Thursday, September 2, 2021

ஏன்? ஏன்? ஏன்?

 *நாளொரு கேள்வி: 01.09.2021*


வரிசை எண் : *458*

 _*இன்று எல்.ஐ.சி பிறந்த நாள்*_ 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் *க. சுவாமிநாதன்*
##########################

*கிழிந்து விழுந்த நாட்காட்டி தாள் அல்ல...*
*அது வரலாற்றின் பக்கம்*

கேள்வி: செப்டம்பர் 1- எல்.ஐ.சி 66 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. நிறுவனத்தின் உருவாக்க நாளை அங்குள்ள தொழிற்சங்க இயக்கம் உணர்வு பூர்வமாக கொண்டாடுவது எப்படி நிகழ்கிறது?

*க.சுவாமிநாதன்*

 _" _அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்_

_நாட்காட்டியின் தாள் கிழிக்கப்பட்டது... ஆனால் அது வழக்கம் போல குப்பைக் கூடைக்கு போகவில்லை _

 __அது வரலாற்றின் பக்கமாக அமர்ந்து கொண்டது._

ஆனால் நாட்காட்டியின் தாள் கிழிந்ததால் இவ்வளவு பெரிய பொருளாதார முடிவு எடுக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் மக்களுக்கு இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, கனவு ஆகியவற்றால் இப்படியொரு முடிவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. மக்களின் இந்த குரலை 1951 இல் பிறந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது முதல் மாநாட்டில் முதன்மை கோரிக்கையாக எதிரொலித்தது. 

இம்முடிவை எடுத்த *பிரதமர் நேரு* அவர்களை, நிதியமைச்சர் *சி.டி. தேஷ்முக்* அவர்களை நாம் இன்று கொண்டாடுகிறோம். அம் மாபெரும் ஆளுமைகள் நினைவு கூரத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுக்க முடியவில்லை. ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு. *இத்தகைய பொருளாதாரப் பாதை பற்றிய விவாதத்தில்தான் காங்கிரஸ் கட்சியே உடைந்தது.* 1955-56 இல் இராஜாஜியின் சுதந்திரா கட்சி பிறந்தது. வங்கி தேசிய மயத்தின் போதும் காங்கிரஸ் 1969 இல் மீண்டும் உடைந்தது. இண்டிகேட் - சிண்டிகேட் என்று... அன்றைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பதவியே விலகினார். ஆகவே தேசியமய முடிவுகள் சாதாரணமானவை அல்ல. வரலாற்று சிறப்பு மிக்கவை. தேசிய மய முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்த நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் அம்முடிவை வாழ்த்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அனுப்பி இருந்த தந்தியையும் அவைக்கு பகிர்ந்து கொண்டார். 

எல்.ஐ.சிக்கு அதன் பின்னாலும் சோதனைகள் பல காத்திருந்தன. 1956 இல் 5 கோடி முதலீடோடு துவங்கப்பட்ட எல்.ஐ.சி இன்று 38 லட்சம் கோடி சொத்துக்களோடு வளர்ந்து நிற்கிறது என்றால் *குறைந்த முதலீட்டில் இவ்வளவு அபரிமித சேமிப்பை புழங்குகிற இவ்வளவு பெரிய துறையை தனியார்கள் விடுவார்களா? பன்னாட்டு மூலதனம் விடுமா?*

வரிசையாய் *1983 இல் துவங்கி 2021 வரை எத்தனை தாக்குதல்கள்!* எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக போடும் மசோதா, அமெரிக்காவின் வர்த்தக சட்டம் சூப்பர் 301, 1994 மல்ஹோத்ரா குழு அறிக்கை, 1997 இல் ஐ.ஆர்.ஏ மசோதா, 1999 இல் ஐ. ஆர்.டி. ஏ சட்டம், 2008 இல் எல்.ஐ.சி சட்டத் திருத்த குறு மசோதா, அந்நிய முதலீட்டு உயர்வு மசோதா, 2015 49% அந்நிய முதலீட்டு உயர்வு சட்டம், 2020 பட்ஜெட்டில் பங்கு விற்பனை அறிவிப்பு, 2021 இல் நிதி மசோதாவுக்குள் சொருகப்பட்ட எல்.ஐ.சி சட்டத் திருத்தங்கள், 74% அந்நிய முதலீட்டு உயர்வு சட்டம்... இவ்வளவையும் களத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒன்று விடாமல் எதிர்த்ததால்தான் அபாயங்கள் கைவிடப் பட்டதும், தள்ளிப் போடப்பட்டதும் நிகழ்ந்தது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி எல்.ஐ.சி தன்னை போட்டிக்கு தயார் செய்து கொண்டது. தொழில் நுட்ப ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டது. மக்கள் கருத்தும் எல்.ஐ.சிக்கு ஆதரவாக மலர்ந்தது.

உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முன்னுதாரணம். எனவே தொழிற்சங்க இயக்கம் தான் பாதுகாத்த ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை, பெருமையை உணர்ச்சிபூர்வமாக கொண்டாடுவது இயல்புதானே!

*செவ்வானம்*

No comments:

Post a Comment