Thursday, April 30, 2026

கருத்துக் கணிப்பு எனும் கொசுத்தொல்லை

 


நேற்றைய கருத்துக் கணிப்பு ஆராய்ச்சி முடிவுகளை பார்த்த போது மனதில் தோன்றிய வார்த்தை "கொசுத் தொல்லை"

தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி மறு நாளே வாக்கு எண்ணிக்கையை நடத்தினால் மட்டுமே இந்த கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

Wednesday, April 29, 2026

யார் சிறந்த கலைஞர் மோடி?

 


கீழேயுள்ள இரண்டு நொடி காணொளியை அவசியம் பாருங்கள்.


படகில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொண்டு படமெடுக்கிற மோடி சிறந்த புகைப்படக் கலைஞரா?

அவரை அவர் விரும்பும் கோணங்களில் புகைப்படமும் காணொளியும் எடுத்தவர் சிறந்த புகைப்படக் கலைஞரா?

மோடியிடம் வேலை பார்க்கும் புகைப்படக் கலைஞர்கள் வேறு இடங்களில் வேலை பார்க்கப் போனால் மிக நல்ல பெயர் எடுப்பார்கள். மோடியால் அவர்களின் உழைப்பு காமெடியாகி வீணாகி விடுகிறது. 

இதுவும் திமுக சதிதானே விஜய்?

 


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.


இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.

கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.

இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.

Tuesday, April 28, 2026

மாட்டுச்சாணத்திற்கு வெங்காயம் மேல்

 


கோடை வெப்பத்தை சமாளிக்க மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை காங்கிரஸ் கட்சியிலிருந்து தன் கோஷ்டியோடு தாவி ம.பி யில் பாஜக அமைச்சகத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக மத்திய அமைச்சர் பதவியென்ற எலும்புத்துண்டை  ருசித்துக் கொண்டிருக்கும் ராஜ வம்சத்து வாரிசு ஜோதிராதித்யா சிந்தியா சொல்லியுள்ளார்.


இப்படி ஒரு சுலபமான வழி இருப்பது தெரியாமல் நான் வீட்டிற்கு ஏ.சி போட்டு பணத்தை விரயம் செய்து விட்டேன்.

கடந்த வருடம் ஒரு கல்லூரி முதல்வர் இன்னொரு அறிவியல் கண்டுபிடிப்பை தன் கல்லூரியில் அமலாக்கினார்.


வகுப்பறைகளின் சுவரில் மாட்டுச்சாணம் பூசினார் அவர். அந்த காலத்தில் வீடுகளின் தரைகளில் சாணி மொழுகினார்களே என்று நியாயப்படுத்தினார்கள் பலர். அவர்கள் எல்லாம் தங்கள் வீட்டின் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிக் கொண்டார்களா என்பதுதான் தெரியவில்லை.

மாட்டுச்சாண தொழில் நுட்பத்திற்கு வெங்காய தொழில் நுட்பம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வு, வெங்காயம் அழுக அழுக புதிதாய் வைப்பது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு, மாட்டுச்சாண நாற்றத்தில் வாழ்வதை விட மேல். 

வெங்காயத்தை கக்கத்தில் வைத்து காய்ச்சல் வரவழைக்கிற டெக்னிக் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த வெங்காய விஞ்ஞானி சொல்றதை பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அங்கிருப்பவர்களிடமும் சோதித்துப் பார்க்கவும்.

மேலே நீல நிறத்தில் இருப்பது தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய பதிவு.

என்னுடைய ஆலோசனை மாறானது.

வெங்காய தொழில் நுட்பத்திற்கு மாறாக மாட்டுச்சாண தொழில் நுட்பத்தை மாட்டுக்குண்டர்கள் சூழ் பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அப்படியென்றால் வெங்காய தொழில் நுட்பத்தை எங்கே பயன்படுத்துவது?

கண்டிப்பாக நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரின் வீட்டிலும் அலுவலகத்திலும்  . . .

அப்போதாவது அவர் வெங்காயத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம். 

Monday, April 27, 2026

அத்வானி, நிதீஷ்குமார் அடுத்து நாயுடு

 


வளர்த்த கடா மார்பில் பாயும் என்ற பாடத்தை முதலில் அத்வானிக்கு மோடி கற்றுக் கொடுத்தார்.


அந்த பாடத்தை நிதீஷ்குமாருக்கு சாம்ராட் சவுத்ரி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


முதல் பாடம் பாஜகவிற்குள்ளேயே நடந்தது.
இரண்டாவது பாடத்தை பாஜக, கூட்டணிக் கட்சிக்கு கற்றுக் கொடுத்தது.

அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ளப் போகிறவர்

சந்திரபாபு நாயுடு.

நேரடியாக பாஜக உறுப்பினராக இல்லாவிட்டாலும்  ஆர்.எஸ்.எஸ் சங்கிக்கான அத்துணை குணாம்சங்களும் கொண்ட பவன் கல்யாண்தான் அந்த பாடத்தை நாயுடுவிற்கு கற்றுக் கொடுப்பார்.


அது எப்போது என்பதுதான் கேள்வி . . .

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Sunday, April 26, 2026

கேஜ்ரிவால் பகைத்துக் கொண்ட இருவர்

 


கேஜ்ரிவால் எடுத்த ஒரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்படுவதாக நேற்று நான் எழுதியிருந்தேன்.

கீழேயுள்ள நியூஸ் கார்டை படியுங்கள்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் ஸால் காவி மயமாக்கப்பட்ட நீதிபதிகளையும் குறை சொன்னால் விடுவார்களா?

மாநிலங்களவையின் ஏழு எம்.பி க்களோடு பாஜக திருப்தி அடையாது.

பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க இப்போது கட்சி மாறிய கருங்காலிகளை பயன்படுத்தி கலகம் செய்ய கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். இப்போதாவது அரவிந்த் கேஜ்ரிவால் விழித்துக் கொள்ளட்டும். தன்னைப் பற்றிய அதீத மதிப்பீட்டிலிருந்து வெளியே வரட்டும். 


Saturday, April 25, 2026

கட்டை விரல் கவிதையை காப்பியடிக்கும் துரோணர் கூட்டம்

 


தேர்தலுக்கு முன்பாக கவிஞர் பழனிபாரதி முகநூலில் பகிர்ந்து கொண்ட கவிதை கீழே . . .


இந்த கவிதையை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ஏகலைவனின் கட்டை விரலை காவு கேட்ட துரோணர் கூட்டத்து வாரிசான பாஜக சங்கி ஒருவரும் அந்த கவிதையை பகிர்ந்து கொண்டு பாஜகவிற்கு ஓட்டு கேட்டதுதான்.




இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா!


AAP - பிய்ந்த துடைப்பம்


 
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரில் ஏழு பேர் அங்கிருந்து பாஜகவிற்கு தாவி தங்களை மோடி வாஷிங் மெஷின் மூலமாக புனிதமாக்கிக் கொள்கிறார்கள். 

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியாகி விட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்துவது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவர்கள் சென்று சேருமிடம் பாஜக என்பதுதான் காமெடியாக இருக்கிறது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது இன்னொரு காமெடி.

யாரும் தனியாக கட்சி மாறக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு ஆட்களோடுதான் கட்சி மாற வேண்டும் என்ற விதி பாஜகவிற்கு மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்சித்தாவல் சில உண்மைகளை உணர்த்தி விட்டு போயுள்ளது.

எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று முழக்கங்கள் மூலம் உருவாகும் கட்சி கண்ணாடி போன்றது. எப்போது வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக நொறுங்கிப் போகும். எதிர்கால தவெக நிலைக்கு இது ஒரு முன்னோட்டம்.

கொள்கைகள் அற்ற கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது பாஜகவிற்கு மிகவும் சுலபம் என்று தெரிகிறது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜக என்ன செய்யும் என்பதற்கான முன்னோட்டம் இந்த சம்பவம்.

ராகவ் சாதா என்ற அந்த சின்ன பையனுக்கு ராஜ்ய சபை துணைத்தலைவர் பதவி கொடுத்தது கேஜ்ரிவாலின் முதல் தவறு. அதை பறித்த முறை இன்னொரு தவறு. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அங்கே பதவியை பறிப்பதற்கு பதிலாக ராஜ்யசபை தலைவருக்கு கடிதம் அனுப்பியது ஜனநாயக நடைமுறை அல்ல. அப்போதே சிக்கல் வரும் என்று நினைத்தேன். 

அதை விட கேஜ்ரிவால் எடுத்த இன்னொரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்பட்டேன். அதுதான் நடந்துள்ளது. 

அது என்ன முயற்சி?

நாளை பார்ப்போம். 

Friday, April 24, 2026

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா?



 உலகத்தில் உள்ள,

ஏன் தமிழ்நாட்டில் உள்ள

தமிழர்கள் யாருக்குமே தெரியாத ஊரில்தானா

1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் வாழ்ந்திருந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா, அழகப்பா ஆரம்பப்பள்ளியில் மூன்றாவது முதல் ஐந்தாவது வரையிலும் அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் ஆறாவது முதல் எட்டாவது வரையிலும் படித்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊழில்தான் என் இரண்டு அக்காக்கள் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் B.ED  படித்தார்கள்! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அவர்கள் இருவரின் திருமணமும் நடந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அழகப்பர் கலைக் கல்லூரியில் வள்ளல் அழகப்பர் சிலை திறந்து வைக்க திறந்த ஜீப்பில் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சாலையோரத்தில் நின்று பார்த்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரிலா 1977 மக்களவைத் தேர்தலின் போதும் சட்டமன்றத் தேர்தலின் போதும் கலைஞர், எம்.ஜி.ஆர், சோ, ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்துச் சென்றார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் ஜனதா கட்சியின் மாநாடு நடக்க, அந்த மாநாட்டிற்கு வந்த அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பின்னாளில் அவரைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங், பிரதமராகும் கனவில் இருந்த ஜகஜீவன் ராம், பல வருடங்கள் கழித்து வி.பி,.சிங்கை கவிழ்த்து பிரதமரான சந்திரசேகர் ஆகியோரை பார்க்க குடும்பத்தோடு சென்றோம்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா ராமவிலாசம், அருணாச்சலா, நடராஜா, நியூ சினிமா ஆகிய தியேட்டர்களில் குடும்பத்துடனும் பின்பு நண்பர்களோடும் தனியாகவும் திரைப்படங்களை பார்க்கப் போயிருந்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் பூச்சொரிதல் விழாவின் போது அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடக்கும்! கொப்புடையம்மன் கோயில் பக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐயப்பன் பாடல்கள் புகழ் கே.வீரமணி, பைலட் பிரேம்நாத் படத்தில் வரும் "ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்?" பாடலை டி.எம்.எஸ் ஸை விட கொடூரமாக பாட  நண்பர்கள் நாங்கள் தெறித்து ஓடி வந்தோமே! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானே சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வரிசை வீட்டில் ஒரு குடும்பத்தை வசிக்க வைத்திருந்த நெடிதுயர்ந்த உருவம் கொண்ட கவியரசு கண்ணதாசன், காலை வேளையில் அந்த மனைவியின் கரம் கோர்த்து நடைப் பயிற்சி செய்வதை பார்த்து பிரமித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா கோடைக்காலத்தில் நடைபெறும் ராமாயண, மகாபாரத உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான், உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் தொப்பியும் பஞ்சு மிட்டாய் கலரில் சட்டையும் பச்சை கலர் பேண்டும் , கிட்டத்தட்ட எப்போதுமே அதே விந்தையான கலர் காம்பினேஷனில் உடை அணிந்து எங்கள் நண்பர்கள் குழாமால் காமெடியனாக கருதப்பட்ட  அந்த பயிற்சிக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியர் ஹரிஹர சர்மா (இந்நாள் கலவர சங்கி எச்.ராசாவின் தந்தை) சைக்கிளில் உலவியது நினைவில் உள்ளதே!

யாருக்குமே தெரியாத  அந்த ஊரில்தானே அரச நர்த்தகியாக இருந்த சொர்ணமுகியின் நடனத்தையும் குறிப்பாக பாம்பு நடனத்தையும் கங்கை அமரன், எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை காலி செய்து விட்டு நெய்வேலி புறப்படும் நாளின் முதல் நாளன்று நண்பன் பி.ரமேஷுடன் "ஆனந்த ராகம்" திரைப்படம் பார்த்து விட்டு சோகமாக வந்ததன் காரணம், திரைப்படம் கொடுத்த சோகமா இல்லை ஊரை பிரியும் சோகமா என்று இன்று வரை புரியாமல் இருக்கிறதே!

சரி, மேலே சொன்னதெல்லாம் சொந்தக்கதை.

இனி பொது விஷயங்களுக்கு வருவோம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா 1948 லேயே பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute,) ஐ துவக்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் வள்ளல் அழகப்பர், கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றை உருவாக்கி இன்று  பல்கலைக்கழகமாக உருவெடுக்க வைத்தார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1977 சட்டமன்றத்  தேர்தலில் அதிமுகவின் பொ.காளியப்பனிடம் பின்னாளில் நிதியமைச்சரான ப.சிதம்பரம் 450 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போக, ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பல கட்சி மாறிய பழ.கருப்பையா தோற்றுப் போனதும் நடந்ததே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1939 லேயே கம்பன் அடிப் பொடி சா.கணேசன், கம்பன் விழாவை நடத்தத் தொடங்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை, தோற்பதற்காகவே இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் நின்று பிரபலமாக்கிய சீமான் அவர்களுக்கு நன்றி. 

அவர் மட்டும் சொல்லாவிட்டால் யாருக்குமே அந்த ஊரைப் பற்றி தெரிந்திருக்காது. 

ஆமாம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரின் பெயர் காரைக்குடி,

காரைக்குடி என்றொரு ஊர் இருப்பதே இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது.

நன்றி சீமான் அவர்களே!

அடுத்த முறை எங்கள் வேலூரில் நின்று தோற்று எங்களூரையும் பிரபலமாக்கவும். 




Thursday, April 23, 2026

அந்த (தேர்தல்) நாள் ஞாபகம் நெஞ்சிலே . . .

 


எங்களின் வாக்குச்சாவடி மிகச் சரியாக எங்கள் வீட்டிற்கு எதிரேதான் உள்ளது. சாலையை கடந்தால் போதும். காலையிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. கூட்டம் குறையும் போது வாக்களிப்போம் என்ற சிந்தனையில் உள்ளதால் இன்னும் வாக்களிக்கவில்லை.

ஆகவே ஒரு பழைய தேர்தல் நாள் (2011 சட்டமன்றத் தேர்தல்)  அனுபவத்தை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வது போல சொல்ல முடியாததால் ஐந்தாவது முறையாக பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் மைண்ட் வாய்ஸ் ஏற்கனவே கேட்டதால் அதற்கான பதிலும் மேலே உள்ள படத்தில் உள்ளது.

அடுத்த இரண்டு பதிவுகள் உங்களுக்கு நிச்சயமாக சுவாரஸ்யம் அளிக்கும். ஏனென்றால் அது நாங்கள் பட்ட அவஸ்தைகள். 


பள்ள இடையம்பட்டி தேர்தல் அனுபவங்கள்

 

தமிழக  சட்ட மன்றத் தேர்தலில்  அணைக்கட்டு  தொகுதிக்கு  உட்பட்ட   பள்ள இடையம்பட்டி  கிராமத்து  வாக்குச்சாவடிக்கு நுண் பார்வையாளராகபணிக்கு சென்றிருந்தேன். வேலூர் நகருக்கு மிக அருகாமையில் உள்ள கிராமம்தான்.   காலை ஐந்தரை மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆறே கால் மணிக்கெல்லாம்  சென்று விட்டேன்.  அடுத்த கிராமமான மேட்டு இடையம்பட்டியாக  இருந்தால் வண்டியில்  செல்வதுசிரமமாக இருக்கும் என்றார்கள். நான் வசதியாகவே போய் விட்டேன்.   

 

வாக்குச்சாவடிக்கு உள்ளே இருக்கும் அனுபவம் வேண்டும் என்பதால் இப்பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். வாக்குப்பதிவு  தொடங்கும்  நேரத்திற்கு  முன்பாகவே  மக்கள்  வாக்களிக்க  திரண்டு வந்து விட்டனர். நான் பணியில் இருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த பள்ளியிலேயே இன்னும் ஒரு வாக்குச்சாவடியும்  அமைந்திருந்தது. அங்கே இன்னும் அதிகக் கூட்டம். 

 

மாதிரி வாக்குப்பதிவு, பெட்டிக்கு சீல் வைத்தல்  போன்ற சடங்குகள் எல்லாம்  முடிந்து  எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் எட்டு மணிக்கெல்லாம்  தேர்தல்  வாக்குப்பதிவு  தொடங்கியது. வரிசையில்  நிற்பதற்கோ அல்லது வரிசை மெதுவாக நகர்ந்தாலோ   ஒரு சின்ன முணுமுணுப்பு  கூட  இல்லாமல்  அமைதியாய்  இருந்தனர். வயதானவர்கள்கைக்குழந்தைகளோடு வந்தவர்களை  முன்னதாக வாக்களிக்க அனுமதித்ததை  ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை. நகரங்களில்  இது சாத்தியமில்லை  என்றே கருதுகிறேன். 

 

தேர்தல் தொடர்பாக  நாங்கள் கண்காணிக்க வேண்டியவை  என்று  ஒரு  படிவம் முப்பத்தி ஒன்பது கேள்விகளாக  தரப்பட்டிருந்தது.  அதைத்தவிர எனது பார்வையில்  நான் கண்ட சில காட்சிகள். 

 

என்பத்தி ஐந்து சதவிகித வாக்குப்பதிவு  நடைபெற்றிருந்தது. 638  வாக்காளர்களில்  540  பேர் வாக்களித்திருந்தனர். இதில் பெண்கள்தான்  அதிகம். 279 பெண்கள், 261  ஆண்கள்.  

 

பெண்களில் பெரும்பாலானவர்கள்  சுகாதாரமான, சத்தான உணவு  கிடைக்காதவர்கள். வறுமையின் பிடியில்  தவிப்பவர்கள். மஞ்சள் கயிற்றைத் தவிர  வேறு நகைகள்  எதுவும்  அணியாதவர்கள்.  ஆனால்  வாக்களிக்க ஆர்வம் காண்பித்தார்கள்.

 

ஆண்கள்   ரொம்ப யதார்த்தமாகத்தான்  இருந்தார்கள். மடித்துக் கட்டிய   வேட்டியையோ, கைலியையோ  கீழே இறக்கி விடாமல்தான் நின்றார்கள்வந்தார்கள், வாக்களித்தார்கள், சென்றார்கள். குறைந்த பட்சம்  ஐம்பது சதவிகித ஆண்கள்  குடித்து விட்டுத்தான்  ஒட்டு போடவே  வந்திருந்தார்கள்.  விடுப்பில் இருந்த  ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் போதையில் தகராறு  செய்தாரே தவிர மற்ற குடிமக்கள் அமைதியாகவே  வந்து போனார்கள். பல இளைஞர்கள்  வாக்களித்த பிறகுதான் பாட்டிலை தொட வேண்டும் என்று வாக்களிப்பதை  ஏதோ  விரதம் இருப்பது போல பேசிக்கொண்டிருந்தார்கள்.  டாஸ்மாக் விடுமுறைக்கெல்லாம்  எந்த மரியாதையும் இல்லை  என்று புரிந்தது.

 

வெப் காமரா மூலம் ஒவ்வொருவரும் படம் பிடிக்கப்பட்டனர். அதன்  விளைவு என்னவானது என்றால் பலரும் கையில் மையிட்டு, கையெழுத்தோகைநாட்டோ  போட்ட பின் வெப் காமரா பக்கம் போனார்களே  தவிர, வாக்களிக்கும்  இடத்திற்கு செல்லவில்லை. வோட்டு போட வேண்டாமா என்று சொல்லி சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. 

 

குறைந்தது அறுபதிலிருந்து  எழுவது  பேராவது  அடையாள மையை அழித்து விட்டார்கள். அவர்களை திட்டி மீண்டும்  ஒரு முறை மை வைக்க வேண்டியிருந்தது.  

 

பாமக, தேமுதிக ஆகியோர் போட்டியிட்ட தொகுதி அணைக்கட்டு தொகுதி.  இரு கட்சிகளின் முகவர்களும்  வாக்கு பதிவு தொடங்கும்  போது அக்னி நட்சத்திரம் பிறப்பு கார்த்திக் போல உர் உர்  என்று  முறைத்துக் கொண்டே இருந்தாலும் போக போக நெருக்கமாகி விட்டனர்.

 

ஒரே ஒரு கல்லூரி மாணவன் மட்டும் வாக்களிக்க விருப்பமில்லை, 49   பயன்படுத்தப் போகின்றேன்  என்றான். தேர்தல் அலுவலர் ஒருவர் அம்மாணவனை  சமாதானப்படுத்தி   வாக்களிக்க வைத்து விட்டார்.  ஏன்  அப்படி செய்தீர்கள்  என்பதற்கு அவர் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?  49  ஒ போட்டால்  ஏராளமான பணி இருக்கிறது. இரண்டு மூன்று ரிஜிஸ்தர் எழுத வேண்டும், பல புள்ளி விபரம் தர வேண்டும்.  இந்த சனியனேல்லாம்  எதுக்கு ? என ஒரே போடாக  போட்டார். 

 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான் வாக்களிப்பதில்  ஆர்வமாக உள்ளனர்  என்பதுதான்  எனது அனுபவம்  சொல்லும் உண்மை. 

 

நுண் பார்வையாளராக நான் பட்ட அவஸ்தைகள் உள்ளதே  அவற்றை தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.

 

Wednesday, April 22, 2026

விஜய் ரசிகர்கள் -திருத்தப்பட வேண்டியவர்கள்

 


கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.


என்ன?

மிகவும் எரிச்சலாக இருக்கிறதா?

இவர்களையெல்லாம் போட்டு வெளுக்க வேண்டுமென்று கோபம் வருகிறதா?

ஆம்.

எனக்கும் அப்படித்தான் வந்தது.

ஆனால்

அது அவர்களின் குற்றமா?

அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்தாத அந்த கட்சித் தலைமையின் குற்றம்.

41 உயிர்கள் பறி போவதற்கு தன் சோம்பேறித்தனமும் தேவையின்றி செய்த தாமதமும்தான் காரணம் என்பதைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத விஜய், ஆணவமும் பொறுக்கித்தனமுமே குணாம்சமாக கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுயநலமே வடிவான புஸ்ஸி ஆனந்த், இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம் என்று தாவும் வாச்சாத்தி குற்ற பிரபலம் செங்கோட்டையன் இன்னும் பல உதிரித்தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்!

விஜய்யின் பொறுப்பற்ற திரைப்பட வசன பாணி பேச்சுக்களைத்தைத்தான் அரசியல் என்று கருதிக் கொள்பவர்களும் அது போலத்தானே இருப்பார்கள்!

இவர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் நிச்சயமாக பெரிய வெற்றி எல்லாம் பெற்று முதலமைச்சர் எல்லாம் ஆகப் போவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில் இவர்களின் மன நிலை என்ன ஆகும்? இவர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்குறிகள், பைத்தியங்கள் என்று ஒதுக்கித் தள்ளிப் போவதை விட இவர்களோடு பேசுவதும் உண்மைகளை உணர வைப்பது, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதுமே முக்கியமான பணியாகும்.

அந்த பணியை செய்யும் தார்மீகத் தகுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

ஜனநாயகம் காக்கும் ஜனநாயகக் கடமை

 எங்கள் வேலூர் கோட்டச்சங்க இதழான "சங்கச்சுடர்" தேர்தல் சிறப்பிதழிற்காக எழுதிய கட்டுரை.

இக்கட்டுரை எங்கள் சங்கத்தின் தோழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற அனைவருக்குமானது.



ஜனநாயகம் காக்க ஜனநாயகக் கடமையாற்றுவோம்

-          வேலூர் சுரா

 

சங்கச்சுடர் தேர்தல் சிறப்பிதழிற்காக இக்கட்டுரையை எழுதத் துவங்கிய இத்தருணத்தில் புதுச்சேரியிலும் கேரளத்திலும் வாக்குப்பதிவு துவங்கியிருந்தது. கேரளத்தில் மூன்றாவது முறையாக இடது முன்னணி வெற்றி பெற்று சாதனை படைக்கும், “இந்தியா” அணிக்குள் குழப்பங்கள் ஆயிரமிருந்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக டபிள் இஞ்சின் அரசு எனும் செயலற்ற அரசு புதுச்சேரியில் வீழும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் நமது பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை முன் வைக்க விழைகிறேன்.

 

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. சுவையான, சூடான, அர்த்தமிக்க மேடைகளின் களமாக திகழ்ந்திருந்த தமிழ்நாடு இத்தேர்தலில் கீழ்த்தரமான, ஆபாசமான உரைகளை கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உரைகளே இப்போக்கிறகு சான்று.

 

நான்கு முனைப் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் சொல்கின்றன. பொய்க்கதைகள் மூலம் போலித் தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பேற்றி வரும் திரு சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு பொருட்படுத்தக் கூடிய அளவிற்கு வாக்குகள் இதுவரையில் விழுந்தது இல்லை என்பதால் அவர்களை போட்டியிலிருந்து நாம் விலக்கி விடலாம். ஆனால் அவர்களுக்கு விழும் வாக்குகள் என்பது குறைவாக இருந்தாலும் தவறாக வழி நட்த்தப்படுவர்கள் அளிக்கும் வாக்குகள் என்பதால் அவை ஆபத்தானவை. மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துபவை.

 

அதே போலத்தான் நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. திரை மூலம் கிடைத்த பிம்பத்தை பயன்படுத்தி அரசியலுக்கு மூலதனமாக்குகிறார். எந்த வித கொள்கைத் தெளிவும் இல்லாத்து மட்டுமல்ல பொறுப்பற்ற செயல்பாடும் இக்கட்சியின் மீது நம்பிக்கையின்மையை மட்டுமே உருவாக்கியுள்ளது. தன் ரசிகர்களை/தொண்டர்களை பல மணி நேரம் தேவையின்றி காக்க வைத்ததுதான் கரூரில் நிகழ்ந்த மிகப் பெரிய துயரமான 41 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்காமல் சதிக் கோட்பாடு தீட்டுவதெல்லாம் நேர்மையின்மையின் வெளிப்பாடு. பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ச்சியாக ரத்து செய்வது, மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னாலும் அதன் செயல்பாட்டைப் பற்றி சிறு விமர்சனம் கூட செய்யாமல் இருப்பது, மக்களின் எந்த பிரச்சினையைப் பற்றியும் கவலைப்படாத்து என்று ஒரு பட்டியலே இவர்களைப் பற்றி தயாரிக்க முடியும். ஒரு மிகப் பெரிய இளைஞர் பட்டாளம் இக்கட்சியின் பின்னாள் தவறாக திரண்டு வருவதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்று. இவர்களை அரசியல் படுத்தி நெறிப்படுத்துவதுதான் முற்போக்கு சக்திகள் முன்னே இருக்கிற பெரும் கடமை. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி மட்டுமே இக்கட்சியின் மீதான மாயையை தகர்க்கும்.

 

மீதமிருப்பது இரண்டு அணிகள். திமுக, இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள், தேமுதிக, காங்கிரஸ் ஆகியோர் ஒரு அணியாகவும் அதிமுக, பாஜக, பாமக, அம்முக ஆகியோர் இன்னொரு அணியாகவும் மோதுகின்றனர். சீமான், விஜய் ஆகியோர் தாங்கள்தான் முக்கிய போட்டியாளர்கள் என்று உரத்த குரலில் கூச்சலிட்டாலும் திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் இடையில்தான் போட்டியே.

 

இடதுசாரிகள் இடம் பெற்றுள்ள அணியை வெற்றி பெறச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் பாஜக இடம் பெற்றுள்ள அணியை வீழ்த்துவது. 12 ஆண்டு கால மத்திய ஆட்சி ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் சிதைத்து விட்டது. மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் கார்ப்பரேட் பாசத்திற்கு நம்முடைய எல்.ஐ.சியும் விதிவிலக்கல்ல. நம் நிறுவனத்தின் 3.5 % பங்குகள் விற்கப்பட்டது மட்டுமல்லாமல் மேலும் விற்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் முகவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கவும் தொடர்ந்து முயல்கின்றனர். இந்திய மக்களின் சேமிப்பை வெளி நாட்டுக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டு ஓட வழி வகுக்கும் படி அன்னிய மூல தன வரம்பு நூறு சதவிகிதமாக உயர்த்தப் பட்டு விட்டது. எனவே ஒரு இன்சூரன்ஸ் ஊழியராக இந்த அணி தமிழ்நாட்டில் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

 

நிறுவன நலன் என்று மட்டும் நம் பார்வையை சுருக்கி விடக்கூடாது. முன்னர் சொன்னது போல அனைத்து ஜனநாயக விழுமியங்களும் சுயேட்சையான அமைப்புக்களும் சீர்குலைக்கப் பட்டு விட்டது. பாஜக வினருக்கு ஆதரவாக வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையை பறிக்க SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறி போய் விட்டது. வேலையின்மை பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ போன்றவை ஒன்றிய அரசின் ஏவல் படைகளாகி விட்டது. இன்றைக்கு பல நீதிபதிகள், தீர்ப்புக்கள் எழுதுவதில்லை, பணி ஓய்வுக்குப் பிந்தைய புதிய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மையோ என்று நினைக்கும் வண்ணம் பல தீர்ப்புக்கள் அரசியல் சாசனத்திற்கு முரணாக எழுதப்படுவதை நாம் பார்க்கிறோம்.

 

இந்தியாவின் சிற்ப்பான பன்முகத் தன்மையை ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்று மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மதச்சார்பின்மை என்ற மிகப் பெரும் கோட்பாட்டை அரசு அழிக்க விரும்புகிறது.  இப்பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத உணர்வுகள் உசுப்பேற்றப்படுகின்றன. மத வெறி தூண்டப்பட்டு கலவரங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன. இப்படிப்பட்ட மோசமான முயற்சிகளை அவர்கள் தமிழ்நாட்டிலும் அரங்கேற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றது ஜி.எஸ்.டி யில் உரிய பங்கை அளிக்க மறுத்து வருகிறது. ஏற்கனவே துவக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்காதது மட்டுமல்ல, மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கும் அனுமதி மறுத்து விட்டது. புதிய கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை அளிப்போம் என்று மிரட்டி வருகிறது. மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையால் விளைச்சல் பெருகி வருவதால் நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது. இந்தி திணிப்பை நிறுத்த தயாராக இல்லை. மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனை கட்டுமானம் கானல் நீராகவே நீடிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மோசம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சித்து வருவதுதான்.

 

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தே இது நாள் வரை கார்த்திகை தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில்தான் ஏற்றுவோம் என்று சாதகமான ஒரு நீதிபதியின் உதவியோடு எண்ணற்ற குழப்பங்களை செய்தார்கள். அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாய் வாழும் பாரம்பரியம் கொண்ட மாநகரமாக மதுரை இருப்பதால் அவர்களின் சதி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக சொல்படி கேட்கும் அடிமையாக தன்னை தக்கமைத்துக் கொண்டு விட்ட்து. அதனால் இந்த அணியை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியது தேசத்தை நேசிப்பவர்களின் ஆகப் பெரும் கடமையாகும்.

 

சரி, நம் ஆதரவு யாருக்கு?

 

துவக்கத்திலேயே சொன்னது போல இடதுசாரிகள்  இடம் பெற்றுள்ள திமுக அணியை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

 

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டுகளை அலச வேண்டியதும் அவசியம். அந்த ஆட்சியின் பலம், பலவீனம் இரண்டையுமே உழைக்கும் மக்களின் பார்வையில் பார்த்திட வேண்டும். கல்விப்புலத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் இக்காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. காலை உணவுத் திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் உரிமைத் தொகை, கட்டணமில்லாத பேருந்துப் பயணம் ஆகியவை ஏழை எளிய பெண்கள் முன்னேற வழி அளித்துள்ளது. சமூக நீதியை நிலை நாட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

 

ஆளுனர் மூலம் தமிழ்நாட்டினை கலவரக்காடாக மாற்ற முயற்சி செய்த போது அதற்கு வாய்ப்பு தராமல் உறுதியாக இருந்த்து பாராட்டத்தக்கது. மத உணர்வை உசுப்பேற்றுவர்கள் முயற்சி எடுபடாமல் போனது. வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தக்க் காட்சிகள் அமைக்கப்பட்ட்து, மதுரையில் சர்வதேசத் தரத்தில் நூலகம், சுயேட்சையாக செயல்பட வேண்டிய சாகித்ய அகாடமியின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட்டு விருதுகளை முடக்கிய போது, செம்மொழிகளுக்கும் தமிழ்நாட்டு அரசின் சார்பில் விருது தருவது ஆகியவை முக்கியமான முன்னெடுப்புக்களாகும். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியிலும் முன்னேற்றம் உள்ளது. ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆணையம் அமைத்துள்ளது நாம் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பணியில் முன்னணியில் உள்ள மாநிலங்களாக கேரளமும் தமிழ்நாடுமே உள்ளது. அந்த நிலைமை நீடிக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

 

குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இல்லை. கார்ப்பரேட்டுகளா, தொழிலாளர்களா என்று வரும் போது பெரும் தடுமாற்றம் உள்ளது. சாம்சங் போராட்டத்தின் போது இதனை பார்த்தோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்ட்த்தை கையாண்டதும் ஒரு பெரிய நெருடல்தான்.  புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. காவல்துறையின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சர்கள் ஆணவமாக பேசுவதும் மக்களிடம் எரிச்சல் ஏற்படுத்துகிறது. அடுத்து வரும் ஆட்சிக் காலத்தில் இத்தவறுகள் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்த நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

 

அந்த உரிமையை நாம் பயன்படுத்த இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும். தற்போதைய ஆட்சி தொடர்ந்தால்தான் அது சாத்தியம். அதற்காக வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை முழுமையாய் பயன்படுத்துவோம். 


Tuesday, April 21, 2026

சீமான் கட்சி வேட்பாளர்கள் உத்தமர்களா? டீலிங்கா?




 ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற அமைப்பு ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுக்களின் அடிப்படையில் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன் அடிப்படையில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்ட் கீழே உள்ளது.


இங்கே உள்ளது கடுமையான குற்றங்களான கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொள்ளை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் விபரங்கள்.

இந்த பட்டியலில் எங்கள் கட்சியே இல்லை பாருங்கள், எங்கள் வேட்பாளர்கள் யாரும் குற்றப்பின்னணி இல்லாதவர்கள் என்று சீமான் கட்சியினர் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியா? நிஜமா?

ADR இணைய தளத்திற்கு சென்று ஆராய்ந்தேன்.


சீமான் கட்சியின் 234 வேட்பாளர்களில் 34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள் என்று அறிக்கை சொல்கிறது.

விஜய் கட்சி இன்னமும் மோசம். 43 பேர் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்கள்.

இதில் மிகவும் மோசம் அதிமுகதான். இங்கே 60 பேர்.

இதிலே எந்த மோசமான குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள், எங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.

தளி ராமச்சந்திரனால் சி.பி.ஐ அந்த பெருமையை இழந்துள்ளது.

சீமான் கட்சியைச் சேர்ந்த  34 வேட்பாளர்கள் கடுமையான குற்றச்செயல் புரிந்தவர்களாக இருந்தாலும் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ஏன் அந்த கட்சியின் பெயர் வரவில்லை.

க்யாரே டீலிங்கா? 

ஆஸ்பிடல் சீனையாவது காப்பியடிக்க வேண்டாம் விஜய்

 


ஊடகவியலாளர் தோழர் கவின்மலர் அவர்களின் முகநூல் பதிவும் அவர் பகிர்ந்த புகைப்படங்களும் கீழே உள்ளது.

பவன் கல்யாண் என்னென்னவெல்லாம் செய்தாரோ அவற்றை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்ததுபோல செய்து வந்தார் விஜய். பவன் கல்யாண் பரப்புரையில் எடுத்த படங்கள் வீடியோக்களையும் விஜய் பரப்புரையில் நடந்தவற்றையும் ஒப்பிட்டு நிறைய பேர் ஆதாரங்களோடு எழுதிவிட்டார்க்கள்.




1) கூலிங் கிளாஸ்
2) இளநீர்
3) கூல் ட்ரிங்க்ஸ் கேட்ச்
4) வில் அம்பு
5) சைக்கிள்
6) புதுமண ஜோடிக்கு பிரசார வாகவனத்தில் ஆசி
7) சிறுவனை தோளில் தூக்குதல்
விடுபட்டவை இருக்கலாம்.
இதுவரை விஜய் செய்யாதது ஒன்று மிச்சமுள்ளது. பவன்கல்யாண் தேர்தலுக்கு முன் உடல்நலக்குறைவு எனச் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்தார். Series of incidents பார்க்கையில் இதுவும் நடந்தாலும் ஆச்சரியமில்லை.

நடந்தாலும் நடக்கலாம் என்று ஒருவர் அதற்கான பின்னூட்டத்தில் ஒரு புகைப்பட மாதிரியை பகிர்ந்திருந்தார். அதை நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

தோழர் கவின்மலர் பதிவில் விடுபட்ட விஷயம் ஒன்று உண்டு.

அதுதான் சர்ச்சில் போட்ட சீன்



ஐயா விஜய், இது நாள் வரை காப்பியடித்தது போது. குறைந்த பட்சம் ஆஸ்பிட்டல் சீனை மட்டுமாவது காப்பியடிக்காமல் இருக்கவும்.

இது உங்கள் மீதான அக்கறை எல்லாம் ஒன்றுமில்லை. தெலுங்கு படங்களை காப்பியடித்துத்தான் உங்களுடைய நிறைய படங்கள் அமைந்திருந்தது.

தமிழ்நாட்டு அரசியல்வாதி, ஆந்திரா அரசியல்வாதியை காப்பி அடித்து அரசியல் சீன் போட்டார் என்று தமிழ்நாட்டுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்ற அக்கறைதான்.

Monday, April 20, 2026

குஜராத்தில் குழந்தைகள் குறையுது. செலவு ???????

 


குஜராத் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் 

2022-23 ம் ஆண்டில் 42,21,257 குழந்தைகளுக்காக 1,035.84 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அதுவே

2024-25 ம் ஆண்டில் பயன் பெற்ற குழந்தைகள் எண்ணிக்கை 40,44,689. 

ஆனால்

செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தொகை 1,626.08 கோடி ரூபாய்.

1,76,568 குழந்தைகள் குறைந்துள்ளனர்.

ஆனால் செலவு மட்டும் 590.26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு என்று காரணம் சொல்கிறார்கள்.  

என்னத்தான் விலைவாசி உயர்வு என்றாலும் குறைந்த குழந்தைகள் எண்ணிக்கை அதை ஈடு செய்து விடும்.

மாறாக உயர்கிறது என்றால் 

அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான்.

ஊழல்.

குழந்தைகளின் உணவைச் சொல்லி கொள்ளையடிப்பதுதான்  குஜராத் மாடல்.

இதிலே கவலையளிக்கிற ஒரு தகவலும் இருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகள் குறைகிறது என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது என்பதன் அடையாளமும் கூட. 

இப்படிப்பட்ட மோசமான குஜராத் மாடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டுமா மிஸ்டர் எடப்பாடி?


சபாஷ் விஜய், சரியான வேட்பாளர்

 


விஜய்க்கு பாராட்டுக்கள். மிகச் சிறப்பான வேட்பாளரை சென்னை துறைமுகம் தொகுதியில் நிறுத்தியுள்ளார்.

அப்படியென்ன சிறப்பு?

நீங்களே காணொளியை பாருங்கள்.



மக்கள் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினால் டாஸ்மாக் பார் காட்சிகளை சட்ட சபையிலேயே அன்றாடம் பார்க்கலாம்.

பிகு: மற்ற கட்சி வேட்பாளர்கள் மிகவும் யோக்கியமா என்றெல்லாம் யாரும் அனாமதேயமாக வந்து பின்னூட்டமிட வேண்டும். இது போன்ற மோசமானவர்கள், கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். (தவறிழைப்பவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுத்து நீக்கி விடும்) ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வளவு மோசமாக யாரும் நடந்து கொண்டதில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் கௌதம் கம்பீர் கூட ஒரு டூப்பைத்தான் தனக்கு பதிலாக ஜீப்பில் நிற்க வைத்தாரே தவிர, வழக்கமான மோசமான மிரட்டல் மொழியில் பேசவில்லை.

Sunday, April 19, 2026

மகளிர் மசோதா-சரியாகத்தான் சொன்னார் பேரா.காதர் மைதீன்

 


மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்காமல் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தடுத்து பாவம் செய்து விட்டார்கள் என்று பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கச் சொல்லி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் சொல்லி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் கொடுத்தது. (மகளிர் மசோதாவிற்காக எங்கள் சங்கம் நடத்திய இயக்கங்கள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். ஒரு நூலுக்காக தொகுத்தது உள்ளது. அதனால் பகிர்வது சுலபம்)

வேலூர் எம்.பி யாக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்தோம்.



அப்போது அவர் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார்.

காங்கிரஸ், பிஜேபி என்றெல்லாம் இல்லை, எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் எம்.பி க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீடு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய தொகுதி பெண்களுக்கான தொகுதியாக மாறினால் அவர்களின் அரசியல் முடிந்து போகும் என்ற அச்சம் உள்ளது. எல்லாராலும் லாலு தன் மனைவியை முதல்வராக்கியது போல மனைவியை எம்.பி யாக்க முடியாதல்லவா! அதனால் வாய்ப்பு குறைவுதான் என்று சொன்னவர் இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்.

டி.கே.ரங்கராஜன் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜ்யசபையில் இருக்கிறார். அவரை பாருங்கள். அந்த கட்சி வேண்டுமானால் இதற்காக குரல் கொடுப்பார்கள் என்பதுதான் அவர் ஆலோசனை.

மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எதிர்க்கட்சிகள் பேசினால் முகத்தை கடுப்பாகவே வைத்துக் கொள்ளும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஆவேசமாக பேசிய பிஞ்சிலே வெம்பிப் போன தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு மகளிர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் இருந்தால் இப்போதுள்ள 543 என்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 33 % இட ஒதுக்கீட்டை அளிக்கலாமே! 

திமுக எம்.பி வில்சன் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளாரே, அதை பாஜக ஆதரிக்கலாமே!

செய்வார்களா?

பிகு: இந்த பதிவிற்கு தொடர்பில்லையென்றாலும் இன்றுள்ள சூழலில் இதனையும் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

நாங்கள் திரு காதர் மைதீன் அவர்களை சந்திக்க சென்ற போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது "திருவாசகம்" 

அவர் மேஜையில் இருந்த இன்னொரு நூல் "நாலாயிர திவ்விய பிரப்பந்தம்" 


Saturday, April 18, 2026

மோடியே ......................என்று சொல் ஆட்டுக்காரா

 


ஆட்டுக்காரன் விடுத்திருந்த இந்த வீர தீர சவாலை இப்போதுதான் பார்த்தேன்.


இந்த ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. மோடி துவக்கி வைக்கும் திட்டங்களில் எல்லாம் சொதப்பல் ஏற்படுவதால் சிலர் அவரை  பீடை, அவருடைய ராசியால்தான் பாலம் இடிகிறது, ரோடு பிளக்கிறது, வந்தே பாரத் விபத்துக்குள்ளாகிறது என்று  திட்டுவார்கள். அது மோடி பீடை என்பதால் அல்ல, மோடிக்காக காண்பிக்கிற அவசரத்தின் விளைவு, அதனால் செய்யப்படும் தரமற்ற கட்டுமானம், ஊழல் என்று சொல்வேன்.

ஆனால் ஆட்டுக்காரனின் ராசி மீது நம்பிக்கை வைக்கலமா என்று தோன்றுகிறது.

மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள கமா, புள்ளி யைக் கூட மாற்ற முடியாது என்று சொன்ன மறு நாளே, அவற்றை மோடி திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.

அடுத்த படியாக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்றார். ஆனால் அவரால் தற்குறி என்று திட்டப்பட்ட எடப்பாடியின் நிபந்தனைக்காக ஆட்டுக்காரனின் மாநிலத் தலைவர் பதவி மட்டும் பறி போகவில்லை, எம்.எல்.ஏ சீட் கூட கொடுக்கப்படவில்லை.

இப்போ லேட்டஸ்டாக தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று சொல்ல அந்த மசோதா பரிதாபமாக தோற்றுப் போய் விட்டது.

செந்தில் ஊளையிடுவதை பார்த்து விட்டு போனால் வடக்குப்பட்டி ராமசாமி வாங்கிய கடனை வசூலித்து விடலாம் என்று நம்பிப் போன கவுண்டமணியின் நிலைமையில் உள்ளது பாஜக.

அதனால் ஆட்டுக்காரன் அவர்களே,

மோடிதான் எங்கள் நிரந்தரப் பிரதமர் என்று சொல்லுங்களேன்.

துரத்தி விடப்பட்ட நிதீஷ்குமார் ஏதாவது செய்கிறாரா என்று பார்ப்போம்.