*நாளொரு கேள்வி : 01.01.2022*
தொடர் எண் : *580*
*புத்தாண்டு வாழ்த்துக்கள்*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
###########################
*' இருண்ட காலங்களிலும் பாடம் பிறக்கும்... பாடலும் பிறக்கும் '*
கேள்வி: 2022 என்ன செய்தியை சுமந்து வருகிறது?
*க.சுவாமிநாதன்*
விடை பெற்று சென்றுள்ள 2020, 2021 இரண்டு ஆண்டுகளும் துயரம் மிக்கதாக வர்ணிக்கப்படுகின்றன. ஆனால் ஆண்டுகளை நல்லதாகவோ கெட்டதாகவோ அடையாளப்படுத்தப்பட இயலாது. ஏனெனில் துயரங்கள் நிறைந்த ஆண்டுகள் தரும் பாடங்கள் மிக முக்கியமானவை. காலமகள் என்றுமே கருணை மிக்கவள்தான். உண்மையில் மனித குலத்தை எச்சரிக்கும் நண்பர்களாகவே துயரம் மிக்க ஆண்டுகள் அமைகின்றன.
கோவிட் தொற்று பரவல் 29 கோடி மக்களை பாதித்துள்ளது. 55 லட்சம் மரணங்களை நெருங்குகிறது. இதை விட பெரும் துயர் வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் இத்துயரம் எழுப்பி இருக்கிற கேள்விகள் முக்கியமானவை. *"உலக மயத்தை தவிர வேறு வழியில்லை"* என்ற முழக்கத்தோடு துவங்கி 30 ஆண்டு காலமாக அமலாகி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரப் பாதையை தொற்று பரவலும், மரணங்களும் கேள்விக் குறியாக்கி உள்ளன. *"அரசு பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து விலகுவது"* (Withdrawal of state from economic activities) என்ற நவீன தாராளமய கோட்பாடு எத்தனை உயிர்களை பலி கொண்டுள்ளது என்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இக் கோட்பாடுதான் *"பொது சுகாதாரத்தில் இருந்தும் அரசு விலகுவது"* என்ற நிலைமைக்கு இட்டுச் சென்றது. தனியார் மருத்துவ மனைகள் குறிப்பாக உயிர் காக்கும் தேவ தூதர்கள் போல கருதப்பட்ட கார்ப்பரேட் மருத்துவ மனைகள் கோவிட் நோயாளிகளுக்கு கதவுகளை மூடியதை உலகம் கண்டது. கதவுகளை திறந்த பிறகும் கருணையே இல்லாமல் கட்டணக் கொள்ளையில் இறங்கின. அரசு மருத்துவ மனை என்றால் முகம் சுளிக்கிற உயர் நடுத்தர மக்களும் கூட அரசு மருத்துவ மனை வாசலில்தான் ஆம்புலன்சில் போய் காத்துக் கிடந்தனர். துயரம் எனில் லாபம், பேரிடர் எனில் பெரும் லாபம் என்பதுதானே கார்ப்பரேட்டுகளின் அணுகுமுறை என்பதை கோவிட் நிரூபித்தது.
நோய்த் தடுப்பிலும் இதே அவலம். வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வார்த்தைகளில் சொல்வதானால்
_" நீங்கள் (தனியார் துறை) கோரிக்கை வைத்தீர்கள். என்னிடம் எவ்வளவு சண்டை போட்டீர்கள் என்றும் நினைவில் இருக்கிறது. தடுப்பூசிகளை எங்களுக்கும் தாருங்கள் என்று... ஆனால் இன்றோ உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 % ஐ வாங்க கூட நீங்கள் தயாராக இல்லை... எனக்கு இன்னொன்றும் நினைவில் உள்ளது, ஒரு தொழிலகம் என்னிடம் சொன்னது. நாங்கள் மட்டுமே ஒரு கோடி தடுப்பூசிகள் போடுவோம் என்று... இன்னொரு தொழிலகம் சொன்னது நாங்கள் குக் கிராமங்களுக்கு எல்லாம் போவோம் என்று... ஆனால் பீகாருக்கு, ஜார்கண்டிற்கு, சட்டிஸ்கருக்கு, வட கிழக்கு மாநிலங்களுக்கு எல்லாம் யாரும் போகவில்லை"_ (இந்து ஆங்கில நாளிதழ் 25.07.2021)
துயரத்தில் கூட தேசத்தின் துணைக்கு வராத இந்த லாப வெறியர்களைத்தான் இந்தியப் பிரதமர் *"செல்வத்தை உருவாக்குபவர்கள்"*
(Wealth Creators) என்று கௌரவமாக அழைத்தார். அமைச்சரின் கோபம் கூட செல்லக் கோபம்தான். அதற்குப் பிறகும் 25 % தனியார் ஒதுக்கீட்டை அவர் ரத்து செய்யவில்லை. இதோ மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த பதில் இது...
*டிசம்பர் 7, 2021 வரை 112.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டன. அவற்றில் அரசு மருத்துவ மனைகள் போட்டவை 108.55 கோடி. தனியார்கள் போட்டது 4.12 கோடி. தனியார்கள் போட்டது வெறும் 3.66 சதவீதம். அரசு மருத்துவமனைகள் போட்டது 96.34 சதவீதம்.*
ஜூலை மாதம் வர்த்தக அமைச்சர் அவ்வளவு கோபப்பட்டும் டிசம்பரில் இதுதான் நிலை என்றால் அரசு என்ன செய்கிறது? போடவும் வைக்க முடியவில்லை, அவர்களுக்கு கொடுத்த ஒதுக்கீட்டிலும் கை வைக்கவில்லை.
இந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட்டுள்ளது என்கிறது அரசு. மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி ஈட்டுத் தொகையை கூட ஒன்றிய அரசால் தர முடியாத அளவிற்கு நெருக்கடி. *"கடவுளின் செயல்"* என்று விளக்கம் தந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். சுமையை இந்திய குடிமக்கள் எல்லோரும் ஒன்றாக பகிர்ந்து கொண்டு இருக்கிறார்களா?
இதோ டைம்ஸ் ஆப் இந்தியா 31.12.2021 இல் வெளியான ஒரு ஆய்வு
*4234 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 2150 (50%) நிறுவனங்களில் ஜுலை - செப் (2020) காலாண்டில் ஊதியச் செலவினம் குறைந்திருந்தது. ஊதிய அதிகரிப்பும் இல்லாமல், வெட்டும் இல்லாமல் இருந்தவை 463. ஊதிய அதிகரிப்பு பண வீக்க விகிதத்திற்கும் கீழே இருந்த நிறுவனங்கள் 339. எல்லாம் சேர்த்தால் 2952 நிறுவனங்களில், அதாவது 70%, ஊதியம் குறைந்துள்ளது. இதில் 1188 நிறுவனங்களில் லாபம் அதிகரித்து ஊதியம் குறைந்திருக்கிறது; 1113 நிறுவனங்களின் லாபம் இரண்டு மடங்குகள் அதிகரித்துள்ளது என்பதே முக்கியமானது.*
இந்தியாவின் ஏழைகள் ஒரு நாளைக்கு ரூ 375 கிடைக்காமல் அல்லாடும் போது இந்திய பில்லியனர்கள் கோவிட் காலத்திலும் 1000 கோடி ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதித்துள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க இந்த சூறையாடல் நடந்துள்ளது. அமெரிக்க தொழில் அதிபர் ஜெப் பீசோசின் 11 நிமிட விண்வெளிச் சுற்றுலா பரபரப்பாக பேசப்பட்ட நேரத்திலும், உலகம் முழுக்க ஒரு நிமிடத்தில் 11 உயிர்கள் பட்டினிச் சாவுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது.
இதைத்தான் "கடவுளின் செயல்" என்கிறாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்? துயரத்தில் இவர்கள் பங்கேற்கவே மாட்டார்கள் எனில் இது என்ன சமூகம்!
2020- 21 இல் *ரிலையன்ஸ் குழுமத்தின்* லாபம் ரூ
55461 கோடி. கட்டிய வரியோ ரூ 1722 கோடிதான். *3 சதவீதம் மட்டுமே வரி.* வரிக்காக அவர்கள் 2020 இல் ஒதுக்கி வைத்த ரூ 13726 கோடிகளில் இது வெறும் 13 சதவீதம்தான். எப்படி இது சாத்தியம் என்று நாம் மூக்கில் விரல் வைப்பதற்கு முன்பாக இந்து பிசினஸ் லைன் ஜூன் 23, 2021 இல் விரிவான செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எப்படி எல்லாம் சட்டங்களில் உள்ள பொந்துகளில் நுழைந்து பல்லாயிரம் கோடிகள் தப்பி, முகேஷ் அம்பானியின் கஜானா வுக்குள் நுழைந்துள்ளன என்பதை வியப்போடு அச் செய்தி விளக்குகிறது. ஆனால் *கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் மீது போடப்பட்ட வரிகள் மூலம் வசூல் 8 லட்சம் கோடிகள்.* அம்பானிக்கும் அவருடைய லாபத்தில் பெரும் பங்கு வகிப்பது எண்ணெய் வணிகம்தான்! வருமான திரட்டல் கொள்கையில் நடைபெறும் இந்த அநீதியையும் "கடவுளின் செயல்" என்கிறாரா நிதியமைச்சர்?
இப்படி அரசின் தோல்வியை, பொருளாதாரப் பாதையின் அநீதியை மத வெறி அரசியலுக்குள் ஒளித்து வைக்கிற உத்தியும் இக் காலம் உணர்த்தியுள்ள பாடம்தான்.
வலதுசாரி திருப்பத்திற்கு இந்திய அரசியல் ஆளாகியுள்ள காலத்தில் இந்த பாடங்கள் எல்லாம் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களின் கருத்துப் போருக்கு வலு சேர்ப்பவை ஆகும்.
வலதுசாரி அரசியல் என்பது பொருளாதார தளத்தில் மட்டுமல்ல, சமூக தளத்திலும் அதன் பிற்போக்கான தாக்குதல்களை தொடுக்கின்றன. பாலின வன்முறைகள், சாதிய ஒடுக்குமுறைகள் அதிகரித்திருப்பது இதன் வெளிப்பாடே. இவையும் பொருளியல் ஒடுக்குமுறைக்கு வலு சேர்க்கின்றன.
ஆகவே வலதுசாரி கருத்தியலை களத்திலும், கருத்து ரீதியாகவும் எதிர் கொள்வதற்கான வெளிச்சத்தை 2020, 2021 நிகழ்வுகள் நமக்கு பாய்ச்சியுள்ளன. *முதலாளித்துவ சமூக அமைப்பின் பாரபட்சம், குரூரம், வர்க்க சார்பை ஆகியனவற்றை நமக்கு காட்சிப் படுத்தியுள்ளன.* சமூக மாற்றம் நோக்கிய பயணத்திற்கான அகல் விளக்குகளாக இப் படிப்பினைகள் நம் கரங்களில் தரப்பட்டுள்ளன.
*'விவசாயிகள் போராட்டம்'* 2021 இன் இறுதியில் பதித்த முத்திரை காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய மாபெரும் நிகழ்வு. நாடு முழுக்க எதிர்ப்புக் குரல்கள் சத்தமாகவும், சன்னமாகவும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இவை எல்லாம் இணையும் போது அது பேரோசையாக மாறும். அதுவே *விடியலின் பூபாளம்* ஆக இருக்கும்.
*' இருண்ட காலங்களிலும் பாடம் பிறக்கும்... பாடலும் பிறக்கும் '* என்பதே உண்மை. 2021 க்கு விடை தருவோம். அதன் பாடங்களை கருத்தில் கொண்டு தீர்வுகளுக்கான முயற்சிகளை முன்னெடுப்போம்!
*செவ்வானம்*
No comments:
Post a Comment