Wednesday, November 11, 2020

ஈவிஎம் மோசடி - என் அனுபவம்

 ஒரே ஒரு முறை மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது நுண் பார்வையாளராக பணியாற்றினேன். அந்த அனுபவத்தை 2011 ம் ஆண்டு எழுதினேன். இன்றைய சூழலில் அதனை மீண்டும் பகிர்ந்து கொள்வது அவசியம் என்பதால் மீள் பதிவு செய்துள்ளேன்.

பீகாரிலும் இப்படித்தான் நடந்திருக்கும்.



வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே

மின் அணு இயந்திரத்தில்  வாக்கு பதிவு  கூடாது  என்ற  பல்லவியை  தமிழக அரசியல் கட்சிகள் இன்னும்  பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி  செய்வது சாத்தியமா  என்று  தெரியாது.  ஆனால்  வாக்கு எண்ணிக்கையில்  மோசடி  செய்வது  என்பதற்கான சாத்தியங்கள்  நிச்சயமாகவே  உள்ளது. எப்படி  என்று பார்ப்போம்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில்  நுண் பார்வையாளராக (Micro Observer) 
பணியாற்றும்  வாய்ப்பு  கிடைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்அனுமதிக்கப்பட்ட  இரும்புக்கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை   ஒரு அனுபவத்திற்காக பயன்படுத்திக்கொண்டேன். அந்த
அனுபவத்தின்  அடிப்படையில்  எழுதுகின்ற பதிவு இது. 

வாக்கு  எண்ணும்  இடத்தில்  பதினைந்து  மேஜைகள்,  ஒவ்வொரு  மேஜையிலும்  மூன்று  இருக்கைகள்.  வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு   
உதவியாளர்,  ஒரு நுண் பார்வையாளர்  என மூவர்.  அந்த மேஜைகள் 
ஒரு ப வரிசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.  மேஜைகளுக்கு  வெளியே 
சவுக்குக் கம்புகள், கம்பிகளால் ஆனா தடுப்புக்கள். தடுப்புக்களுக்கு 
வெளியே  வேட்பாளர்களின்  முகவர்கள்  நின்று கொண்டிருப்பார்கள். 

ஒவ்வொரு வாக்கு  எண்ணும் இயந்திரமாக  ஒவ்வொரு மேசைக்கும் 
கொண்டு வரப்படும்.  கவனிக்க வேண்டிய  விஷயம்  என்னவென்றால்  
வாக்குப் பதிவு மட்டுமே  இயந்திரமயமாக்கபபட்டுள்ளது. வாக்கு 
எண்ணிக்கை  அல்ல.  ஒவ்வொரு மேசைக்கும்  வேட்பாளர்கள்  பெயர் 
அடங்கிய பட்டியல்  தரப்பட்டிருக்கும்.  வாக்குப்பதிவு  இயந்திரத்தில்  
என்ன  வரிசையில்  பெயர்கள்  இருந்தனவோ, அதே வரிசையில்தான்  
பட்டியலும்  அமைந்திருக்கும்.

வாக்குப்பதிவு  இயந்திரம்  மேஜைக்கு வந்ததும், சீல் நீக்கி, ஒவ்வொரு  
வேட்பாளருக்கும்  எவ்வளவு  வாக்கு பதிவானது  என்பதை  அதற்குரிய 
பட்டனை அழுத்தி  தெரிந்து கொள்ள வேண்டும்.  அதனை  கொடுக்கப்பட்ட 
பட்டியலில்  குறித்துக் கொள்ள வேண்டும். வாக்கு எவ்வளவு  என்ற 
தகவலை  இயந்திரத்தை  பார்ப்பதன் மூலம்  முகவர்களும்  அறிந்து 
கொள்ள முடியும். ஆனால்  அதற்கான  அவகாசம்  என்பது  மிக மிக 
குறைவு. திருப்பதி ஜருகண்டி போல, மேஜிக் நிபுணர் சாகசம்  போல 
வேகம் வேகமாகத்தான்  காரியங்கள்  நடக்கும். நுண் பார்வையாளரும் 
தனியாக  ஒரு பட்டியலில் வாக்கு எண்ணிக்கை  பற்றி தனியாக  பதிவு
செய்து  பார்வையாளரிடம்  அளிக்க வேண்டும். ஜருகண்டி வேகத்தில் சில 
சமயங்களில்  இது சாத்தியமில்லாமல்  போய் தேர்தல்  அலுவலரின் 
விபரத்தை  அப்படியே  நகலெடுத்து  அளிப்பது  என்பதும்  நடந்தது. 

பட்டியலில்  குறித்துக்கொள்வது  என்பதில்தான்  மோசடிக்கான  சாத்தியம்  அடங்கியுள்ளது.  கட்சிகளின் முகவர்களோ  அல்லது நுண் 
பார்வையாளர்களோ  விழிப்பாக  இல்லையென்றால்  ஒரு வேட்பாளர் 
வாங்கிய வாக்குகளை  வேறு  வேட்பாளரின்  பெயரில்  எழுதி விடுவது 
மிகவும் சுலபம். மின்னல் வேகத்தில்  நடைபெறும்  விஷயம்  இது. 
முகவரோ  அல்லது  நுண் பார்வையாளரோ  விழிப்பாக  இருந்தால் இதை
தவிர்க்க முடியும்.  மேற்பார்வையிடும்  அதிகாரிகளுக்கு  இது பற்றி 
தெரிய வராது.  அவர்களைப் பொறுத்தவரை  அந்த  இயந்திரத்தில்  பதிவான வாக்குகளும்  அனைத்து  வேட்பாளர்களும்  பெற்ற 
வாக்குகளின் கூட்டுத்தொகையும்  ஒன்றாக  இருக்க வேண்டும். 
அவ்வளவுதான்.  

இப்படி மாற்றி  எழுதுவது  என்பது  நான் அமர்ந்திருந்த  மேஜையிலேயே 
நடந்தது. முதல் சுற்று  எல்லாம்  சரியாகவே  நடந்தது.  அடுத்த சுற்றில்  
பதிவான  வாக்குகள்  எவ்வளவு  என்ற எண்ணிக்கையை   அதற்குரிய 
இடத்தில்  எழுதாமல்   அதற்கடுத்த  இடத்தில்  இருந்த ஆளும்கட்சி 
வேட்பாளர்  இடத்தில்  எழுதினர். நான் சுட்டிக்காட்டியதும், சாரி என்று 
சொல்லி  திருத்திக்கொண்டார்.  நான்காவது  சுற்றில்   எதிர்க்கட்சி   
வேட்பாளர்  பெற்ற வாக்குகளை  அவரிடத்தில்  எழுதாமல்  வேறு 
வேட்பாளரிடம்  எழுதினர். இம்முறை  சற்று  கடுமையாகவே  சொன்னதும்
திருத்திக்கொண்டார்.  இதில்  என்ன கொடுமை என்றால்  அந்த சுற்றில் 
ஆளும் கட்சி  300 வாக்கு, எதிர்க்கட்சி 700 வாக்கு  வேறு கட்சி 100  வாக்கு 
பெற்றிருந்தார்கள்  என்று  வைத்துக்கொள்வோம்.  400 வாக்குகள்  அந்தப் 
பெட்டி மூலமாக  பெற்றிருக்க வேண்டியவருக்கு  100  வாக்கு மட்டுமே 
கிடைக்கும். தன் முயற்சியில்  சற்றும் தளராத விக்கிரமாதித்தன் 
ஏழாவது சுற்றில் மீண்டும்  தன்  வேலையைக் காண்பிக்க  வேதாளம்  
கடுமையாகவே  மிரட்ட வேண்டியிருந்தது.   அதன் பின்பு  சுமுகமாகவே 
நடந்து முடிந்தது.  இந்த வேலைகளையெல்லாம்  எந்த கட்சியின் முகவரும்  உன்னிப்பாக கவனிக்கவேயில்லை. எங்கள் மேஜைக்கு   
வாய்ந்த அடிமைகள்  அப்படி!  

இப்படி  எல்லா மேசைகளிலும்  செய்வதற்கான  வாய்ப்பு  உண்டா  என்றால் நிச்சயம்  கிடையாது.  ஆனால்  மொத்தமுள்ள  15 மேசைகளில் 
ஏதேனும் மூன்று  மேசைகளில் மட்டும்  செய்கின்றார்கள்  என்று 
வைத்துக்கொள்வோம். மொத்தமுள்ள  15 சுற்றுக்களில்  மூன்றே 
மூன்று  சுற்றுக்களில்  செய்கின்றனர்  என்று கூட வைத்துக்கொள்ளலாம். 
மோசடியே கிடைக்கிற வாக்குகள்  வெறும்  இருநூறு என்று மட்டுமே 
வைத்துக்கொண்டால்  என்ன  ஆகும் என்று பார்ப்போம்.
3 *3 *200  =  1800 .  

1800  வாக்குகள்  அதிகமாக  கிடைக்கும்படி செய்துவிட்டால்  போதுமா 
என்று கேட்காதீர்கள்.  

கடந்த  சட்டப்பேரவைத் தேர்தலில்  சிங்காநல்லூர் தொகுதியில் தோழர் 
அ.சவுந்தரராஜன்  வெற்றி வாய்ப்பை இழந்தது  வெறும் 14  வாக்குகளில்தான்.  பண்ருட்டியில்  பாமகவின் வேல்முருகன்  வெற்றி  
பெற்றது  நூற்றைம்பது  வாக்கு வித்தியாசத்திற்குள்தான். பேராசியர் 
வெற்றி பெற்றது 400  வாக்கு வித்தியாசத்தில். மு.க.ஸ்டாலின் கரை 
சேர்ந்தது  2400  வாக்குகளில்தான். 

ஆகவே  ஒரே ஒரு மேஜையில்  ஒரு சுற்றில் மோசடி நடந்தாலும் 
அது வெற்றி வாய்ப்பை  பாதிக்கும். சிவகங்கை  தொகுதியில் நடைபெற்ற
குழப்பங்கள்  நினைவிற்கு  வருகின்றதா?  நூற்றுக்கு நூறு சரியானது 
என்று  இந்த முறையை  சொல்ல முடியாது.  பிரிண்ட்  ஆப்ஷன் இணைக்க 
முடியுமா?  வாக்கு எண்ணிக்கையன்று  அந்த பிரிண்டை  வெளியே  எடுக்க
முடியுமா  என்றெல்லாம் தேர்தல் ஆணையம்  யோசித்தால்  நல்லது. 

அதுவரை கட்சிகளின் முகவர்கள்  மற்றும் நுண் பார்வையாளர்கள்  கடைசிவரை   விழிப்பாக   இருப்பதுதான்  ஒரே வழி!     

No comments:

Post a Comment