Saturday, January 8, 2022

ப்ருடென்ஷியல் கப் ரிலையன்ஸ் கோப்பையானதேன்?

 


83 திரைப்படம் பற்றி எழுதியிருந்தேன். அப்போதிலிருந்தே சிந்தனை 81 இ தாண்டி சென்று கொண்டிருந்தது.

 1975, 1979, 1983 ஆகிய வருடங்களில் உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளையுமே ஸ்பான்ஸர் செய்தது ப்ருடென்ஷியல் இன்சூரன்ஸ் நிறுவனம். அதனால் உலகக் கோப்பையின் பெயரே ப்ருடென்ஷியல் கோப்பைதான்.

 1987 ல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக இணைந்து நடத்தியது. இறுதிப் போட்டி கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது என்பதும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற அந்த கோப்பைக்கு “ரிலையன்ஸ் கோப்பை” என்று பெயர் என்பதும் என்னைப் போல முதியவர்களுக்கு நினைவு இருக்கும்.

 ஆம், 1987 உலகக் கோப்பை போட்டிகளின் ஸ்பான்ஸர் திருபாய் அம்பானியின் “ரிலையன்ஸ்” நிறுவனம்தான்.

 ஏன் புருடென்ஷியல் கோப்பை ரிலையன்ஸ் கோப்பையானது?

 முதல் மூன்று உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏன் 1987 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தானுக்கு மடை மாற்றியது?

 பதில் மிகவும் சுலபமானது.

 முதல் மூன்று போட்டிகளின் ஸ்பான்ஸரான ப்ருடென்ஷியல் இன்சூரன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குப் போனது. திவாலை எதிர் நோக்கியிருந்த ப்ருடென்ஷியல் உலகக் கோப்பையை நடத்த தன்னிடம் நிதி இல்லை என்று கை விரித்தது. வேறு ஸ்பான்ஸரும் கிடைக்கவில்லை. அதனால்  இங்கிலாந்து ஒதுங்கிக் கொண்டது.

 இந்தியாவில் கிரிக்கெட், விளையாட்டு என்ற நிலையிலிருந்து வணிகம் என்று மாறத் தொடங்கியது 1987 லிருந்துதான்

 இந்த பதிவின் கவலை கிரிக்கெட் அல்ல.

 தன் சொந்த நாட்டிலேயே வணிகம் செய்ய  முடியாமல் திவாலை நோக்கிச் சென்ற ப்ருடென்ஷியல் இந்தியாவில் ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தோடு இணைந்து கடை திறந்துள்ளது. ஒரு வெளிநாட்டு இன்சூரன்ஸ் கம்பெனி தனியாக கம்பெனி நடத்த முடியாது. இந்திய கம்பெனியோடு இணைந்துதான் கடை திறக்க முடியும்.  அன்னியக் கம்பெனியின் மூலதனம் 27 % ஐ தாண்ட முடியாது.

 மோடி அரசு அதனை முதலில் 49 % ஆக உயர்த்தியது. பின் கடந்தாண்டு 74 % ஆக மாற்றியது.

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கையின் படி. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 டாடாவுடன் கூட்டணி வைத்திருந்த அமெரிக்க நிறுவனம் ஏ.ஐ.ஜி ஓடி விட்டது. சன்மாருடன் கூட்டணி வைத்திருந்த ஆஸ்திரேலிய நிறுவனம் ஏ.எம்.பி யும் ஓடி விட்டது. மற்றவை எப்போது ஓடும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு முன்பாக ப்ருடென்ஷியல் கோப்பை ஏன் ரிலையன்ஸ் கோப்பையாக மாறியது என்பதை நினைத்துப் பாருங்கள்.

 அரபுக் குதிரையாக வலிமையோடு எல்.ஐ.சி இருக்கையில் மண் குதிரைகள் எதற்கு?

No comments:

Post a Comment