Friday, October 29, 2021

நெகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும்



 எங்கள் வேலூர்க் கோட்டத் தோழர்கள் கே.அத்தாவூர் ரஹ்மான், உ.கங்காதரன் ஆகியோர் நேற்று மறைந்த மூத்த தலைவர் தோழர் நன்மாறன் அவர்களுடனான தங்கள் அனுபவம் குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை முன்பொரு நாள் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த பதிவுக்கு உரமூட்டுவதாக தமுஎகச அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் முத்து நிலவன் அவர்களின் பின்னூட்டம் அமைந்திருந்தது.

 அந்த பதிவையும் தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டத்தையும் மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 தோழர் நன்மாறன் அவர்களுக்கு மனமார்ந்த   அஞ்சலி.                                                                  





 எங்கள் வேலூர் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெறும். அதில் தமிழகத்தின் சிறந்த முற்போக்கு பேச்சாளர்களின் உரைவீச்சு நடைபெறும். இரண்டாண்டுகள் தோழர் என்.நன்மாறன் அவர்கள் எங்கள் கலை இரவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.


வாணியம்பாடியில் மாநாடு. இரவு கலை இரவு. காலை பொது மாநாட்டிலும் தோழர் நன்மாறன் பங்கேற்றார். அவர் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் தோழர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறேன் என்று பிரதிநிதிகள் மாநாட்டிலும் வெகு நேரம் கலந்து கொண்டார். இரவு அவரை கலை இரவு நடக்கும் இடத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அதாவூர் ரஹ்மான் என்ற தோழருக்கு அளித்திருந்தோம். 

தோழர் அதாவூர் ரஹ்மான் வார்த்தைகள் கீழே.

" கலை இரவு நடக்கும் இடம் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கும். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன் என்றேன். எதுக்கு தோழர் ஆட்டோவிற்கு தேவையில்லாமல் செலவு செஞ்சுகிட்டு? வாங்க காலாற நடந்து போகலாம் என்று சொன்னார். மொத்த தூரமும் நடந்தே போனோம். போகும் வழியில் வாணியம்பாடி பற்றிய மொத்த விஷயங்களையும்  கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒரு டீக்கடையில் நின்றபடியே டீ சாப்பிட்டு விட்டு மேடைக்கு வந்தோம். அவருடைய எளிமையையும் பழகிய விதத்தையும்  பார்த்த யாரும் அவரை எம்.எல்.ஏ என்றே நமப மாட்டார்கள்"

தோழர் நன்மாறன் அடுத்து கலந்து கொண்டது விழுப்புரம் மாநாட்டு கலை இரவில். 

சென்னையிலிருந்து நேரடியாக பேருந்தில் வந்து இறங்கியவரை கலை இரவு மேடைக்கு அழைத்து வரும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவர்கள் கங்காதரன், கணேசன் என்ற தோழர்கள்.

இப்போது தோழர் யு.கங்காதரன் சொன்னதை படியுங்கள்.

"கலை இரவு மேடைக்கு போறதுக்கு முன்னாடி மண்டபத்துக்கு போய் அவரு சாப்பிடட்டும் என்று அங்கே அழைத்துப் போனால் அங்கே உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனால் அதற்காக அவர் கோபப்படலை. அந்த தெருக் கோடியில ஒரு தள்ளு வண்டியில இட்லி விக்கறாங்க. அதில ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டுப் போயிடலாம் என்றார். சரி ரூமுக்கு வந்து முகம் கழுவி ட்ரெஸ் மாத்திக்குங்க என்று சொன்னேன். மண்டபத்தின் வாசலிலேயே ஒரு பைப் இருந்தது. அதைத் திறந்தார். குனிந்த படியே அதில் முகம் கழுவினார். சட்டையை கையாலேயே இழுத்து விட்டுக் கொண்டு சீப்பு இருக்கா என்று கேட்டார். கொடுத்தவுடன் தலை வாரி போகலாம் தோழர் என்று கிளம்பி விட்டார். எம்.எல்.ஏ ங்கற பந்தா கொஞ்சம் கூட இல்லாத மனிதர்"

இந்த இரண்டு நிகழ்வுகளின் போதும் அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 

நேரடியாக அனுபவித்ததால் அந்த தோழர்கள் இன்றும் அதனை மெய் சிலிர்க்கும் அனுபவமாக உண்ர்கின்றனர்.

தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டம்        

   தோழர் நன்மாறன் எப்போதுமே (எனக்குத் தெரிந்து 25ஆண்டுக்கும் மேலாக) இப்படித்தான் எளிமையின் வடிவம், ஆனால் மேடையேறிவிட்டால் பேச்சில் கிண்டலும் கேலியும் அரசியல் கூர்மையுடன் கேட்போர் அனைவரும் ரசிக்கும்படியாகப் பொங்கிவரும். இது நேற்று முன்தினம் ஏப்ரல்-1 அறந்தாங்கி கலைஇரவு வரை தொடர்வதுதான் அவரது பலம்! புதுக்கோட்டையில் வந்து இறங்கியவரை, ஒரு பெரிய ஓட்டலின் பேரைச் சொல்லி, “காஃபி சாப்பிட்டுப்போவோம் என்என்“ என்றேன். அவரோ “சக்கரையில்லாம ஒரு டீ போதும் தோழர்“ என்றார். சரியென்று ஒரு சாதாரண தேநீர்க்கடை அருகில் நிறுத்தச் சொன்னார். 

அவரைக் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, தேநீர் வாங்க ஓடினேன். அவர் பின்னாலேயே வந்து, டீக்கடை வாசலில் இருந்த ட்ரம்மிலிருந்து ஒரு குவளை தண்ணீர் பிடித்து முகம் கழுவிக்கொண்டு, தன்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே தேநீர் போடுபவரைப் பார்த்து, “சக்கரைஇல்லாம“ என்றார். நான் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களிடமாவது இவர்தான் இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தவர் என்று சத்தமாகச் சொல்ல ஆசைப்பட்டேன்.. ஆனால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மௌனமாக அவருடன் தேநீர் அருந்தினேன். பிறகு அறந்தாங்கிபோய்..அதே மாதிரி நாலு இட்லி.. மேடையேறிவிடடார். அவர் பேச்சு மட்டுமல்லாமல் வாழ்வும் அன்றும் இன்றும் அப்படியேதான். என்என்.களால்தான் நல்ல அரசியல் உயிர்வாழ்கிறது வேறென்னசொல்ல?       

பிகு:

 முகப்பில் உள்ள ஓவியத்தை வரைந்தது ஓவியர் தோழர் ரவி பாலேட்.

 புகைப்படங்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டு கலை இரவு நிகழ்வின் போது எடுக்கப்பட்டவை.                                        


No comments:

Post a Comment