Wednesday, October 14, 2020

சட்டங்களின் பெயரை மாற்றுங்கள் மோடி

 மோடி ஜனநாயகத்தைக் கொன்று நிறைவேற்றியுள்ள வேளான் சட்டங்களின் உண்மை முகத்தை இதை விட சுருக்கமாகவும் சரியாகவும் யாராலும் சொல்லி விட முடியாது.

 


*நாளொரு கேள்வி: 13.10.2020*

 

இன்று நம்மோடு அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர்  *அசோக் தாவ்லே*

####################

 

*கேள்வி:* அண்மையில் கொண்டு வரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு *"சுதந்திரம்"* தருபவை என இந்தியப் பிரதமர் சொல்கிறாரே? இச் சட்டங்கள் விவசாயம் சந்தித்துள்ள இன்னல்களுக்கு மருந்தாக அமையுமா? அவற்றின் விளைவுகள் என்ன?

 

*அசோக் தாவ்லே*

 

விவசாயிகளுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் சுரண்டலுக்கு *அவர்கள் தங்களை சுதந்திரமாக ஆட்படுத்திக் கொள்ளலாம்* என்பதுதான். கார்ப்பரேட்டுகளின் *அடிமைகளாக மாறிக் கொள்வதற்கான* சுதந்திரம். *தற்கொலை செய்து கொள்வதற்கான* சுதந்திரம்

 

இந்த சட்டங்கள் விவசாயப் பிணிகளை மேலும் மோசமாக்கப் போகின்றன. ஒரே வரியில் சொல்வதானால் இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலன் கிட்டச் செய்யும் ஏற்பாடுகளே ஆகும். இவை விவசாயிகள், நுகர்வோர் நலன்களை மிதிக்கப் போகின்றன. ஆகவே இந்த மூன்று சட்டங்களுக்கு *அரசு வைத்துள்ள பெயர்களை மாற்றினால்* பொருத்தமாக இருக்கும். எப்படி மாற்றலாம்?

 

முதல் சட்டத்தை *"பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை ஊக்குவிப்பு சட்டம்"* எனலாம். காரணம் இது பதுக்கலை, கறுப்புச் சந்தையை, கார்ப்பரேட் மற்றும் பெரு வணிகர்களின் ஆன்லைன் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்குகிறது

 

விவசாய உற்பத்தி பொருள்களை வைத்திருக்க உள்ள உச்ச வரம்பை நீக்கி அளவற்ற பதுக்கலுக்கு வழி வகுக்கிறது. ஆகவே நுகர்வோர் கூடுதல் விலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைந்த விலைதான் கிடைக்கும். நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்

 

இரண்டாவது சட்டத்திற்கு, *"ஒப்பந்த விவசாயம் வாயிலாக விவசாய அடிமைத்தனத்தை வளர்த்தல் சட்டம்"* என்று பெயர் வைக்கலாம். இந்த சட்டம் குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு தர வேண்டுமென்பதைப் பற்றிப் பேசாமல் ஒப்பந்த விவசாயத்தை வளர்ப்பது பற்றிப் பேசுகிறது. மிகவும் பலவீனமான அதிகார மட்ட முறைமையை விவசாயிகள் குறைகளைத் தீர்க்க முன் மொழிகிறது. சிவில் நீதிமன்றங்களின் கதவுகளை விவசாயிகள் தட்டுவதையும் தடுத்து விடுகிறது. உயர் நீதி மன்றத்தையே நாட வேண்டும். இவையெல்லாம் விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக மாற்றி விடும்

 

மூன்றாவது சட்டத்திற்கு *"விவசாய விளை பொருள் சந்தைக் கழகத்தை சிதைக்கிற கார்ப்பரேட் வியாபார சட்டம்"* என்று பெயர் வைக்கலாம். ஏனெனில் இந்த சட்டம் விவசாய விளைபொருள் சந்தைக் கழகத்தை காலி செய்து விடும். மொத்த விவசாயச் சந்தையும் கார்ப்பரேட் வசம் கை மாற்றப்படும்

 

(ஆதாரம்: "பிரண்ட் லைன்"- அக் 23, 2020. நேர்காணல்: அனுபமா கடகம்)

 

*செவ்வானம்*

No comments:

Post a Comment