Thursday, October 1, 2020

BSNL பிறந்த நாள் தொடரட்டும்.

  


இன்று நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் பிறந்த நாள்.

 மத்தியரசின் அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறையாக ஒன்றாக இருந்தது பிற்காலத்தில் தனித்தனித் துறைகளாக பிரிக்கப் பட்டது. பின்பு 2000 ம் ஆண்டு இதே நாள் பாரத் சன்சார் நிகாம் லிமிட்டெட் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அமைக்கப்பட்டது.

 தோன்றியது முதல் பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனம்  பி.எஸ்.என்.எல்.

 இந்தியாவில் அலைபேசி சேவை தொடங்கப்பட்டாலும் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு அனுமதி  வழங்கப்படவில்லை. மற்ற நிறுவனங்கள் நன்றாக கால் பதித்து நின்ற பின் அனுமதி கிடைக்கிறது. ஆனாலும் அவர்கள் அலைபேசி பிரிவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக வளர்கிறார்கள்.

 அவர்களது கட்டமைப்புக்கள், அதாவது அவர்களின் கேபிள்கள், டவர்கள், ஆகியவை தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான கட்டணம் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறது. தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் போட்டாலும் அது வசூலிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது.

 மத்தியரசு செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கூட கட்டாமல் ஏமாற்றி வருகிறது. தன்னுடைய சேவையை சிறப்பாகச் செய்ய, புதிய டவர்களை அமைக்க, உபகரணங்கள் வாங்க திட்டமிடுகிறது. ஆனால் அப்படி வாங்குவது தடுக்கப்படுகிறது.

 எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பி.எஸ்.என்.எல்.  உபகரணங்கள் வாங்குவது தேசப் பாதுகாதுப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறதோ, அந்த நிறுவனத்திடம் இருந்துதான் மற்ற தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கிறது. அப்போது பி.எஸ்.என்.எல்.  நிறுவன வளர்ச்சியை தடுப்பது மட்டும்தான் அரசின் நோக்கம் என்பது தெளிவாக்குகிறது.

 பி.எஸ்.என்.எல்.  தன்னுடைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசிடம் சில உதவிகள் கேட்டது. தொலை தொடர்புத்துறையின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்திற்கு மாற்றித்தரப் பட வேண்டும்.  கடன் வாங்க அனுமதி தர வேண்டும். 4 ஜி சேவை அளிக்கப்பட வேண்டும்.

 ஆனால் இது எதையுமே மோடி அரசு செய்யவில்லை.

 மாறாக பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஆரவாரமாக ஒரு பெரிய பேக்கேஜை சில ஆயிரம் கோடிகளோடு விருப்ப ஓய்வுத்திட்டத்தோடு அறிவித்தது., அதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே சரியான தேதியில் ஊதியம் கொடுக்காமல் ஒரு அச்சத்தை ஊழியர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாதங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவே இல்லை. அதனுடைய விளைவாக ஐம்பது சதவிகிதம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை நாடினார்கள். அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர் என்பது தனிக்கதை.

 அரசு சொன்ன பணமும் வரவில்லை. அரசு உறுதியளித்த 4 ஜி  சேவையும் இது நாள் வரை கிடைக்கவில்லை. ஜியோ வாழ பி.எஸ்.என்.எல்.  அழிய வேண்டும் என்பதே மோடியின் ஆசை.

 என்னுடைய அனுபவத்திற்கு வருகிறேன். கடந்த வருடம் நவம்பரில் ஒரு பெரிய இடி இடித்ததில் என்னுடைய ப்ராட் பேண்ட் மோடம் எரிந்து விட்டது. அதை சரி செய்ய எடுத்துக் கொண்டு போன போது, புதிய மோடம்தான் வாங்க வேண்டியிருக்கும். அதற்கு செலவு செய்வதற்குப் பதில் புதிய ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு பெறுவது நல்லது என்று ஆலோசனை சொன்னார்கள். அப்படியே பழைய இணைப்பை சரணடைந்து விட்டு புதிய ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு பெற்றேன்.

 ஒரு வருடமாக ஒரு நிமிடம் கூட இணைய வசதி தடை படவே இல்லை. வேகமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. பெரிய கோப்புக்கள் கூட உடனடியாக தரவிறங்கி விடுகிறது.  உண்மையிலேயே மன நிறைவடைந்த வாடிக்கையாளனாக பி.எஸ்.என்.எல் நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 4 ஜி சேவையும் கிடைத்தால் பி.எஸ்.என்.எல் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றே நம்புகிறேன். தொடர்ந்து பிறந்த நாள் கொண்டாடும் என்றும் நம்புகிறேன்.

 ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது.

 பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே பிறக்கிறது என்று சொன்ன ஒரு படுபாவியை பிரதமராகக் கொண்டுள்ளது தேசம்.

 மக்களின் வியர்வையில் உருவான நிறுவனம் பி.எஸ்.என்.எல். தாமதர்தாஸ் மோடியின் சொத்தல்ல. மக்கள் அனைவரும் குரல் கொடுத்தால் நம்மால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

 

HAPPY BIRTHDAY BSNL

 

2 comments:

  1. தோழர், IDBI வங்கிக்கும் இன்று தான் பிறந்த நாள்..

    ReplyDelete
  2. உண்மைதான். ஊழியர்களின் சேவையிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது

    ReplyDelete