Tuesday, January 4, 2022

83 பார்க்கலாம்.

 


ஞாயிறன்று காலைக் காட்சி பார்த்த படம் 83. இந்திய கிரிக்கெட் வாரிய அணி ப்ருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டியை வென்றதுதான் படம்.

கிரிக்கெட் வாரியம், வாரிய அலுவலக ஊழியர்கள், அணி மேலாளர், ரசிகர்கள், ஊடகக்காரர்கள், ஏன் அணியில் இடம் பெற்ற வீரர்கள் என யாவருக்குமே இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறும்  என்ற நம்பிக்கை கிடையாது, ஒரே ஒரு மனிதனைத் தவிர, அந்த மனிதன் கபில்தேவ்,

உலகக் கோப்பை வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை இந்தியா விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும்  என்ன நிகழ்ந்தது என்பதை ஒவ்வொரு விக்கெட் விழுவதிலிருந்து காண்பித்துள்ளார்கள். அதை சுவாரஸ்யமாக காட்டியுள்ளார்கள் என்பதுதான் படத்தின் சிறப்பு.

கபில் தேவ், கவாஸ்கர் என்று அத்தனை பேருக்கும் பொருத்தமானவர்களை நடிக்க வைத்துள்ளார்கள். ஸ்ரீகாந்திற்கு ஜீவா பொருத்தம். அவருக்கும் தன் திறமையைக் காட்ட ஒரு பார்ட்டி சீன் அமைந்து விட்டது.  பெரும்பாலான விளையாட்டு வீரர்களை விளையாட்டுப் பிள்ளைகளாகவே காண்பித்துள்ளனர். படம் வெளிவந்து இத்தனை நாளானாலும் யாரும் சர்ச்சையைக் கிளப்பாததால் அது உண்மைதான் போலிருக்கிறது.

என்னத்தான் விளையாட்டு படமாக இருந்தாலும்  அதிலேயும் ஒரு வில்லனை திணிப்பது வழக்கம். நல்ல வேளையாக இந்த படத்தில் அப்படிப்பட்ட வில்லன் யாரும் இல்லை.

இந்தியா 1983 ல் உலகக் கோப்பையை வென்றது உலகறிந்த ஒன்று என்பதால் கடைசிக் காட்சிகளில் ஏனோ பதற்றமே இல்லை.

நான் ரசித்த சில காட்சிகள்.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து விட்டது. ஆனால் மரியாதைதான் கிடைக்கவில்லை என்று மேலாளர் வேதனையோடு குமுறுவது.

அணி வகுப்பின் போது கபில்தேவ், இம்ரான் கானை பார்த்து நலம் விசாரிப்பது,

ஜிம்பாப்வேவுக்கு எதிராக கபில்தேவ் 175 ரன் அடித்த போட்டியின் காணொளி பதிவு இல்லை என்பதைப் பயன்படுத்தி அவர் அடிக்கும் பந்துகள், ஜன்னல் கண்ணாடிகளை, பார்வையாளர்கள் கார்களை, உடைப்பது என்றெல்லாம் ரகளை செய்து விட்டார்கள் (இது என் மகன் சொன்னது).அந்த சமயத்தில் யாரும் நகரக் கூடாது என்று அணி மேலாளர் உத்தரவிட  அப்போது ஜீவா பரிதவிப்பது சுவாரஸ்யம்.

கபில்தேவ் பாத்திரம் 175 அடிப்பதை  இன்றைய கபில்தேவ் ஆரவாரத்துடன் ரசிப்பது.

இறுதிப் போட்டியை சின்னப்பையன் சச்சின் தொலைக்காட்சியில் பார்ப்பது.

லாலா அமர்நாத்தாக மொஹிந்தர் அமர்நாத்தையே நடிக்க வைத்து அவரே அவரை எருமை என்று கோபமாக திட்டுவது.

அணி வீரர்களை விளையாட்டுப் பிள்ளைகளாக, இரவு நேரத்தில் ஊர் சுற்றுபவர்களாக காண்பித்தும் அதைப் பயன்படுத்தி கவர்ச்சி நடனம் எதையும் திணிக்காததற்கே இயக்குனரை பாராட்ட வேண்டும். (நான் பார்த்த ஒரு சம்பூர்ண ராமாயணம், தெலுங்கு வெர்ஷனில் சூர்ப்பணகையைக் கொண்டும், சுக்ரீவன் சுகவாசியாக இருப்பதைக் கொண்டும் இரண்டு கவர்ச்சி நடனங்களை திணித்திருந்தார்கள்)

கபில்தேவ் எனும் நிஜமான வீரனுக்கான சரியான அங்கீகாரமாக அமைந்துள்ள 83 படத்தை தாராளமாக அரங்கில் பார்க்கலாம். இறுதிப் போட்டியின் முக்கியத் தருணம் விவியன் ரிச்சர்ட்ஸ் அடிக்க கபில் தேவ் ஓடி வந்து பிடிப்பது. அந்த தருணம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒரிஜினலையும் பார்த்து விடுங்கள்.



பிகு 1 : நாங்கள் அரங்கிற்குள் நுழைந்த போது இருந்த பார்வையாளர்கள் எவ்வளவு பேர் என்பதை படத்தில் பாருங்கள். அதற்குப் பிறகு வந்தவர்கள் சரியாக 19 பேர். மின்சாரக் கட்டணத்துக்கே போதாதே என்ற கேள்வி எழுந்தது.


பிகு 2 :  மதுரையில் கல்லூரியில் இரண்டாவது வருடம், விடுதியில் முதல் வருடம். இரண்டாவது மாடியில் வராண்டாவில் ஒரு சீனியர் வைத்திருந்த பாக்கெட் ட்ரான்சிஸ்டரில் நேர்முக வர்ணனையை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த கடைசி விக்கேட் விழுந்ததும் அந்த சீனியர் பாக்கெட் ட்ரான்சிஸ்டரை மேலே தூக்கிப் போட்டு கேட்ச் பிடிக்க முயன்று தோற்றுப் போய் தரைத் தளத்தில் விழுந்து நொறுங்கியது ஒரு சம்பவம்.

பிகு 3 : அரை இறுதி ஆட்டம் நடப்பதற்கு முன்பாக நவாப்பூர் என்ற இடத்தில் மதக் கலவரம் நடக்கும். அரை இறுதி தொடங்கும் முன்பாக எல்லா ஊர்களிலும் தொலைக்காட்சி தெரிவத்ற்கு ஏற்பாடு செய்யுங்கள். விளையாட்டு மூலம் பகைமை மறைந்து ஒற்றுமை பிறக்கும் என்று இந்திரா காந்தி சொல்வது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை முன் வைத்து சங்கிகள் பகைமையை தூண்டி விட்டது இயக்குனருக்குத் தெரியவில்லை போலும்.

No comments:

Post a Comment