Thursday, November 19, 2020

அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் முன்பாக

 


உச்ச நீதிமன்றத்தின் மீது பாஜக கொடி பறப்பதாக படம் போட்டதற்காக இந்தி காமெடி நடிகர் குணால் காம்ரா மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் வரம்பை மீறி விட்டார் என்று மத்தியரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து சொல்லியுள்ளார்.

ஆகவே அவமதிப்பு வழக்கு நடக்கலாம். ஒரு ரூபாய் அபராதமா அல்லது சிறைத் தண்டனையா என்பதையெல்லாம் நாம் பார்க்கத்தான் போகிறோம்.

மாண்புமிகு நீதியரசர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் ஒன்று உண்டு.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு வந்த அர்ணாப் கோஸ்வாமிக்கு தீபாவளி விடுமுறை நாளில் நீதிமன்றத்தின் இணையக் கதவுகள் திறந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பீமா கொரேகான் வழக்கில் எத்தனையோ அறிவுஜீவிகள், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்றொரு அபாண்டமாக குற்றத்தை சுமத்தினாலும் அரசு இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவோ, வழக்கை நீதிமன்றத்திற்கோ கொண்டு வரவோ கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். 

கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் வாட வேண்டும் என்ற குரூர சிந்தனை தவிர வேறெதும் அரசுக்கு கிடையாது.

அப்படி கைது செய்யப்பட்டவர்களில் எண்பது வயதைக் கடந்த திரு ஸ்டான் ஸ்வாமி அவர்கள் ஒரு எளிய கோரிக்கையை வைத்துள்ளார். பார்கின்ஸன் நோய் காரணமாக கை நடுங்குவதால் தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா வைத்த சிப்பர் டம்ப்ளர் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

அதை புலனாய்வுத்துறைதான் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னதால், அவர்கள் அதை மறுத்ததால் நீதிமன்றத்திற்கு பிரச்சினை வருகிறது. சிப்பர் கொடுப்பதா வேண்டாமா என்று பரிசீலிக்க இருபது நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற புலனாய்வுத்துறை வாதம் நீதிமன்றத்தாலும் ஏற்கப்படுகிறது. 

அர்ணாப் கோஸ்வாமி வழக்கோடு இதை ஒப்பிடும் சாதாரண மக்களுக்கு என்ன செய்தி கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்து விட்டு அவமதிப்பு வழக்கை தொடங்குங்கள் என்றே நீதியரசர்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment