வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக நூல் பதிவு
அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை(ஜாமீன்) வழங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்குள் அர்னாப்பையும் மற்ற இருவரையும் விடுவிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு வேண்டுமானாலும் பிறப்பிக்கலாம். அதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அவருக்கு நீதி வழங்கப் பட்ட வேகம் ஆச்சரியமளிக்கிறது.
அர்னாப் 4.11.2020 அன்று கைது செய்யப்பட்டார். உள்ளூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது போலீசார் அர்னாப்பை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவரை தங்கள் கஸ்டடிக்கு அனுப்பும் படி மனுச்செய்தனர். குற்றவியல் நடுவர் அனுப்ப மறுத்து நீதிமன்றக் காவலுக்கு அதாவது சிறைக்கு அர்னாப்பை அனுப்பினார்.
பின்பு அர்னாப் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதைத் தடை செய்யக் கோரியும் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் ரிட் மனு தாக்கல் செய்தார். அநேகமாக மனு 5 அல்லது 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் மறுத்து முறைப்படி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யும் படி திங்கள் கிழமை(9.11.2020) உத்திரவிட்டது.
செவ்வாய் கிழமை அர்னாப் உச்சநீதிமன்றத்தில் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் தாக்கல் செய்து ஜாமீன் கோரினார்.
அந்த மனு அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாமீன் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தாவே இந்த மனு எப்படி அடுத்தநாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது? இதற்கு நீதிபதியின் சிறப்பு உத்தரவு உள்ளதா? எண்ணற்றவர்கள் சிறைகளில் வதைபட்டுக் கொண்டிருக்கும் போது இந்த மனு மட்டும் வரிசைக்கிரமமாக இல்லாமல் அவசரமாக எடுத்தக் கொள்ளப்பட்டது ஏன்? என்று கடுமையான் சொற்களில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதைப் புரிந்து கொள்ள ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யும் முறையையும் புரிந்து கொள்ள வேண்டும். கொலை, கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டல் போன்ற குற்றங்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் ஜாமீன் கோரி மனுச்செய்ய வேண்டும்.
இன்று மனுச் செய்தால் அது இரண்டு வேலை நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும். அப்போது போலீசார் பதில் அளிக்கவில்லை என்றால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் வாய்தா போடப்படும்.
இங்கே மனு தள்ளுபடி செய்யப்பட்டால் தள்ளுபடி ஆணையைப் போராடி வாங்க ஓரிரு நாட்கள் வேண்டும். ஜூனியர் வக்கீல்கள் இந்தப் போராட்டத்தில் சீனியரின் திட்டு( எங்கள் சீனியர் திட்டமாட்டார். சோகமாகிவிடுவார். அது இன்னும் சிக்கல்). கட்சிக்காரர்களின் புலம்பல் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டே அலைய வேண்டும். அது இல்லாமல் உயர்நீதிமன்றத்தில் மனுச்செய்ய முடியாது.
பின்பு உயர் நீதிமன்றம். அங்கும் இதே புரோசீஜர். அதில் வரிசைப்படி வரும் போது முதலில் இருக்கும் கேஸின் வக்கீல் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் அதிக நேரம் பேசிவிட்டால் அல்லது வேறு காரணத்தால் லேட்டாகிவிட்டால் மனு வேறு தேதிக்குப் போய்விடும்.
அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டால் உச்சநீதிமன்றம்.
இதை மாற்ற முடியாது.
அர்னாப் கீழ் கோர்ட்டுக்குப் போகவே இல்லை. உயர்நீதிமன்றம் சொன்னதும் பெயருக்கு உள்ளூர் கோர்ட்டில் ஒரு மனு போட்டு வைத்தார். நேராக உச்சநீதிமன்றம் போனார். மகாராஷ்ட்ராவை விட்டு வெளியே போய்விட வேண்டும் என்ற அவசரம் போலும்.
அவர் நினத்தது நடந்து விட்டது.
இந்த வழக்கு மட்டும் வரிசையில் வராமல் ஏன் அடுத்தநாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது? அதற்கு யார் காரணம் என்ற துஷ்யந்த் தாவேவின் கேள்விக்கு பதில் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை.
அடுத்ததாக ஒரு ஆதிவாசிக்கோ, இடதுசாரி எழுத்தாளருக்கோ, செயல்பாட்டாளருக்கோ ஜாமீன் கோரி நேரடியாக உச்சநீதி மன்றத்தை அணுகி அர்னாப்புக்குக் கிடைத்த இதே முறையில் நீதிபெற்றுக் கொள்ளலாம் என்று நாம் நம்பலாமா?
இவர்களையும் இனிமேல் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பாமல் நீதிமன்ற கஸ்டடிக்கு அனுப்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?
all animals are equal but some animals are more equal
ஆமாம் தோழர், என்ன இருந்தாலும் அர்ணாபு மோடியின் செல்லப்பிராணியல்லோ!
பிகு: வழக்கறிஞர் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவேயின் கடிதம் மிகவும் காட்டமானது. அதனை மாலையில் பகிர்ந்து கொள்கிறேன்
No comments:
Post a Comment