மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் இரு பதிவுகள் மிகவும் முக்கியமானது.
வரலார்று ஆவணங்களை விற்பதென்று மோடி வகையறாக்கள் முடிவெடுத்துள்ளது காசுக்காக மட்டுமல்ல,
இந்திய வரலாற்றில் அவர்கள் துரோகிகள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை அழித்து தங்கள் களங்கத்தை மறைக்க முயல்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம்.
பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு நான் எழுதியிள்ள கடிதத்தின் விபரம் வருமாறு.
“தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது.
இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.
நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.
இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.
இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு
சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம்.
இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை.
கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு.
ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்.
பிரசார் பாரதி CEO - யின் பதிலும்
விடையின்றி இருக்கும் கேள்விகளும்
"பணமாக்கலுக்கு" எல்லையே இல்லையா? கூவி விற்பதற்கு வரலாறு என்ன கடைச் சரக்கா? என்ற கேள்வியை நான் எழுப்பி ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு இன்று கடிதம் அனுப்பி இருந்தேன்.
பிரசார் பாரதி அதன் வசம் உள்ள வரலாற்று ஆவணங்களை "மின்னணு ஏலம்" விடப் போகிறது. இவர்கள் ஏலம் விடப் போகிற சேமிப்பு ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், மைல் கல் வரலாற்று நிகழ்வுகள் ஆகியன அடங்கும். இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது இருக்காது என தெரிவித்து இருந்தேன்.
இதற்கு மூன்று ட்விட்டர் செய்திகளை பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி சசி சேகர் வெம்பதி பதிலாக என்னுடைய ட்விட்டர் கணக்கையும் இணைத்து தந்துள்ளார். அவருக்கு ட்விட்டர் வாயிலாகவே மூன்று பதில்களை தந்துள்ளேன். அதன் இடம் போதாமையால் விளக்கமாக இங்கே...
பிரசார் பாரதி சி.இ.ஓ வின் முதல் வாதம், எம். பி க்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அவர் சொல்வது போல எதுவும் நாங்கள் அறிவித்த கொள்கையில் இல்லை என்பது.
எனது பதில் இது. அவர்களது கொள்கை ஆவணத்தின் தலைப்பே "வளங்களை ஒன்று திரட்டல் மற்றும் பணமாக்கல் கொள்கை" (Policy on Syndication and Monetisation) என்பதே. அதன் "பின் புலம்" ( Background) என்ற பத்தியில் பிரசார் பாரதி இந்திய பண்பாடு, வரலாறு, விழுமியங்கள் குறித்து ஆற்றி வரும் பங்களிப்பை பெருமிதத்துடன் பேசி அதன் படைப்புகளின் உள்ளடக்கம் எவ்வாறு தனியார் தொலைக்காட்சிகளின், மின்னணு ஒளி பரப்பு மேடைகளின் வணிக ஆர்வத்தை தூண்டியுள்ளது என்பதையெல்லாம் பேசியிருக்கிறது. இது குறித்த இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் செய்தியில் சசி சேகர் வெம்பதி கூற்றாகவே "இது சுதந்திரத்திற்கு முந்தைய நிகழ்வுகள், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்களும் உள்ளடங்கியது" என்று இடம் பெற்றுள்ளது. ஒன்று உங்கள் செய்தியில் தெளிவு தேவை அல்லது இந்துஸ்தான் டைம்ஸ் செய்திக்கு மறுப்பு தெரிவியுங்கள்.
இதற்கு பதில் அளித்த சி. இ. ஓ, "அது தூர் தர்சனும், அகில இந்திய ரேடியோவும் மின்னணு பதிவாக மாற்றி எப்படி யூ ட்யூப் ஒளிபரப்பாக ஆக்கப்பட்டுள்ளது" என்பதைப் பற்றியே என்று கூறியுள்ளார்.
எனது இரண்டாவது செய்தியில் நான் தந்த பதில் அது.
உங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் செய்தியை மறுக்கவில்லை. அதன் அடுத்த பத்தியிலேயே முதல் பத்தியில் வரலாற்று ஆவணங்கள் பற்றி பேசியதன் தொடர்ச்சியாக சி. இ. ஓ வார்த்தைகளிலேயே வணிக ஆர்வத்தை ஈடேற்ற "ஒரு கட்டமைப்பு இல்லாததால் கொள்கை வடிவம் தேவைப்படுகிறது. அந்த கொள்கை மூலம் எந்த படைப்புகள் வளங்களாக ஒருங்கிணைக்கப்படலாம்; பணமாக்கப்படலாம்" என்று கூறியுள்ளார். மின்னணு பதிவாக மாற்றுதலை கடந்த கூற்று இது. கொள்கையின் "பின்புலம்" பகுதி, இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் பேட்டியின் இரு பத்திகள் எல்லாவற்றையும் இணைத்தால் வேறு எந்த முடிவுக்கு போக முடியும்?
மூன்றாவது செய்தியில், கொள்கை ஆவணத்தின் நான்காவது பக்கத்தை பார்க்குமாறு கூறியுள்ளார். எந்தெந்த உள்ளடக்கம் கொண்ட ஆவணங்களை நாங்கள் பணமாக்க போகிறோம் என்பதை பேசுகிற பகுதி அது.
என்னுடைய பதில் இது.
அறிவிக்கையின் அந்த பகுதி பொதுவான வடிவங்களைப் பற்றி பேசுகிறதே தவிர உள்ளடக்கம் பற்றிய தகவல்களை தரவில்லை. "ஆவணப் படங்கள்" என்றால் அதற்குள் என்னென்ன இடம் பெறும் என்பது போன்ற விவரங்கள் இல்லையா?
நமது ஒரே கேள்வி இதுதான். நேரடியாக தெரிவியுங்கள். வரலாற்று ஆவணங்கள் எதையும் வணிக சரக்காக மாற்ற மாட்டோம் என்று... அரசியல் நிர்ணய சபை ஆவணங்களை பணமாக்க மாட்டோம் என்று... விடுதலைக்கு முந்தைய - மைல் கல் நிகழ்வுகள் எல்லாம் கார்ப்பரேட் லாபங்களுக்கு அல்ல என்று...
No comments:
Post a Comment