Monday, October 26, 2020

காஷ்மீர் ஒற்றுமை வெல்லட்டும்

 தோழர் ஸ்ரீரசா அவர்களின் முகநூல் பதிவிலிருந்து . . .



ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உதயம்
பரூக் அப்துல்லா - தலைவர், யூசுப் தாரிகாமி - கன்வீனர்
புதுதில்லி, அக். 26-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ஏழு கட்சிகள் இணைந்து, பிஏஜிடி என்னும் ‘குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி’ என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இதன் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முதுபெரும் தலைவருமான யூசுப் தாரிகாமி இதன் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இக்கூட்டமைப்பின் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டணிக்கு ‘பிஏஜிடி’ என்கிற ‘பீப்பிள்ஸ் அல்லயன்ஸ் ஃபார் குப்கார் டெக்ளரேஷன்’ என்று (PAGD People’s Alliance for Gupkar Declaration) பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தலைவராக ஃபரூக் அப்துல்லா, கன்வீனராக முகமது யூசுப் தாரிகாமி, துணைத் தலைவராக திருமதி மெகபூபா முப்தி (பிடிபி) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருமதி மெகபூபா முப்தியின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா, கூறியதாவது:

“இக்கூட்டணி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவருவதற்குப் போராடும். இது ஒரு பாஜக எதிர்ப்பு மேடையே தவிர, இது தேச விரோத கூட்டமைப்பு அல்ல.

பாஜக, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலமும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலமும் இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்த்திட முயற்சிக்கிறது. அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அழித்திட முயற்சிக்கிறார்கள். அதன்மூலம் இந்த நாட்டையே பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறையையே தகர்த்திட முயற்சிக்கிறார்கள். இதைத்தான் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாம் பார்த்தோம்.

பாஜக, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களையும், லடாக் மக்களையும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் முயற்சி வெற்றி பெறாது. இது ஒன்றும் மத ரீதியான போர்க்களம் அல்ல. இது எங்கள் அடையாளத்திற்கான போராட்டம். எங்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்திருக் கிறோம்.”

இவ்வாறு ஃபரூக் அப்துல்லா கூறினார்.

இக்கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் பதினைந்து நாட்களில் ஜம்முவில் நடைபெறவிருக்கிறது என்றும், அதற்கு அடுத்து நவம்பர் 17 அன்று இக்கூட்டமைப்பின் சிறப்பு மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறவிருக்கிறது என்றும் இக்கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் லோன், செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஓராண்டில் இந்த மாநிலத்தில் அரசு சார்பில் நடைபெற்றுள்ள வேலைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றும், அரசாங்கத்தின்அரசமைப்புச்சட்ட மாற்றங்களை எதிர்க்கிறோம் என்பதைக் காட்டும் விதத்தில் இம்மாநிலத்தின் முந்தைய மாநிலக் கொடியையே பயன்படுத்த இருக்கிறோம் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவரான ஏ.ஆர். துருக்ரூ இணைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிஸ் கட்சியின் தலைவர் குலாம் அகமது மீர், உடல்நலக்குறைவின் காரணமாக, கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை.

அரசியல் மாற்றங்களை தள்ளி வைத்து காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உருவாகியுள்ள இந்த ஒற்றுமை வெல்லட்டு. மோடி வகையறாக்களின் சதி முறியடிக்கப்படட்டும். . .

No comments:

Post a Comment