*உத்தப்புரம் பொன்னையா*
*சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு களத்தின் நட்சத்திரம்*
//க.சுவாமிநாதன்//
#######################
உத்தப்புரம் - சாதீய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தின் குறியீடாக உலகம் முழுவதும் அறியப்படுவது. 2008 தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அங்கிருந்த "தீண்டாமை பெரும் சுவரை" உலகிற்கு அம்பலப்படுத்தியது. அக் கிராமத்தில் அதற்கு முன்பும் பின்பும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்றவர் - கிராம மக்களின் தலைவர் பொன்னையா இன்று 80 வயதை நெருங்குகிற வேளையில் மறைந்து விட்டார்.
இவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். 1950 களில் இருந்தே 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தப்புரம் கிராமத்தில் வெடித்த சாதிய வன்கொடுமை, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடி வந்திருப்பவர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் கிளை ஜனவரி 10, 2008 ல் துவக்கப்பட்டது. ஜனவரி 20, 2008 ல் மதுரை மாவட்டத்தில் 35 கிராமங்களில் தீண்டாமைக் கள ஆய்வை மேற்கொண்டது. அந்தக் கள ஆய்வு மதுரை நகர் தொழிற்சங்கங்கள், மாதர், வாலிபர், மாணவர் சோகோ டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியதாகும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் அநேகமாக முடிவுக்கு வந்து விட்டன என அன்றைய மாவட்ட ஆட்சியர் பேசி வந்த நேரம். ஆனால் கள ஆய்வுகள் 35 கிராமங்களில் 35 வடிவிலான தீண்டாமைக் கொடுமைகள் இருப்பதை அம்பலப்படுத்தின. தேனீர் கடைகள், சலவையகம், சிகை திருத்தகம், பள்ளிக் கூடங்கள், தபால் வழங்குதல், மயானம், நீர் நிலைகள்... இப்படி மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் பாரபட்சங்கள், புறக்கணிப்புகள் இருந்தன. அதன் உச்ச பட்ச வடிவம்தான் தேவேந்திர குல வேளாளர் மக்களின் குடியிருப்புகளை "ஊரில் இருந்து" பிரிக்கிற தீண்டாமை சுவர். கள ஆய்வுகள் பிப்ரவரி 10 அன்றைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பி. மோகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி. சம்பத் ஆகியோரால் வெளியிடப்பட்டவுடன் நாடு முழுவதும் அதிர்ச்சி.
பிப்ரவரி 23, 2008 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் முழக்கப் போராட்டம். அதில் தான் உத்தப்புரம் பொன்னையா, சங்கரலிங்கம் ஆகிய பெரியவர்கள் ஊர் மக்களோடு பங்கேற்கிறார்கள். அன்றைய நாள் மாவட்ட ஆட்சியர் இடம் மகஜர் அளிக்க காத்திருந்தோம். மாவட்ட ஆட்சியர் சந்திப்பை தள்ளிப் போடுகிறாரோ என்று தோன்றியது. தோழர் மோகன் எம். பி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நள்ளிரவு ஆனாலும் உங்களை சந்தித்து விட்டே செல்வோம் என்று தெரிவித்த பிறகு இரவு 11 மணிக்கு சந்திப்பு. உத்தப்புரம் பொன்னையா, சங்கரலிங்கம் இருவரும் உடன் இருந்தார்கள். பேருந்து நிழல் குடை கூட அமைக்க சாதி இந்துக்கள் தடை போடுகிறார்கள் என்று பொன்னையா மாவட்ட ஆட்சியர் இடம் கூறினார். சாக்கடை மூடி போட மாட்டேன் என்கிறார்கள் என்றார். எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வு துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறது என்பதை பொன்னையா அவர்களின் வலி மிகுந்த வார்த்தைகள் விவரித்து கொண்டிருந்தன.
*தகர்ந்த சுவர்*
இதற்கிடையில் தீண்டாமை சுவர் என்ற வடிவம் பெரும் கண்டனத்திற்கு ஆளானது.
மார்ச் 23, 2008 அன்று தோழர் என். வரதராஜன் அவர்கள் பங்கேற்ற பெரும் திரள் ஆர்ப்பாட்டம் பேரையூரில் நடைபெற்றது. உத்தப்புரத்தில் இருந்து தோழர்கள் பொன்னையா, சங்கரலிங்கம் தலைமையில் ஆயிரம் பேர் பங்கேற்றனர். சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இது தமிழக சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு களத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. "சுவரை இடி" என்ற முழக்கம் எழுந்தது.
இந்து நாளிதழில் திரு கார்த்திகேயன் இச் சுவர் குறித்து ஏப்ரல் 18 அன்று வெளியிட்ட செய்தி, மறு நாள் அது தேசியப் பக்கங்களில் வருமளவிற்கு கவனத்தை ஈர்க்கிறது. சட்டமன்ற தொடரில் அவை துவங்குவதற்கு முன்பாக சி. பி. எம் சட்டப் பேரவை உறுப்பினர் என். நன்மாறன் அன்றைய முதல்வர் கலைஞர் கவனத்திற்கு கொண்டு வருகிறார். "என்ன நன்மாறன்... பெர்லின் சுவர் மாதிரி சொல்றீங்க" இது அவரின் முதல் ரீயாக்சன். என்னை வடபுலத்து தலைவர்கள் எல்லாம் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள் என்று பின்னர் அவையில் கூறினார். மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்களே அவர்கள்.
இதற்கிடையில் சி. பி. எம் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் ஏப்ரல் 7 அன்று உத்தப்புரம் வருகிறார் என்று அறிவிக்கப்படுகிறது. "இடி அல்லது இடிப்போம்" என்ற முழக்கங்கள் எழுகின்றன. பிரகாஷ் காரத் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவு பெரும் எண்ணிக்கையிலான காவல் படை பக்கத்து மாவட்டங்களில் இருந்து உத்தப்புரம் நோக்கி நகர்கிறது. காலாகாலமாக காவல் துறையின் பாரபட்சங்களையே கண்டு வந்திருந்த தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு கலக்கம் கூட ஏற்பட்டது. அன்றைய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் தங்கராஜ், செல்லக் கண்ணு, முத்து ராணி மக்களோடு களத்தில் இருந்து நம்பிக்கை தந்தனர். மக்களை மன உறுதியோடு தயார் செய்தததில் பொன்னையா, சங்கரலிங்கம் ஆகியோரின் பங்கு மகத்தானது.
ஏப்ரல் 6, 2008 விடிந்தது. அரசு நிர்வாகம் கோடாலிகளோடு சுவர் அருகே சென்று அதை தகர்க்க துவங்கினர். 500 மீ சுவரில் 150 மீ தகர்க்கப்பட்டு பாதைகள் திறக்கப்பட்டன. நாடு முழுவதும் தலைப்பு செய்தி.
மறு நாள் பிரகாஷ் காரட் உத்தப்புரம் வந்தார். சுவருக்குள் 20 ஆண்டுகளாக மறைந்திருந்த முகங்களில் எவ்வளவு நம்பிக்கை. மகிழ்ச்சி. பிரகாஷ் காரத் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வர பொன்னையா அவர்கள் கரம் கூப்பி வரவேற்ற காட்சி தீக்கதிர் புகைப்படக் காரர் லெனின் கேமராவுக்குள் குடி புகுந்தது.
*முடியவில்லை போராட்டம்*
அத்தோடு உத்தப்புரம் போராட்டம் முடிவடைந்து விடவில்லை. தகர்க்கப்பட்ட சுவர் பாதையில் நுழைய விடவில்லை. நிழல் குடை, முத்தாலம்மன் கோவில் வழி பாட்டு பிரச்சினைகள் எனத் தொடர்ந்தன.
காவல்துறை அக்டோபர் 2008 ல் உத்தப்புரம் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் கொடூரமான அடக்குமுறையை ஏவி விட்டது. 192 வீடுகள் நொறுக்கப்பட்டன. ஆண்கள் தலை மறைவாகி விட்டனர். இறந்தவர் ஒரு சடலத்தை பெண்கள் சவ வண்டி இழுத்து, குழி வெட்டி அடக்கம் செய்த காட்சி உத்தப்புரம் தேவேந்திர குல வேளாளர் மக்களின் மன உறுதிக்கு சாட்சியமாக அமைந்தது. இந்த நேரங்களில் எல்லாம் பொன்னையா, சங்கரலிங்கம் அவர்கள் மக்களுக்கு தந்த வழி காட்டல்களும், நம்பிக்கையும் முக்கியமானவை. ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் பொன்னுத்தாயி, முத்து ராணி, ஞானம், டீச்சர் பிச்சையம்மாள் ஆகியோர் கிராமத்தில் போய் மக்களோடு தங்கி தைரியம் தந்தனர். தங்கராஜ், செல்லக் கண்ணு போன்றோர் நள்ளிரவிலும் தலை மறைவாகி இருந்த உத்தப்புரம் இளைஞர்களுக்கு உறு துணையாய் இருந்தனர்.
ஒய்வு பெற்ற நீதிபதி திருப்பதி தலைமையிலான விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு ரூ 1 கோடியே 15 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இப் போராட்டத்தை வழி நடத்த போராட்ட நிதி ஒன்றை பொன்னையா, சங்கரலிங்கம் ஆகியோர் உருவாக்கி வைத்திருந்தனர். உணர்ச்சி பூர்வமாக மட்டுமின்றி ஒரு போராட்டத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரண அமைப்பாளர்களாகவும் அவர்கள் திகழ்ந்தனர்.
*முத்தாலம்மன் கோவில் நுழைவு*
50 ஆண்டு கால அனுமதி மறுப்பு 2012 ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டம் அடக்குமுறைக்கு ஆளானது. டி.கே.ரெங்கராஜன் எம். பி. சம்பத் ஆகியோர் தாக்குதலுக்கு ஆளானார்கள். ஆலயப் பிரவேசம் அன்று ஊரே சீல் வைக்கப்பட்டது. ஆனாலும் எஸ்.கே.மகேந்திரன், சாமுவேல் ராஜ் ஆகியோர் கிராமத்திற்குள் சென்று பெரும் நம்பிக்கையை மக்களுக்கு தந்தனர். நீதி மன்றத்தில் ஜனநாயக மாதர் சங்க வழக்கு நிர்மலா ராணி அவர்களால் நடத்தப்பட்டது. நீதிபதி சந்துரு அவர்கள் அதை விசார்த்தார். அவர் எழுப்பிய கேள்விகள்,
நியாயமான காவல் அதிகாரிகளின் ஈடுபாடு ஆகியனவெல்லாம் சேர்ந்து அரை நூற்றாண்டுக் காலப் பாரபட்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. முத்தாலம்மன் முக மலர்ச்சியோடு வெற்றிலை பாக்கு தட்டை எடுத்துச் சென்ற பொன்னையா, சங்கரலிங்கம் உள்ளிட்டோரை வரவேற்றாள்.
*பொன்னையா அளப்பரிய பணி*
பல பத்தாண்டுகள் நடைபெற்ற போராட்டத்தில் அச்சாணியாக பொன்னையா விளங்கினார். துடிப்பு மிக்க இளைஞர்களை ஆக்க பூர்வமாக வழி நடத்தினார். வயது அவரின் போராட்ட உணர்வுக்கு தடையாக இல்லவே இல்லை. உத்தப்புரம் போராட்டத்தில் இரண்டு முறை ரிமாண்ட ஆனார். நீரிழிவு நோயால் அவதிப்பட்டாலும் அவர் பின் வாங்கவே இல்லை. போராட்டங்கள் சென்னா, மதுரை, உசிலம்பட்டி, பேரையூர் என்று எங்கு நடந்தாலும் அவர் பங்கேற்பு இல்லாமல் இருக்காது.
அவர் பெரிய பொறுப்புகளுக்கு வரவில்லை.
ஒரு சின்ன கிராமத்தில் அவர் தலைமை ஏற்றிருக்கலாம். ஆனால் அது தேசம் தழுவிய வீச்சை உருவாக்கியது எனில் களத்தில் நிகழ்த்தப்பட்ட திரட்டல்தான். உத்தப்புரம் சுவர் பல கவிஞர்களின், இலக்கிய ஆளுமைகளின் கருப்பொருளாய், குறியீட்டு சொல்லாய் மாறியது. நீதிபதி சந்துரு அவர்களின் அலுவலகத்திற்கு சென்றால் வாசலில் "உடைந்த உத்தப்புரம் சுவரின் துண்டு" இருப்பதை காணலாம்.
பொன்னையா சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டம் இந்த தேசத்தின் உழைப்பாளி மக்களின் விடியலோடு இணைந்தது என்பதை உணர்ந்திருந்தார். ஆகவே தன்னை விவசாய போராட்டங்கள், நவீன தாராளமய எதிர்ப்பு இயக்கங்களோடும் தன்னை இணைத்துக் கொண்டார். இடதுசாரி குடும்பமாக அவரின் இணையர், மகள், மருமகன் எல்லோரும் மாறி செயலாற்றி வருகிறார்கள்.
நீதிபதி சந்துரு தனது உத்தப்புரம் தீர்ப்பில் "சுவர் பிரித்தது... உள்ள உறுதி இணைத்தது" (Wall divided but will united) என்று கூறினார்.
இப்படி உத்தப்புரம் மட்டுமல்ல...இந்தியாவே பேசக் கூடிய நாள் என்று வரும்? ஆனால் பொன்னையாக்கள் நம்பிக்கை தருகிறார்கள்.
No comments:
Post a Comment