகத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதே ஆதாரம். தான் கைது செய்யப்படுவோம் என்பதால்தான் அமெரிக்காவில் நீண்டகாலம் இருந்ததாக சுந்தரராமசாமி கூறியதாக எந்த எழுத்துப்பூர்வ தரவும் தரப்படவில்லை. இவராக அடித்து விடுகிறார்.

 எனவேதான் இந்த வாக்கியங்களை தனது பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டு தோழர் தமிழ்ச்செல்வனும், தோழர் ஆதவன் தீட்சண்யாவும் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால் அவற்றுக்கு பதில் என்ற பெயரில் மீண்டும் தனது அவதூறையே வாந்தி எடுத்தார். “சுந்தரராமசாமி முதிர்ந்த அகவையில் குளிர்காலத்தில் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்க நேர்ந்ததும், அதன் விளைவாக உருவான விண்டர் ப்ளூஸ் போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளுமே அவருடைய விரைவான இறப்புக்கு காரணம். அத்தகைய மொண்ணையான, மூர்க்கமான தாக்குதல்களை எழுத்தாளர்கள் மேல் தொடுக்கையில் இனி மேலாவது கவனம் தேவைஎன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஓர் இலக்கிய விமர்சனத்தை கொண்டுவந்து அவரின் இறப்பில் முடிச்சுப் போட்டார், ஆதவன் தீட்சண்யா மீது அதே அநியாயக் குற்றச்சாட்டை கூச்சமின்றி மீண்டும் சுமத்தினார்.

 இந்த நிலையில்தான் தனது தரப்பை உறுதிப்படுத்தவும், தான் செய்தது நியாயமான இலக்கிய விமர்சனமே என்பதை நிலைநாட்டவும், தனது விமர்சனத்திற்கும் இலக்கியவாதியின் இறப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவும் ஜெயமோகனுக்கு வக்கீல் அறிவிக்கை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. இல்லையெனில் இந்த அவதூறு தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்று அவருக்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.

 ஜெயமோகனின் கண்ணோட்டம் ஒரு படைப்பின் உள்ளடக்கம் சமூக அநீதியாக இருந்தாலும் அதை விமர்சிக்கக் கூடாது என்பதுதான், அதன் உருவ அழகு பற்றி விவாதிப்பதே இலக்கிய விமர்சனமாக இருக்க வேண்டும் என்பதுதான். இலக்கியமானது தனது வடிவ நேர்த்தியின் மூலம் ஒரு கருத்தையும் வாசகனிடம் கொண்டு சேர்க்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். அவரவர் நோக்கில் நல்லது கெட்டது பார்த்து படைப்பை மதிப்பீடு செய்வதும் இலக்கிய விமர்சனமே. சொல்லப்போனால் அதுதான் இலக்கிய மதிப்பீட்டின் பிரதான அளவுகோலாக இருக்க வேண்டும். அதை இத்தகைய கொலைப்பழி மிரட்டலின் மூலம் தடுத்துவிடலாம் என்று ஜெயமோகன் நினைத்தால் அது நடக்காது. இலக்கிய உலகம் எந்தவொரு சட்டாம்பிள்ளையின் கட்டுக்குள்ளும் அடங்கியது அல்ல.

 உண்மை என்னவென்றால் சுந்தரராமசாமியின் அந்தக் கதை பற்றி ஆதவன் தீட்சண்யா மட்டுமல்ல அன்றே பலரும் விமர்சனம் செய்தார்கள். “தலித் முரசுஇதழ் இது பற்றி ஒரு கருத்தரங்கமே நடத்தியது 2005 ஏப்ரலில். அதில் பங்குகொண்ட எழுத்தாளர் அழகிய பெரியவன் அது பற்றிய விரிவான பதிவை ஆதாரத்துடன் இப்போது வெளியிட்டிருக்கிறார். “கதைக்கு எழுந்தது ஒரு கூட்டு எதிர்ப்புஎன்பது அந்தப் பதிவின் சாரம். இதில் ஆதவன் தீட்சண்யாவை மட்டும் ஜெயமோகன் குறிவைத்து தாக்குவது இவருக்குள் இருக்கும் இடதுசாரி எதிர்ப்பின் வெளிப்பாடு.

 கம்யூனிஸ்டுகள் மீது புழுதிவாரித் தூற்றுவதற்காகவே ஒரு பெரிய நாவல் எழுதிய நபர் இவர். வன்மத்தின் வெளிப்பாடு அழகியலைக் கொன்றுவிடும் என்பதற்கும் அந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு. இதிலே உச்சம் என்னவென்றால், விமர்சனத்திற்கு ஆளான அந்தச் சிறுகதை பற்றி எம்.பாஸ்கர் என்பார் எழுதியுள்ள கடிதம் ஜெயமோகனின் இணையதளத்தில் கிடைப்பது. அதுகூறுகிறது...

 பிள்ளைகெடுத்தாள்விளை கதையையும், அதைப் பற்றிய விவாதங்களையும் வாசித்தேன். சுந்தரராமசாமியின் சாதியநோக்கு அதில் வெளிப்பட்டிருப்பதாகவே என் வாசிப்புக்குத் தோன்றியது. அது அடித்தள மக்களின் எழுச்சியை கொச்சைப்படுத்தும் கதை என்று நினைக்கிறேன்”.

 ஆக இவரது வட்டத்தைச் சார்ந்த ஒருவருக்கும்கூட அப்படியாகவே பட்டிருக்கிறது! இதற்கு ஜெயமோகனின் பதில் என்ன தெரியுமா? “மொண்ணை வாசிப்பு”!

 பாவம் அந்த வாசகர். மேற்கொண்டு பேச முடியுமோ? நல்லவேளையாக படைப்பாளி உயிரோடு இருக்கும்போது இதைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்தக் கொலைப்பழியில் அவரும் சேர்க்கப்பட்டிருப்பார்!

 -பேராசிரியர் அருணன்

Ramalingam Kathiresan

No comments:

Post a Comment