Thursday, October 8, 2020

போப்பாண்டவரின் முக்கியக் கடிதம்.



 *நாளொரு கேள்வி: 07.10.2020* 

 இன்று *போப் பிரான்சிஸ்* அவர்களின் பகிர்வு. உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க பிஷப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தின் பகுதிகள் ( "பிஸினஸ் இன்சைடர்" அக் 6, 2020 இதழில் இருந்து). கேள்வி வடிவமைப்பு செவ்வானத்துடையது

####################

 *கேள்வி:* 

 சந்தை தன்னைத் தானே சரி செய்து கொண்டு மனித குலத்தின் இடர்களுக்கு தீர்வு தருமா?

 *போப் பிரான்சிஸ்*

 சந்தை மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இயலாது என்றாலும் *இந்த நவீன தாராளமய நம்பிக்கை சார்ந்த கருத்தாக்கத்தை நம்புமாறு நாம் வற்புறுத்தப்படுகிறோம்...* என்ன இடர்கள் வந்தாலும் நவீன தாராளமயம், வறட்டுத் தனமாக, திரும்பத் திரும்ப இக் கருத்தையே ஒப்பிக்கிறது. *எல்லா உணவு வகைகளுக்கும் ஒரே சமையல் குறிப்பு வழங்கப்படுவது போல...* "சொட்டு சொட்டாய் பயன் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கும்" *(Trickle down)*, "கசிந்து பயன் தரும்" *(Spill over)* போன்ற ஆயத்த விடைகளே, இந்த சொல்லாடல்கள் இல்லாமல், தங்கள் பாதையை நிலை நிறுத்திக் கொள்ள அவர்களால் தரப்பட்டு வருகிறது. இதுவே சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக முன் வைக்கப்படுகிறது...

 கோவிட் சமுகத்தின் பல கீழ் அடுக்குகளை செயலிழக்கச் செய்து, அப் பிரிவினைகள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் கடினம் ஆக்கியுள்ளது. பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்த எதிர் வினையைத் தர இயலவில்லை... ஏற்கெனவே செய்து வருவதை மேம்படுத்தினால் போதும், இருக்கிற முறைமையை சற்று மாற்றினால் போதும் என்று யாராவது நினைத்தால் அது யதார்த்ததிற்குப் புறம்பானது."

 *(இனி பிசினஸ் இன்ஸைடர் வார்த்தைகளில் போப் கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி)*

 இது போப் ஃபிரான்சிஸ் உலகம் முழுவதும் உள்ள பிஷப்புகளுக்கு எழுதியுள்ள மூன்றாவது கடிதம் *(Third encyclical Papacy)*. ஒரு புத்தகம் அளவிற்கு அக் 3 அன்று எழுதியுள்ள நீண்ட கடிதம் அது

 இக் கடிதத்தில் முதலாளித்துவம், நவீன பொருளாதார முறைமைகள் பற்றி கடுமையான குற்றச்சாட்டுக்களை போப் முன் வைத்துள்ளார். அண்மை நூற்றாண்டுகளில் மிகப் பெரும் வெடிப்பு வளர்ச்சியை *(Explosive Growth)* உருவாக்கியுள்ள சந்தைகள், அதே காலத்தில் சமுகத்தில் *பெரும் பெரும் பள்ளங்களையும்* ஏற்படுத்தியுள்ளன; *பெரும் பகுதி மக்களை புறம் தள்ளிச் சென்றுள்ளன;* சந்தை சுதந்திரத்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இயலாது என்று போப் ஃபிரான்சிஸ் கடிதம் அழுத்தமாகக் கூறுகிறது

 *(செவ்வானத்தின் கருத்து கீழே...)*

 முதலாளித்துவம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும், சம நீதிக்கும் எதிரானது என்ற *இடது சாரிகளின் கருத்தை வலுப்படுத்தும் விமர்சனம் உலக கத்தோலிக்க தலைமை பீடத்தில் இருந்து வந்துள்ளது.*

 சந்தைப் பொருளாதாரத்தில் எழும் பிரச்சினைகளை ஒரு *"புலப்படாத கரம்"* (Invisible hand) ஒன்று அதுவாக சரி செய்து கொள்ளும் என்ற முதலாளித்துவக் கருத்தாக்கம் பொய் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது

 *வெறும் பூச்சு வேலைகள்* நவீன தாராளமயப் பாதை ஏற்படுத்திய அவலங்களை சரி செய்ய இயலாது என்பதையும் போப் கடிதம் சுட்டுவது முக்கியமானது.

 நவீன தாராளமயத்தைக் கடக்காமல் இன்றைய நெருக்கடிக்கான உண்மைத் தீர்வுகள் அமையாது; அப்படி நவீன தாராளமயத்தைக் கடக்கும் போது அது முதலாளித்துவத்தையே கடப்பதற்கான தர்க்க ரீதியான சிந்தனைக்கு வழி வகுத்து விடுமோ என்பதே *முதலாளித்துவ முகாமின் அச்சம்.*

 இத்தகைய ஆழமான விவாதங்கள் இடதுசாரி வட்டங்களை கடந்து எழுவதும், விவாதம் ஆவதும் வரவேற்கத்தக்கது. இவ் விவாதம் மேலும் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்

 ******************

*செவ்வானம்*

 

 

 

No comments:

Post a Comment