Friday, November 20, 2020

நானாவதி ஹாஸ்பிட்டலும் பாடாய்ப்படுத்தும் கோர்ட்டுகளும்

 


வரவரராவும் அப்துல் நாசர் மதானியும்

ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு

புகழ் பெற்ற ஆந்திரப் புரட்சிக் கவிஞர் வரவர ராவ் ஆகஸ்டு 2018ல் கைது செய்யப்பட்டு பம்பாயில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சட்ட விரோதத் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருடைய தற்போதைய வயது 80. அச்சட்டத்தின் கீழ் முதலில் ஓர் ஆண்டு காலத்திற்கு சாதாரண பிணை (bail) கிடைக்க வழியில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லையென்றால் நீதிமன்றத்தால் விடுவிக்க முடியும். இருப்பினும், வரவர ராவ் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ 800 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அவருக்குப் பிணை கொடுத்தபாடில்லை.

அவருடைய மனைவி ஹேமலதா, உடல் நலம் குன்றிய தனது கணவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மரணப் படுக்கையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவ சிகிச்சை இல்லையென்றால் இறந்து விடுவார் என்றும், சிறையிலேயே அவரது உயிரைப் பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

'ரிபப்ளிக் டிவி' அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பையில் பிணை மனு நிலுவையிலிருப்பினும் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. நாங்கள் பிணை வழங்கவில்லையென்றால் இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும் என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். ஆனால் அவர் பிணை வழங்கும் அதே நேரத்தில் மற்றொரு அமர்வில் வரவர ராவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 'மும்பை நீதிமன்றத்தை அணுகுங்கள். எல்லோரும் டில்லிக்குப் படையெடுக்க முடியாது' என்று அந்த அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். ஒரே உச்ச நீதிமன்றத்தில் இருவிதமான குரல்கள் ஒலிக்க நேர்ந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்த நாள் மும்பை உயர் நீதிமன்றம் வரவர ராவை மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், அதற்கான செலவையும் நீதிமன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

சிறையிலிருக்கும் மனிதருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?

தனது கால்களை இழந்து செயற்கைக் காலுடன் வாழ்ந்து வரும் அப்துல் நாசர் மதானியை தீவிரவாதக் குற்றத்திற்காக கோவை சிறையில் அடைத்ததுடன், அவர் மீது போடப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு வழக்கு முடியும்வரை அவரைக் கோவை சிறையிலிருந்து வேறெங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. அவருக்குப் பொருத்தப்பட்ட செயற்கைக் கால்கள் (Jaipur legs) இற்றுப் போய் விட்டதனால், அதை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டது. அவரது மருத்துவர்கள் திருவனந்தபுரத்திலுள்ள கிங் ஹாஸ்பிடலைச் சேர்ந்தவர்கள். அவருக்குச் செயற்கைக் கால் புதிதாகப் பொருத்துவதற்காக அவரைத் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தை அவர் அணுக நேர்ந்தது. அவரது வழக்கை எடுத்து நடத்தும்படி நீதிபதி கிருஷ்ணய்யர் என்னைக் கேட்டுக்கொண்டார்.

கோவை சிறையிலிருந்து எக்காரணத்தை முன்னிட்டும் அவரை வெளியே அனுப்ப முடியாது என்று தமிழக அரசு கறார் காட்டியது. ஆனால், காலிழந்த மனிதருக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்குக் கூட இவ்வரசிற்கு மனதில்லை என்பதை உணர்ந்த நீதிபதி, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சிகிச்சைக்கு உத்தரவிட எண்ணினார். ஆனால் அரசு தமிழ் நாட்டு எல்லையை விட்டு அவர் எங்கும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தவே, அவர் என்னிடம் கிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஏன் கோவை சிறைக்கு வந்து சிகிச்சை தர ஏற்பாடு செய்யக்கூடாது என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் கேரளாவிலுள்ள குமரகத்தில் தனது மூட்டுவலிக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அச்செய்தியைக் குறிப்பிட்ட நான், பிரதமர் தான் சிகிச்சைக்கு குமரகம் வர வேண்டும். குமரகத்தை டில்லிக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சொன்னவுடன், நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று சொன்னார். அதற்கு மறுப்பாக நான் நோயாளிகள்தான் வைத்தியரிடம் செல்ல வேண்டும். வைத்தியர்கள் நோயாளியிடம் வருவது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்று கூறினேன்.

பிறகு கோபம் தணிந்த அவர் தமிழ் நாட்டிலேயே நல்ல ஒரு மருத்துவ மனையில் மதானியை அனுமதித்து திருவனந்தபுரம் கிங் மருத்துவமனை மருத்துவர்கள் அங்கே வந்து அவருக்கான சிகிச்சையை மேற்பாற்வையிடலாமே என்று சொன்னார். நானும் முரண்டு பிடிக்காமல் நீதிபதி சொன்ன ஆலோசனையின்படி சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் மதானியைச் சேர்த்து அவரது மருத்துவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து வருவதற்கு அரசுக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டேன். அரசுத் தரப்பிலிருந்து முனகல்கள் மட்டுமே வெளி வந்ததனால் நீதிபதியும் அவ்வாறே உத்தரவிட்டார்.

அதற்குப் பின்னால் நடந்ததுதான் வேடிக்கை. அன்று மாலை மதானி சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்படுகிறார் என்ற செய்தி தொலைக்காட்சியில் உடையும் செய்தியாகக் (breaking news) காட்டப்பட்டது. சிறிது நேரத்தில் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான பப்ளிக் ப்ராசிக்யூட்டரும், அவருக்கு உதவி செய்த குற்றவியல் வழக்கறிஞரும் தங்களது பதவியை இழந்தனர். இன்னும் கதை முடியவில்லை. இரவு வெகுநேரச் செய்தியில் மற்றொரு புதிய தகவல் வெளிவந்தது. அன்றைய உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா ஐ.ஏ.எஸ் மற்றும் அரசு கூடுதல் செயலாளர் சங்கர் ஐ.ஏ.எஸ். இருவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டதாக அச்செய்தி கூறியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனி மனித சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இருப்பினும், அச்சுதந்திரத்தைச் சட்ட வரையறைக்குள் பறிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உயிரைப் பாதுகாப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை. கைதிகளின் உடல் நிலையை அவ்வப்போது பரிசீலித்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது சிறைத்துறை யினரின் கடமை.

அரசியல்வாதிகள் ஊழல் குற்றத்திற்குக் கைது செய்யப்படப் போகிறோம் என்றவுடனேயே மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்வதும், அர்பன் நக்ஸல்கள்/ தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவியே கிடையாது என்று மறுப்பதும் இந்நாட்டின் சம நீதியாக மாறிவிட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரவர ராவ்களும், மதானிகளும் நீதிமன்றங்களின் கதவைத் தட்டினாலும் அவர்களை அலைச்சலுக்குள்ளாக்கிக் கடைசியில் போனால் போகிறது என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்பது முறையல்ல.
-- நீதிபதி K.சந்துரு

No comments:

Post a Comment