Monday, November 23, 2020

"சர்க்கார் கிணறு" தெரியுமா?

 குமரி மாவட்டத்தின் மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் பகிர்ந்து கொள்ளும் பல்வேறு பதிவுகள் நாம் அறியாத வரலாற்றை நமக்குச் சொல்வதாகவே அமையும். இந்த பதிவும் அது போல ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு துயர வரலாற்றைச் சொல்வதாகவே அமைந்துள்ளது.

நன்றி தோழர்






திருவாங்கூர் மன்னர் ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தவை,

கிணறுகள் மட்டுமல்ல, நீர் நிலைகளும் அப்படியே தான்.......
ஆமாம்...

ஒடுக்கப்பட்ட மக்கள் கிணறுகளிலும், நீர் நிலைகளிலும் தண்ணீர் எடுக்கவோ, தண்ணீர் அருந்தவோ, குளிக்கவோ கூடாது என்பது ஆண்டைகளின் உத்தரவு..

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான்,எனது சொந்த ஊரான மார்த்தாண்டம் சென்றிருந்த போது, பழைய தியேட்டர் சந்திப்பில், முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள இந்த கிணற்றை காண நேர்ந்தது...

1956ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் மரணமடைந்த எனது தந்தையாரின் ஹோட்டலுக்கு அருகே தான் இந்த கிணறு, திருவாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில்,நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு தோண்டப்பட்டது...
எனது தந்தையாரின் ஹோட்டலுக்கு தேவையான தண்ணீரும் இந்த #சர்க்கார் #கிணற்றிலிருந்து தான் எடுக்கப்பட்டது.

இதைப் போலவே மற்றொரு #சர்க்கார் #கிணறு, அப்பாவு நாடார் ஜவுளிக்கடை, MVUPS பள்ளி ஆகியவற்றின் எதிர் புறத்திலும் தோண்டப்பட்டது...

இந்த இரண்டு கிணறுகளும், சுற்று வட்டார ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஹோட்டல்களுக்கும் தேவையான தண்ணீரை தடையின்றி வழங்கி வந்தன...

இதே காலகட்டத்தில் எங்கள் வீட்டிலும் ஒரு கிணறு தோண்டப்பட்டது.. எங்கள் வீட்டு கிணற்றிலிருந்து, எதிரில் இருந்த பயோனீர் பஸ் பணிமனை/அலுவலகத்திற்கு தேவையான தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது; அதைப் போலவே எங்கள் வீட்டுக்கு அருகே அப்போது இருந்த, #புறம்போக்கு என்று அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தண்ணீரும் எங்கள் வீட்டு கிணறிலிருந்து தான் எடுக்கப்பட்டது....

காலப்போக்கில், மார்த்தாண்டம், விரிவடைந்து பெரிய நகரமாக மாறத் துவங்கியதும், அப்பாவு நாடார் ஜவுளிக்கடை முன் பக்கம் இருந்த #சர்க்கார் #கிணறு மூடப்பட்டு விட்டது..

எவ்வளவு மாற்றங்கள் வந்த போதும், மன்னர் ஆட்சி காலாவதியாகி, நாடு குடியரசாக மாறிய பின்பும், இந்த ஒரு கிணறும், கேட்பாரற்ற நிலையில், கடந்த கால நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கிறது...

1936ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஒடுக்கப்பட்ட மக்களும் கோவில்களில் சென்று கடவுளை வணங்கலாம் என்ற திருவாங்கூர் மன்னரின் உத்தரவைத் தொடர்ந்து, தோண்டப்பட்ட இந்த #சர்க்கார் #கிணறு, இப்போது பொதுப் பணித் துறை(PWD) பராமரிப்பில் இருக்கிறது...
எத்தனை ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரை அள்ளி அள்ளி வழங்கிய #சர்க்கார் #கிணறு, இப்போது யாருக்கும் தேவையில்லாமல் போய் விட்டது...

ஆமாம்... ஒடுக்கப்பட்ட மக்களின் மீது திணிக்கப்பட்ட கொடுமைகள் குறித்து வரலாறு கூட இப்போது யாருக்கும் தேவையில்லாமல் போய் விட்டது.....

No comments:

Post a Comment