நாளொரு கேள்வி:
************************************
மூத்த குடிமக்கள் நலன்
காக்க...
************************************
—எஸ் ராமன்
(வேலூர் கோட்ட
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்)
நாள் 21.11.2020 கேள்வி:
பலன் வரையறுக்கப்பட்ட
பென்ஷன் திட்டத்திலிருந்து (Defined Benefit Pension Scheme) பங்களிப்பு
வரையறுக்கப்பட்ட பென்ஷன் (Defined Contribution Pension Scheme) திட்டத்திற்கு
மாறி இருப்பது சமூகப் பாதுகாப்பிற்கு எப்படி ஓரு அச்சுறுத்தலாக அமையும்?
எஸ். இராமன் :
ஒரு தொழிலாளி ஓய்வு
பெற்ற பிறகு அவருடைய எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்வது பென்ஷன் திட்டம்.
இந்தியாவில் எப்போதிலிருந்து பென்ஷன் திட்டம் அமலில் உள்ளது என்று ஆராய்ந்தால்
1857 சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி மாற்றப்பட்டு
நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகு அமலாக்கப்படுகிறது. சிப்பாய்கள் தொடர்ந்து அதிருப்தி அடையக் கூடாது
என்பது அதன் நோக்கமாக இருந்திருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்குப்
பின்பாக ஹிட்லர் வீழ்ந்து ஹிட்லரால் கைப்பற்றப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்
சோஷலிச அரசுகள் அமைகிற போது முதலாளித்துவ நாடுகளுக்கு இயல்பாகவே ஒரு அச்சம்
ஏற்படுகிறது. எங்கே கம்யூனிஸ பூதம் தங்கள்
நாடுகளை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் தங்களை “சேம நல அரசு” (Welfare State)
என்று காண்பித்துக் கொள்ள விழைந்த முதலாளித்துவ நாடுகள் பென்ஷன் உள்ளிட்ட சில
சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உருவானது.
சோவியத் யூனியன்
சிதைவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அரசியல் மாற்றமும் எண்பதுகளின் இறுதியில்
ஏற்படும் வரை இப் பயனின் விரிவாக்கம் தொடர்ந்தது.
இந்தியாவில் பென்ஷனை
ஊதியக்குழு பரிந்துரைகளில் இணைக்க வேண்டும் என்று விடுதலை பெற்ற நாள் முதலே
கோரிக்கை எழுந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. பென்ஷன் அரசு வழங்கும் ஒரு கருணைத் தொகை என்றே
சொல்லப்பட்டது. டி.எஸ்.நகரா என்பவர்
தொடுத்த வழக்கில் 1982 ல் உச்ச நீதிமன்றம் “பென்ஷன் என்பது கருணைத் தொகை அல்ல, அது
ஒரு ஊழியரின் உரிமை” என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.
பலன் வரையறுக்கப்பட்ட
பென்ஷன் திட்டத்தில் ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் அவர் பெறுகிற ஊதியத்தின்
அடிப்படையில் பென்ஷன் நிர்ணயிக்கப் படுகிறது.
உதாரணமாக எல்.ஐ.சி
பென்ஷன் திட்டம் 1995 ன் படி முப்பத்தி மூன்று வருட பணிக் காலம் உள்ள ஊழியர் ஓய்வு
பெறுகிற போது அவரது கடைசி பத்து மாத சராசரி ஊதியம் கணக்கிடப்பட்டு அதில் ஐம்பது
சதவிகிதம் பென்ஷனாக தரப்படுகிறது. இதற்கு
அகவிலைப்படி நிவாரணமும் நுகர்வோர் புள்ளி குறியீட்டின் படி கிடைக்கும்.
(மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் போல பென்ஷன் ஊதிய மாற்றங்களுக்கு ஏற்ப
உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் வெற்றிக்காக நாம் போராடிக்
கொண்டிருக்கிறோம்)
எவ்வளவு பென்ஷன் ஒவ்வொரு
மாதமும் கிடைக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடிவதால் அதற்கேற்றார்
போல ஒரு தொழிலாளியால் தன்னுடைய ஓய்வு காலத்தை திட்டமிட்டுக் கொள்ள முடியும். இதுவே
பலன் வரையறுக்கப்பட்ட பென்சன் திட்டம் தரும் உத்தரவாதம்.
உலகமயமாக்கல் கொள்கை
அமலாக்கப்பட்ட பின்பு பென்ஷன் சீர்திருத்தம் என்ற பெயரில் பங்குச்சந்தை
வல்லூறுகள், பென்ஷன் திட்டத்தின் மூலமாக சேர்ந்துள்ள பெரும் நிதியை விழுங்கக்
கொண்டு வரப்பட்டதுதான் புதிய பென்ஷன் திட்டம்.
பங்களிப்பு
வரையறுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும்
அகவிலைப் படியில் 10 % பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசோ அல்லது நிர்வாகமோ
அளிக்கும்.
ஊழியர் ஓய்வு
பெறுகையில் அவர் விரும்பினால் அவர் கணக்கில் சேர்ந்த தொகையில் 60 % ரொக்கமாக
அளிக்கப்படும். மீதமுள்ள 40 % தொகை, இத்திட்டத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட
வங்கி, காப்பீட்டு நிறுவன்ங்களால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு
அதிலிருந்து வரும் வருமானம் பென்ஷனாக திருப்பி அளிக்கப்படும்.
பங்குச்சந்தையின் ஏற்ற
இறக்கத்தால் பென்ஷன் தொகை எவ்வளவு வரும் என்பது மட்டும் நிச்சயமற்ற தன்மை கொண்டது
அல்ல, முதலீடு செய்யப் பட்ட தொகையின் பாதுகாப்பிற்கே உத்தரவாதம் கிடையாது.
ஒரு ஊழியரின் பணிக்கால
சேமிப்பு முழுமையும் நிச்சயமற்ற தன்மை உடையதாய் மாற்றப் பட்டதன் மூலம்
எதிர்காலமும் நிச்சயமற்றதாகி விட்டது.
01.01.2004 க்குப்
பிறகு பணியில் சேர்ந்த மத்தியரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம்
அன்றைய வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் திணிக்கப்பட்டது.
எல்.ஐ.சி மற்றும்
பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் 01.04.2010க்கு பிறகு பணியில் சேர்ந்த
ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் தன்னிச்சையாக அமலாக்கப்பட்டது.
புதிய பென்ஷன் திட்டம்
2004 ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை நிர்வகிப்பதற்கான பென்ஷன் நிதி வளர்ச்சி
மற்றும் ஒழுங்காற்று ஆணையம் (PFRDA) 2013 வரை அமைக்கப்படவில்லை.
இடதுசாரிகளின் ஆதரவோடு
ஆட்சி நடந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த மசோதாவை
நிறைவேற்ற விடாமல் இடதுசாரிகள் தடுத்து வந்தனர்.
உலகப் பொருளாதார
நெருக்கடியின் போது அமெரிக்க பென்ஷன் நிதியில் ஏற்பட்ட இழப்பு 5.4 ட்ரில்லியன்
டாலர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
2013 ல் ப.சிதம்பரம்
கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக கரம் கோர்த்துக் கொண்டது. வாஜ்பாய் கொண்டு
வந்த திட்டம் என்று பெருமிதமும் கொண்டது. மக்களுக்கு
எதிரான திட்டங்களில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் எந்த் வேறுபாடும் கிடையாது.
இடது முன்னணி ஆட்சியில்
இருந்த மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டம்
அமலாக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு
பிறகும் மேற்கு வங்க நிலையில் மாற்றமில்லை. மாறாக பாஜக ஆட்சிக்கு வந்ததும்
திரிபுராவில் புதிய பென்ஷன் திட்டத்தை திணித்து விட்டது.
கொரோனா பெருந்தொற்றின்
விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் பென்ஷன் நிதியையும் பாதித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பென்ஷன் நிதி என்று
சொல்லப்படுகிற “ஜப்பான் அரசு பென்ஷன் நிதி” இக்காலகட்டத்தில் 165 பில்லியன் டாலரை
இழந்துள்ளது. அதன் நிதியில் இது 11.7%
ஆகும். இதன் பாதிப்பு ஓய்வூதியர்களையே வந்து சேரும்.
பங்களிப்பு வரையறுக்கப்பட்ட
பென்ஷன் திட்டத்தை நீக்க வேண்டும் என்பதற்கு வேறு நியாயம் இன்னும் வேண்டுமோ?
26 நவம்பர் 2020 ஒரு
நாள் வேலை நிறுத்தம் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை இது!
மூத்த குடிமக்களின்
நிம்மதியான வாழ்க்கைக்கான குரல் இது.
செவ்வானம்
# தீக்கதிர் ஆன்லைன்
பதிப்பிலும் வெளியானது.
No comments:
Post a Comment