Sunday, October 11, 2020

செவ்வணக்கம் தோழர் கே.சி.கே

 


தொழிலாளி வர்க்கத்தின் ஓய்வறியா போராளி கே.சி.கருணாகரன்

—- தீக்கதிர் புகழஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஊழியனாகவும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்குரலாக, சட்டமன்ற உறுப்பினராக, சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முதல் மாநில தலைவராக, மேடை பேச்சாளர் என பன்முகத்தன்மை ஒருங்கே கொண்ட தோழர் கே.சி.கருணாகரன் (வயது 74) வெள்ளியன்று இரவு காலமானார்.

மின்வாரிய ஊழியராக பணியாற்றுகையில் தொழிற்சங்க ஊழியராக பரிணமித்து, காடம்பாறை மின் அணைக்கட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

தொடர்ச்சியான இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார். வால்பாறை காடம்பாறையில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டி அங்கிருந்து நடைபயணமாகவே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டு ஒருமாத காலம் பொள்ளாச்சி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

அவசரநிலை காலத்தில் கட்சியின் மீதான அடக்குமுறைக்கு எதிராக மக்களை திரட்டும் போராட்டத்தில் ஒரு வருடம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார்.

தோழர்கள் வி.பி.சிந்தன், கே.ரமணி தலைமையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கத்திற்கு பழனியில் இருந்து சென்னை வரையிலான குழுவிற்கு தலைமையேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் குறிக்கோளை வெகு மக்களிடம் எளிய முறையில் கொண்டு போய் சேர்த்துவதில் பெரும் பங்கு வகித்தார்.

இந்த காலத்திலேயே மாநில அளவில் சிறந்த மேடை பேச்சாளராக பரிணமித்தார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மிளிர்ந்தார்.

பம்பாய் நகரத்தில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய மாநாட்டில் பிரதிதியாக பங்கேற்றவர் அங்குள்ள தமிழர்கள் அதிகம் வாழும் தாராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவானதற்கு முழுமுதற்காரணமாக இருந்த சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் முதல் மாநில தலைவராக பொறுப்பேற்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஒன்றுபட்ட மாவட்டத்தில் இளைஞர்களை திரட்டுவதிலும் அதனை அமைப்பாய் உருவாக்குவதிலும் முன்னின்றார்.

ரஷ்யா மாஸ்கோவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டிற்கு பிரதிதியாய் பங்கேற்றார்

. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது வேலை இல்லா கால நிவாரணம் வழங்கு, 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சார்பில் சைக்கிள் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இதில் மதுரையில் இருந்து என்.நன்மாறன் தலைமையிலும், கோவையில் இருந்து கே.சி.கருணாகரன் தலைமையிலும் நடைபெற்றது.

இக்கோரிக்கை தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஈர்க்கவே வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். அவர்கள் வேலை இல்லா காலத்தில் படித்தவர்களுக்கு நிவாரணம் என்பதை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

1972 ஆண்டு முதல் தற்போது வரை கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்ட கே.சி.கருணாகரன் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாநகர செயலாளராகவும், 23 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், 1997 முதல் 2001 வரை கட்சியின் மாவட்ட செயலாளராகவும், 2001 முதல் 2006 வரை சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணியாற்றினார்.

இந்துத்துவ மதவெறி அமைப்புகளின் செயல்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆகப்பெரும் அகில இந்திய தலைவர்களான சுர்ஜித், ஏ.பி.பரதன் போன்ற தலைவர்களை வரவழைத்து பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

இவர் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அதிக அளவில் நூலகத்திற்கான கட்டிடங்கள் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்தார்.

இதேபோன்று விஓ அலுவலகங்கள், ஏழைஎளிய மக்கள் வாழும் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் அன்பைப்பெற்றார்.

சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவராகவும் செயல்பட்டார். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தனது துணைவியார் ராஜேஸ்வரி காலமானார்.

துணைவியார் மறைந்த மனச்சோர்வுடன் இருந்த தோழர் கே.சி.கருணாகரன் கடந்த சில தினங்களாக உடல்நலம் குன்றி வெள்ளியன்று இரவு காலமானார்.இவருக்கு மகேஷ் என்கிற மகனும், செம்மலர் என்கிற மகளும் உள்ளனர்.

நன்றி - தீக்கதிர் 11.10.2020

No comments:

Post a Comment