Tuesday, June 15, 2021

கழுதைகளுக்குத் தெரியுமா . . . . .அருமை?

 

மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் இரண்டு முகநூல் பதிவுகளை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆனால் அவற்றைப் படித்தவுடன் எனக்கு மனதில் தோன்றியது ஒன்றுதான். 

"சங்கிக் கழுதைகளுக்குத் தெரியுமா கல்வெட்டுக்களின் அருமை?"

இவர்கள் கட்டமைக்க நினைக்கும் போலி வரலாறுக்கு எதிரான சான்றுகளாக திகழும் கல்வெட்டுக்களை புரிந்து மக்களுக்குச் சொல்ல காவிகளுக்கு எப்படி மனது வரும்!



கல்வெட்டில் கண்ட புதையல் !
சு.வெங்கடேசன் எம் பி
நேற்று, மாண்புமிகு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் சென்று திருமலைநாயக்கர் அரண்மனையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டோம்.
அரண்மனையின் நாடகசாலைப் பகுதியைப் பார்த்துவிட்டு, உள்ளறையில் வைக்கபட்டிருந்த சிலைகளையும் கல்வெட்டுகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு கல்வெட்டின் அருகில் நின்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவ்விடத்தைக் கடந்தோம். சிறிது நேரத்தில் ஆய்வுப்பணி முடிந்துவிட்டது.
நான் வாகனத்தில் ஏறியவுடன் ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது “சார், நீங்களும் அமைச்சரும் ஒரு கல்வெட்டினைப் பார்த்தபடி ரெம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தீங்க, என்ன சார் அது?” என்றார்.
“அது ரெம்ப முக்கியமான கல்வெட்டுங்க” என்றேன்.
“முக்கியமானதுனா, எப்படி சார்?” என்றார்.
“எல்லாக் கல்வெட்டுகளும் முக்கியமானவைதாங்க, இது ரெம்ப முக்கியமானது, பொக்கிஷம் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்” என்றேன்.
”பொக்கிஷம்” என்ற சொல்லினை நான் பயன்படுத்தியதும் ஆர்வம் அதிகமாகி ”புதையல் பற்றியதா சார்” என்றார்.
புதையல்தான், ஆனா பொன், நகை பற்றியதன்று; மொழி பற்றியது, நமது வரலாறு பற்றியது, மகத்தான மனிதர் பற்றியது என்றேன். அடுத்தடுத்து சற்று விரிவாகவும் அதனைச் சொன்னேன். ஆனால் ”புதையலா?” என்று அவர் கேட்ட ஆர்வத்தை எனது விளக்கம் பூர்த்தி செய்தது போல் தெரியவில்லை.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, அரசாங்க தங்கச்சாலையின் மூலம் திருவள்ளுவருக்கு தங்க நாணயத்தை வார்த்து வெளியிட்ட மாமனிதர், எல்லீஸ் பதித்த கல்வெட்டு அது.
1818 ஆம் ஆண்டு சென்னையில் கடுங்குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, எல்லீஸ் அவர்கள் மக்களின் குடிநீர் தேவையைக் கருதி 27 கிணறுகளை வெட்டிவித்தார். அதில் ஒரு கிணறு ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் வெட்டப்பட்டது. அக்கிணற்றின் கைப்பிடிச்சுவற்றில் கல்வெட்டு ஒன்றினை பதித்துள்ளார்.
வழக்கமான ஆங்கிலேயர் பாணியில் இல்லாமல், அழகிய தமிழ் செய்யுள் வடிவில் இக்கல்வெட்டினை வடிவமைத்தார். அதில் ”இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு” என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.அக்கெல்வெட்டுதான் இப்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்திலே இருக்கிறது.
பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட அக்குறள் எத்தனையாவது வரியிலே இருக்கிறது எனத் தேடி, அதனை 34ஆவது வரியில் கண்டு விரல்தொட்டு வாசித்தார் அமைச்சர்.
அதன்பின் எல்லீஸ் பற்றி பங்களிப்பு செய்த பலரைப்பற்றி பேசிக்கொண்டோம். அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் துவங்கி ஐராவதம் மகாதேவன், வேதாசலம், தாமஸ் டிரவுட்மென், ஆ.இரா.வெங்கடாசலபதி வரை பேசியபடி விடைபெற்றோம்.
நாற்பது வயது நிறைவுறும் வரை நூற்களை எழுதி வெளியிடக்கூடாது என கருதியிருந்த எல்லீஸ் நாற்பத்தி ஓராவது வயதில் சட்டென இறந்து போனது தமிழுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.
செய்தித்தாளினைப் போல கல்வெட்டினை படிக்கிறார் தமிழக அமைச்சர். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரோ, இந்தியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள 80 000 கல்வெட்டில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்டாமல், படிக்காமல் கிடக்கிறது. அதற்குப் பணியாளர்களை நியமியுங்கள் என்றால் ஒருவரைக்கூட நியமிக்க மாட்டேன் என்கிறார்.

தங்கம் தென்னரசைப் பாராட்டிய கையோடு பிரகலாத் சிங் பட்டேலுக்கு நீண்ட கடிதம் எழுத ஆரம்பிக்கிறேன்.

வரிகளை விரல்களால் தொடுவது, அதனைப் பொறித்தவனது பாதங்களைத் தொடுவதைப் போன்றது. கிணறுகளை மண்மூடலாம். நிரம்பிய நீர் வற்றலாம், தமிழுக்கு தொண்டாற்றியவனின் புகழ் ஒருபோதும் மறையாது.

எல்லீஸ் புகழ் நீடுறும்.

போதிய ஊழியர்கள் இல்லாததால் இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறை முடங்கும் அபாயம்.
புதிய பணியிடங்களை உருவாக்க ஒன்றிய அமைச்சருக்கு
சு.வெங்கடேசன் எம் பி கடிதம்.
ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர்
திரு பிரகலாத் சிங் பட்டேல் அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் விபரம்.
இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி எழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. கல்வெட்டு ஆய்வு இல்லாமல் இந்திய வரலாற்றை நினைத்துப் பார்க்கவே முடியாது. கல்வெட்டுகள் தொடாத வாழ்வின் எந்தவொரு பகுதியும் இல்லை என்கிற நிலையே இன்று இருக்கிறது. இந்திய வரலாறு 98 சதவிகிதம் கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. மௌரியர்கள், சத்வகனர்கள், சுங்கர்கள், குஷனர்கள், குப்தர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட வம்சாவழிகள் கல்வெட்டுகள் மூலமாகவே சமகால வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, 1886ல் இந்திய தொல்லியல் துறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட கல்வெட்டு ஆய்வுத் துறை வரலாற்று ஆய்வுக்காக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது.
இதுவரை, இந்தியா முழுவதிலும் 80,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் நிறைய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. 80,000 கல்வெட்டுகளில் சுமார் 70 சதவிகிதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளில் இருக்கின்றன. மீதி 30 சதவிகிதம் பிற மொழிகள்.
135 வருட பாரம்பரியம் கல்வெட்டு ஆய்வுத் துறைக்கு இருந்தாலும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 50 சதவிகிதமான கல்வெட்டுகள் மட்டுமே துறை அறிக்கைகளில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 50 சதவிகிதம் கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.
செய்வதற்கு பல வேலைகள் இருந்த போதும் கல்வெட்டு ஆய்வுத் துறை மிக சொற்ப அளவிலான பணியாளர்களுடனேயே இயங்குகிறது. போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தேங்கியிருக்கும் சில முக்கியமான பணிகளை உங்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
• கல்வெட்டுகளின் காகித பதிவுகள் மோசமான நிலையில் இருப்பதால் 80,000 கல்வெட்டுகளை உடனடியாக கணிணிமயமாக்கும் பணி அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
• இதுவரை பதிப்பிக்கப்படாத 40,000 கல்வெட்டுகளை பதிப்பிக்க முன்னுரிமை தரப்பட வேண்டும்.
• அகழ்வு மற்றும் சுரங்கப் பணிகளால் காணாமல் போக கூடிய ஆபத்தில் இருக்கும் கல்வெட்டு செல்வத்தை உடனடியாக நகலெடுத்து, பொருள் உணர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டிய பணி, மிக அவசரமான முன்னுரிமை தரப்படவேண்டும்.
• கல்வெட்டு ஆய்வைப் பொறுத்தவரையில் பழங்காலவியலாளர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். திராவிட மொழிகள், பாலி, சமஸ்கிருதம், பிற பிராந்திய மொழிகள் போன்ற பழங்கால மொழிகளிலும், ப்ரம்மி, கரோஷ்டி, அரமைக், கிரேக்கம், சரதா, கௌடி, வட்டலேட்டு, கிரந்தம் போன்ற லிபிக்களிலும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
• சிந்து எழுத்துரு மற்றும் ஷெல் எழுத்துருவிலுள்ள மர்மங்கள் நீக்கப்பட்டு அவை புரிந்து கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
• கல்வெட்டுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து அவற்றை காப்பாற்ற, கல்வெட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய பண்பாடு விழிப்புணர்வு நிகழ்வுகள் அவ்வபோது நடத்தப்பட வேண்டும்.
• இன்னும் பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படவும், பொருள் உணரவும் பதிப்பிக்கப்படவும் வேண்டியிருப்பதால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறைந்தது இரண்டு கல்வெட்டு ஆய்வாளர்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து விசயங்களும் துறை ரீதியாக நடக்க வேண்டுமென்றால், காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், புதிய பதவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையில் 758 இடங்களை உருவாக்கும் ஒரு பரிந்துரை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இருப்பதால், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வுக்கென்று குறைந்தது 40 தொழில்நுட்ப பதவிகளை உருவாக்குவதென்பது உங்களுக்கு கடினமான விசயமாக இருக்காது.

No comments:

Post a Comment