Monday, September 6, 2021

மோடி குரு பீடத்தின் பினாமிகள்

 


நூல் அறிமுகம்

 

நூல்                                       :   நிழல் இராணுவங்கள்

ஆசிரியர்                            :  திரேந்திர கே.ஜா

தமிழில்                                :  இ.பா.சிந்தன்,

வெளியீடு                           :  எதிர் வெளியீடு, பொள்ளாச்சி

விலை                                  :  ரூபாய்  220

 

இன்றைய இந்திய ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னுடைய மத வெறி செயல் திட்டத்தை நிறைவேற்ற நேரடியாக ஈடுபடாமல் பல உதிரி அமைப்புக்களை வைத்துள்ளது. அவற்றின் நோக்கங்களையும் நடவடிக்கைகளையும் விரிவாக அம்பலப்படுத்துகின்ற நூல் இது.

 

கோவா மாநிலத்தின் ராம்நதி கிராமத்து மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது அங்கே அமைந்த “சனாதன் சன்ஸ்தா”. இந்து கலாச்சாரத்தை பாதுகாக்க உருவானது என்ற முழக்கத்தோடு அதாவ்லே என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் பாலியல் அத்து மீறல்களின் இருப்பிடமாக இருந்தது மட்டும் அம்மக்களின் எதிர்ப்பிற்குக் காரணமல்ல, பகுத்தறிவாளர்களாக கோவிந்த் பன்சாரே, நரேந்திர தாபோல்கர், எம்.எம்.கல்புர்கி ஆகியோரை இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ததும் காரணம்.

 

சிறுபான்மையினருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு, அவர்களுக்கு எதிராக வன்முறை, துப்பாக்கிச் சூடு என்ற அளவில் முன்னேறியது. அதன் மூலம் அந்த அமைப்பின் தலைவர் ஒவ்வொரு தேர்தலிலும் பெற்ற வாக்குகள் அதிகரித்து பின்னர் முதலமைச்சராகவும் ஆனார். அந்த அமைப்பு இந்து யுவ வாகினி. அதை அமைத்தவர் தற்போதைய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த அமைப்பு தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தாலும் முந்தைய சமாஜ்வாதி அரசு வழக்கு பதியக் கூட அக்கறை செலுத்தவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

 

அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க திரட்டப்பட்ட படையினர், குஜராத் கலவரத்தில் நர வேட்டை நடத்தினார்கள், ஒடிஷாவில் பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸையும் அவரது இரு மகன்களையும் கொன்றவர்கள், இப்போது மாட்டின் பெயரால் கொலைகளை நடத்துபவர்கள், அவர்கள்தான் பஜ்ரங் தள். மங்களூரில் இப்போது பல தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள். அப்படி பாதுகாப்பு ஏற்பாட்டை ஏற்று பணம் அளிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவதும் பஜ்ரங் தள்தான் என்பதுதான் சுவாரஸ்யம்.

 

பஜ்ரங் தள்ளில் ஜாதிய வேறுபாடு இருந்ததால் அதிலிருந்து உருவானது ஸ்ரீராம் சேனா தன்னை முன்னிறுத்த காதலர் தினத்தன்று விடுதிகளை அடித்து நொறுக்கி பிரபல்யமானது. பாஜக ஆதரவில்லாத காரணத்தால் அது முடங்கிப் போனது என்பது வேறு கதை.

 

கேரளாவில் ஜாதிய உணர்வுகளை உசுப்பேத்தி உருவான அமைப்பு “இந்து ஐக்கிய வேதிகா”. இது பின்பு மத வெறியை தூண்டுவதையே முக்கியப் பணியாகக் கொண்டது. வெறியேற்றும் பேச்சுக்களுக்கே இதன் மூலதனம்.

 

மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய “அபினவ் பாரத்”

தீவிரவாதச் செயல்களுக்கு ஊக்கமளிக்கும் “போன்சாலா ராணுவப்பள்ளி”

சீக்கிய மதத்திற்குள் குழப்பம் விளைவிக்க உருவான “ராஷ்ட்ரிய சீக் சங்கதன்”

 

ஆகிய அமைப்புக்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய கட்டுரைகளும் உண்டு.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எவ்வாறு திட்டமிட்டு வேற்றுமைத் தீயை விசிறி விடுகிறது என்பதையும் பழி தன் மீது வரக்கூடாது என்பதற்காக இது போன்ற பினாமி அமைப்புக்களை உருவாக்கி தப்பித்துக் கொள்கிறது என்பதை இந்த நூல் பல்வேறு ஆதாரங்களோடு விளக்குகிறது.

 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சதிகளைப் பற்றி புரிந்தால்தான் தக்க எதிர்வினைகளை ஆற்ற முடியும் என்பதால் மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்கும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

 

மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல் என்ற உணர்வே வராத அளவிற்கு தமிழாக்கம் செய்த தோழர் இ.பா.சிந்தனுக்கு வாழ்த்துக்கள்.

 

 

 


2 comments:

  1. டோலர்..நோக்கு கூலி என்றால் என்ன? ஏன் நமது கட்சிகாரர்கள் வேலை செய்யாமல் சோம்பேறியாக அடுத்தவர்களிடல் நோக்கு கூலி வாங்கி பிச்சை எடுக்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பிச்சை எடுக்கும் இடத்தில் புது பிச்சைக்காரன் வந்து பிச்சை எடுப்பதை அனுமதிக்க மாட்டாய் அல்லவா? உன் பிச்சை, உன் உரிமை. சுலபமாக புரிவதற்கு இந்த உதாரணம்.

      Delete