Saturday, November 14, 2020

இந்தியாவை இவரா சீரழித்தார்?

தங்களின் அனைத்து தோல்விகளுக்கும் நேருவின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். ஆறு வருடமாக இந்தியாவை நாசகரமாக ஆண்டு கொண்டிருப்பவர்களால் உருப்படியாக ஒரு நடவடிக்கை கூட எடுக்க முடியாத காலக்கட்டத்தில் நேருவை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

அவரது நடவடிக்கைகள் மீதும் விமர்சனம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரம் நேரு மீது இவர்கள் பழி போடுவது என்பது தங்களின் கையாலாகத தனத்தை மறைத்து திசை திருப்பவே.

இப்பதிவை முழுமையாக படிக்கையில் அதை நீங்களே உணர்வீர்கள்



 *நாளொரு கேள்வி: 14.11.2020*

####################

*தீபத் திருநாள் வாழ்த்துக்கள்*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க. சுவாமிநாதன்*
####################

*நேரு: குழந்தைகளுக்கு என்ன செய்தி*

*கேள்வி:*

ஜவகர்லால் நேருவின் 132 வது பிறந்த நாளில் அவரது முத்தாய்ப்பான மூன்று பங்களிப்புகள் என்றால் எவற்றை சொல்லலாம்?

*க.சுவாமிநாதன்*

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர் அவர். அவரது தியாகம் நிறைந்த வாழ்க்கை மகத்தானது. 1921 - 1945 காலத்தில் *நேரு இந்திய விடுதலைக்காக 3259 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.* அதில் தொடர்ச்சியாக கழித்த நீண்ட சிறை வாசம் 1041 நாட்கள். அவரின் முத்தாய்ப்பான மூன்று பங்களிப்புகள் என்று வரிசைப்படுத்துவது சிரமம். காரணம் அவரின் பங்களிப்புகள் வரிசைப்படுத்தலில் ஒன்றோடு ஒன்று போட்டி போடும். 

*பூரண சுதந்திரம்,* (Complete Independence) *பொருளாதார தேசியம்,* (Economic Nationalism) *பன்மைத்துவம்* (Pluralistic society) ஆகிய மூன்றைப் பேசலாம். இம் மூன்றும் தாக்கப்படுகிற காலம் இது. ஆகவே நேருவின் காலம், அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு இட்ட அடித்தளம் ஆகியன பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதுவே எதிர்கால இந்தியாவுக்கு, குழந்தைகளுக்கு இந்நாளின் செய்தி. 

*பூரண சுதந்திரம்* என்ற முழக்கத்தை இந்தியாவின் தேசிய இயக்கத்திற்குள் முதலில் முன் மொழிந்தது கம்யூனிஸ்டுகளே. *1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் துவங்கி 1929 லாகூர் மாநாடு வரை* இதற்கான விவாதங்கள் காங்கிரசுக்குள் நடந்தது. பெசாவர், கான்பூர், மீரட் சதி வழக்குகளை எதிர்கொண்டு கம்யூனிஸ்டுகள் பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கைகளை வளர்த்தெடுத்தார்கள் எனில் நேரு காங்கிரசுக்குள் அதற்கான கருத்துப் போராட்டத்தை நடத்தினார். *சுயராஜ்யம், ஹோம் ரூல், டொமினியன் அந்தஸ்து* என்று பல பெயர்களில் காங்கிரஸ் அதுவரை முன் வைத்து வந்த கோரிக்கைகள் அனைத்துமே பிரிட்டிசாரின் கட்டுப்பாட்டிற்குள் - ஒத்துழைப்போடு தொடர்கிற ஏற்பாடாகவே இருந்தது. நேரு சொன்னார், *"ஆட்டுக் குட்டிகள் சிங்கத்திடம் எப்படி ஒத்துழைப்போடு இருக்க முடியும்?... இறுதியில் ஆட்டுக்குட்டி சிங்கத்தின் வாய்க்குள் போய் விடாதா?* என்று கேட்டார். மோதிலால் நேரு, காந்தி ஆகியோருக்கு கூட இக் கோரிக்கையில் அன்று உடன்பாடு இல்லை. லாகூர் மாநாட்டிற்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கைக்கான இசைவு காங்கிரசுக்குள் பெறப்பட்டது. அக் கூட்டத்தில் நேருவின் பங்கு முதன்மையானது. காந்தி அப்போது *"சிறுவர்களின் விளையாட்டு"* என்றே அம் முடிவை வர்ணித்தார். (பிற்காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்தை மகாத்மா காந்தி வெகு ஜன எழுச்சியாக மாற்றினார் என்பதை நாம் மறக்கக் கூடாது.) லாகூர் மாநாட்டிற்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்த போது காந்தியின் பெயர் முன் மொழியப்பட்டது. ஆனால் காந்தி நேருவை முன் மொழிந்தார். *நேரு தலைமையில் கூடிய அம் மாநாட்டில்தான்* இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த "பூரண சுதந்திரம்" என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றுகிறது. 750 பக்கங்கள் கொண்ட அத் தீர்மானம் முழு விடுதலை என்றால் *அரசியல், பொருளாதார, பண்பாட்டு, ஆன்மீக விடுதலை* என்று அறிவிக்கிறது. உரிமைகளை அது உறுதி செய்தது. வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான பிரகடனம் அதில் இருந்தது. இத் தீர்மானமே விடுதலைக்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் ஆதார சுருதியாக அமைந்தது. 

*"பொருளாதார தேசியம்"* என்கிற கருத்தாக்கத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி என்றால் அதற்கு இயக்க ரீதியான வெகு சன இசைவைப் பெற்றுத் தந்ததில் கராச்சி காங்கிரஸ் முக்கியப் பங்கை வகித்தது. இன்று பல *"முகமூடி தேசியங்கள்"* வலம் வருகிற சூழலில் விடுதலை இயக்கம் வளர்த்தெடுத்த கனவை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத் தேசியமே அது. உணமையான தேசியம் அது. போலி தேசியம் பேசுவோரின் உதடுகள் தப்பித் தவறிக் கூட உச்சரிக்காத தேசியம் அது. கராச்சி காங்கிரஸ் கூடிய போது *நாடு கொதி நிலையில்* இருந்தது. காந்தி - இர்வின் ஒப்பந்தம் மக்களை சமாதானம் செய்ய இயலவில்லை. *பகத்சிங்* தூக்கில் இடப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கூடிய மாநாடு. பகத் சிங் உயிரை காங்கிரஸ் காப்பாற்றத் தவறி விட்டதென்ற குற்றச் சாட்டு இருந்தது. மாநாட்டிற்கு ரயிலில் வந்து இறங்கிய *காந்தி, படேலுக்கு கறுப்புக் கொடிகள்* காண்பிக்கப்பட்டன. தனது கைகளில் தர்ப்பட்ட கறுப்பு மலர்களை வாங்கிக் கொண்டு காந்தி நடந்தார் என்பது அன்று நிலவிய ஜனநாயக உணர்வுகளுக்கு சாட்சியம். நேருவுக்கு காந்தி இர்வின் உடன்பாடு பற்றி முழுமையான ஏற்பு இல்லை. ஆகவே மாநாடு அந்த உடன்பாட்டிற்கு ஒப்புதலை தருவதற்கு அவர் வலியுறுத்திய முன் நிபந்தனையே கராச்சி காங்கிரஸ் நிறைவேற்றிய *எதிர்கால இந்தியாவின் பொருளாதாரப் பாதை* குறித்த தீர்மானம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

காந்தி இர்வின் உடன்பாடை வரவேற்ற அம் மாநாடு, பகத் சிங் சகாக்களின் தியாகத்தைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியது. *கராச்சி காங்கிரஸ் தீர்மானம், கேந்திரத் தொழில்கள் அனைத்தும் அரசின் வசம் இருக்கும், உள்நாட்டுத் துணிகளுக்கு பாதுகாப்பு தரப்படும், குழந்தை உழைப்பு தடை செய்யப்படும், கந்து வட்டி ஒழிக்கப்படும், பிரசவ விடுப்பு வழங்கப்படும்* என பன்முக நோக்கில் நம்பிக்கை அளிக்கிற முழக்கங்களை முன் வைத்தது. இன்று பொதுத் துறை, அரசின் சமூகக் கடப்பாடு, பாலின நீதி எல்லாம் ஒரு சேரத் தாக்கப்படும் போது நேருவின் பங்களிப்பு ஓர் கருத்தாயுதமாக, கள அனுபவமாக நமக்கு பயன்படுகின்றன. 

பொதுத் துறையை விடுதலை இந்தியாவில் உருவாக்குவதில் வளர்ப்பதில் அவரின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு *அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உதவ மறுத்த நிலையில், சோவியத் யூனியன் உதவியோடு* பிலாய் உருக்காலையை அமைத்தார். பிறகு ஜெர்மனியும், பிரிட்டனும் உதவ முன் வந்து முறையே ரூர்கேலா, துர்க்காபூர் உருக்காலைகள் அமைகின்றன. இந்தியத் தொழிலதிபர்கள் கைகளில் போதிய மூலதனம் இல்லாத நிலையில், இருந்தாலும் நீண்ட கால முதலீடாகப் போடத் தயங்கிய நேரத்தில் அரசு முதலீடுகளோடு பொதுத் துறை நிறுவனங்கள், அடிப்படைக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன.

 *பக்ரா நங்கல் அணையின் துவக்க நிகழ்ச்சியில்* நேரு ஆற்றிய உரையில் *"கோயில், மசூதி, குருத்வாராக்களுக்கு செல்கிறோம். பொது நன்மைக்கு அவை உதவுபவை என்று உணர்கிறோம். அப்படி விரிந்த பொது நன்மைக்கானதே பக்ரா நங்கல் அணைத் திட்டம். ஹிராகுட் உருவாகி வருகிறது. இவையெல்லாம் நவீன யுகத்தின் திருக் கோயில்கள்"* என்றார். ஸ்டேட் வங்கி 1955 ல், எல்.ஐ.சி 1956ல், ஓ.என்.ஜி.சி 1956 ல் உருவாகின்றன. அரசுப் பள்ளிகள், பொது சுகாதாரம், கிராமங்களுக்கான போக்குவரத்து ஆகியன விரிந்தன. *1990 களின் தெற்காசிய நிதி நெருக்கடி, 2008 உலக நிதி நெருக்கடி புயலில் இந்திய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வீழாமல் தாங்கிப் பிடித்தது எதுவெனில்* அவை அரசு நிறுவனங்களாக இருந்ததே. 


*"பன்மைத்துவம்"* இந்தியாவின் அரிய பண்பு. இந்தியா விடுதலை பெறும் போது பிரிட்டிஷ் இந்தியாவுக்கு அப்பாற்பட்டு 565 சமஸ்தானங்கள் இருந்தன. பல சமுகக் குழுக்கள், மொழிகள்... சிதறிக் கிடந்த முத்துக்களை எடுத்து கோர்க்கப்பட்ட அழகான மாலையே இந்தியா ஆகும். *அன்றிருந்த மொத்த இந்தியப் பரப்பில் 40%ம், மக்களில் 23 % (அதாவது 10 கோடி பேர்) சமஸ்தான ஆட்சிக்குட்பட்டே இருந்தன(ர்) என்றால் நவீன இந்தியாவை நிர்மாணிப்பது அவ்வளவு சாதாரணமானதா?*

விடுதலைக்குப் பிந்தைய பிரிவினைக் கலவரங்களில் இரத்த ஆறு ஓடியது. வங்காளத்திற்கு போய் மக்களை சந்தித்து அமைதிக்காக காந்தி அரும்பாடுபட்டார் எனில் *டெல்லிக் கலவரங்களில்* வீதிகளுக்கு சென்றார் நேரு. மோதல் நிகழும் போதே அதைத் தடுத்து உரையாடினார். இதை இ.எம்.எஸ் *"நேருவின் தத்துவமும் நடைமுறையும்"* என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.  எவ்வளவு ஆளுமையும், நம்பகத்தனமையும் இருந்திருந்தால் அவரால் இதை செய்திருக்க முடியும் என்பதையும் அண்மைய டெல்லிக் கலவரத்தின் போது ஆட்சியாளர்கள் நடந்து கொண்டதையும் பார்க்கும் போது வேதனைதான் எஞ்சுகிறது. *சோம்நாத் கோயில் புனரமைப்பு விழாவில்* அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொள்வதை எதிர்த்தார். ஒவ்வொன்றை சொல்லும் போது இன்றைய எதிர்மறை நடப்புகள் ஏதாவது ஒன்று மனத் திரையில் வந்து போவதை தவிர்க்க இயலவில்லை. காஷ்மீர் இந்து மன்னரையும், இஸ்லாமிய மக்களைப் பெரும்பான்மையாகவும் கொண்ட சமஸ்தானம். ஆனால் அது இந்தியாவுடன் இணைந்தது. இந்து மன்னர்கள் சிலர் கூட பாகிஸ்தானுடன் ரகசிய உடன்படிக்கைக்கு சென்றனர். ஆனால் இவற்றையெல்லாம் தகர்த்து *இந்திய ஒன்றியம்* உருவானது. காந்தி, நேரு ஆகியோர் மீது இருந்த ஈர்ப்பு, அவர்களின் நேரிய அணுகுமுறை மீதான நம்பிக்கை இதற்கு முக்கியப் பின்பலம் ஆகும்.  

நவீன இந்தியா குறித்த விடுதலைக் கன்வுகள் இவை.

இன்னும் நிறைய இருக்கிறது. கூட்டு சேரா கொள்கை, ஜனநாயகம் ஆகியன உயிர்ப்பான உதாரணங்கள். 

*இவையெல்லாம் தனி நபர் சாகசங்கள் அல்ல. உன்னதமான தலைவர்கள் விவாதத்திற்கு, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மக்களின் உணர்வை, ஏக்கத்தை, எழுச்சியை முன்னெடுத்துச் செல்லும் வரலாற்று சக்கரத்தை சுழற்றியவர்களில் நேரு முக்கியமானவர் என்பதே. மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். மக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிக்கிறார்கள்.*

நேரு... உங்களின் ஒவ்வொரு நகர்வும் எதிர்கால இந்தியாவுக்கு செய்தி. 

*****************
*செவ்வானம்*

No comments:

Post a Comment