Thursday, October 8, 2020

மூளையை அடகு வைத்தவர்கள்



 சங்கிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு உறவினர் தன் முக நூல் பக்கத்தில் “தேச பக்தராக இருந்தால் பகிருங்கள்” என்ற வழக்கமான டுபாக்கூர் பில்ட் அப்போடு ஒரு காணொளியை பகிர்ந்து கொண்டிருந்தார்.

 “உங்களுக்குத் தெரியுமா? 1945 ல் தன் மீது அணுகுண்டு போட்ட அமெரிக்காவில் இருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் ஒரு குண்டூசி கூட வாங்குவதில்லை. எந்த வர்த்தகத் தடை இல்லாத போதும் எந்த ஜப்பான் நிறுவனமும் அமெரிக்காவிலிருந்து ஒரு யென் அளவிற்குக் கூட இறக்குமதி செய்வதில்லை. ஒரு டாலர் மதிப்பிற்குக் கூட ஏற்றுமதி செய்வதில்லை. அமெரிக்காவுடன் எந்த ஒரு வர்த்தகமும் செய்வதில்லை என்று ஜப்பான் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆகவே ஜப்பான் மக்களைப் போல நீங்களும் உண்மையான தேச பக்தர்களாக இருந்தால் சீனப் பொருட்களை புறக்கணித்து இந்திய நிறுவனங்களை ஆதரியுங்கள் என்று சொல்லி ரிலையன்ஸ் நிறுவன லோகோவோடு காணொளி முடிகிறது.”

 ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தமே  நடைபெறுவது கிடையாதா?

 இன்றைக்கு அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள ராணுவத் தொடர்புகளைப் பற்றி அறிந்திருந்தாலேயே இந்த காணொளி வந்திருக்காது. அதை பகிர்ந்து கொள்ளக் கூட யோசித்திருப்பார்கள். ஆனால் அவ்வளவு தூரம் சிந்திப்பவர்களாக மோடி ஆதரவாளர்கள் என்றைக்கு இருந்திருக்கிறார்கள்! உணர்வுகளை உசுப்பேற்ற இவர்களும் அதற்கு மயங்கித் தொலைபவர்களாகத்தானே இருந்து தொலைக்கிறார்கள்!

 இணையத்தில் கொஞ்சம் விபரங்களைத் தேடினேன்.

 அமெரிக்காவின் வர்த்தக உறவுகளில் நான்காவது இடம் ஜப்பானிற்குத்தான். முதலிடத்தில் சீனா, இரண்டாம் இடத்தில் கனடா, மூன்றாம் இடத்தில் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் உள்ளன.

 2018 ம் ஆண்டு மட்டும் அமெரிக்கா பொருட்கள் மற்றும் சேவையாக ஜப்பானுக்கு 121.1 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அப்படியென்றால்  இந்திய மதிப்பிற்கு 8,57,000 கோடி ரூபாய் அளவிற்கு அமெரிக்கப் பொருளும் சேவையும்  ஜப்பானிற்குள்  அந்த ஒரு ஆண்டு மட்டும் வந்துள்ளது.

 சரி ஜப்பான் அமெரிக்காவிற்கு எந்த ஏற்றுமதியும் செய்வதில்லையா? அமெரிக்கா மூலம் எந்த வருமானமும் நமக்கு வரக்கூடாது என்று உறுதியாக, உணர்வோடு தேச பக்தியோடு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன்.

 ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவும் ஜப்பானும் செய்த ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய விபரங்கள் கிடைத்தது.

 1985 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஐந்து ஆண்டிலும் அந்த ஆண்டு நடந்த வர்த்தகம் (பொருட்கள் மட்டும்) பற்றிய விபரங்களை கீழே பார்க்கலாம்.

 

ஆண்டு

அமெரிக்கா ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தது (பில்லியன் டாலர்களில்)

ஜப்பான் அமெரிக்காவிற்கு

ஏற்றுமதி செய்தது       (பில்லியன் டாலர்களில்)

1985

22.63

68.82

1990

48.57

89.68

1995

64.34

123.47

2000

64.92

146.48

2005

54.69

138.03

2010

60.47

120.06

2015

62.39

131.45

2019

74.37

143.56

 

மீண்டும் சொல்கிறேன். இந்த விபரங்கள் எல்லாம் அந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நடைபெற்ற வர்த்தகம். சேவைத்துறை அல்லாமல் பொருட்கள் மட்டுமே.

 ஆக அமெரிக்காவை விட ஜப்பானே அதிக பலன் அடைந்துள்ளது.

 உண்மை இவ்வாறு இருக்க,  ஜப்பான் ஒரு குண்டூசி கூட அமெரிக்காவிலிருந்து பெறவில்லை என்று காணொளி தயாரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றால் அதை தேச பக்தி என்று நினைத்து பகிர்ந்து கொள்வது வடிகட்டிய மூடத்தனம். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்! பிஜேபி ஐ.டி செல் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புகிறவர்கள். கூலிக்கு மாரடிக்கிற மாலன், மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன் போன்ற வார்த்தை வியாபாரிகளை புத்திசாலிகள் என்று நம்புகிற அளவிற்கு மூளையை அடகு வைத்தவர்கள். (அவங்களுக்கு எங்கே மூளை இருக்கு, அடகு வைக்க? என்ற உங்கள் குரங்குக் குளியல் என் காதில் விழுகிறது)

 மேலும் சீனப் பொருட்கள் எதுவும் இந்தியாவிற்கு கள்ளத்தனமாக வரவில்லை. முறையான இறக்குமதி மூலமே வருகிறது என்பது ஒரு விஷயம் என்றால் சீனப் பொருட்களுக்கு இந்தியாவின் கதவுகளை திறந்து விட்டது அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் என்பது மற்றொரு விஷயம்.

 சீன ஆப்புக்களை தடை செய்த மத்தியரசே சீனப் பொருட்களின் இறக்குமதியையும் தடை செய்யலாமே! அதைப் பற்றி ஏன் சங்கிகள் வாய் திறப்பதே இல்லை?

 அப்படிச் செய்தால் முகேஷ் அம்பானியே மோடியை அடிப்பார்.

 இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவீர் என்று அந்த காணொளி உதாரணமாகச் சொல்கிற ரிலையன்ஸ் நிறுவனத்தின் “ஜியோ” நூற்றுக்கு நூறு சீன உபகரணங்களில்தான் செயல்படுகிறது.

 சங்கிகள் வேண்டுமானால் ஒன்றை முயற்சிக்கலாம்.

 தங்களின் தேச பக்தியை நிரூபிக்க சீனாவில் உருவாக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” சிலையை வேண்டுமானால் தகர்த்து விடட்டும்.

 

No comments:

Post a Comment