எங்கள்
கோட்டச் சங்கத்தின் மாத இதழ் சங்கச்சுடர் இதழில் “ஊழல்களின் ஊர்வலம்” என்ற தலைப்பில்
இந்தியாவை உலுக்கிய பல ஊழல்கள் குறித்து ஒரு தொடர் எழுதியிருந்தேன்.
அதிலே
நரசிம்மராவ் பற்றி எழுதிய பகுதி கீழே.
ஊறுகாய் வியாபாரி அளித்த ஒரு லட்சம் டாலர்கள்
சுதந்திர இந்தியா எத்தனையோ ஊழல்களைக் கண்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் சில முதல்வர்கள் ஏறியுள்ளனர். சிலர் சிறைவாசம்
கண்டுள்ளனர். சிலர் வாய்தாக்களிலேயே வாழ்வை நகர்த்திக் கொண்டுள்ளனர். ஆனால் ஊழல்
குற்றச்சாட்டிற்காக கூண்டில் ஏறிய ஒரே ஒரு பிரதம மந்திரி பி.வி.நரசிம்மராவ்
மட்டுமே.
ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் அவர் உள்துறை அமைச்சராக இருந்த
போது காகிதக் கூழ் ( Paper Pulp ) சப்ளை செய்வதற்கான
காண்டிராக்ட் பெற்றுத் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர்
பிரதமரான பின்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபலமான ஊறுகாய் வியாபாரி லக்குபாய்
பதக், நரசிம்ம ராவ் மீது குற்றம் சுமத்தினார். காகிதக் கூழ் சப்ளை செய்யும்
ஒப்பந்ததிற்காக நரசிம்மராவிற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கியதாக அவர்
குற்றம் சாட்டினார். சர்ச்சை சாமியார் சந்திரா சாமியும் அவரது உதவியாளர்
மாமாஜியும் நரசிம்மராவுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக அவர்
குற்றம் சுமத்தினார். இதற்காக சந்திராசாமிக்கு முப்பதாயிரம் டாலர்கள்
அளித்ததாகவும் அவர் குற்றச்சாட்டு கூறினார். சி.பி.ஐ இக்குற்றச்சாட்டின்
மீது வழக்கு பதிவு செய்தது.
நரசிம்மராவின் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் எழுந்த
இக்குற்றச்சாட்டு பாஜகவிற்கு ஆதாயமாக பயன்பட்டது. அடுத்து வந்த தேர்தலில்
காங்கிரஸ் தோற்றுப் போய் முதலில் வாஜ்பாயின் பதிமூன்று நாள் ஆட்சியும் பிறகு
தேவேகௌடா ஆட்சியும் வந்தது. இந்த காலகட்டத்தில் இந்த ஊழல் வழக்கிற்காக நரசிம்மராவ்
நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டியிருந்தது.
இதையே சாக்காக வைத்து காங்கிரஸ்
கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி சீதாராம் கேஸரி
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரானார். ஆனால் வழக்கு நீண்ட இடைவெளிக்கு
பிறகு பதிவு செய்யப்பட்டது, போதுமான சாட்சியங்கள் இல்லை என்று சொல்லி நீதிமன்றம்
அவரை விடுவித்து விட்டது. ஊழலுக்காக தண்டனை பெற்ற முதல் பிரதமர் என்ற
அவப்பெயரிலிருந்தும் அவர் தப்பித்தார். இறந்து போனாலும் கூட ஊறுகாய் வியாபாரியிடம்
பணம் பெற்ற பிரதமர் என்பது இன்னமும் கூட ஒட்டிக் கொண்டே உள்ளது – 14 ஜூலை, 2012
அன்று பகிர்ந்து கொண்டது.
இத்துடன்
சேர்க்க வேண்டிய இன்னொரு செய்தி கூட உள்ளது.
லக்குபாய்
பதக் மட்டுமல்ல, பங்குச்சந்தை மோசடிப் பேர்வழி ஹர்ஷத் மேத்தா கூட நரசிம்மராவிற்கு ஒரு
கோடி ரூபாய் கொடுததாக குற்றம் சொன்னது மட்டுமல்ல, ஒரு சூட்கேஸில் எப்படி ஒரு கோடி ரூபாயை
அடுக்கி வைத்தோம் என்று ஒரு காட்சியே நடத்திக் காட்டிய பெருமையும் பி.வி.என்னுக்கு
உண்டு.
ஆனால்
இவர் ஊழல் மட்டும் பாஜக கண்ணுக்கு தெரியவில்லை.
No comments:
Post a Comment