Thursday, January 6, 2022

மீண்டும் பிரியாணியான அண்ணாமலை 😀😀😀

 


அண்ணாமலைக்கு புரிவது சந்தேகமே!

 

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்கள் ஊடகவியலாளர் திரு அரவிந்தாக்ஷனின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தார். மிகவும் முக்கியமான, சூடான, சுவாரஸ்யமான பதிவு. சற்று நீளமானதுதான். ஆனால் அவ்வளவு வொர்த்தானது.

 என்ன! இதில் எழுதப்பட்டுள்ளது எல்லாம் ஆட்டுக்காரருக்கோ அவரது மந்தையில் உள்ளவர்களுக்கோ புரியாது என்பதுதான் கொடுமை! அந்த அளவிற்கு அறிவிருந்தால் அவர்கள் ஏன் பாஜகவில் இருக்கப் போகிறார்ககள்!

 நண்பர் அரவிந்தாக்ஷனின் அட்டஹாசமான பதிவு

 தமிழக மக்களுக்காக என்ன செய்துவிட்டீர்கள் அண்ணாமலை!

ஏன் இவ்வளவு ஆணவம் ?

===========================================

 

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம்..

இது உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதமிது.

 

தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கிறது.  அந்த கட்சிகளும்,அதன் தலைவர்களும்  இந்த மாநிலத்திற்கான உரிமை,மக்கள் பிரச்சனைகள் குறித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றனர்.

 

அவர்கள் யாருமே நீங்கள் காட்டும் ஆணவத்தையோ, அகம்பாவத்தையோ ஊடகவியலாளர்களிடமோ/செய்தியாளர்களிடமோ இதுவரை ஒருபோதும் காட்டியதில்லை.

 

தமிழகத்தின் எந்தவொரு மக்கள் பிரச்சனைக்கும் போராட வீதிக்கு வராத, சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத,,ஒரு கட்சியின் மாநிலத்தலைவரான நீங்கள் அரசியலுக்கு வந்து எவ்வளவு நாட்களாகிறதென தெரியுமா ?

 

 ஒரு வருடம் நான்கு மாதங்கள் நான்கு தினங்கள் மட்டுமே ..

 

ஆனால் என்னமோ...

 

பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு உயிரைக்குடுத்து போராடிய தலைவரைப்போல நீங்கள் காட்டும் பிம்பம் இருக்கிறது பாருங்கள்.  விபரம் தெரியாதவர்கள் பார்த்தால் நிச்சயம் உண்மை என்றே நம்பி விடுவார்கள்.

 

சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் கிளுகிளுப்புக்கும்,,உங்களைச்சுற்றி இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை குதூகலப்படுத்தவும் ஊடகவியலாளர்கள்/செய்தியாளர்கள் மீது பயந்து பிராண்டும் உங்களது யுக்தி,,நீண்டகால அரசியலுக்கு ஒருபோதும் உதவாது.  ஒருவேளை உதவும் என்று நம்புகிறீர்கள் என்றால் உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன்.

 

கருத்துரிமை ஜனநாயகம் குறித்து எல்லாம்  இப்போது நீங்கள் பேசுவதில்லை. நமக்கு பேசத்தகுதியில்லாத விஷயங்களைப் பேசக்கூடாது என்று உணர்ந்து மிக கவனமுடன் செயல்படுகிறீர்கள்.. வார்த்தைகளை உதிர்க்கிறீர்கள்..

 

வாழ்த்துக்கள்..

 

சரி விஷயத்திற்கு வருகிறேன்..

தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள்/பத்திரிகைகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.குறிப்பாக அங்கு பணியாற்றும் முக்கிய நபர்கள்    மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். இது தானே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

 

அதாவது வெளிப்படையாக சொன்னால் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறதுஅதனால் தான்..கோபாலபுரம் மீடியாக்கள் என நீங்கள் துணிச்சலாக விமர்சிக்கிறீர்கள்..அப்படித்தானே..!

 

சில விஷயங்களை உங்களுக்கு நியாபகப்படுத்த விரும்புறேன்..

ஏன் தெரியுமா ?

 

அப்போது நீங்கள் கர்நாடகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தீர்கள்.   நானொரு "Proud Kannadiga" என்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த காலம் அது.

 

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,,அப்போதைய தமிழக எதிர்கட்சித்தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மேகதாது விவகாரம்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவோடு அனைத்துக்கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு சென்றார்கள்..

 வேறு வழியில்லாத காரணத்தால் பிஜேபி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனும் உடன் சென்றார். பிரதமரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் செய்தியார்கள் சந்திப்பு நடந்தது. ஜெயா தொலைகாட்சி செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார்,,

 அப்போது,, விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா ?

 

சம்பந்தப்பட்ட செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல்..  ஜெயலலிதாவை குண்டக்க மண்டக்க திட்டிப்புடுவேன்.. உங்களுக்கு, உங்க டிவிக்கு எல்லாம்  பதில் சொல்ல முடியாதெனக் கூறி.. நாற்காலியைத் தூக்கி அடிக்க முற்பட்டார்.. 

 

அதே...தேமுதிக தலைவர் விஜகாந்த் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஆளுநரிடம் அதிமுக அரசின் ஊழல்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்கச்சென்றார்.  அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது.. என்ன நடந்தது தெரியுமா ?

 

தமிழகத்தில் பத்திரிகைகள் அதிமுக அரசுக்கு ஜால்ரா அடிப்பதாகவும்,,  ஜெயலலிதாவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா.. என்று கடுமையாக கோபப்பட்டு செய்தியாளர்களை நோக்கி காறித்துப்பினார்... 

 

2016 தேர்தலுக்கு பின் எதிர்கட்சித்தலைவராக இருந்த முக ஸ்டாலின் பலமுறை ஊடகங்கள் அதிமுக  அரசுக்கு பயப்படாமல் உண்மையை எழுத/பேச வேண்டும் என கூறியிருக்கிறார்.

நாங்கள் சொல்வதை நீங்கள் எழுத மாட்டீர்கள்,டிவியில் போடமாட்டீர்கள் எனவும் முக ஸ்டாலின்  ஆதங்கப்பட்டிருக்கிறார்.

 

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை அவரும் தமிழகத்தின் ஊடகங்கள் அதிமுக அரசுக்கு ஜால்ரா அடிப்பதாகவே மறைமுகமாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்.

 

இதெல்லாம் உங்களுக்கு தெரியாது..

 

ஏன்னா அப்போ நீங்க "Proud Kannadiga" என்று கூறிக்கொண்டிருந்தீர்கள்..

 

அரசியலுக்கு புதுசு இல்லையா..

வந்து ஒரு வருஷம் தானே ஆகிறது.

அதனால் இதெல்லாம் சொல்கிறேன்..

 

ஒருவேளை….

திமுகவின் அமைப்புச் செயலாளர் R.S. பாரதி தமிழக ஊடகங்களை "ரெட்லைட் மீடியா" என்று விமர்சித்தது உங்களுக்கு நியாபகம் இருக்கலாம் .. ஏன்னா அது சமூக வலைத்தளங்களில்வாட்சப்பில் அதிகம் பகிரப்பட்ட ஒரு விஷயம்.

 

இதெல்லாம் கடந்த 2021 மே மாதத்திற்கு முன்பு வரை ஊடகங்கள்/ பத்திரிகைகள்  மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள்..

 

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக பேசிய/ஊழலை வெளிப்படுத்திய  ஊடகங்கள்/பத்திரிகைகள் நெருக்கடியை சந்தித்ததா என்றால்...  ஆமாம்..மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்பட்டது..

 

2021 தேர்தல் மாற்றத்திற்கு பிறகு  தமிழக பிஜேபி தலைவரான நீங்கள்.. இப்போது போகும் இடமெல்லாம் ஏளன எள்ளல் தொனிக்க கோபாலபுர மீடியாக்கள் என்று விமர்சிக்கிறீர்கள்.

 

ஏதோ விபரம் தெரியாத ஒரு நபர் சொல்கிறார் என்றால்.. வெறுமனே அதை கடந்து போய்விடலாம்.. ஆனால் ஒரு முன்னாள் IPS அதிகாரியான நீங்கள் குறிப்பிட்ட ஒரு கட்சித்தலைவரின் வீட்டைக்குறிப்பிட்டு மொத்தமாக கோபாலபுர மீடியாக்கள் என்று விமர்சிக்கிறீர்கள்..  இதை எப்படி கடந்து செல்வது மிஸ்டர் அண்ணாமலை..

 

யார் சார் நீங்க? என்ன சார் செஞ்சுட்டீங்க தமிழக மக்களுக்கு !

எங்க இருந்து சார் உங்களுக்கு இவ்வளவு தடித்தனம்  வந்தது ?

 

2015 ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி  புதிய தலைமுறை அலுவலகம் மீது ஒரு தேச பக்தர் 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசிவிட்டார். .

 

குண்டு வீசறவனை உலகமே தீவிரவாதின்னு சொன்னாலும்.. குண்டு வீசியவன் பாரத் மாதாகீ ஜே.. சொல்லிட்டான்னா..

உங்கள்  கட்சியின் பார்வையில் அவன் தேச பக்தன் தானே....

 

அவருக்காக பிஜேபி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  அந்த தேச பக்தனுக்காக எல்லா சட்ட உதவிகளையும் செய்தார்கள்..  இதற்கும் குண்டு வீசியவன் உங்கள் கட்சி கூட கிடையாது..

 

தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் செயல்படும் கல்யாணராமனுக்கு உங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு உதவுகிறது..

 

இந்த மாதிரி காரியங்களுக்கு வேலை செய்வதற்கு மட்டும் தான் வழக்கறிஞர் பிரிவு வச்சிருக்கீங்களா என்ன ?

 

அவதூறு பரப்பும் நிறுவனங்கள் குறித்து வழக்கு போடுங்க..நோட்டீஸ் அனுப்புங்க சார்..

 

அதைவிட்டுட்டு ஒட்டுமொத்தமாக தமிழக ஊடகங்களை இப்படி  நக்கல் நையாண்டி செய்வது எல்லாம்  ஒரு அரசியல் கட்சித்தலைவருக்கு அழகா ?

 

அப்புறம்

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு  தமிழ்நாட்டில் இருப்பது கோபாலபுர மீடியாக்கள் என்று நீங்கள் சொல்வதை.. உங்கள் திருப்திக்காகஉண்மை என்றே வைத்துக்கொள்வோம்.. 

 

பிஜேபி ஆட்சி செய்யும் குஜராத்தில்,மத்திய பிரதேசத்தில்,ஹிமாச்சல்

,ஹரியானா,கர்நாடகா உத்தர       பிரதேஷ், மணிப்பூர் ,திரிபுரா, நாகலாந்து, உத்ரகாண்டில் இருக்கும் மீடியாக்களை என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் அண்ணாமலை  ?

 

அல்லது உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பிஜேபி மாநிலத்தலைவர்கள் என்ன பெயர் சொல்லி ஊடகங்களை  அழைக்கிறார்கள் ?

 

நீங்கள் கட்சித்தலைவராக பதவியேற்ற பின்னர்,,

 

ஆறு மாதத்தில் தமிழக மீடியாக்களை நம்ம கண்ட்ரோல்ல கொண்டுவந்து விடலாம்.  சம்பந்தப்பட்ட துறைக்கு நம்ம முருகன் ஜி தான் அமைச்சர்னு பேசியது நியாபகம் இருக்கா உங்களுக்கு ?

 

அந்த துறை மூலமாக மத்திய அரசுக்கு எதிராக  அவதூறு பரப்பும் தமிழக ஊடக நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்க சார்..

 

அதை விட்டுட்டு.. அதென்ன சார் நான் இப்படி தான் பேசுவேன்..  பேட்டியை போட்டா போடுங்க..இல்லேன்னா குப்பையில் போடுங்கன்னு பேச்சு..

 

உங்களையும் உங்கள் கட்சியையும் மதித்து ,பல மணிநேரம் காத்திருக்கும் ஊடக/பத்திரிகையாளர்களை மிகவும் அவமானப் படுத்துகிறீர்கள் அண்ணாமலை..

 

மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா,கருணாநிதி போன்றோர் அவதூறு செய்தி எழுதப்பட்டதாக கூறி எத்தனையோ வழக்குகளை தொடந்துள்ளனர். சில நேரங்களில் கடுமை கூட காட்டியுள்ளனர்.

 

ஆனால் ஒரு நாளும் இப்படி தொடர்ச்சியாக ஊடகங்களையும்/பத்திரிக்கையாளர்களையும் இழிவு படுத்தியதில்லை..

 

உண்மையை சொல்கிறேன்..

 

உங்களைப்போல ஒரு ஆசாமியை தமிழக ஊடகத்துறை இதுவரை சந்தித்ததில்லை..

 

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் இந்திய பத்திரிகைத் துறைக்கு உலகளவில் என்ன பெயர் என்று தெரியுமா மிஸ்டர் அண்ணாமலை உங்களுக்கு ?

 

GodiMedia 

 

இந்திய ஊடகத்துறை உலகளவில் சந்தி சிரித்துக்  கிடக்கிறது அண்ணாமலை..சந்தி சிரித்துக் கிடக்கிறது..

 

இதெல்லாம் எதுவும் தெரியாமல் நீங்கள் ஏதோ கோபாலபுர மீடியாக்கள் என வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்..

 

என்ன சார் தேசியவாதி நீங்க ?

 

சரி..

ஆளும் பா... அரசு ஊடகங்களை எப்படி கட்டுப்படுத்துகிறது என தெரியுமா உங்களுக்கு ?

 

அரசியலுக்கு புதுசு இல்ல நீங்க..

 

அதனால சொல்றேன் தெரிஞ்சுக்கோங்க..

 

ABP தொலைக்காட்சியில் MasterStoke என்ற ஒரு நிகழ்ச்சியை புன்யா ப்ரசூன் பாஜ்பாய் என்ற ஊடகவியலாளர் நடத்திக்கொண்டிருந்தார்.     ஒரு நாள்..   பிரதமர் மோடியின்மான் கி பாத்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் விவசாயி, சீத்தாப்பழ விவசாயம் மூலம் தனது லாபம் இரட்டிப்பானது என்று பேசினார். அவர் பொய்யாக அப்படி பேசியதையும், அரசு அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து பேச வைத்தனர் என்பதையும் தனது மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திவிட்டார் புன்ய பிரசூன்.

 

அடுத்து என்ன நடந்தது தெரியுமா ?

மோடி என்ற பெயரையே பயன்படுத்தக்கூடாது என  தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.   MasterStoke நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதெல்லாம் செயற்கைகோள் ஒளிபரப்பில் தொழில்நுட்பரீதியாக இடைஞ்சல் கொடுக்கப்படுகிறது.

 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கருப்புப்பண மீட்பு போராட்டம் எனும் நாடகம் நடத்தி பிஜேபி ஆட்சிக்கு பிறகு பெரும் தொழிலதிபரான யோகா குரு  பாபா ராம் தேவின்பதஞ்சலி புராடக்ட்ஸ்நிறுவனம், அந்த தொலைக்காட்சிக்கு கொடுத்து வந்த அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது.  கடைசியில் புன்ய ப்ரசூன் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

 

இப்படி மத்திய அரசின் அழுத்தத்தால் வேலையைவிட்டு துரத்தப்பட்ட,,அல்லது ராஜினாமா செய்து விலகிய நபர்களின் எண்ணிக்கை மிக அதிகம்...

 

ஒரே ஒரு உதாரணத்தை மட்டுமே சொல்லி இருக்கிறேன்..

 

Rights & Risks Analysis Group –RRAG என்ற அமைப்பு   இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறைஎன்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையை படித்திருக்கிறீர்களா அண்ணாமலை ?

 

புலம் பெயர் தொழிலாளர்கள்,, கொரோனா கால மக்களின் பிரச்சனை குறித்து பேசிய நபர்கள் மீது கொரோனா குறித்து தவறான தகவலை பரப்புவதாக கூறி 31 பத்திரிகையாளர்கள் மீது  ஒடுக்குமுறை ஏவப்பட்டது.

அதில் பெரும்பாலானவை பிஜேபி ஆளும் மாநிலங்கள்..

 

உண்மையில்,,அப்போது தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்களே கொரோனா பரவலுக்கு காரணம் என்ற மதத்துவேஷ பிரசாரத்தை உங்கள் கட்சி மட்டுமே இந்தியா முழுமைக்கும் செய்துகொண்டிருந்தது.

 

நீங்கள் செய்த மத வெறுப்பு பிரச்சாரத்திற்கு தமிழகம் உட்பட இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஊடகங்களும் உதவியது.

 

தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊடகவியலாளர்கள் கேடு விளைவிப்பதாக அரசு மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவது உலகத்திலேயே, இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டிலும் நடப்பது கிடையாது.

 

கடந்த  மாதம் Inter National Press Institute  (IPI) அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை படித்தீர்களா அண்ணாமலை ?

 

உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளது மிஸ்டர் அண்ணாமலை...

 

அந்த ஆய்வறிக்கை எந்த ஒரு பத்திரிகையாளர் இந்தியாவில் விமர்சனங்களை வைத்தாலும் பா..., ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என மிரட்டப்படுவதாக என அதில் சுட்டிக்காட்டி இருந்தது..

 

 இந்தியாவில்  கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த ஆய்வறிக்கை அது.

 

180 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியாவின் இடம் 142..

 

பத்திரிகையாளர்கள் அதிகம் கொலை செய்யப்பட்ட நாடுகளில் போதைப்பொருள் வர்த்தகம் கோலோச்சும் மெக்ஸிகோ முதலிடம் ..

அங்கு 7 பேர் கொலை 

 

இந்தியா இரண்டாமிடம்...

6 பேர் படுகொலை 

 

பத்திரிகை சுதந்திரம் குறித்த குறியீட்டை Reporters Without Borders என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது..  180 நாடுகள் கொண்ட அந்த பட்டியலில் இந்தியா அதிலும் நமக்கு 142-வது இடமே..

 

அதிகார அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அண்ணாமலை

 

சமூக வலைதள பிரிவில் பிஜேபிக்காக களமாடும் தேசியவாதிகள் எனக் கூறிக்கொள்வோர் மத்திய அரசை விமர்சிக்கும் ஊடகங்களை விபச்சார ஊடகங்கள் என கூறிவரும் போக்கை அறிவீர்களா ?

 

வேளாண் சட்டத்திற்கெதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஊடகங்களை நோக்கிப்போட்ட கோஷம் என்னவென தெரியுமா அண்ணாமலை உங்களுக்கு ?

 

GodiMedia Down.. Down..

 

கடைசிவரை தேசிய ஊடகங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை..   காரணமென்ன தெரியுமா ?  மத்திய அரசின் கால்களை பற்றிக் கொண்டிருக்கிறதென்ற கோபம்...

 

மத்திய அரசை விமர்சிக்கும் பெண் பத்திரிகையாளர்களை  உங்கள் கட்சியைசேர்ந்தவர்கள்... தூக்கிப்போட்டு கற்பழிக்க வேண்டுமென பேசியதெல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கா ?

 

இப்படி இன்னும் நிறைய இருக்கிறது அண்ணாமலை பிரதர்..

 

ஆனால்,,பாருங்களேன்..

ஊடகவியலாளர்களுக்கான பிரச்சனைகள் குறித்து கூட ஊடகங்களும்/பத்திரிகைகளும் பேசியதில்லை..அதற்கு நிர்வாகங்களும் பெரிதாய் அனுமதிப்பதில்லை..  யார் வேண்டுமானாலும் வரலாம்.. அடிக்கலாம்.. கடிக்கலாம்,,,

 

அப்புறம் நீங்கள்,அதாவது உங்கள் கட்சி பிரிவினைவாதிகளை/ பயங்கரவாதிகளை  தமிழக ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைக்கிறது.. இல்லையா..!

 

அதனால்அதற்கும் ஒரு விளக்கம் கொடுத்துவிடுகிறேன்..

 

தமிழ்நாட்டில் தினந்தோறும் அறிக்கை விடும் ஒரு கட்சி பாமக..  அதன் தலைவர் சமூகநீதிக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். எத்தனையோ போராட்டங்கள்,மக்கள் பிரச்சனைக்காக எவ்வளவோ வழக்குகளை அந்த கட்சி நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது..  ஆனால் பாருங்கள் அவரது அறிக்கைக்கோ,,அந்த கட்சி குறித்த செய்திகளுக்கோ ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை  ஊடகங்கள் மீது டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு மிகவும் வருத்தம் மற்றும் கோபம் இருக்கிறது..

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மண்,மலை,காடு,கடல் என அவர் கையிலெடுக்காத பிரச்சனைகளே இல்லை.மக்களுக்காக நடையாய் நடந்து ஓடாய் தேய்ந்து போன மனிதர். நேரடியாக அவரே நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாதிடுவர். முக்கியமான பிரச்சனைகள் குறித்து பல பக்கங்கள் எழுதி நன்கு  விரிவாக அறிக்கை கொடுப்பார்.. ஆனால்..தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள்/பத்திரிககைகள் பெரிதாய் சட்டை செய்யாது..செய்வதுமில்லை 

 

கம்ம்யூனிஸ்ட்  கட்சிகள்...

ரோடு சரியில்லை என்றால் சாலையில் நாத்து நடும் போராட்டம், கவுன்சிலரை காணவில்லை என போஸ்டர் ஓட்டுவது என மக்களுக்கான எக்கச்சக்கமான பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகிறார்கள்.   அவர்களுக்காவது ஊடகங்கள் முக்கியத்துவம் தருகிறதா என்றால் அதுவும் கிடையாது..

 

மாநில உரிமை,மனித உரிமை சமூக நீதி என எல்லா பிரச்சனைகளுக்காகவும் வீதிக்கு வந்து போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதா என்றால்..  நிச்சயம் கிடையாது..

 

தேசிய அளவிலான பிரச்சனைகளை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகளையோ,அல்லது அந்த கட்சியின் நிகழ்ச்சிகளுக்கோ தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் தருவது இல்லை..

 

சரி.. மழை வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் உயிரைக்கொடுத்து பணியாற்றும் இஸ்லாமிய கட்சிகள்அமைப்புக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் போராட்டங்களை செய்தியாக போடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை..

 

தமிழ்நாட்டில் இருக்கும் விஜயகாந்த்,வாசன்,சீமான்,வேல்முருகன் என பல தலைவர்கள் பல அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.. பல கூட்டங்களை நடத்துகிறார்கள்.

 

எந்த பத்திரிகையும் ஊடகமும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை   நான் குறிப்பிடாத பல கட்சிகளும் அமைப்புக்களும் கூட இருக்கிறது.

 

கோவில்,ஹிந்து மதம் இதைத்தாண்டி உங்கள் கட்சி ஒருநாளும் ஒன்றையும் செய்தது கிடையாது.. அவ்வளவு ஏன் கடந்த 10 ஆண்டுகளில் ஏதாவது தமிழகத்தில் ஊழல் குறித்து பேசி இருக்கிறார்கள்.. ஏதாவது புகார்.. ம்ம்ஹூம்

 

மக்கள் பிரச்சனைக்காக ஒரே ஒரு வழக்கைக்கூட உச்ச/உயர்நீதிமன்றத்திலோ தொடுக்காத ஒரு கட்சி இந்தியாவில் இருக்கிறதென்றால் அது பிஜேபி மட்டுமே..

 

நீட் தேர்வு சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தான் தமிழக பிஜேபி வரலாற்றிலேயே  முதல் வழக்கு.

 

மேலே நான் சொன்ன எல்லா கட்சிகளும் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த மாநிலத்தின் மக்களுக்கான எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேசி இருக்கிறார்கள்.ஏன் நீதிமன்றம் வரை சென்று கூட போராடி இருக்கிறார்கள்.

 

ஆனால்,, ஆனால் அப்படியெல்லாம் எதுவுமே செய்யாத   உங்களுக்கு கர்நாடகாக சிங்கம் என்று டைட்டில் கொடுத்து ஏதோ ஒரு ஆர்வக்கோளாறு செய்தியாளர் உங்களை ஆளாக்கிவிட்டான் பாருங்க...

அதே போன்ற ஆர்வக்கோளாறோடு இருக்கும் செய்தியாளர்கள்  தமிழகத்தின் எந்த கட்சிக்கும்தலைவருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை..உங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..

 

அரசியல்வாதிகளோடு பழகி பழகி ஊடகத்துறையினருக்கும் தோல் தடித்து சொரணையே இல்லாமல் போய்விட்டது.  அதனால் தான் உங்களது வாலை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. நீங்கள் ரத்தம் வருமளவு கடித்தாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திரும்பவும் வருவார்கள்..

 

இப்போது..

நீங்களே சொல்லுங்கள்..யாரை ஆதரிக்கிறது 

தமிழக ஊடகங்கள் ?

 

ஆனால்..

நீங்கள் சொல்வது உண்மை தான்.. 

அண்ணாமலை

ஒப்புக்கொள்கிறேன்..

பிரிவினைவாதிகளையும்/பயங்கரவாதிகளையும் தான் தமிழக ஊடகங்கள்/பத்திரிகைகள் ஆதரிக்கிறது..

 

 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி மக்களவையில்   அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் Tapir Gao பேசிய உரையை கேட்டு இருக்கமாட்டீர்கள்.

 

அதனால் அவரது பேச்சை சுருக்கமாக சொல்கிறேன்..

 

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே.. 

இந்த பிரச்னையை நான் இப்போது பேசவில்லை என்றால்,,  இந்த நாடும் அடுத்துவரக்கூடிய தலைமுறையும்  ஒருபோதும் என்னை மன்னிக்காது..  14 நவம்பர் 2019 பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சல பிரதேசம் சென்றார்.  சீனா அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தது. இந்தியா அமைதியாக இருந்தது.

 

குடியரசு தலைவர்,பிரதமர்,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் அருணாச்சலப்பிரதேசம் சென்றார்கள்.அப்போதும் ஒவ்வொரு முறையும் சீனா கடுமையாக எதிர்த்தது.  ஆனால் நம்முடைய தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. நான் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அருணாச்சலப் பிரதேசத்தில் நடக்கும் சீன ஆக்ரமிப்பு குறித்து பேசுங்கள்.எழுதுங்கள்..

ஏன் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்.  60 கிலோ மீட்டர் பரப்பளவில் சீனா அருணாச்சல பிரதேச பகுதிகளை ஆக்ரமித்துவிட்டது.

நான்  நாடாளுமன்ற அவையின் சபாநாயகராகிய உங்கள் மூலமாக இந்தியாவில் இருக்கும் ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறேன் பாகிஸ்தான் குறித்த பிரச்சனை என்றால் கொடுக்கும் முக்கியத்துவத்தில்,,ஏன் சிறிய அளவு முக்கியத்துவம் கூட அருணாச்சல பிரதேசத்திற்கு கொடுக்க மறுக்கிறீர்கள்.  பத்திரிகை-தொலைக்காட்சிகள்- எதிர்க்கட்சிகள்,இந்த அவையில் கூட ஏன் யாருமே பேச தயங்குகிறீர்கள்.. தயவு செய்து பேசுங்கள்.. பத்திரிகை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களே தயவு செய்து பேசுங்கள்..எழுதுங்கள்..  இல்லையென்றால் அருணாச்சல பிரதேசம் மற்றொரு டோக்லாமாக மாறிவிடுமென கூறி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்..

 

ஆனால் எந்த ஊடகமும் பத்திரிகையும் அவர் குறிப்பிட்ட அருணாச்சல பிரதேசம் குறித்து பேசவில்லை.

 

அவ்வளவு ஏன்..  கடந்த வாரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிதாக பெயர் கூட வைத்துவிட்டது.. ஆனால் இப்போதும் இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தமிழகம் உட்பட வாயை மூடிக்கொண்டுதான் இருக்கின்றன.

 

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து வரும் ஜம்மு காஷ்மீர் குறித்து எந்த ஊடகங்களும் பேசுவதில்லை..

 

இந்த நாட்டின் பொருளாதாரம் நாசமாகிவிட்டதென உங்கள் கட்சியின் எம்.பி சுப்ரமணிசாமி சொல்வதை எந்த டிவியும் பேசுவதில்லை..

 

தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து யாரும் பேசுவதில்லை..  இப்படி எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருக்கிறது பேசுவதற்கு..  ஆனால் எந்த தொலைக்காட்சிகளும் பேசுவதில்லை..

பத்திரிகைகளும் எழுதுவதில்லை..

 

இப்போது நீங்களே சொல்லுங்கள்..

இந்திய ஊடகங்களை  GodiMedia   என்று சொல்கிறார்களே..

அது உண்மையா..அல்லது நீங்கள் சொல்வது உண்மையா மிஸ்டர் அண்ணாமலை ?

 

B.R.அரவிந்தாக்ஷன் 

ஊடகவியலாளர்


1 comment:

  1. எவ்வளவு பெரிய கட்டுரைங்க! இரண்டு மூன்று பகுதியா பிரிச்சு போட்டிருக்கலாம்

    ReplyDelete