Tuesday, September 7, 2021

நாசரின் கேள்வி மீண்டும் . . .

 உளுத்துப் போன உதவாத வாதம்

 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சதிச்செயலை, தேசத்தின் செல்வாதாரம் நாட்டின் கைகளிலிருந்து சில பெரிய மனிதர்களின் கைகளுக்கு மாறுவதை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி வெட்கம் கெட்டு முட்டு கொடுக்கிற பல மூடர்கள் மீண்டும் மீண்டும் முன் வைக்கிற ஒரே வாதம்

 “வணிகத்தில் ஈடுபடுவது அரசின் தொழில் அல்ல, ஆள்வதுதான் அரசின் வேலை”

 இது ஒன்றும் புதிய வாதமல்ல, கேட்டு கேட்டு புளித்துப் போன வாதம், சத்தில்லாத உளுத்துப் போன வாதம். மார்க்கரீட் தாட்சர் இங்கிலாந்திலும் ரொனால்ட் ரீகன்  அமெரிக்காவிலும் சொன்னதைத்தான் மோடி-நிர்மலா கூட்டாளிகளின் கண்டுபிடிப்புகள் போல பல மூடச் சங்கிகள் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

ரயில் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே இருந்த போது, கட்டுப்படுத்தும் வழி தெரியாத போது

 “Too much of Privatization, Too much of Privatization”

 என்று புலம்பினார் டோனி ப்ளேய்ர்.  தனியார்மயத்தை ஊக்குவித்த மார்க்கரெட் தாட்சருக்கு பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். 

 அரசு வணிகத்திலிருந்து  விலகி இருக்க வேண்டும் என்று சொன்ன அமெரிக்காவில்தான்

 “அரசே, கை கொடுத்து எங்களைக் காப்பாற்று”

 என்று கஜேந்திர யானையைப் போல அபயக்குரல் எழுப்பியது அந்நாட்டு பெரு முதலாளிகள், பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகள். இது நடந்து ரொம்ப நாட்கள் ஆகி விடவில்லை. பத்தாண்டுகள் முன்பு உலகப் பொருளாதார நெருக்கடியின் போது நிகழ்ந்தது.  இந்தியாவில் டாடாவோடு கூட்டாளியாக இருந்த ஏ.ஐ.ஜி நிறுவனம் திவாலின் விளிம்புக்கு போன போது 180 பில்லியன் டாலர்  கொடுத்து அமெரிக்க அரசாங்கம்தான் அதை காப்பாற்றி விட்டது. அந்த சமயத்தில்தான் அந்த நிறுவனம் இந்தியாவை விட்டு ஓடிப் போனது.

 வணிகத்தில் தலையிடக்கூடாத அரசு, முதலாளிகள் தடுமாறும் போது மட்டும் அரசு கஜானாவை திறந்து விடலாமா?

 வலிமையானதுதான் நீடிக்கும் என்று தத்துவம் பேசியவர்கள், மற்றவர்கள் மடிந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கலாமே! அரசுக்கு இங்கே வேலை இல்லை என்று ஒதுங்கிப் போகச் சொல்லி இருக்கலாமே! பின் என்ன எழவிற்கு ‘பெய்ல் அவுட்” கேட்டார்கள்?

 தேவர் மகனில் நாசர் கேட்ட கேள்வியைத்தான் மீண்டும் கேட்க வேண்டி உள்ளது.

 “அரசாங்கம் என்ன உம்ம மீசை ரோமம்னு நெனச்சீரா? நீ வேணாம்னா ஒதுங்கவும், வேணும்னா ஓடி வரவும்?”

 பிகு : சரி, ஆள்வதுதான் அரசின் வேலை என்று சொல்கிறார்கள்.

 சரி, ஓகே. ஏற்றுக் கொள்கிறோம்.

 அரசு என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டும்?

 அரசின் பொறுப்பு என்ன?

 இன்னொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

No comments:

Post a Comment