Monday, September 20, 2021

வாழப் பிறந்தோம்! வாழ்ந்து காட்டுவோம்



 *நாளொரு கேள்வி: 18.09.2021*


வரிசை எண் : *475*

இன்று நம்மோடு திருமிகு *பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு* (பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
##########################

*வாழப் பிறந்தோம்! வாழ்ந்து காட்டுவோம்!*
கேள்வி: நீட் பயத்தில் மாணவர் தற்கொலைகள் நிகழ்கிறதே! 

*பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு*

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருக்குறள் வழியாகத் *திருவள்ளுவர்* ஒரு மகத்தான உண்மையை நமக்கு உணர்த்த முற்படுகிறார்.

“தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று நம்புகிறோம். அந்தத் தெய்வத்தாலேயே ஆகாமல் போனால்? வள்ளுவர் சர்வ சாதாரணமாக, “அதனால் என்ன? உடல் வருத்தி முயன்று பார், உரிய பலன் கிடைக்கும்,” என்கிறார். 

இதைவிடச் சிறந்த, தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளை வேறு எவராலும் சொல்லிவிட முடியாது. 

மிகப்பெரும் போராட்டம் நடத்தியே, விதை முளைத்து வளர்கிறது. பூமியைக் கிழித்துக்கொண்டு மேல் எழும்பி வரும் செடியின் இலை நுனியைத் தொட்டுப் பாருங்கள். இவ்வளவு *மென்மையான இலை எவ்வாறு இவ்வளவு கடினமான மண்ணையும் கல்லையும் தகர்த்திக் கொண்டு வெளியே வந்தது?*

மென்மையாக இருப்பது பலவீனம் அல்ல.‌ வாழ்க்கையில் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனாலோ, அடைய நினைத்ததை அடைய முடியாமல் போனாலோ, அது ஒருவரின் 
இயலாமையோ, தோல்வியோ அல்ல.  மேலும் முயலவும், வெவ்வேறு மாற்றுகளைச் சிந்திக்கவும், வாழ்க்கை அனுபவம் நமக்குக் கற்றுத் தரும் *மகத்தான பாடம் அது.*

முதல் முயற்சியில், அடுத்தடுத்த தொடர் முயற்சிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்தவர்கள்தான் பின்னாளில் பல மகத்தான சாதனைகளைச் 
செய்துள்ளனர் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. 

பெண் படிக்கக்கூடாது என்று சொன்ன சமூகக் கட்டமைப்பில், பெண்ணைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க, *ஜோதிபாவுடன்* இணைந்து *சாவித்திரிபா* முயன்ற போது, உற்றார் உறவினர் ஒன்றுகூடிப் பல இடைஞ்சல்கள் செய்தார்கள். பல்வேறு வகையான அவமானங்களை எதிர்கொண்டு அன்று சாவித்திரிபா துணிந்து முயன்றதால்தான், பெண்கள் எத்துறையிலும் பயிலும் வாய்ப்பை இன்று பெற்றனர். 19ம் நூற்றாண்டில், நமக்கு எதற்கு இந்த அவமானம் என்று சாவித்திரிபா ஒதுங்கியிருந்திருப்பாரானால்? "இலட்சியத்தை அடைய விட மாட்டார்கள், பிறகு நாம் இருந்து என்ன பலன்," என்று தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருந்திருப்பாரானால், 21ம் நூற்றாண்டில் விண்ணிலும், கடல் ஆழத்திலும், சந்திர மண்டலத்திலும், செவ்வாய்க் கிரகத்திலும் கால்வைத்து ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பை நம் பெண்கள் பெற்றிருக்க முடியுமா? முடிந்திருக்கலாம், இந்த நூற்றாண்டில் அல்ல, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து. 

புதுக்கோட்டையில் பெண்கள் கல்லூரியில் சேர அனுமதி இல்லை என்றிருந்த காலத்தில், *முத்துலட்சுமியின்* இடைவிடாத போராட்டம், அன்று புதுக்கோட்டையை ஆண்ட மன்னரின் காதுகளுக்குச் சென்றது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து, முதல் பெண் மாணவியாகத் தன்னந்தனியாகப் பயின்று, பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மகத்தான சாதனை புரிந்தவர்தான் டாக்டர் முத்துலட்சுமி. இலட்சியத்தை அடையவிடாமல் தடைகள் உருவாவதைக் கண்டு முத்துலட்சுமி துவண்டுப் போய் இருந்தால், இந்த சாதனை சாத்தியப்பட்டிருக்குமா?

வாழ்க்கையில் எதுவுமே தோல்வி கிடையாது. அனைத்துமே வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்தான். 
குழந்தைகள், மாணவர்கள் தோல்வியாக எதையும் கருதக் கூடாது. முடியாமல் போனால், அதனால் என்ன? அடுத்ததை யோசிக்கிறேன் என்று வாழ்க்கை போராட்டத்தை மகிழ்ச்சியோடு நடத்த வேண்டும். 

ஒரு உயிரை உருவாக்க இயலாத நம்மால் உயிரை மாய்த்துக்கொள்ள  உரிமையளித்தது யார்? 
தற்கொலைகள் எந்தச் சிக்கலையும் தீர்த்ததாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. தற்கொலை சிக்கலைப் பெரியதாக்கியிருக்கிறதே தவிர, தீர்த்தது இல்லை. 

தற்கொலை என்ற சிந்தனை யாருக்கும் வரக் கூடாது. வாழப் பிறந்தோம். வாழ்ந்து காட்டுவோம் என்ற வைராக்கியம் கொள்வோம். 

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி" என்றார் *வள்ளலார் இராமலிங்க அடிகள்.* 

ஜோதி என்றால் ஒளி. ஒளி இருளை விலக்கும். கல்வி இல்லாதவர் அறியாமை எனும் இருளில் இருப்பவராகக் கருதப்படுவர். கல்வி அறியாமையெனும் இருளகற்றி, அறிவு எனும் ஒளியைத் தரும். அறிவு விரிவடையும்போது அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற அருள் உள்ளம் பெருகும். 

'நாம் எல்லோரும் ஒருவரே' என்ற உணர்வு, அனைவருக்குமானவராக நம்மை வாழ வைக்கும். அறிவு அருளைப் பெருக்கும். அருளைப் பெருக்கும் ஜோதி, "அருட்பெருஞ்ஜோதி" என்றார் வள்ளலார். 

அதை இன்னும் சரியாக நாம் விளங்கிக்கொள்ள, *பாவேந்தர் பாரதிதாசனார்* புதிய உலகு செய்ய விடுக்கும் அழைப்பைப் படிப்போம்: 

"எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்துகொள் உன்னைச் சங்கமமாக்கு

மானிட சமுத்திரம் நானென்று கூவு
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’
புவியை நடத்துப் பொதுவில் நடத்து."

தன்னலம் நீங்கி பொது நலம் காண பாவேந்தர் கூறும் வரிகளையும் பார்ப்போம்: 
"தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே."

மடிந்து வீழாமல், தாயுள்ளத்துடன் வாழந்து காட்டுவோம். 

*செவ்வானம்*

No comments:

Post a Comment