“தாழிடப்பட்ட கதவுகள், சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை என்ற
மனதை கலங்கடிக்கும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் மூலம் நம்மை ஈர்த்த தோழர்
அ.கரீம், இம்முறையும் உண்மையை புனைவாக வடித்து நம் இதயத்தை உறைய வைக்கிறார்.
நூல் : அகல்யாவுக்கும்
ஒரு ரொட்டி
ஆசிரியர் :
அ.கரீம்
வெளியீடு :
எதிர் வெளியீடு
பொள்ளாச்சி
விலை : ரூபாய் 140.00
11 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் நான்கு சிறுகதைகளைப் பற்றி
மட்டுமே எழுதப் போகிறேன்.
பகுத்தறிவுக் கொள்கைகளை மத அடிப்படவாதிகள் எப்போதும் ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். விவாதத்திற்கு வர
மாட்டார்கள், சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே காபிர்கள் எனச் சொல்லி கொலை கூட
செய்வார்கள் என்பதை “அன்பே ஆசிபா, செல்லமே யாஸ்மின்” சொல்கிறது.
கோவையில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது விழுந்துள்ள
சந்தேகம், அவர்களை காவலர்கள் துச்சமாக மதிக்கும் போக்கு, விசாரணை என்ற பெயரில்
நடத்தும் உளவியல் தாக்குதல், அப்பாவிகள் அனுபவிக்கும் இன்னல்கள் ஆகியவற்றை ஒவ்வொரு
பக்கத்திலும் பதற்றம் குறையாமல் சொல்கிறது “இன்று தஸ்தகீர் வீடு”
தோழர் ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையம் கதைகளும் அவரது
முத்திரை நாவலான “மீசை என்பது வெறும் மயிர்” நாவலின் கதாபாத்திரமான நந்த ஜோதி பீம்
தாஸும் மிகவும் பிரசித்தம். நந்த ஜோதி பீம் தாஸிடம் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கிய
குற்றச்சாட்டில் லிபரல் பாளையம் சிறையில் தவிக்கும் ஆதவனின் கடிதத்தோடு கதாசிரியரை
சந்திக்க குந்திய தேசம் வரும் ஒரு பொருளாதார நிபுணர் லிபரல் பாளையத்திற்கு சற்றும்
குறையாத வினோத அடக்குமுறைச் சட்டங்கள் அமலாகும் குந்திய தேசம் கண்டு
அதிர்ச்சியடைகிறார். அரசுப்படைகளிடம் சிக்கி உயிரிழக்கிறார். தோழர் ஆதவன் தீட்சண்யாவின்
பகடி பாணியிலான “அதிகாலை நிசப்தம்” கதை
ஒன்றிய அரசின் அவலட்சணங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.
கொரோனாவைத் தொடர்ந்த அவசர கதியிலான கதவடைப்பினால் கோடிக்
கணக்கான தொழிலாளர்கள் பணியிழந்து வாழ்விழந்து சொந்த ஊருக்கு பல நூறு கிலோ மீட்டர்
நடந்தே சென்ற துயரம் இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. அப்படி வாழ்விழந்து
நடந்து போகிறவர்களின் இன்னலையும் பசியையும் களைப்பையும் சிரமங்களையும்
ஏமாற்றங்களையும் விவரிக்கிறது “அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி”. ஆம் வாழ வழியில்லாமல்
ஆறில் குதித்து உயிரை மாய்க்கும் அகல்யாவுக்கு சக பயணி தன் கைவசம் இருந்த ஒரே ஒரு
ரொட்டியை ஆற்றில் படைக்கும் அவலம் இந்தியாவின் சாமானிய மக்களின் அவலம். ஆளத்
தெரியாதவர்கள் கையில் சிக்கிக் கொண்ட தேசத்தின் அவலம்.
இந்து முஸ்லீம் ஒற்றுமையைச் சொல்லும் “கிருமி நாசினிகள்” ,
யதார்த்ததிலிருந்து விலகி நிற்கும் எழுத்தாளனுக்கும் அவனது எழுத்துக்களுமான மோதல்
எப்படி இருக்கும் என்ற “சாம்பல் பறவைகள்” ஆகியவையும் சுவாரஸ்யமான கதைகள்.
சிறுகதை என்ற வடிவத்தில் இருந்தாலும் இவை கதையல்ல. முழுதும்
நிஜம். இன்றைய இந்தியா எப்படி உள்ளது என்பதை சொல்கிற நிஜம். அந்த நிஜம்
உருவாக்குகிறது மனதில் ரணம்.
நன்றியும் பேரன்பும் தோழர் ❤❤❤
ReplyDeleteநன்றியும் பேரன்பும் தோழர் ❤❤❤
ReplyDelete