என்னுடைய
ஆறாவது விரல் அறுபட்டு இன்றோடு ஐம்பது நாட்கள் நிறைவடைவதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து
கொள்ளவே இப்பதிவு.
2010
ம் முதல் வலைப்பக்கத்தில் தீவிரமாக எழுதிக்
கொண்டிருக்கிறேன். இது ஆறாயிரமாவது பதிவும் கூட. இந்த பதிவில் மகிழ்ச்சியான செய்தியை
பகிர்வதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
ஆறாவது
விரல் அறுபட்டால் மகிழ்ச்சியா?
முப்பது
ஆண்டுகளாக ஆறாவது விரலாக இருந்த சிகரெட்டை பிடிப்பதை நிறுத்தியதைத்தான் சொல்கிறேன்.
கொரோனாவிற்குத்தான்
நன்றி சொல்ல வேண்டும். தனிமைப் படுத்தல் அதனை சாத்தியமாக்கியது.
பள்ளியிலோ,
கல்லூரியிலோ ஏற்படாத பழக்கம், எல்.ஐ.சி பணியில் சேர்ந்த பின்பு புகை பிடிக்கும் நண்பர்கள் பரிச்சயம்
ஆனாலும் கூட அந்த பழக்கம் பரிச்சயமாகவில்லை.
நேற்று
முன் தினம் கவியரசர்-மெல்லிசை மன்னர் பற்றிய பதிவில் “தேடினேன் வந்தது” பாடலை பகிர்ந்து
கொண்டிருந்தேன். அதன் ரகசியத்தை பிறகு சொல்கிறேன் என்றும் எழுதியிருந்தேன். ரஜினிகாந்த்
சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் எல்லாம் எப்போதும் என்னை ஈர்த்ததில்லை. ஆனால் இந்த பாடலிலும்
“யாரந்த நிலவு” பாடலிலும் நடிகர் திலகம் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் மிகவும் பிடிக்கும்.
ஆனாலும் அந்த பழக்கம் வர அதெல்லாம் காரணமில்லை.
பின்
எப்படி? எப்போது?
1988
ம் வருட ஜனவரியில் கோவாவிற்கு சுற்றுலா சென்ற போது நண்பர்கள் 555 மலிவாக கிடைக்கிறது
என்று வாங்கினார்கள். அப்போது அதை வாங்கி பிடித்தது என்பது அந்த பயணத்தோடு நின்று விட்டது.
அதன்
பின்பு எப்போதாவது பயணத்தின் போது மட்டும் பிடிக்கும் பழக்கமாக இருந்தது,
14.12.1988
அன்று
அலுவலகத்தில் ஒரு பிரச்சினையில் சமூக விரோதிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். தொலைபேசி வசதிகள் பெருமளவு இல்லாத காரணத்தால் கோட்டத்திற்கு
தந்தி மூலம் தகவல் தெரிவிக்க நானும் இன்னொரு தோழரும் எதிரிலிருந்த தபால் அலுவலகம் சென்றோம்.
தந்தி கொடுத்து விட்டு வெளியே வந்தால் அந்த சமூக விரோதக் கும்பல் கூடுதலான கும்பலோடு
சைக்கிள் செயின், குண்டாந்தடிகளோடு தபால் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டார்கள். போஸ்ட்
மாஸ்டர் போலீஸிற்கு தகவல் சொல்ல, போலீஸ் பாதுகாப்போடு அலுவலகம் வந்தோம்.
அலுவலகம்
வந்தாலும் கைகளில் நடுக்கம் குறையவில்லை, இதயம் பக்பக்கென்று அடித்துக் கொண்டே இருந்தது.
அப்போது ஒரு தோழர் ஒரு சிகரெட்டைக் கொடுக்க அப்போதுதான் அது ஆறாவது விரலாக ஒட்டிக்
கொண்டது.
அந்த
கால லிம்கா விளம்பரம் போல ஒரு சுற்றறிக்கையோ, கட்டுரையோ எழுதுகையிலோ, தமிழாக்கம் செய்கையிலேயே
வார்த்தைகள் தடுமாறினாலோ அல்லது அவை நிறைவாக வந்தாலும் ஆறாவது விரலுக்கு உயிர் வரும்.
காரசார விவாதமோ அல்லது கையிலெடுத்த பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வோ அப்போதும்தான்.
மாநாடுகளில் அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளிக்க தயாராகும் போது கண்டிப்பாக தேவை.
பயணங்களின் போதும்தான். இன்னும்
கூட பல்வேறு அனுபவங்களை எழுதலாம். இந்த பதிவில் அவசியமில்லை.
இந்த
பழக்கத்தை விடக் கூடாதா என்று கேட்பவர்களிடமெல்லாம் “அதுதான் என்னை விட மாட்டேங்குது”
என்று பதில் சொல்லியுள்ளேனே தவிர விட முயற்சி எடுக்கவில்லை என்பதை சுய விமர்சனமாக ஏற்றுக்
கொள்ள வேண்டும். என் பெரிய அக்கா ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும் போது “அதை மட்டும்
விட்டுத் தொலைக்கக்கூடாதாடா?” என்ற கேள்விக்கு என்றைக்கும் பதில் சொன்னதே இல்லை.
அலுவலகத்தில்
கூட ஒரு மூன்று தோழர்கள் பெயர்களை சொல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இப்போது திருத்துறைப்பூண்டியில்
இருக்கும் தோழர் காந்தி, கோட்ட அலுவலகக் கிளையின்
தலைவர் தோழர் கங்காதரன் இருவரும் சிகரெட்டை பற்ற வைக்கையில் ஊதி தீக்குச்சியை அணைத்து
விடுவார்கள். அதற்காக அவர்களுக்கு சாபமெல்லாம் கொடுத்திருக்கிறேன். எங்கள் துணைப் பொருளாளர்
தோழர் பி.எஸ்.பாலாஜி, பின்பக்கமாக வந்து பிடித்துக் கொண்டிருக்கும் சிகரெட்டை தட்டி
விடுவார். கொஞ்சம் அசந்தால் பாக்கெட்டையும் சுட்டு எங்காவது தூக்கிப் போட்டு விடுவார்.
அவரு
சிகரெட்டை நிறுத்தினால் எல்லோருக்கும் நான் பிரியாணி வாங்கித் தருகிறேன் என்று மூன்று
மாதங்களுக்கு முன்பு தோழர் கங்காதரன் சொன்ன போது “உனக்கு செலவு வைக்க மாட்டேன் கங்கா”
என்று கூறினேன்.
திருமணமான
காலத்தில் விரைவில் விட்டுவிடுகிறேன் என்று மனைவிக்கு சொன்ன உறுதிமொழியை காப்பாற்ற
29 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. கொரோனா வந்த போது அவர் மிகவும் கவலைப்பட்டது புகை பிடிக்கும்
பழக்கம் இருந்ததால்தான். அவரும் மகனும் இது பற்றி பேசும் போதெல்லாம் பதிலே சொல்லாமல்தான்
இருந்திருக்கிறேன்.
இப்போது
கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு இருந்ததால் சிகரெட் பிடிப்பதற்கான
வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை இப்போது அப்படியே தொடர்கிறேன். வீட்டை விட்டு வெளியே செல்லும்
போது சபலம் வராமலும் உறுதியாக இருக்கிறேன்.
இதற்கு
முன்பு நிறுத்த முயன்றதில்லையா?
1989
ஜூலை மாதம் அடியாட்களால் தாக்கப்பட்டு பல் உடைந்து உதடு கிழிந்து உதட்டில் ஐந்து தையல்
போட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வாயைத் திறக்க முடியாமல் ஸ்ட்ரா
போட்டு ஜூஸ் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த ஒரு வார காலத்திற்குப் பிறகு மீண்டும்
புகை சூழ் உலகிற்கே திரும்பி விட்டேன்.
1990
வருடம் மே மாதம் ஒரு கல்லூரி நண்பனின் திருமணம் எர்ணாகுளத்தில். நெய்வேலியிலிருந்து
திருவள்ளுவர் பேருந்து உண்டு. திருமணம் முடிந்து
மூன்று நாட்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க எல்லாம் நண்பர்கள் திட்டமிட்டு பட்ஜெட்டெல்லாம்
அனுப்பி இருந்தார்கள். கோட்டப் பொறுப்பிற்கு வருவதற்கு முந்தைய காலகட்டம் என்பதால்
தற்செயல் விடுப்பும் நிரம்பி வழிந்தது. ஆனாலும் கையில் பணம் இல்லாததால் செல்ல முடியவில்லை.
ஏன் என்று சிந்தித்த போது போதி மரம் இல்லாமலேயே “சிகரெட் பிடிப்பதால்தான் கையில் பணம்
இல்லை” என்ற ஞானோதயம் வந்து இனி அதன் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன்.
அடுத்த
பதினைந்து நாட்களில் ஹைதராபாத்திற்கு தென் மண்டல மாநாட்டிற்கு செல்ல பயணித்த போது ஒரு
தோழர் சிகரெட்டை நீட்ட, வாங்க மறுத்தேன். “ட்ரெயின் பேரே சார்மினார் எக்ஸ்பிரஸ், நீ
என்ன சிகரெட்டை வேண்டாம்னு சொல்றே” என்று நீட்ட மீண்டும் ஆறாவது விரல் முளைத்தது. என்னுடைய பிராண்ட் அதுவல்ல என்பது வேறு விஷயம்.
ஆனால் சார்மினார் என்றால் மனதில் என்ன தோன்றுகிறது பாருங்கள்!
புவனேஸ்வர்,
கொல்கத்தாவிற்கு விடுமுறை பயணச்சலுகையில் சென்ற போது மனைவியும் மகனும் கொடுத்த நெருக்கடி
காரணமாக 01.01.2005 புத்தாண்டு அன்று விடியற்காலையில்
புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தாவிற்கு சதாப்தி ரயிலை பிடிக்க ஆட்டோவில் சென்ற போது “இன்றோடு
நிறுத்தி விட்டேன்” என்று பிரகடனமே பிறப்பித்தேன். அந்த பிரகடனம் வேலூருக்கு திரும்பி
அலுவலகம் சென்ற ஆறாம் தேதியே காலாவதியாகி விட்டது.
ஒன்றரை
வருடங்களுக்கு முன்பு சர்க்கரை எட்டிப்பார்த்த போது ஒரு நாளைக்கு இரண்டு என்று எண்ணிக்கையை குறைத்தேனே தவிர நிறுத்தவில்லை. எண்ணிக்கை
கட்டுப்பாடும் பிறகு நீர்த்துப் போய் விட்டது என்பது வேறு விஷயம்,
அதனால்தான்
இந்த முறை சற்று காலமெடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வரத் தொடங்கி முப்பது நாட்களுக்கு மேல் கடந்த பின்னரே இன்று அறிவிக்கிறேன்.
சிகரெட்டோடு
அதன் வாசம் அவ்வளவாக வெளியே வராமல் இருக்க பயன்படுத்தும் சாக்லேட், கடலை மிட்டாய் ஆகியவை
தேவைப்படாததால் சர்க்கரை அளவு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் ஒன்று சிகரெட்டிற்கு
மாறாக பாக்கு, சாக்லேட் என்றெல்லாம் போகவில்லை. அலுவலக நேரத்தில் குடிக்கும் இரண்டு
காபிகளையும் நிறுத்தி விட்டேன்.
வீட்டில்
தொலைக்காட்சி பார்க்கையில் திரைப்படத்திற்கு முன்பு வரும் விழிப்புணர்வு விளம்பரத்தை
மற்றவர்கள் காண விடாமல் அவசரம் அவசரமாக சேனலை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு
காலத்தில் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கல்கி, ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர்
என்று வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாக நிறுத்தி கடைசியில் ஆனந்த விகடனும் குமுதமும்
மட்டும் வாங்கினேன். மாலன் கட்டுரைகளால் எரிச்சலுற்று குமுதத்தை நிறுத்தினேன். தனிமைப்
படுத்தல் காலத்தில் வெளியே செல்ல முடியாததால் விகடனும் வாங்கவில்லை. அதனால் ஒன்றும்
குறைந்து போனதாகவும் தெரியவில்லை. பத்திரிக்கைகளும் சிகரெட்டும் வாங்கும் அந்த கடையின்
ஓனர் பையன் இப்போது அந்த வழியாக செல்கையில் “ஏன் இந்த ஆளு இப்போது நம் கடைக்கு வருவதில்லை”
என்று வெறித்துப் பார்க்கிறான்.
தகவல்
சொல்ல நான் கடைக்கு நான் வர, அனிச்சை செயலாய் நீயும் எடுத்துத் தர, அனிச்சை செயலாய்
நான் பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சத்தால்தான் என்று எப்படி அவனிடம் நான் சொல்வது!
இன்று
முடிந்திருப்பதை கொரோனா வருவதற்கு முன்பே கூட முயற்சித்திருக்கலாம் என்று இப்பொது தோன்றுகிறது.
படிப்பவர்களில்
புகைப்பவர்கள் இருப்பின் நீங்களும் முயற்சிக்கலாமே!
ஹா ஹா ஹா ...
ReplyDeleteஅனிச்சையா( செயலா)கக்கூட அந்தக் கடைப் பக்கமாகப் போயிடாதீங்க!
ஹா ஹா ஹா ...
ReplyDeleteஅனிச்சையா( செயலா)கக்கூட அந்தக் கடைப் பக்கமாகப் போயிடாதீங்க!
நல்ல முடிவு
ReplyDeleteநல்ல முடிவு
ReplyDeleteநல்ல முடிவு
ReplyDeleteGreat decision,Please keep it up. Hope to have a good health.
ReplyDeleteவாழ்த்துக்கள் இராமன். நாம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்பது அடிப்படையில் நமது உடல் நமக்கு தொந்தரவு தராமல் வைத்திருப்பதில் உள்ளது.
ReplyDeleteGreat decision 👍👍Please keep it up Sir-
ReplyDeleteசூப்பர்.. நான் கூட உங்கள் பக்கம். ஆனால் ஆல்கஹாலையும், புகைப் பழக்கத்தையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து பார்த்தால் கிட்டத்தட்ட 15 வருடங்கள் நண்பரே. போதும். இன்னும் நீண்ட காலம் தங்களின் கோபமான அரசியல் எழுத்துக்களை நான் படிக்க காத்திருக்கும்.....! அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteதங்கள் மனைவியின் பொறுமைக்குக் கிடைத்த பரிசு..வெளிப்படையாய் பகிர்ந்து கொண்டதில் சத்திய சோதனை...நன்று.வாழ்த்துகள் நல்ல முடிவுக்கு...
ReplyDeleteவாழ்த்துகள் இராமன் சார், தமிழ்மணம் மூடி இத்தனை நாட்கள் தொடர்ந்து எழுதுகிறீர்கள். வளரட்டும் உங்களின் எழுத்து....
ReplyDeleteவாழ்த்துக்கள் ... வாழ்த்துகள்.....
ReplyDeleteஉடல் ஆரோக்கியம் பெற்று மோடியில் இருந்து மாலன் வரை உள்ள ஆட்களை தோல் உரித்து கொண்டே இருங்கள்
ReplyDeleteGood thing
ReplyDelete6000 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். ஆறாவது விரல் அறுபட்டதற்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteIt took you many years. But better late than never. Be firm till your last breadth.
ReplyDeleteMy wishes.
கேட்டினும் உண்டோர் உறுதினு வள்ளுவர் சொன்னது இதர்க்கும் பொறுந்துது. 6000 பதிவுகள். இரண்டிற்கும் வாழ்த்துக்கள் தோழர்.💐💐💐
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்
ReplyDelete