Sunday, November 29, 2020

பெருந் தொற்று காலத்திலும் ஏன்?


26, நவம்பர், 2020 வேலை நிறுத்தப் போராட்டம், விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் ஆகியவை இக்காலகட்டத்தில்  அவசியமா என்ற அவசியமற்ற கேள்விகளுக்கு அர்த்தமிக்க பதில்.



 *நாளொரு கேள்வி: 27/11/2020* 

தொடர் எண் *180*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
####################

*பெருந் தொற்று காலத்திலும் வேலை நிறுத்தம் ஏன்?*

*கேள்வி:* 

நேற்றைய வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் சூழலில் பொறுப்புணர்வுமிக்க தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா?

*க.சுவாமிநாதன்* 

இந்தக் கேள்வி ஆட்சியாளர்களிடம் எழுப்பப்பட வேண்டிய ஒன்று. பெரும் பொறுப்பு உள்ள அரசாங்கம் அதைக் காப்பாற்றத் தவறுகிற போது எழுந்துள்ள எதிர் வினையே இவ் வேலை நிறுத்தம். *இதைத் தொழிற்சங்கங்கள் செய்யத் தவறியிலிருந்தாலே அவர்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று ஆகியிருக்கும்.* 

இரண்டு விசயங்கள் இந்த கேள்வியில் முன் நிறுத்தப்படுகின்றன. *ஒன்று, பெருந்தொற்றுக் காலம். இரண்டாவது, பொருளாதாரத் தேக்கம்.*

பெருந் தொற்றுக் காலம் எனும் போது அது ஒரு அசாதாரண காலம். எல்லோர் கவனமும் மக்களின் உடல் நலன், தொற்று பரவல் தடுப்பு, மரண விகிதம் குறைப்பு ஆகியவற்றில்தான் இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் *பொதுத்துறை தனியார் மயம், தொழிலாளர் உரிமை பறிப்பு, விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு பலியாக்குதல், ஜனநாயக உரிமை பறிப்பு* ஆகியவற்றை மேற்கொள்கிறது. இன்னொரு புறம் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவ மனைகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளைக் கூட இங்கு அரசாங்கம் செய்யத் தயாராக இல்லை. 

பொதுத்துறை, தொழிலாளர் நலன், ஜனநாயக உரிமைகள் ஆகியனவெல்லாம் நீண்ட நெடிய வரலாறு கொண்டவை. இவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதாய் இருந்தால் பரந்த விவாதங்களுக்கான சூழல் வேண்டாமா? *நாடாளுமன்றமே முழுமையாக கூடி விவாதிக்க இயலாத நிலை.* நட்சத்திர குறியிட்ட கேள்விகள் கூட கூடிய நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. விவசாயச் சட்டங்கள் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலுங் கூட  ஜனநாயக விரோதமான முறையில் அரசால் நிறைவேற்றப்பட்டன.  

கேந்திரத் தொழில்களில் அரசு நிறுவனங்கள் மேலோங்கிய பங்கை வகிக்க வேண்டுமென்று கராச்சி காங்கிரஸ் 1931 ல் முடிவு செய்ததென்பது *விடுதலை இயக்கத்தில் முகிழ்த்த கனவு.* ஆனால் பெருந் தொற்று காலத்தில் இக் கனவை சிதைக்கலாமா? *பெருந் தொற்றுக்கான நிவாரண அறிவிப்புகளில் ஒன்றாகவே அதை அறிவிப்பது என்ன நியாயம்?* உலகம் முழுக்க கொரானோ உலகமயம் குறித்து மறு சிந்தனை எழுந்திருக்கும் போது இந்தியாவில் உலக மயத்தை அமலாக்க பெருந் தொற்றையே பயன்படுத்திக் கொள்வது *என்ன தார்மீகம்!* இதற்கு எதிர் வினை ஆற்றாமல் தொழிற் சங்கங்கள் இருக்க முடியுமா? அப்படி இருப்பது சரிசெய்ய இயலாத நாசத்தை தேசத்திற்கு இழைப்பதாக ஆகாதா!

*தொழிலாளர் உரிமை பறிப்பு* அநியாயத்திலும் அநியாயம். 8 மணி நேர வேலை என்கிற உரிமை ரத்தம் தோய்ந்தது. உயிர்கள் ஈந்து பெறப்பட்டது. ஆனால் 12 மணி வேலை நாள் என்று மாற்றப்படுவது தொழிலாளர் உரிமை பறிப்பு மட்டுமல்ல. வேலை பறிப்பும் ஆகாதா? பணிப் பாதுகாப்பு, சமுகப் பாதுகாப்பு எல்லாமே கேள்விக் குறியாகவில்லையா? *100 ஆண்டு வரலாற்றை 6 மாத ஊரடங்கைப் பயன்படுத்தி பின்னோக்கி திருப்ப முனைவதை எப்படி அனுமதிக்க முடியும்?*

*பொருளாதார நெருக்கடி* ஒரு  காரணமாக இக் கேள்வியில் சொல்லப்படுகிறது. நெருக்கடி கொரோனாவுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. கொரோனா அதைத் தீவிரமாக்கி இருக்கலாம். இந்த வேலை நிறுத்தம் அதற்கான தீர்வுகளையும் சொல்லி இருக்கிறது. வறிய மக்களுக்கு மாதம் ரூ 7500 + உணவு தானியங்கள் வழங்கு என்ற கோரிக்கை *உற்பத்தி தூண்டுதல்* உருவாக்கக் கூடியது அல்லவா!

*செல்வ வரி போடு, வாரிசு சொத்து வரி போடு, சூப்பர் ரிச் வரி போடு, கார்ப்பரேட் வரி சலுகைகளை ரத்து செய்* என்ற குரல்கள் எல்லாம் நெருக்கடியை தீர்க்க வழி செய்பவை அல்லவா! 

ஆகவே அரசாங்கம் பெருந் தொற்று காலத்தை, பொருளாதார நெருக்கடி என்கிற வாதத்தை தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதே கேள்விக்கு ஆளாக வேண்டும்.

*புயல் அடிக்கும் போது மரங்களைப் பற்றி ஏன் அசைகிறாய் என்று கேட்பது முறையா?*

இவ்வளவு நெருக்கடி மிக்க சூழலில் கூட தொழிலாளர் வீதிகளில் ஆற்றியிருக்கிற எதிர் வினை *பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கேள்விக்குரியதல்ல.*

இதன் தாக்கம் அரசின் மூர்க்கத்திற்கு பிரேக் போடும் என்பதே உண்மை. எதிர்ப்பில்லா தாக்குதல்கள் எதிர் காலத்தையே கேள்வியாக்கும்.

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment