Monday, June 14, 2021

சே - எதிரிகளுக்கும் பார்வை கொடுத்தவன்

 


ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் மிக முக்கியமான கட்டுரை. அவசியம் முழுமையாக படியுங்கள்.

 மேலே உள்ள ஓவியம் எங்கள் ஆரணி கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் வரைந்தது.

 சே - எதிரிகளுக்கும் பார்வை கொடுத்தவன்



(சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரை... சில திருத்தங்களுடன்)

 எனக்கு முன்னால் மருந்துகள் நிரம்பிய ஒரு சாக்குப் பையும், தோட்டாக்கள் நிறைந்த பெட்டியும் இருந்தது. கனமான இரண்டையும் தூக்கிக் கொண்டு என்னால் நடக்க முடியாது. சாக்குப் பையை அங்கேயே விட்டுவிட்டு தோட்டாக்கள் இருந்த பெட்டியை நான் எடுத்துக்கொண்டேன்.”

 அர்ஜெண்டினாவின் ரோசாரியோ நகரில் வாழ்ந்த பெற்றோருக்கு இப்படித் தன் பிரியாவிடைக் கடிதத்தை எழுதிவிட்டுதான் தன் முடிவில்லாப் புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார் டாக்டர் சே குவேரா. அவரைக் கடைசியாகப் பேட்டி கண்ட உருகுவே நாட்டுப் பத்திரிக்கையாளர் இப்படி எழுதுகிறார்:

 சே ஒரு அதிபுத்திசாலியான மருத்துவ மாணவர். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வார். ஆறு மணி நேரம் தன் பிழைப்புக்கு. ஆறு மணி நேரம் படிப்புக்கு. அதே நேரத்தில் உயர் கணிதம் குறித்த சிக்கல் நிறைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். கவிதைகள் எழுதினார். சவால் நிறைந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார். தன் 17-வது வயதிலேயே தத்துவங்கள் பற்றிய நிகண்டைத் தொகுக்கத் தொடங்கினார்!”

 சாகச மனம்

 அடிப்படையிலேயே சாகசக்காரனின் மனம் படைத்திருந்த சே குவேராவுக்கு இதில் எதிலும் தொடர்ந்து மனம் லயித்துச் செயல்பட முடியவில்லை. நான்கு வயதிலிருந்தே அவரைக் கடுமையாகப் பாதித்திருந்த ஆஸ்துமா நோயால்கூட அவரது புரட்சியின் உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை. சிறுவயதில் கால்பந்து, ரக்பி விளையாடுவார். மூச்சுத் திணறும்போது நண்பர்கள் அவரை வெளியே தூக்கிச் செல்வார்கள். மருத்துவரான பின்னும் விளையாடும்போது ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டால் ஓரமாகச் சென்று ஒரு ஊசிமூலம் மருந்தை உடலில் செலுத்திக்கொண்டு மறுபடியும் விளையாட வந்துவிடுவார்.

 ஆஸ்துமா இருப்பதால் அர்ஜெண்டினாவின் ராணுவம் இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தது. ராணுவத்துக்குத் தகுதியற்ற இந்த ஆஸ்துமா நோயாளிதான் தன் மைக்ரோன் மோட்டார் சைக்கிளில் ஆயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்து ஆண்டிஸ் மலைத்தொடரையும் கடந்து பொலிவியாவுக்கும், பிறகு குவாட்டமாலா நாட்டுக்கும் சென்றார். குவாட்டமாலாவை ஆண்டு வந்த ஜேகப் ஆர்பென்ஸ் தீவிரமான நிலச் சீர்திருத்தம் செய்துகொண்டிருந்தார். அதன் பயனாக 5 லட்சம் பூர்வகுடி மக்களுக்கு நிலம் கிடைத்தது. அந்தக் காலத்தில் லத்தீன் அமெரிக்க நிலங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனமான யுனைட்டெட் ஃப்ரூட் கம்பெனியின் கையில் இருந்தன.

 ஆர்பென்ஸின் சீர்திருத்தங்களால் ஆத்திரமடைந்த அந்த நிறுவனம் அமெரிக்க அரசிடம் புகார் சொன்னது. அமெரிக்க சிஐஏ உதவியுடன் நடத்தப்பட்ட ராணுவப் புரட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்பென்ஸ் அரசு வீழ்ந்தது. அதற்கு முன்பே பெரு நாட்டின் புரட்சிக்காரர் ஹில்டா காடியாவிடமிருந்து மார்க்ஸியம் குறித்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்துவந்த போராட்டங்கள் புரட்சிகள் குறித்தும் அறிந்து வைத்திருந்த சே குவேராவின் சிந்தனையில் புரட்சித் தீ மூண்டது இத்தருணத்தில்தான்.

 சபதம்

 யுனைட்டட் ஃப்ரூட் கம்பெனிக்குச் சொந்தமான நிலத்தைக் கடந்து செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த முதலாளித்துவ ஆக்டோபஸ்களின் வெறுக்கத்தக்க தன்மையை நான் உணர்ந்தேன். இந்த ஆக்டோபஸ்களை அழித்தொழிக்கும் வரை நான் ஓய மாட்டேனென்று தோழர் ஸ்டாலினின் படத்துக்கு முன் சபதமெடுத்துக்கொண்டேன். குவாட்டமாலாவில் நான் என்னையே மேம்படுத்திக்கொண்டு உண்மையான புரட்சியாளனாக எழுவேன்என்று சே தனது அத்தைக்கு எழுதிய கடிதத்தில் எழுதினார். குவாட்டமாலாவில் ராணுவப் புரட்சி நடந்த நேரத்தில் காடியாவுடன் சேர்ந்து மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றார்.

 அக்காலத்தில் ஒரு முறை அருகில் இருந்த கோஸ்டாரிகா நாட்டுக்குச் சென்ற சே ஒரு காப்பிக் கடையில் கியூபா நாட்டின் இளைஞர்களின் உற்சாகமான உரையாடலைக் கேட்டார். தங்கள் நாட்டின் சர்வாதிகாரி பாடிஸ்டாவுக்கு எதிராக ஒரு புரட்சிப் படை மோன்கடா எனும் ராணுவத் தளத்தின்மீது தொடுக்கப்போகும் தாக்குதலைப் பற்றிதான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதை நம்பமுடியாத சே, “ஏன் நீங்கள் வேறொரு கவ்பாய் கதையைச் சொல்லக் கூடாது?” என்று கேட்டார்.

 இதே இளைஞர்களை மீண்டும் மெக்சிகோவில் சந்தித்தார். மோன்கடா தாக்குதலுக்குப் பின் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் வெளிவந்திருந்த நெடிதுயர்ந்த ஒரு மனிதரை அந்த இளைஞர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அவர் பெயர் ஃபிடல் காஸ்ட்ரோ. புரட்சிப் படையில் சே இணைந்தார். அர்ஜெண்டினா ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட சே, காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவின் மிகச் சிறந்த மாணவராகக் கருதப்பட்டார்.

 பொலிவியப் புரட்சி

 கியூபப் புரட்சியின்போது துப்பாக்கியைச் சுமந்துகொண்டு கழுத்து வரை இருக்கும் சேற்றில் நடந்து சென்றதும் இந்த ஆஸ்துமா நோயாளிதான். அதற்குப் பிறகு நிகழ்ந்தது உலகையே குலுக்கிய புரட்சி வரலாறு. காஸ்ட்ரோ அரசின் பொருளாதார அமைச்சராக இருந்த சே, அடுத்து பொலிவியாவுக்குப் புரட்சி நடத்தச் சென்றார்.

 பொலிவிய புரட்சிப் படையை நடத்திச் சென்ற அவரையும் சகாக்களையும் ராணுவம் சூழ்ந்தது. அவருடைய இரு கால்களையும் சுட்டு வீழ்த்தினார்கள் ராணுவத்தினர். அதற்குப் பின்னும் தன் கையிலிருந்த எம் 1 துப்பாக்கியை வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்தவாறே இரண்டு மணி நேரம் சண்டையைத் தொடர்ந்தார். நேரடியாக ஒரு குண்டு அவர் கைகளில் பாய்ந்ததால் துப்பாக்கி கையை விட்டு நழுவியது. அவரை ராணுவ முகாமுக்குத் தூக்கிச் சென்றனர். அந்தப் புரட்சிக்காரனை என்ன செய்வது என்று முடிவெடுக்க பொலிவிய அரசால் முடியவில்லை. ஒரு இரவு ஒரு பகல் முடிந்த பின்னும் முகாமில் மயான அமைதி. பொலிவிய அதிபரின் முடிவு முகாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. சண்டை நடக்கும்போதே சே குவெராவைக் கொன்றது போலத் தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது உத்தரவு.

 காயமடைந்த சே குவேராவின் எகத்தாளப் புன்னகையை அதற்கு மேலும் தாங்க முடியாத மரியோ டெரான் சலாசார் என்கிற பொலிவிய ராணுவ வீரன் கைத்துப்பாக்கியைக் எடுத்தான். “நீ இங்கு என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். கோழையே என்னைச் சுடு. நீ ஒரு மனிதனை மட்டும்தான் கொல்லப் போகிறாய்,” என்றார் சே. குண்டுகள் சீறிப்பாய்ந்தன. புரட்சி இதயம் அடங்கியது.

 மந்திரம் போன்ற வாழ்க்கைக்கு மந்திரம் போன்ற முடிவு என்று எழுதினார் கலியானோ. சே குவேராவின் அன்றைய வயது 39. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின், சே குவேராவைச் சுட்ட டெரானின் கண்ணில் ஏற்பட்ட புரை கியூப அரசின் மருத்துவ உதவியுடன் அகற்றப்பட்டது. எதிரிகளுக்கும் பார்வையைத் தந்ததுதான் சே குவேராவின் புரட்சி.

 -ஆர். விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

(தமிழ் இந்துவில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைசில திருத்தங்களுடன்)

No comments:

Post a Comment