Wednesday, November 10, 2021

சென்னையின் மழை நாள் அனுபவம்.


 

மேலே உள்ளது மீம் அல்ல. உண்மை.

மழை நீர் வடிய வாய்ப்பில்லாமல் சாலையில் தேங்குவதும் அது வெள்ளமாகி வீடு புகுவதும் சென்னையில் வருடாந்திர நிகழ்வாகிக் கொண்டுள்ளது. மழையின் அளவு அதிகரிக்கையில் பாதிப்பும் அதிகமாகிறது, மாநிலம் முழுதும் கவனம் ஈர்க்கிறது.

இந்த முறை நேரடி அனுபவமே கிடைத்தது.

வானிலை எச்சரிக்கைகளை எல்லாம் படிக்காமல் சனிக்கிழமை புறப்பட்டு சென்னை சென்று விட்டோம். சனிக்கிழமை இரவுதான் மெல்லமாக தூறல் ஆரம்பித்தது. தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டோம். அன்று இரவு கடுமையான இடியும் மின்னலும் மழையுமாக நீடித்தது. காலையில் மழை நின்று போயிருந்ததால் ஆட்டோவில் நுங்கம்பாக்கத்தில் இருந்து டி.நகர் சென்றோம். வழியில் பல சாலைகள் முழுதும் தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான்.

வேலைகளை முடிக்கும் வரை மழை அவ்வப்போது வந்து போய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. மதிய உணவை பாண்டி பஜாரில் ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலேயே அதிரடி ஆட்டத்தை தொடங்கியது. 

ஓலா மூலம் ஒரு காரை ஏற்பாடு செய்து புறப்பட்டால் தண்ணீர் தேங்கிய ஒரு மேம்பாலத்தில் ஏற முற்பட்ட கார் நின்று விட்டது.  அந்த ஓட்டுனரே ஒரு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்.

நாங்கள் தங்கி இருந்த எங்கள் சங்க அலுவலக பராமரிப்பாளரே ஆட்டோ ஓட்டும் தோழர்தான். இரவு முன் பதிவு செய்திருந்த புகை வண்டியை பிடிக்க சென்ட்ரல் ரயில் நிலையம் செய்வது மிகவும் கடினம் என்றார். பேசின் ப்ரிட்ஜ், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களில் தண்ணீர் தண்டவாளங்கள், பிளாட்பார்ம் ஆகியவை மூழ்கியிருப்பதாக கிடைத்த தகவல்களும் அச்சுறுத்தின. 

காரில் செல்வோம் என்று ஓலாவில் கொஞ்சம் பெரிய வாகனமாக டவேரா புக் செய்தேன். அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக சொன்ன அந்த ஓட்டுனர் பயணத்தை ரத்து செய்து விட்டார்.

இரவு தங்கி விட்டு காலை புறப்படலாம் என்று பயணச்சீட்டை ரத்து செய்தேன். கடைசி நிமிடம் என்பதால் அது வீண் வேலை. ஒரு வேளை ரயில்வே நிர்வாகமே புகை வண்டியை ரத்து செய்திருந்தால் முழு பணமும் கிடைத்திருக்கும். அவசரத்தில் செய்த அந்த முடிவு ஒரு அனுபவப் பாடம்.

சங்க அலுவலக பராமரிப்பாளரே, ஒரு இன்னோவாவை குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து கொடுக்க (அந்த வாகன ஓட்டுனர் வேலூரில் இருந்து ஒரு குடும்பத்தை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால்தான் குறைந்த கட்டணம் வாங்கியதாய் பணம் கொடுக்கும் போது சொன்னார்) திக் திக் பயணம் புறப்பட்டது.

டி.நகர் தண்ணீர் வடிந்திருக்கவில்லை. ஆனால் அடையாறு, கிண்டி போன்ற பகுதிகளில் பிரதான சாலைகளில் தண்ணீர் இல்லை. உள்ளே எப்படி என்று தெரியாது. மியாட் மருத்துவமனை வருகையில் பதற்றம்தான். அது போலவே போரூரை கடக்கையிலும். 2015 ல் A 1 அம்மையார் ஆட்சியில் இந்த பகுதிகள் பாதிக்கப்பட்டதை மறக்க முடியுமா?

வேலூர் வரை தொடர்ந்த மழையோடு வீடு வந்த சேர்ந்த பின்புதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

முன்னைப் போல் இல்லாமல் அரசு இயந்திரம் தீவிரமாக பணியாற்றியதை நேரில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. இப்போது அரசு என்ன செய்தாலும் அது தற்காலிகமானதுதான்.

அடிமை ஆட்சியில் 5000 கோடி ரூபாய் வடிகால் பராமரிப்பிற்காக செலவு செய்யப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று விசாரிப்பது ஒரு புறம் இருந்தாலும் மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் வேகத்துடன் அடுத்த மழைக்காலத்துக்கு முன்பு செய்யப்பட வேண்டும்.

பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி எதுவும் பேசாமல் ஆறு மாத ஆட்சியை மட்டும் வாய் கிழிய வசை பாடும் மத்யமர் முட்டாள் சங்கிகளுக்கு கிடைக்கும் சவுக்கடியாக அரசின் செயல்பாடு அமைய வேண்டும்.

இனியாவது இது நடக்காமலிருக்கட்டும்

 

No comments:

Post a Comment