விடுமுறைப் பயணச் சலுகையை பணமாக கொடுப்பதாக அறிவித்து
மத்தியரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய சலுகை வழங்கியுள்ளதாக நிர்மலா அம்மையார்
பீற்றிக் கொண்டுள்ளார். ஆஹா, பாருங்கள் அவர் கருணை உள்ளத்தை என்று ஊடகங்களும்
தம்பட்டம் அடிக்கின்றன. இதன் மூலம் பொருளாதாரமே நிமிரப் போவதாக முல்லா தாஸ் வெள்ளை
போர்ட் வைத்து வீடியோ போடலாம். மாலன், ஸ்டான்லி ராஜன் போன்ற வார்த்தை வணிகர்கள்
நீண்ட கட்டுரை எழுதலாம். அதையும் ஒரு மூடர் கூட்டம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து
கொள்ளலாம்.
ஆனால் அம்மையார் அறிவிப்பை ஒரு வார்த்தையில் சொல்ல
வேண்டுமென்றால் அது “அயோக்கியத்தனம்”
விடுமுறை பயணச் சலுகையை பணமாக பெற வேண்டுமென்றால் அது எப்படி
தெரியுமா?
இந்த வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால்
பத்து நாட்கள் ஈட்டிய விடுப்பை பணமாக்க வேண்டும். {இது ஏற்கனவே
உள்ள சலுகைதான். பத்து நாட்கள் விடுப்பை பணமாக்கி தங்களது தேவைக்கேற்ப
செலவழிக்கலாம், விருப்பப்படி முதலீடு செய்யலாம். எதுவும் இல்லாவிட்டால் சேமித்துக்
கூட வைக்கலாம்.)
ஒரு ஊழியருக்கு விடுமுறைப் பயணச் சலுகையாக எவ்வளவு ரூபாய்
கிடைக்குமோ, அது போல மூன்று மடங்கு செலவழிக்க வேண்டும். அதில் இப்போது 36,000,
20,000, 6000 ரூபாய் என்று மூன்று வரம்புகள் நிர்ணயித்துள்ளார்கள். ஒரு ஊழியருக்கு
அதிகபட்சம் குடும்பத்தில் நான்கு பேர் வரை விடுமுறைப் பயணச் சலுகை உண்டு.
இருபதாயிரம் ரூபாய் அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை,
குடும்பத்தில் நான்கு பேர் என்றால், எண்பதாயிரம் ரூபாய். அது போல மூன்று மடங்கு
என்றால் இரண்டு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.
அதாவது மொத்தமாக ஈட்டிய விடுப்பை பணமாக்குவதன் மூலம்
ஐம்பதாயிரம் ரூபாய், எல்.டி.சி செலவு மூன்று மடங்குத் தொகை இரண்டு லட்சத்து
நாற்பதாயிரம் ரூபாய் என்று ஒட்டு மொத்தமாக இரண்டு லட்சத்து தொள்ளாயிரம் ரூபாய்
செலவழிக்க வேண்டும்.
இந்த இரண்டு லட்சத்து தொள்ளாயிரம் ரூபாயை எப்படி செலவழிக்க
வேண்டும்?
எந்த பொருளுக்கு 12 % ஜி.எஸ்.டி இருக்கிறதோ, அந்த பொருளை
வாங்குவதன் மூலம் மட்டுமே அந்த அரசு ஊழியருக்கு எல்.டி.சி வசதிக்கான தொகையை
ரொக்கமாக பெற முடியும். அதுவும் நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே வாங்க
முடியும். அதை விட குறைவான ஜி.எஸ்.டி உள்ள பொருளை வாங்கினால், உதாரணமாக தங்க
நகைக்கு 5 % ஜி.எஸ்.டி. அதை வாங்கினால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
சரி எவ்வளவு கிடைக்கும்?
ஈட்டிய விடுப்புக்கான தொகை ஐம்பதாயிரம் ரூபாயும் எல்.டி.சி
ரொக்கத்துக்கான தொகை எண்பதாயிரமுமாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
12 % ஜி.எஸ்.டி தொகை – அது புதிய நாடாளுமன்றம், ராஜ பாட்டை,
மோடிக்கான புதிய மாளிகை ஆகியவை கட்டுவதற்கு நீங்கள் செலுத்தும் அபராதம்.
இரண்டு லட்சத்து தொள்ளாயிரம் ரூபாய் ரூபாயை செலவழித்தால் ஒரு
லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் தருவதும் ஒட்டு மொத்த தொகைக்கும் 12 % ஜி.எஸ்.டி ஆக
34,800 ரூபாய் பறிப்பதும் பகல் கொள்ளையா இல்லை சலுகையா?
எல்.டி.சி தொகையை ரொக்கமாக தருகிறேன் என்ற பெயரில் அவர்கள்
கையிலிருந்து அது போல இரண்டு மடங்கு தொகையையும் ஈட்டிய விடுப்பு தொகையையும்
பறித்து 12 % ஜி.எஸ்.டி உள்ள பொருட்களை தயாரிக்கும் முதலாளிக்கு தருவதுதான்
இத்திட்டத்தின் நோக்கம். அவர்கள் கையில் உள்ள பணத்தோடு சேர்த்து ஜி.எஸ்.டி யையும்
சேர்த்து பறிக்கிறார்கள். அவர்களுக்கு தேவை இல்லாத பொருட்களையும் தலையில் கட்டுகிற
உத்தியும் அடங்கியதுதான் இத்திட்டம்.
கொரோனாவின் பெயரைச் சொல்லி அகவிலப்படி உயர்வை ஏற்கனவே முடக்கி
விட்டார்கள். அது மீண்டும் எப்போது வழங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இப்போது சலுகை என்ற பெயரில் அரசு ஊழியர்களிடம் வழிப்பறிக் கொள்ளையை வெளிப்படையாகவே
செய்கின்றார் நிர்மலா அம்மையார்.
பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக நிதியமைச்சகத்தில் “அல்வா
கிண்டும் சடங்கு” ஒவ்வொரு வருடமும் நடக்கும்.
அப்படி கிண்டிய அல்வாவை இப்போது நிர்மலா அம்மையார் அரசு ஊழியர்களுக்கு
அளித்துள்ளார்.
அது ஊசிப் போன அல்வா!
No comments:
Post a Comment