Wednesday, June 16, 2021

தொலைநோக்குப் பார்வைக்கு உதாரணம்

 



1974 வருடம் ஜனவரி மாதம், ஊதிய உயர்வுக்கான போராட்ட களம் எல்.ஐ.சி யில் சூடாக இருக்கிறது.  ஊழியர்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப் படுகிறது. பணியிடை நீக்கம், குற்றப்பத்திரிக்கை, விளக்கம் கேட்கும் கடிதம் என்று நிர்வாகம் தாக்குதலில் மும்முரமாக இருக்கிறது. ஊதியத்தை முடக்குவதே அன்றைய பிரதமரான இந்திரா அம்மையாரின் கொள்கையாக இருந்தது. அவரே எல்.ஐ.சி ஊழியர்களுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் வெடித்திருந்தார். 

நிர்வாகம் தந்திரமான நடவடிக்கை ஒன்றை எடுக்கிறது. முதலில் ஐந்து கோட்ட அலுவலகங்கள், பிறகு இன்னும் ஒன்று என ஆறு கோட்ட அலுவலகங்களை மட்டும் கதவடைப்பு செய்கிறது.

கோட்ட அலுவலக ஊழியர்களால் வேலைக்கு செல்ல முடியாது. கோட்டத்தின் கீழ் உள்ள கிளை அலுவலக ஊழியர்களால் வேலைக்கு செல்ல முடியாது.  சென்னை கோட்ட அலுவலகம் கதவடைப்பு செய்யப்பட்ட ஆறு கோட்ட அலுவலகங்களில் ஒன்று. அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்தில் கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வேலைக்கு செல்ல முடியாது. அதே கட்டிடத்தில் உள்ள தென் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் ஒரு நகர்க் கிளையின் ஊழியரும் பணிக்கு செல்ல முடியும். இதே நிலைமைதான் கதவடைப்பு செய்யப்பட்ட இன்னொரு கோட்டமான டெல்லியிலும்.

ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் பிளவை உருவாக்கும் நிர்வாகமும் ஒன்றிய அரசும் மேற்கொண்ட தந்திரத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெற்றிகரமாக முறியடித்தது. கதவடைப்பு செய்யப்பட்ட கோட்டங்களில், மையங்களில் உள்ள இதர அலுவலக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டு அது வெற்றிகரமாக அமலானது.

வேலை நிறுத்தம் உச்சகட்டத்தை அடைந்ததும் வேறு வழியில்லாமல் அரசும் நிர்வாகமும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு ரகுநாத ரெட்டி கல்கத்தாவிற்கு சென்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் தோழர் சந்திர சேகர போஸ், தலைவர்,  தோழர் சரோஜ் சவுத்ரி, இணைச் செயலாளர் தோழர் சுனில் மைத்ரா ஆகியோரோடு விவாதித்து டெல்லிக்கு வருமாறு அழைக்கிறார். விமான டிக்கெட்டுக்களை அவரே ஏற்பாடு செய்கிறார்.

பேச்சு வார்த்தை புது டெல்லியில் தொடர்கிறது. நிதியமைச்சர் திரு வொய்.பி.சவானும் இணைந்து கொள்கிறார். இறுதியில் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான உடன்பாடு எட்டப்படுகிறது. பணியிடை நீக்கம் உள்ளிட்ட தாக்குதல்கள் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டால்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்ற நிலையில் சங்கம் உறுதியாக இருக்கிறது. இறுதியில் 24.01.1974 இரவு 10.30 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கதவடைப்பு செய்யப்பட்ட அலுவலகங்களை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் திறந்து வைக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. புது டெல்லி அலுவலகத்தை தோழர் சரோஜ் சவுத்ரி திறந்து வைக்கிறார். தோழர் போஸ் பாட்னாவிலும் தோழர் சுனில் மீரட்டிலும் தோழர் என்.எம்.சுந்தரம் சென்னையிலும் கதவடைப்பு செய்யப்பட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்கள்.

25.01.1974 அன்று காலை டெல்லி அலுவலகத்தை திறந்து வைத்து தோழர்கள் மத்தியில் பேசுகையில் தோழர் சரோஜ், "போராட்டத்தின் மூலம் மகத்தான வெற்றியை அடைந்துள்ளோம். இந்த வெற்றியை தக்க வைப்பதற்கான போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்"

அடுத்த வருடமே அவசர நிலை பிறப்பிக்கப்படுகிறது. சொத்துரிமை நீங்கலாக இந்திய அரசியல் சாசனம் உறுதியளித்த அனைத்து உரிமைகளும் முடக்கப்படுகிறது. தொழிலாளர்களின் பயன்கள், சலுகைகள் மீது பெருந்தாக்குதல் நடக்கிறது. 

இத்தாக்குதலுக்கு எல்.ஐ.சி ஊழியர்களும் விதி விலக்கல்ல. 24.01.1974 அன்று உருவான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான போனஸ் பறிக்கப்படுகிறது. சொத்துரிமை நீடித்த பின்னணியில் போனஸை ஒரு காலகட்டம் வரை வேலை நிறுத்தம், சட்டப் போராட்டம் என இரு முனைகளில் போராடி பெற்றது வேறு வரலாறு.

பெற்ற பலனை பாதுகாக்க போராடும் நிலை வரும் என்று கணித்ததுதான் தோழர் சரோஜின் தொலை நோக்குப் பார்வைக்கு உதாரணம்.

இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை நீண்ட காலம் பொதுச்செயலாளராக, பின் தலைவராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் நினைவு நாள் இன்று.

அவரது லட்சியங்கள் நிறைவேற அவர் காட்டிய இடதுசாரிப் பாதையில் பயணிப்போம் என்று உறுதியேற்கிறோம்.


1 comment: