மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக தோழர் பாரதி அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவரது தேர்வு மாநிலம் முழுதும் ஒரு உற்சாகத்தை அளித்துள்ளது. அதற்குக் காரணம் அவர் 100 % விழித்திறன் இல்லாதவர் என்பதுதான். மக்கள் பணியாற்ற உடல் குறைபாடு என்பது ஒரு தடையல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளதுதான் அந்த உற்சாகத்திற்குக் காரணம்.
தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய சில வரிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
பஞ்சமி நிலம் குறித்து இவரிடமுள்ள ஆவணங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். சாதியொழிப்பு சார்ந்து ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு இருக்கவேண்டிய ஆழமான புரிதல் இவரிடம் இயல்பாக இருப்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கூட்டங்களின் விவாதங்களில் கண்டிருக்கிறேன். தானொரு 100% பார்வை மாற்றுத்திறனாளி என்பதை மனதில் இருத்திக்கொள்ளாமல் இயக்கப்பணிகளில் முன்னிற்பவர்... இன்று அந்த உழைப்புக்கான இடத்தை அடைந்துள்ளார்...
வாழ்த்துகள்
தோழர் பாரதி அண்ணா.
மேலே உள்ளது நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள் என்பதை என் அனுபவமும் சொல்லும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் கீழ்ப்பாக்கம் என்ற கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாம் எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில்தான் நடைபெற்றது. அந்த போராட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தது தோழர் பாரதி அண்ணாதான்.
இப்பிரச்சினை குறித்த மாவட்ட நிர்வாகங்களின் அணுகுமுறை, மற்ற இயக்கங்களின் பார்வை என பலவற்றையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார். தமிழ் நாடு முழுவதுமான பஞ்சமி நிலம் குறித்த ஆவணங்கள் அவரிடம் இருந்தது.
அவரது பார்வைத்திறன் அப்போதே மங்கிக் கொண்டுதான் இருந்தது. அது 100 % ஆகி விட்டது என்பது இப்போதுதான் தெரிந்தது. ஆனால் அதுவெல்லாம் கட்சிப்பணியாற்ற ஒரு தடையே இல்லை என்று அவர் முன்வந்துள்ளதும் அவரை மற்றவர்கள் முன்மொழிந்துள்ளதும்தான் சிறப்பு.
சில பலவீனங்கள், பின்னடைவுகள் ஆகியவற்றையும் கடந்து மார்க்சிஸ்ட் கட்சி முன்னேறும் என்ற நம்பிக்கையை இது போன்ற தருணங்கள்தான் அளிக்கிறது.
பிகு: கீழ்ப்பாக்கம் பஞ்சமி நிலப் போராட்டத்தில் தோழர் பாரதி அண்ணா. வட்டத்துக்குள் அடைத்துள்ளேன்
No comments:
Post a Comment