Saturday, September 25, 2021

பலவீனமானோர் படிக்காதீர் . . .

 தமிழகத்தை அதிர வைத்த ஒரு ஜாதி ஆணவக் கொலைக்கு ஒரு வழியாக தீர்ப்பு வந்துள்ளது. மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் அந்த இரக்கமற்ற வெறியர்களுக்கு வழங்கப்பட்டது சரியே என்பதை கீழே உள்ள பதிவை படித்தால் நீங்களும் உணர்வீர்கள். கொடூரத்தை மூடி மறைக்க துணை நின்ற காக்கிச்சட்டைகளும் ஆயுள் தண்டனைப் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியே. . .

இப்பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்ட தோழர் வெண்புறா சரவணனுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

உடுமலைப் பேட்டை சங்கர் வழக்கில் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தடுமாறியது போல இந்த வழக்கில் நடக்காமல் தமிழ்நாட்டு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.




சாதிவெறியர்களின் பிடியில்

சிக்கிச் சிதைந்த முருகேசன், கண்ணகி
ஆணவப் படுகொலையின் துயரக்கதை!
*
சாமிக்கண்ணு (முருகேசன் அப்பா) :

"பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து, உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவ வூட்டுக்கு (வண்ணான்குடிகாடு - குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்"

வேல்முருகன் (முருகேசன் தம்பி) :

"அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழி மறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன்.

ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்… என்னை அவுத்து விடுங்கன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யாசாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்து வுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க".

அய்யாச்சாமி (முருகேசன் சித்தப்பா - குப்பநத்தம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்) :

"நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடிகாட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம்.

மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருத பாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்ககிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேற இடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன். என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்கலன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனு போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது.

பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க. என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சு வச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்… எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி.

எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந்தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருதுபாண்டியோட தங்கச்சி.

அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்தேகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்".

சின்னப்பிள்ளை (முருகேசன் அம்மா) :

"பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி… என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்… எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரியாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத்தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனை கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப்பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண்டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்".

அய்யாச்சாமி :

"எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லிமாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித் தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு.

முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான் - இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே… வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு.

ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்கதான் (எங்க சொந்தக்காரங்கதான்) ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க".

அமராவதி (முருகேசனின் அத்தை) :

"நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்… வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல.

அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடி செத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா"…

சாமிக்கண்ணு:

"எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டு மாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே… அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு.
*
- The Times Tamil நேர்காணலில் இருந்து... 

No comments:

Post a Comment