Saturday, June 26, 2021

அரசு அலுவலகத்தில் அலைய விடுகிறார்களா?

 


ஓர் சமீபத்திய அனுபவம்

  நான்கு நாட்கள் முன்பு எழுதிய  என்ற மத்யமர் சங்கிகள் - மெடிக்கல் மிராக்கிள் பதிவின் தொடர்ச்சிதான் இது. பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களையும் அரசு ஊழியர்களையும் வசை பாடுவது என்றால் பலருக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் ஒன்றாக இருக்கிறது. ஒரு சிலருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பலருக்கோ தங்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்காததாலும் அங்கே இட ஒதுக்கீடு அமலாக்கப்படுவதால் ஏற்படும் காழ்ப்புணர்வும் முக்கிய காரணமாக இருக்கிறது.

 என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்வது அவசியம்.

 நவம்பர் 2019 ல் என் மாமனார் இறந்து போனார். ஆசிரியராக பணியாற்றி ஓய்வூதியம் பெற்று வந்ததால் என் மாமியாருக்கு குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

 முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்க சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாநகராட்சியின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். சி.எம்.சி மருத்துவ மனையில் அவர் இறந்து போயிருந்ததால் அவர்கள் கொடுத்த சான்றிதழும்  மயானத்தில் கொடுத்த சான்றிதழையும் எடுத்துப் போயிருந்தேன். சி.எம்.சி மருத்துவமனையிலிருந்து வந்த பட்டியலை சரி பார்த்து விட்டு அழைக்கிறோம். ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார்கள். மூன்றாவது நிமிடத்திலேயே அழைத்து ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரச் சொன்னார்கள். அடுத்த பத்தாவது நிமிடம் ஒரே ஒரு பிரதி இறப்பு சான்றிதழைக் கொடுத்து சரி பார்க்க சொன்னார்கள், சரியாக உள்ளது என்று சொன்னதும் எனக்கு தேவைப்பட்ட ஏழு பிரதிகளுக்கான கட்டணத்தை கட்டச் சொன்னார்கள்.  கட்டணத்தை கவுண்டரில் கட்டி முடித்த நேரம் ஏழு பிரதிகளும் தயாராக இருந்தது. வெறும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் வேலை முடிந்தது.

 அடுத்து குடும்ப ஓய்வூதியம் விண்ணப்பிக்க மாவட்ட கருவூல அலுவலகம் சென்றால் அங்கே ஒரு சின்ன பிரச்சினை. என் மாமனாரின் இறப்பு குறித்த தகவலை பென்ஷனை இறுதி செய்யும் முன்பு தெரிவிக்காததால் நவம்பர் மாதத்திற்கான பென்ஷன் அவரது வங்கிக் கணக்கிற்கு சென்றிருந்தது. அந்த தொகையை ஸ்டேட் வங்கியில் அரசு கணக்கில் கட்டி விட்டு வாருங்கள். விண்ணப்பம் தருகிறோம் என்றார்கள். அதன் பின்பு சென்ற போது விண்ணப்பத்தை அளித்து அத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலையும் அளித்தார்கள். அது வரை என் மாமியாருக்கு PAN CARD இல்லாததால் அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அது கைக்கு கிடைத்ததும் குடும்ப ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் கொடுத்தோம்.

 ஏற்கனவே ஐந்து விண்ணப்பங்கள் கையில் உள்ளது. அவற்றை முடித்து விட்டு பிறகு எடுப்போம். ஒரு மாத காலத்திற்குள் முடித்து விட்டு அழைக்கிறோம் என்று சொல்லி தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்கள். முப்பத்தி ஐந்து நாட்களுக்குப் பிறகு அழைப்பு வந்தது. கரூவூல அலுவலகம் சென்று என் மாமியார் கையெழுத்து போட்ட பிறகு மறு நாள் அவர் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்தது.

 மாநகராட்சிப் பணிக்கோ அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற கரூவூல அலுவலகத்திலோ, வங்கிப் பணிகளுக்கோ எனது தொழிற்சங்க தொடர்புகளை நான் கொஞ்சம் கூட பயன்படுத்தவில்லை. ஏன் அவ்வாறு அறிமுகம் கூட செய்து கொள்ளவில்லை.  இத்தனைக்கும் திருவண்ணாமலை மாவட்ட கருவூல அதிகாரி என்னுடைய நெருங்கிய தோழர். கருவூலத்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்தவர். அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் குறித்த காலத்தில் பணிகள் முடிந்தது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும். இரண்டு ஓய்வூதியர்களின் சாட்சிக் கையெழுத்து தேவைப்பட்டது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்  சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர் சொன்ன இன்னொரு தோழர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்றதை வேண்டுமானால் சொல்லலாம்.

 குடும்ப நல தொகையாக தரப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் வர ஆறு மாதம் ஆகும் என்று சொன்னார்கள். அது தாமதமானது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சொன்ன போது அரசின் நிதி ஒதுக்கீடு வராததால் கால தாமதம் ஆகிறது என்றும் மாநிலம் முழுதும் இப்பிரச்சினை உள்ளதால் நிதித்துறை செயலாளரிடம் பேசியுள்ளோம். விரைவில் வந்து விடும் என்றார். அதன் படி வங்கிக் கணக்கில் வரவும் வைக்கப்பட்டது.

 என் மாமனாருக்கு மூன்று வங்கிக் கணக்குகள் இருந்தது. இந்தியன் வங்கியில் இருந்த கணக்கில் நாமினேஷன் இருந்ததால் அவரது பென்ஷன் கணக்கில் இருந்த தொகை கருவூலத்தின் தடையில்லா சான்றிதழ் கொடுத்த உடனேயே என் மாமியாரின் வங்கிக் கணக்கிற்கு  மாற்றப்பட்டது.

 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்தது ஜாயிண்ட் அக்கவுண்ட்.  என் மாமனாரோடு என் மனைவியின் தங்கையும் இணைந்திருந்த அக்கவுண்ட் அது. லாக்கர் இருந்த கணக்கு அது. லாக்கரில் புதிதாக ஒருவரை இணைக்க வேண்டும் என்று கேட்டோம். ஐந்து மணிக்குப் பிறகு வரச் சொன்னார்கள். படிவங்களை நிரப்பிக் கொடுத்து ஆறு மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டோம்.

 அரசு கருவூலத்திலும் பொதுத்துறை வங்கிகளிலும் எந்த சிக்கலும் இல்லை. அலைய வேண்டிய அவசியம் கொஞ்சமும் ஏற்படவில்லை.

 ஆனால் ஒரு தனியார் வங்கியில்தான். வேண்டாம் அதை நினைத்தாலே ரத்த அழுத்தம் உயர்கிறது. அந்த அளவிற்கு பொறுப்பற்றவர்கள்!

 பொதுவாக நான் பார்த்த அளவில், கேட்ட அளவில் யாருமே இப்போதெல்லாம் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவதில்லை. பொதுவாக அணுகுமுறையும்  People Friendly  ஆகத்தான்  உள்ளது.

 ஆனால் இன்னும் பலர் பழங்கதையை பேசிக் கொண்டு தங்கள் வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 கலகலப்பு படத்தில் சந்தானம் சொல்வார் அல்லவா! “நம்பினாத்தான் சோறுன்னாங்க, நம்பிட்டேன் என்று” அந்த  ரீதியில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மோசம் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் நட்பு வட்டத்தில் உள்ள பலரும் பதில் லைக் மரியாதைக்காக நம்புகிறார்கள்.

2 comments:

  1. அலைக்கழிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், அந்த அலுவலக விதிமுறைப்படி என்னென்ன காகிதங்கள் தேவையோ அவை நம்மிடம் இருக்காது. நமக்கு கெட்ட நேரம் என்றால் நம்மிடம் இருக்கும் காகிதங்களில் தவறு என்று அந்த அதிகாரிக்கும் தெரியும். எப்படி இருந்தால் அது சரி என்பதும் அவருக்கு தெரியும். ஆனால் அவற்றை நமக்கு புரியும் வகையில் சொல்லுவதற்கு அவருக்கு தெரியாது. அல்லது நமக்கு புரியாது.

    மற்றபடி தற்போது பெரும்பாலான விவரங்கள் கணிணிமயமாக்கப்பட்டு விட்டதால், முன்னொரு காலத்தில் நம்முடைய மனு எந்த பீரோவுக்கு பின்னால இடுக்குக்குள்ள அல்லது பாதாளத்துக்குள்ள கிடக்குதோ... அதை எப்படி தேடி எடுக்குறது என்ற பயத்தில் இன்று போய் நாளை வா என்று அனுப்பும் கதை எல்லாம் கிடையாது.

    உங்க கையில இருக்குற மொபைலை வெச்சு நீங்க ‍இந்த நேரத்துல இந்த இடத்துல வடக்கு பார்த்து நின்று வம்பளத்துகிட்டு இருந்தீங்க என்று துல்லியமாக பதிவு செய்து வைத்திருப்பதைப் போல், எந்த மனு எங்கே எந்த டேபிளில் என்ன காரணத்துக்காக உட்காராம நிக்கிது என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  2. மன்னிக்கவும் தோழர்.நீங்கள் நினைப்பது போல் அல்ல. சான்றிதழ் வழங்குதல் சம்பந்தமாக அரசின் வழிகாட்டி முறைகள் சரியாகத்தான் இருக்கிறது.ஆனால் அதை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களையோ ஆன்லைன் மூலமாகவோ அனுகினால் அதை கொடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்று சொல்லி அதை வாங்கி வா இதை வாங்கி வா என்று அலைக்கழிப்பார்கள்.ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் பக்கத்தில் ஒரு தனியார் துணை அலுவலகம் இருக்கும்.அங்குதான் அனைத்து பணிகளுக்கான முன்களபணியாளர்கள் இருப்பவர்கள். அவர்களை சரி பண்ணி விட்டால் நம் வேலை சுலபமாக முடிந்துவிடும்.

    ReplyDelete