தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் நேற்று முதல் ஒரே தலைப்பை முழங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த தலைப்புச் செய்தி
"ஏர் இந்தியா மீண்டும் டாடாவிடமே சென்றது"
அப்படியா? நிஜமா? அரசுடமையாக்கப்படுவதற்கு முன்பாக ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் மட்டும்தான் இருந்ததா?
அப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம். நானும்தான்.
ஆனால் ஒரு பிரசுரம் எழுதுவதற்காக தகவல்களை தேடும் போதுதான் உண்மை புரிந்தது. (வேறு வேலைகள் வந்த காரணத்தால் அந்த பிரசுரம் எழுதும் பணியை அம்போவென்று நிறுத்தி விட்டது வேறு விஷயம்) ஆனாலும் பாதியில் நிறுத்திய அந்த பணியில் எழுதிய விஷயங்கள் இன்றைய பதிவுக்கு போதுமானது.
டாடா
நிறுவனம்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் விமான நிறுவனமா? அதைத்தான் அப்படியே ஏர்
இந்தியாவாக பொதுத்துறை நிறுவனமாக மாற்றி விட்டார்களா? டாடாவிடம் பெற்றதுதான் அப்படியே
டாடாவிற்கு சென்றுள்ளதா? என்ற வினாக்களுக்கு விடை சொல்வதும் முக்கியம்.
ஆரம்பமானது
அஞ்சல் சுமக்கவே
இந்தியாவில்
வணிக ரீதியான விமான சேவை என்பது 1912 ஆம் ஆண்டே துவங்கி விட்டது. அந்த வருடம்தான் இந்தியன்
ஸ்டேட் ஏர்வேஸ் என்ற நிறுவனம் இம்பீரியல் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து கராச்சியிலிருந்து
டெல்லிக்கு அஞ்சல் மூட்டைகளை அனுப்பத் தொடங்கியது. அதன் பின்பு 1915 ல் டாடா சன்ஸ்
லிமிட்டெட் நிறுவனத்தின் ஒரு அங்கமாக கராச்சிக்கும்
சென்னைக்கும் இடையே விமான அஞ்சல் சேவையைத் துவக்கியது.
1932
ல் டாடா நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் விமான நிறுவனத்தை தனியாக துவக்கி கராச்சி, சென்னை, மும்பை, அகமதாபாத் ஆகிய பல நகரங்களுக்கும்
சேவையை விரிவு படுத்தியது. இந்த நிறுவனம் கூட
அஞ்சல் சேவை மட்டுமே முதலில் செய்ததே தவிர பயணிகள் சேவையில் ஈடுபடவில்லை. அது பின்னரே
வந்தது.
வர்க்க
ஒற்றுமையும் வணிக நலமும்.
இந்திய
விடுதலைக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய நேரமது. வீரம் செறிந்த போராட்டத்தை விவசாயிகள் தெலுங்கானாவை
நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது போராட்டத்தை கொடூரமாக ஒடுக்க முயன்று கொண்டிருந்த
ஹைதராபாத் நிஜாமிற்கு இந்தியாவுடன் இணையும் எண்ணமும் கிடையாது. இந்த சூழலில்தான் ஐதராபாத் நிஜாமும் டாடாவும் இணைந்து டெக்கான் ஏர்லைன்ஸ்
எனும் நிறுவனத்தை துவக்குகின்றனர். விவசாயிகளைக் கொல்வதோ அல்லது இந்தியாவுடன் இணைய மறுப்பதோ நிஜாமுடன் கரம் கோர்க்க டாடாவிற்கு
மனத் தடையாகக் கூட இல்லை. முதலாளித்துவ வர்க்க ஒற்றுமையும் லாபமும் தேச ஒற்றுமையை விட
முக்கியமல்லவா!
பெயர்
மாறியது.
1946
ம் வருடம் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பெயரை “ஏர் இந்தியா” என்று மாற்றிக் கொண்டது. இந்த பெயர் மாற்றம்தான்
இன்று ஒரு தவறான சித்திரத்தை உருவாக்கியுள்ளது. அதை அடுத்த பத்திகளில் பார்ப்போம்.
இந்திய
விடுதலையின் போது
இந்தியா
சுதந்திரம் பெற்ற போது ஒன்பது விமான நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதிலே
ஓரியண்ட் ஏர்வேஸ் என்ற நிறுவனம் பாகிஸ்தானாக பிரிந்து போன பகுதிகளை அடிப்படையாக செயல்பட்டதால்
அந்த நிறுவனம் பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து செயல்பட மீதமுருந்த எட்டு நிறுவனங்கள்
இந்தியாவிலிருந்து செயல்பட்டன. அவை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டு
பிரிவுகளிலும் இயங்கின. சில நிறுவனங்களின் செயல்பாடு இந்திய எல்லைக்கு அப்பாலும் விரிந்திருந்தது.
தேச
உடமையானது விமானத் துறை.
இந்திய
விடுதலைக்குப் பிறகு முதலாவது ஐந்தாண்டு திட்டம் அறிமுகமான பின்னணியில் “ஏர் கார்ப்பரேஷன்
சட்டம்” என்ற ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனைத்து விமான நிறுவனங்களும்
தேசியமயமாக்கப்பட்டன. டெக்கான் ஏர்வேஸ், ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், கலிங்கா ஏர்வேஸ்,
இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், இமாலயன் ஏவியேஷன், ஏர் சர்வீஸஸ் ஆஃப் இந்தியா, ஏர் இந்தியா
ஆகிய எட்டு நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டது. இதிலே கலிங்கா ஏர்வேஸ் நிறுவனம் மொரார்ஜி
தேசாய் காலத்தில் ஒன்றிய அமைச்சராகவும் பின்னாளில் ஒடிஷாவின் முதலமைச்சராகவும் இருந்த
பிஜு பட்னாயக் (தற்போதைய ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாயக்கின் தந்தை)கிற்கு சொந்தமானது.
தேச
உடமையாக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இரண்டு நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. உள்நாட்டு
விமானப் போக்குவரத்திற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பன்னாட்டுப் போக்குவரத்துக்காக
ஏர் இந்தியா நிறுவனமும் துவக்கப்பட்டன. எட்டு நிறுவனங்கள் இணைந்துதான் இந்தியன் ஏர்லைன்ஸ்
நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனமும் துவக்கப்பட்டதே
தவிர, டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அப்படியே பொதுத்துறை நிறுவனமாக மாறவில்லை.
“வெல்கம்
பேக் ஏர் இந்தியா” என்று சொன்னால் அதிலே மற்ற ஏழு நிறுவனங்களும் அடக்கம். அந்த நிறுவனங்களின்
உரிமையாளர்கள் யாரையாவது டாடா பங்குதாரராக சேர்த்துக் கொள்வாரா? அதற்கு வாய்ப்பில்லை
என்பதுதானே யதார்த்தம்!
இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது.
"மாப்பிள்ளை இவர்தான். ஆனால் சட்டை என்னுடையது" என்பது போல அரசு நிறுவனமாக இருந்தாலும் ஏர் இந்தியா நிஜத்தில் யார் கைகளில் இருந்தது?
அதைப் பற்றியும் எழுதியிருந்தேன்.
அரசு
நிறுவனமானது. ஆனால் ஆதிக்கம்?
1953
ல் துவக்கப்பட்ட பொதுத்துறை ஏர் இந்தியா நிறுவனத்தின்
தலைவர் யார் தெரியுமா? டாடா ஏர்லைன்ஸாக துவங்கி ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் அடைந்த
நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி.டாடாதான். நிறுவனம் தேசியமயமான பின்பும் தலைவராக
நியமிக்கப்பட்டார். 1978 ல் ஜனதா ஆட்சி வருகிற வரையில் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகள் அவர் அந்த
பதவியில் நீடித்தார். ஜனதா ஆட்சியில் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா சேர்மன் பதவியிலிருந்து
நீக்கப்பட்டிருந்தாலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு டாடா நிறுவன வாரிசு ரத்தன் டாடா ராஜீவ்
காந்தி காலத்தில் 1986 லிருந்து 1989 வரை சேர்மனாக செயல்பட்டார். நிறுவனம் என்னமோ அரசுடையதுதான்.
ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தியது டாடாக்கள்.
மீண்டும் டாடாவிடம் சென்றது ஏர் இந்தியா என்று தலைப்புச் செய்திகள் போடுபவர்களுக்கு இந்த உண்மை வரலாறு தெரியுமா என்று எனக்கு தெரியாது.
நாமாவது தெரிந்து கொள்வோம்.
Excellent clarification
ReplyDelete