Wednesday, October 14, 2020

வெறியன் கவர்னரை வீட்டுக்கு அனுப்பு

 




மத வெறி பிடித்த சங்கிகளை கவர்னர்கள் ஆனால் என்ன ஆகும் என்பதற்கான உதாரணத்தை மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷியாரி உருவாக்கி உள்ளார்.

 மகாராஷ்டிராவில் கோவிட் 19 காரணமாக இன்னும் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படவில்லை. வழிபாட்டு தளங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பாஜக அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆளுனரிடம் மனுவும் அளித்துள்ளது.



 அந்த மனுக்களை முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு அனுப்பியுள்ளார் கோஷியாரி. அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதோடு அனுப்பியுள்ள கடிதம்தான் வில்லங்கமானது. வழிபாட்டுத்தளங்கள் என்று பொதுப்படையாக இவர்கள் சொன்னாலும் இவர்கள் குரங்குக் குளியல் என்னவோ கோயில்களை திறக்க வேண்டும் என்பதுதான்.

 உணவு விடுதிகளையும் மது பானக் கடைகளையும் திறப்பதனால் பரவாத கொரோனா வழிபாட்டுத் தளங்களை திறந்தால் மட்டும் பரவிடுமா என்று கேட்டுள்ளார். இதைக் கூட விவாதத்திற்கான ஒரு விஷயம் என்று எடுத்துக் கொள்ளலாம். மதுபானக் கடைகளை திறப்பது என்பதும் தேவையற்றதுதான். அதே நேரம் மதுபானக் கடைகளை திறக்க வலியுறுத்தியது மத்தியரசு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 அதற்கு பிறகு அவர் சொல்லியுள்ளவைதான் மோசமானவை. “நீங்கள் முதல்வராக பதவியேற்ற உடன் (கொரோனா காலத்திற்கு முன்பாக) கோவில்களுக்கெல்லாம் சென்று வந்த இந்துத்துவர் நீங்கள். இப்போது உங்களுக்கு என்ன ஆனது? வழிபாட்டுத் தளங்களை திறக்கக் கூடாது என்று உங்களுக்கு ஏதாவது தெய்வ வாக்கு வந்திருக்கிறதா? அல்லது நீங்கள் மதச்சார்பில்லாதவர் ஆகி விட்டீர்களா? அந்த வார்த்தையையே வெறுத்தவர் ஆயிற்றே நீங்கள்!”

 என்று எழுதியுள்ளார்.

 அந்த மண்ணாந்தை கோஷியாரிக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால் “மதச் சார்பின்மை என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளய்யா மூடரே!  அரசியலில் இருந்தும் அரசு நடவடிக்கைகளில் இருந்தும் மதத்தை விலக்கி வைப்பது மட்டுமே அரசியல் சாசனம் சொல்லும் மதச் சார்பின்மை. மத உணர்வுகளையும் மத வெறியையும் தூண்டி விட்டே அரசியல் ஆதாயம் அடையும் போக்கிரிகளுக்கு மதச் சார்பின்மை என்ற வார்த்தை வெறுப்பாகத்தான் இருக்கும். நீயும் என்னை மாதிரி ஆள்தானே! இப்போ என்ன யோக்கியனாயிட்டியா என்று கேட்டு உசுப்பேத்தும் கீழ்த்தரமான வேலையைச் செய்வது ஒரு கவர்னரின் வேலை அல்ல. என்ன செய்ய! 2014 க்குப் பிறகு இந்தியாவில் அத்தனை அரசியல் சாசனப் பொறுப்புக்களும் மோசமானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மதிப்பிழந்து விட்டதே! “

 உத்தவ் தாக்கரே அனுப்பியுள்ள பதிலும் சூடானது.

 என்னுடைய இந்துத்துவ நம்பிக்கை குறித்து நீங்கள் எனக்கு சான்றிதழ் தர வேண்டியதில்லை. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று வர்ணித்தவர்களை வரவேற்பவர்கள் (அவ்வாறு சொன்ன கங்கணாவை ஒரு நாள் முன்பாகத்தான் கோஷியாரி சந்தித்துள்ளார்) எனக்கு உபதேசிக்க வேண்டாம். மக்களின் வழிபாட்டு நம்பிக்கை மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. அதை விட அதிகமாக அவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். மதச்சார்பின்மை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கோயில்களை திறந்தால் இந்துத்துவம், திறப்பதை ஒத்தி வைத்தால் மதச் சார்பின்மை என்ற பார்வை சரியல்ல. மேலும் மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை. அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் செய்லபடுவோம் என்று சொல்லிதான் நீங்களும் நானும் பதவி ஏற்றுக்கொண்டோம் என்பதை நினைவு படுத்துகிறேன்.

 அரசியல் சாசனப் பதவியான ஆளுனராக இருந்து கொண்டு அரசியல் சாசனத்தை நக்கலடித்துப் பேசும் கோஷியாரியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்தால் அவருடைய பதவி நீடிக்காது என்பதுதான் யதார்த்தம்.

 பிகு: படுபாவி கோஷியாரே, உத்தவ் தாக்கரே சொன்னது பற்றியெல்லாம் என்னையும் எழுத வச்சுட்டியே!

 

No comments:

Post a Comment