குமரி மாவட்டத்தின் மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முக நூல் பதிவினை பகிர்ந்து கொள்கிறேன். நேற்று இரவு உறங்கச் செல்லும் முன்புதான் பார்த்தேன். நேற்றே பகிர்ந்து கொண்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
செவ்வணக்கம் தோழர் ஜி.எஸ்.மணி
எனது ஏழாவது வயதிலிருந்தே, நான் கண்ட, தோழர்......
1942-ம் ஆண்டு, முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பினர்;
1947ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்தில் நாஞ்சில் நாட்டின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றியவர்;
1950ல், திருவாங்கூர்-தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்;
1956-ம் ஆண்டிலிருந்து,1959-ம் ஆண்டு வரை, கம்யூனிஸ்ட் கட்சியின், குமரி மாவட்ட செயலாளர்....
குமரி மாவட்ட, தோட்டங்களில் வேலை செய்து வந்த, தோட்டம் தொழிலாளர்களை, சிவலோகம் எஸ்டேட், மேனேஜர், அலெக்சாண்டர் என்ற வெள்ளைக்காரனின், சவுக்கடியிலிருந்து, காப்பாற்ற, 1943-ம் ஆண்டு,அகில திருவாங்கூர் எஸ்டேட் தொழிலாளர்கள் சங்கம் 1,என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்;
தோட்டம் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க, மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும், நடந்தே சென்று பணியாற்றியவர்;
குமரி மாவட்டத்தில், சுரண்டப்பட்ட, உழைப்பாளிகளுகளுக்காக, தொழிற்சங்கங்களை உருவாக்கியவர்...
5ஆண்டுகளுக்கு மேல், தலைமறைவாக இருந்து, கட்சிப் பணியாற்றியவர்;
5ஆண்டுகளுக்கு மேல், சிறைச்சாலைகளில், குரூரமான சித்திரவதைகளை எதிர் கொண்டவர்;
சுதந்திரப் போராட்டத்திலும், குமரி எல்லை போராட்டத்திலும், பங்கேற்றவர்;
சி. பி. ராமசாமி அய்யரின், திருவாங்கூர் மன்னனின், ராணுவத்தால், அதிக பட்ச, தாக்குதல்களை சந்தித்தவர்;
அப்போதைய, கேரள முதல்வர், பட்டம் தாணு பிள்ளையின், மலபார் ஸ்பெஷல் போலீசின், காட்டுமிராண்டித்தனமான, சித்திரவதைகளை, தைரியமாக, சந்தித்தவர்;
திருவனந்தபுரத்திலிருந்து அழைத்து வரும் வழியில்,தக்கலை சப் ஜெயிலில் வைத்து, தன்னை, சூரன் வேலுப்பிள்ளை என்ற, காவல்துறை அதிகாரி மூலம், கொலை செய்யப் போகிறார்கள் என்பதை, புரிந்து கொண்டு,கட்சியின் கட்டளைக்கு இணங்க, காவல்துறை அதிகாரிகள் கைது செய்து கொண்டு வரும் போது, 14 அடி, வெள்ளத்தில், குழித்துறை ஆற்றில் குதித்து, தப்பிச் சென்று, இரண்டு வருடங்கள், தலைமறைவாகவே, சென்றவர்;
திருவட்டார், கிளைச் சிறைச்சாலையில், இருந்த, தோழர்: P.T.புன்னூஸ் அவர்களை சந்திக்க,
கையூர், கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தலை மறைவாக இருந்த, தோழர்:E.K.நாயனார்(முன்னாள் கேரள முதல்வர்)அவர்களை, அழைத்துச் சென்று, காவலையும் மீறி, சந்திக்க வைத்தவர்;
பூஜப்புரை(திருவனந்தபுரம்)மத்திய சிறைச்சாலை உச்சியில், கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி ஏற்றி, காவல்துறையினரால், சிதைக்கப்பட்டவர்;
1964ம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சி, பிளவுண்ட போது, உறுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அரணாக நின்றவர்...
1977-ம் ஆண்டு நடைபெற்ற, சட்ட மன்ற தேர்தலில், விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, 1979ம் ஆண்டு, அக்டோபர் மாதம் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக, திகழ்ந்தவர்.....
#சகாவ் #GS காலமானார் என்ற செய்தி அறிந்து, தோழரின் உடல் வருகிறது என்பதை புரிந்து கொண்டு, சாலைகளின் இரு மருங்கிலும்,மக்கள், கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியை, அதன் பிறகு, குமரி மாவட்டம், இது வரை கண்டதில்லை...
தியாகத்தால் பொழுதளந்த தூயவர்......!
எளிய மனிதர்களின் #சகாவ்....
இன்று ( 5-10-2019),தோழர் #GS அவர்களின்,
41வது, நினைவு நாள்....
காவிக் கயவர்களால் கேரளாவில் நேற்று வெட்டிக் கொல்லப்பட்ட தோழர் சனூப் பற்றி குமரி மாவட்டத்தின் இன்னொரு தோழர் சதன், தக்கலை அவர்கள் இன்று எழுதிய முக நூல் பதிவு மிகவுமே எழுச்சியூட்டியது. அந்த பதிவு இதோ இங்கே
செவ்வணக்கம் தோழர் சனூப்
தோழர். சனூப்...26 வயது...
சில காலம் முன்பு, தாயையும் தந்தையும் இழந்த பிறகு அவருக்கு உறவுகள் என்று யாருமில்லை...கட்சி தான் அவரது குடும்பம்...
இந்த சமூகத்தை அளவு கடந்து நேசித்ததால் தோழர்களும் அந்தப் பகுதி மக்களும் உறவுகள் ஆனார்கள்...
பிறப்பால் ஒரு தலித்...ஆனால் எல்லா மக்களையும் நேசித்தார்...எல்லா மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி அவரை நேசித்தார்கள்...
நடவடிக்கைகளால் ஒரு மக்கள் ஊழியர்...ஒரு கம்யூனிஸ்ட்...அதனால் அப்பகுதி மக்களின் தலைவர்...!
தனது இறப்புக்கு சற்று முன்பு கூட DYFI நடத்தும், எல்லா நாட்களும் மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கும் நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்களுக்கும் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்திற்கு தனது பகுதியின் சார்பில் உணவு வழங்கும் முறையான நேற்று உணவு வழங்க, முன்தினம் உணவு பொட்டலங்கள் திரட்டும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்....
நேற்று அவரது உடல் கூறாய்வுக்கு மருத்துவக் கல்லூரி சவக் கிடங்கில் நினைவற்று கிடக்கும் போது...
அதே மருத்துவக் கல்லூரி வளாகத்தின் இன்னொரு பகுதியில் சக தோழர்கள், அவரது முயற்சியால் திரட்டப்பட்ட உணவுப் பொட்டலங்களை அடக்க முடியாத அழுகையினூடே கண்ணீருடன், தடங்கலின்றி மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்...
அவருக்கென சொந்தமாக இருந்த 5 சென்ட் நிலமும் வீடும் இப்போது, உறவினர்கள் யாருமற்ற, தோழர் சனூபின் அன்புக்குரிய வேலாயுதன் என்ற முதியவருக்கு, அவரது சக தோழர்கள் கொடுத்துள்ளார்கள்...
வேலாயுதனின் காலத்திற்குப் பிறகு அது கட்சியின் அலுவலகமாக்கப் படும் என்று தோழர்கள் அறிவித்துள்ளார்கள்...!
அவருக்கு வங்கியில் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு இருக்கிறது...அதன் நாமினியாக அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தில் உள்ள பாத்திமா அக்காவின் மகளான லியாவின் பெயரைப் பதிவு செய்துள்ளார்...
தனது பெயரில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் பாலிசிக்கு நாமினியாக இன்னொரு அண்டை வீட்டு அக்காவான சரஸ்வதியின் உடல்நலக்குறைவால் அவதிப்படும் மகன் ஸ்யாம் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது...
இன்னும் இன்னும் அவரைப் பற்றி வெளிவரும் தகவல்கள் மனதை ரம்பமாக அறுத்து வதைக்கிறது...
கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களில் ஒருவரை இழந்தால் ஒரு சமூகத்தின் தலைவரை இழந்தது போன்றது என்ற கூற்றின் உண்மையான உதாரணமாக தோழர் சனூப் வாழ்ந்துள்ளார் என்றால் அது அதிகப் படியானது அல்ல.
கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் மண்ணில் மறைந்தாலும் விதையாகவே புதைகிறார்கள். அடர்ந்த விருட்சமாக அவர்கள் மக்களுக்கு நிழலாக என்றென்றும் திகழ்வார்கள். கம்யூனிசம் என்பது பிழைப்பு வாதம் அல்ல. உழைக்கும் மக்களுக்கு தோள் கொடுக்கும் உன்னத உணர்வு. அதனை எந்த கொம்பனாலும் எந்த சட்டத்தாலும் அழித்து விட முடியாது.
No comments:
Post a Comment