Tuesday, October 26, 2021

அச்சப்படுத்தும் செஞ்சுரி



 *நாளொரு கேள்வி: 25.10.2021*


வரிசை எண்: *512*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################

*செஞ்சுரி அடித்த டீசல்*

கேள்வி: டீசல் விலை உயர்வு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

*க.சுவாமிநாதன்*

இது கிரிக்கெட் சீசன். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் ஆரம்பிப்பதற்கு முன்பே டீசல் செஞ்சுரி அடித்து விட்டது. *தேசம் என்ற கேலரியில் அமர்ந்திருக்கிற யாரும் கை தட்டவில்லை. ரசிக்கவில்லை.* அதிர்ந்து போயிருக்கிறார்கள். 

நேற்று காலை இந்து நாளிதழின் மாநகர பக்கத்தில் டீசல் விலை உயர்வு பற்றிய செய்தி ஒன்று உள்ளது. மேற்கு மாம்பலத்தில், வேளச்சேரியில், மேட வாக்கத்தில், கேளம்பாக்கத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 100 ஐ கடந்து விட்டது. பைசாக்களில் மட்டும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். 

முன்பெல்லாம் *பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை வித்தியாசம்* நிறைய இருக்கும். ஆனால் இப்ப பெட்ரோல் லிட்டர் விலையான ரூ 104 ஐ டீசல் நெருங்கி விட்டது. டூரிஸ்ட் டாக்சி ஒட்டுபவர்கள் டீசல் வண்டி என்றால் லாபம் என்று நினைத்த காலம் மலையேறி விட்டது.

அண்ணா நகரில் ஒருவர் புலம்பியது அதில் செய்தியாக உள்ளது.  _" _சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கார் வாங்கினேன். அப்போது பெட்ரோலை விட டீசல் விலை லிட்டருக்கு ரூ 15 குறைவாக இருந்தது. இன்னைக்கு கார் டேங்க் ஐ நிரப்ப ரூ 5000 ஆனவுடன் திக் கென்று இருந்தது_ " 
டூரிஸ்ட் கார்களின் ரேட் அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் சண்டை போடுகிறார்கள். இருந்தாலும்  டூரிஸ்ட் கார்காரர்கள் ரேட்டை ஏற்றி விட்டார்கள். ஃப்ரீடம் டிராவல்ஸ் என்ற கம்பெனியின் உரிமையாளர் கூறும் போது " _கிலோ மீட்டருக்கு ரூ 4 அல்லது ரூ 5 உயர்த்த வேண்டும். இப்போது உள்ள ரேட்டுகள் டீசல் விலை ரூ 70 ஆக இருந்த போது நிர்ணயித்தது ஆகும். இப்ப எப்படி கட்டுப்படியாகும்_ ?"
என்கிறார். நிறைய பேர் காரில் போவதை குறைத்து விட்டார்கள். 

இந்த செய்தி எல்லாம் நடுத்தர மக்களின் கஷ்டங்கள். இவர்கள் நிலைமையே இதுவெனில் சாதாரண மக்களின் நிலைமை என்ன? அவர்கள் முதுகு மீது மறைமுக சுமையாக ஏறுவதால் நேரடியாக கோபப்பட கூட முடியாது. ஆமாம். அவர்கள் வாங்குகிற *காய்கறி, பலசரக்கு சாமான்கள் எல்லாவற்றின் விலையும்* ஏறிவிடும். இவற்றை ஏற்றி வருகிற லாரி, அரைபாடி லாரி, வேன் கட்டணங்களை யார் சுமப்பது? 

பெட்ரோல் டீசல் ஆகியன இடையீட்டு சரக்காகும். இதன் விலை நிறைய சரக்குகளின் விலைகளில் பிரதிபலிக்கும். *நுகர்வோர் விலை குறியீட்டெண், பணவீக்கம்* அதிகரிப்பது இதனால்தான். 

விலையில் பாதிக்கு மேல் உள்ள வரிகளை குறைக்காமல் மக்களின் பாடுகள் குறையாது. ஆனால் வேதனை என்னவென்றால் விலை கூட கூட வரியும் கூடும் என்பதே. எடைக்கு வரி இல்லை, விலைக்கு வரி என்பதே காரணம். 

*செவ்வானம்*

No comments:

Post a Comment