Wednesday, October 20, 2021

அப்துல் கலாமிற்கு புரிந்திருக்கும் . . .


எல்.ஐ.சி நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் சில இலக்குகளை அளித்திருந்தார். அவற்றை எங்கள் நிறுவனம் மிகச் சிறப்பான முறையில் விஞ்சியது. அப்படிப்பட்ட நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டாம் என்று திரு அப்துல் கலாம் சொல்லி இருந்தால் மோடி வகையறாக்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். 

மத்யமர் குழு உள்ளிட்ட சங்கிகள் அவரை வசை பாடி "குஜராத் கலவரத்தின் களங்கம் போக்க, வாஜ்பாய் பயன்படுத்திய இஸ்லாமிய முகம் மட்டுமே, தன்னை சங்கிகள் மதிப்பது போல காண்பிப்பது வெறும் நாடகமே" என்பதை அவரும் புரிந்து கொண்டிருப்பார். 



 *இலக்குகளும் இமாலய சாதனைகளும்*

கேள்வி: எல்.ஐ.சி குறித்து டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன? அவை ஈடேறியனவா?
*பொன்னையா*
அக்டோபர் 15ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள். அவர் குடியரசு தலைவராக பணியாற்றியபோது எல்ஐசி மத்திய அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். எல்ஐசி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை, அந்நிறுவனம் நிறைவேற்றிய விதம் குறித்து அன்று அவர் பேசினார். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு எல்ஐசியின் பங்களிப்பு குறித்தும் இந்திய அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு குறிப்பாக குடிநீர் வசதி, வீட்டு வசதி, ரயில்வே, விமானத்துறை, கப்பல்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு எல்ஐசியின் பங்களிப்பு குறித்து அன்று அவர் விவரித்தார். வரும் காலங்களில் சமூக அக்கறையோடு எல்ஐசி பல்வேறு பணிகளை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் எல்ஐசி *ஏழு குறிக்கோள்களை* நோக்கி முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டில் அவர் குறிப்பிட்ட அந்த ஏழு குறிக்கோள்களை இன்று எல்.ஐ.சி எவ்வாறு நிறைவேற்றி இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சிக்கு எல்ஐசி நிறுவனத்தின் பங்களிப்பு நமக்கு தெளிவாக புரிய வரும்.

1. 19 கோடி பாலிசிதாரர் என்கின்ற எண்ணிக்கையில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் எல்.ஐ.சி 38 கோடி பாலிசிதாரர் களை பெற்றிருக்க வேண்டும் என்பது முதல் இலக்கு. அது கிராமப்புறங்களை மிகப்பெரிய அளவில் சென்றடைய உதவும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அன்று குறிப்பிட்டார்.
தற்போது எல் ஐ சி 40 கோடி பாலிசிதாரர்களை பெற்றிருக்கிறது. இந்தியாவின் *மூலை முடுக்குகளில் எல்லாம் எல்ஐசி ஊடுருவி இருக்கிறது.* மக்கள் தொகை கணக்கெடுப்பில் பார்த்தால் ஆசியாவில் மூன்றாவது பெரிய தேசமாக உருவெடுத்திருக்கிறது.

2. புதிய உயர்ந்த தொழில்நுட்பங்களை எல்ஐசி தன்னகத்தே கொண்டு வர வேண்டும். அதன்மூலம் *நவீன தொழில் நுட்ப பயன்பாடுமிக்க அலுவலகத்தை* கட்டமைக்க வேண்டும் என்ற இலக்கினை கூறினார்.
தற்போது எல்ஐசி மிக அதிக தொழில்நுட்பம் கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. நாட்டிலேயே இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்ச தொழில்நுட்பம் கொண்ட நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. எல்ஐசியின் வாடிக்கையாளர்கள் 34 லட்சம் பேர் எல்ஐசியின் மொபைல் ஆப் மற்றும் கஸ்டமர் போர்ட்டல் சிஸ்டத்தினை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.இதன் மூலம் மிக விரைவான மின்னணு சேவையை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வழிவகைகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.

3. நாட்டில் உள்ள மாணவர்களுக்கு *இன்ஷூரன்ஸ் கல்வி* குறித்து எல்ஐசி பயிற்றுவிக்க வேண்டும். அதோடு இன்சூரன்ஸ் நிர்வாக கல்வி நிறுவனம் அமைத்து அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 1980 லேயே புனே நகரில் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் இன்சுரன்ஸ் அகடமி என்பது மத்திய அரசு, எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இன்சூரன்ஸ் குறித்த கல்வியினை வெற்றிகரமாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதோடு இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் அது குறித்த கல்வியினை கற்பிப்பதற்காக பல கல்லூரி மற்றும் பள்ளி அளவில் எடுக்கப்படும் முயற்சிகள், இன்ஷூரன்ஸ் என்பதனை ஒரு பிரிவாக படிப்பதற்கான முயற்சிகளுக்கும் எல்ஐசி இன்று வரை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

4. கிராமப்புற பொருளாதாரத்தினை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களுக்கு எல்ஐசி தலைமை ஏற்று முன் நடத்திட வேண்டும் என்று அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இலக்காக தெரிவித்தார். இந்திய *சமூக வளர்ச்சிக்கு* 31.03. 2020 வரை எல்ஐசி அளித்துள்ள பங்களிப்பு என்பது 30 லட்சத்து 69 ஆயிரத்து 942 கோடிகள். 24.1 லட்சம் கோடி பணம் அடிப்படை கட்டுமான வசதிகள், மின்சாரம், சாலை போக்குவரத்து வசதிகளுக்காக மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷன் நிதியிலிருந்து இதுவரை 543 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. 2006 ஆம் வருடத்திலிருந்து இன்றுவரை 17644 பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கான வருடம் 20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

5. பஞ்சாயத்து அளவில் உள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் எல்ஐசி *இன்சூரன்ஸ் விழிப்புணர்வை* ஏற்படுத்த வேண்டும் என்பது மற்றொரு இலக்கு. இன்று எல்ஐசி என்கின்ற இந்த ஒரு நிறுவனம் மட்டுமே தன்னுடைய வணிகத்தில் சரிபாதியினை கிராமப்புறங்களில் இருந்து பெறுகிறது. 2019- 20ம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க 409 கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் வசதியினை பீமா கிராம் என்கின்ற பெயரில் மைக்ரோ இன்ஷூரன்ஸ் பாலிசி ஆக எல்.ஐ.சி கொடுத்துள்ளது

6. எல்ஐசி முனிசிபல் அளவிலான பகுதிகளில் கூட மின்சார வசதிகளுக்கும் நகரினை சுத்தமாக வைத்திருப்பதற்கான *திடக்கழிவு மேலாண்மை* திட்டங்களுக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவருடைய மற்றொரு வேண்டுகோள். நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதி வழங்கும் திட்டத்தினை எல்ஐசி கொண்டுள்ளது. சுவஸ்ச் வித்யாலயா அபியான் திட்டத்தின் கீழ் மட்டும் எல்ஐசி பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளதனை இங்கே குறிப்பிட இயலும். 2019 20 ஆம் நிதியாண்டில் மட்டும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு எல்ஐசியின் முதலீட்டில் இருந்து 54.8% செலவழிக்கப் பட்டுள்ளது.

7. எல்ஐசியின் வணிகம் என்பது இந்திய மக்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டவருக்கும் சென்றடைய வேண்டும். அந்த அளவிற்கு அதிக வணிகத்தினை எல்ஐசி பெறவேண்டும் என்பது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஏழாவது இலக்கு. எல்ஐசி தற்போது *14 நாடுகளில் கிளை அலுவலகங்களை* வைத்திருக்கிறது. இதன் மூலம் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 626 பாலிசிகள் 2019- 20 ஆம் ஆண்டில் மட்டும் பெறப்பட்டுள்ளது. இந்த வணிகம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது.

ஒரு குடியரசுத் தலைவர் எல்ஐசியின் மத்திய அலுவலகத்திற்கு வந்து *ஏழு இலக்குகளை* நிர்ணயிக்கின்றார். இன்றைக்கு அந்த ஏழு இலக்குகளையும் எல்ஐசி நிறைவேற்றியுள்ளது.

இந்தச் செய்தி உணர்த்துவது என்ன? இன்றைய ஆட்சியாளர்கள் எல்ஐசி நிறுவனத்திற்கு எந்தவிதமான இலக்குகளை நிர்ணயித்தாலும் அதனை எல்ஐசி நிறுவனத்தால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். அரசு வைத்திருக்கும் எல்ஐசியின் பங்குகளை விற்றுத்தான் அரசின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் எங்குமே எழவில்லை. இது ஆளும் வர்க்கத்திற்கு மிக நன்றாகவே தெரியும். ஆனாலும் எல்ஐசியின் பங்குகளை ஏன் விற்க துடிக்கிறது சிந்திப்போம், கேள்விகளை எழுப்புவோம்.
*செவ்வானம்*

No comments:

Post a Comment