Thursday, September 30, 2021

பூட்ட கேஸாகிடுமோ காங்கிரஸ்?

 

அவசியமான முன் குறிப்பு:

 அடுத்த கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி எழுதுவதில்லை என்றொரு சுய கட்டுப்பாடு வைத்துள்ளேன். அதனால்தான் படேல் ஜாதி வாக்குகளை முன்வைத்து குஜராத்தில் நடந்த முதல்வர் மாற்றத்தைப் பற்றிக் கூட எதுவும் எழுதவில்லை. அதனால்தான் பத்து நாட்களுக்கு முன்பு எழுதிய பதிவை பிரசுரிக்கலாமா, வேண்டாமா என்ற குழுப்பத்திலேயே இருந்தேன்.

 எந்த சித்துவின் பேச்சைக் கேட்டு பஞ்சாப்பில் முதல்வரை மாற்றினார்களோ, அதே சித்து அடுத்த கட்சிக்கு தாவ தயாராக இருப்பதும் காங்கிரஸ் அடையாளத்தோடு முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்கும் பாஜகவிற்கு மாற தயாராக இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்குள்ளாக சீனியர் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளதும் அவர்கள் வீட்டிற்கு முன்னே தொண்டர்களை வைத்து தகராறு செய்துள்ளதும் இத்தனை நாள் வெளியிடாத பதிவை பிரசுரிக்க வைத்து விட்டது.

 


 

அடுத்த கட்சியின் உட்கட்சி விவகாரங்களைப் பற்றி எழுதக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டையும் மீறி பஞ்சாப் மாற்றத்தினால்  காங்கிரஸ் கட்சியைப் பற்றி அதற்குள்ளே நடக்கும் குழப்பங்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அவர் மீதுள்ள “மீ டு” குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப் பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே முதல்வராய் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முடிவு சங்கிகளுக்குத்தான் பிரச்சாரம் செய்ய ஒரு பாயிண்ட் கொடுத்தது போல அமைந்து விட்டது.  அவர்களும் கேடி.ராகவனையும் சதானந்த கௌடாவையும் வசதியாக மறந்து விட்டு யோக்கியர்களாக நடிக்கும் கொடுமையை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

 இந்தியாவில் இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி

 பஞ்சாப்,

சத்திஸ்கர்,

ராஜஸ்தான்

 ஆகிய மாநிலங்களில் மட்டுமே உள்ளது.

 உட்கட்சி மோதல் காரணமாகவே மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது.

 உட்கட்சி மோதல் காரணமாகவே பாண்டிச்சேரியில் பலவீனமாகியது.

 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது 52 இடங்களில்தான். அதிலே பாஜகவுடன் ரகசிய டீலிங் வைத்து சபரிமலை பிரச்சினையை உசுப்பேத்தி கேரளாவில் மட்டும் பெற்றது பதினைந்து இடங்கள். பஞ்சாபும் தமிழ்நாடும் தலா எட்டு இடங்களைக் கொடுத்தது.

 அஸ்ஸாம். தெலுங்கானா மாநிலங்கள் தலா மூன்று எம்.பிக்களையும் சத்திஸ்கரும் மேற்கு வங்கமும் தலா இருவரைத் தர

 பீஹார், கோவா, கர்னாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிர, ஒடிஷா, உத்திரப் பிரதேசம் (சோனியா காந்தி மட்டுமே வென்றார். அமேதியில் ஸ்ம்ர்தி இராணியிடம் தோற்றுப் போன ராகுல் காந்தி வயநாட்டால் பிழைத்தார்) , மணிப்பூர் ஆகிய 9 மாநிலங்களில் ஒரே ஒரு இடம் மட்டுமே பெற்றனர். இவற்றைத்தவிர அந்தமான், புதுவை ஆகிய இரு யூனியன் பிரதேசங்களை வென்றனர்.

 ஆக இந்தியாவில் உள்ள  29 மாநிலங்களில்

 அருணாச்சல பிரதேசம்,

ஆந்திரா,

ஹரியானா,

ஜம்மு காஷ்மீர்,(யூனியன் பிரதேசம் என்று சொல்ல மனம் வரவில்லை)

டெல்லி,

இமாச்சல் பிரதேசம்,

குஜராத்,

உத்தர்கண்ட்,

திரிபுரா,

நாகாலாந்து,

சிக்கிம்,

மேகாலயா,

மிசோரம்

 ஆகிய 13 மாநிலங்களில் இந்தியாவை நேரடியாக 45 ஆண்டுகளும் கூட்டணியுடன் பத்து  ஆண்டுகளும் ஆண்ட அக்கட்சிக்கு ஒரு எம்.பி கூட கிடையாது.

 இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

 மாநிலங்களில் வலுவான தலைவர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் காங்கிரஸ் கட்சி தலைமையின் குணாம்சமாக இருக்கிறது. இந்திரா காந்தி துவக்கிய பாரம்பரியம் பேரன் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்கிறது.

 முதல்வர்களை பொம்மை போல மாற்றிக் கொண்டு இருந்ததால் அது பலமிழந்த மாநிலங்கள் பல.

 பிரச்சினைகள் துவங்கும் போதே சரி செய்யாமல் முற்ற விடுவதுதான் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணமாக உள்ளது.  அதனால்தான் மபி ஆட்சியை கவிழ்த்து விட்டு ஜோதிர்யாதித்யா சிந்தியா பாஜகவிற்கு தாவினார். ராஜஸ்தானில் அதனை சச்சின் பைலட் எப்போது வேண்டுமானாலும் தாவலாம். சத்திஸ்கர் நிலையும் நித்திய கண்டம் பூர்ணாயுசுதான்.

 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் அக்கறை கிடையாது. போராட்டங்கள் நடத்தி அவர்களை அணி திரட்டும் முனைப்பும் கிடையாது. கட்சியை கட்டுக் கோப்பாக பாதுகாக்கவும் தெரியாது.

 இப்படியே போனால் நாளை காங்கிரஸ் முற்றிலுமாக மூழ்கிப்போகும் . . .

 இதைப்பற்றி உனக்கென்ன கவலை என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுபவர்களால் கம்யூனிஸ்ட் கட்சிகளோ அல்லது வேறு மாநிலக் கட்சிகளோ பயனடைந்தால் பரவாயில்லை. பாஜகதானே ஆதாயம் அடைகிறது. அதுதான் கவலை அளிக்கிறது.

 காங்கிரஸ் கட்சிக்கு உடனடியான தேவை மக்கள் நம்பக் கூடிய ஒரு தலைமை, அத்தலைமை நேரு குடும்பத்திற்கு வெளியேயிருந்து வருவது மிகவும் நல்லது.

 

 

 

 

No comments:

Post a Comment