Saturday, November 13, 2021

மதுரைக்காரங்களுக்கு ரொம்ப கஷ்டம்தான்.

 




நூல்  அறிமுகம்   :  மதுரை போற்றுதும்

ஆசிரியர்               :  ச.சுப்பாராவ்,

வெளியீடு              : சந்தியா பதிப்பகம்

                                     சென்னை - 83

விலை                     : ரூபாய் 200.00

 

எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களின் புதிய நூல் “மதுரை போற்றுதும்”

பொருளாதார, மார்க்சிய நூல்களை மட்டும்தான் நிதானமாக படிப்பேன். மற்றபடி புனைவுகளையும் புனைவற்ற கட்டுரை நூல்களையும் வேகமாக படித்து விடுவேன். “மாதொருபாகன்” போன்ற மொக்கை நூல்கள் விதி விலக்கு.

சுவாரஸ்யமான எளிய நடையில் எழுதப் பட்டிருந்தாலும் இந்த நூலை அப்படி வேகமாக படிக்க முடியவில்லை.

ஆமாம்.

நிஜமாகத்தான்.

பிறந்து, வளர்ந்து, வேலைக்குச் சென்று, திருமணம் செய்து கொண்டு, மகளை திருமணம் செய்து கொடுத்தது என எல்லாமே அவருக்கு மதுரைதான். தான் அறிந்த, உணர்ந்த மதுரையைப் பற்றிய அவரது சொந்த அனுபவங்கள்தான் இந்த நூல்.

நான் அவரைப் போல மதுரைக்காரன் எல்லாம் அல்ல.  ஐந்தாம் வகுப்பில் பள்ளிச்சுற்றுலாவின் போது முதல் முறையாக சென்றவன். பிறகு பெரிய அக்காவின் மாமனார் வீட்டிற்கு அவ்வப்போது சென்றவன், 1982 முதல் 1985 வரை மதுரை சௌராஷ்டிரக் கல்லூரியில் பி.பி.ஏ படித்ததுதான் நீண்ட கால தங்கல். பிற்கு சில திருமண நிகழ்வுகளுக்காக அதை விட அதிகமாக சங்க நிகழ்வுகளுக்காக மதுரை போய் வருவதுதான் என்னுடைய மதுரை வரலாறு.

மதுரையெனும் பாற்கடலை ஒரு பூனையால் எப்படி பருக முடியும் என்று ஆசிரியர் கேட்கிறார். அதே கேள்விதான் எனக்கும். இந்த நூலினை பாலெனக் கொண்டால் அதை முழுமையாக பருகினேன். ஆனால் அதை எப்படி முழுமையாக ஒரு பதிவில் சொல்வது. சில துளிகள் மட்டும் இங்கே.

நூலின் பல அத்தியாயங்களை படிக்கும் போது தோழர் சுப்பாராவின் அனுபவத்தோடு நம் அனுபவத்தை இணைத்துப் பார்த்து மலரும் நினைவுகளுக்குள் சென்றதுதான் நூலை வேகமாக படிக்க முடியாததன் காரணம்.

திருமலை நாயக்கர் மஹால் தூண்களை அவர் விவரிக்கையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நாங்கள் நால்வர் இணைந்து அதனை அணைக்க முயன்றது நினைவுக்கு வந்தது.

அவர் படித்த சேதுபதி பள்ளியைப் பற்றி அவர் எழுதுகையில் ஒவ்வொரு முறை அந்த பள்ளியை கடக்கையிலும் மகாகவி பாரதியின் சிலையை ஆர்வமாக பார்த்தது நினைவுக்கு வந்தது.

டேப் ரிகார்டர்கள் வருகையும் கேஸெட்டுகளில் பாடல் பதியும் அத்தியாயம் படிக்கும் போது கல்லூரி விடுதியில்  பக்கத்து அறை மாணவன் வைத்திருந்த டேப் ரிக்கார்டரும் அதில் புதிய  பாடல்களைக்  கேட்க காஸெட்டுகள் பதிய எங்களிடமும் பணம் கேட்டதும் எரிச்சலோடு கொடுத்ததும் இப்போதும் கடுப்பைத் தந்தது. (டேப் ரெக்கார்டரையோ, கேஸட்டுகளையோ எங்களில் யாரையும் தொடுவதற்குக் கூட அவன் அனுமதிக்க மாட்டான். அவன் போடும் பாடும் பாடல்களை மட்டுமே கேட்க வேண்டும், நேயர் விருப்பமெல்லாம் கிடையாது என்று அதிகாரம் அதிகமானதும் “போடா, நீயும் உன் டேப் ரெக்கார்டரும்” என்று அவனை புறக்கணித்து விட்டோம் என்பது தனிக் கதை.

அந்த அத்தியாயத்தில் அவரது நண்பர் ஒருவர், தன் காதலிக்கு கொடுக்க ஒரு கேஸட் முழுக்க கோயில் புறா படத்தின் வேதம் நீ பாடலின் “கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய்” என்ற வரியை மட்டும் பதிவு செய்ததாக எழுதுகிறார். திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் கோயிலில் அந்த பாடலின் ஷூட்டிங்கை முழுமையாக பார்த்தவன் என்ற முறையில் அந்த வரியை எடுக்க ராஜாபாதர் என்ற நடிகர் பத்துக்கும் மேற்பட்ட டேக்குகள் எடுத்து திட்டு வாங்கியது, அதே வரி மீண்டும் வருகையில் சரிதா ஒரே டேக்கில் முடித்தது மட்டுமா நினைவுக்கு வந்தது, எங்கள் செட் நண்பர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இயற்பியல் ஆசிரியருக்கு “ராஜாபாதர்” என்று பட்டப்பெயர் வைத்ததும் இணைந்தே வந்தது.

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் பற்றி அவர் விவரிக்கையில் கரகாட்டக் காரர்கள் சரஸ்வதி பள்ளிக்கூட விபத்து பற்றி பாடுகையில் ஒரு உறவினரின் இறப்பிற்காக அவசரம் அவசரமாக மதுரை வந்து சுடுகாட்டிலாவது முகம் பார்க்கலாம் என்று தத்தனேரி சுடுகாட்டிற்கு போனதும், சடலம் வரும் வரை காத்திருந்த நேரத்தில் சரஸ்வதி பள்ளி இடிந்து போன விபத்தில் இறந்து போன குழந்தைகளின் சமாதிகள், பெயர் மற்றும் வகுப்போடு வரிசையாக இருந்ததைப் பார்த்து ஆன்றும் மனம் கலங்கியது, இன்றும் தான்.. கரகாட்டக்காரர்கள் பாடும் “இந்த ஊர் மகராசி என்ன செய்தா?” என்ற  அந்த பாட்டு வரிகள் . . .  .

திரை அரங்குகளைப் பற்றி எழுதுகையில் கல்பனாவில் பார்த்த நிழல் நிஜமாகிறது படமும் கல்லூரியின் முதல் நாளன்றே முதலும் கடைசியுமாக கட்டடித்து பார்த்த குருவும்(கல்லூரியே மதியம் வகுப்பில்லாமல் வருகைப்பதிவு கொடுத்து அனுப்பும் நாட்களில் பார்த்த சினிமாக்கள் எல்லாம் கட்டடித்துப் போனது என்ற கேட்டகரியில் வராதல்லவா!) சிந்தாமணியில் பார்த்த தியாகம், சென்ட்ரலில் பார்த்த சகலகலா வல்லவன்,மீனாட்சியில் பார்த்த தராசு, நியூ சினிமாவில் பார்த்த மூன்று முகம், சக்தியில் பார்த்த யுத்த காண்டம், கோன் ஐஸ்ஸும் ஒரு பிரதான அஜெண்டாவாக இருக்கும் ப்ரியா காம்ப்ளெக்ஸில் பார்த்த ஏராளமான படங்கள் என்று எவ்வளவோ நினைவுகள் மனதில் அலை மோதுகிறது. வருகிறது. தங்கம் தியேட்டர் 1.10 பைசா டிக்கெட்டை மறக்க முடியுமா? ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆட்டின் பின்னால் சென்று அக்காவால் இழுத்து வரப்பட்ட கதையை அவர் சொன்ன போது காரைக்குடிக்கு வந்த ஆட்டைப் பார்க்காத ஏமாற்றம் இப்போதும் வந்ததே.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சங்கப்புலவர்களுக்கு சன்னதி இருப்பதை அவர் எழுகையில் ஆஹா, இதை நாம் பார்த்ததே இல்லை என்ற சிந்தனையோடு கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி என்று புதிதாக ஒரு சன்னதி வந்ததும் நினைவுக்கு வந்தது.

எளிய மக்களின் விழாவான “அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்” பார்க்க தேர்வுகள் முடிந்தும் இரண்டு நாட்கள் காத்திருந்து வைகை பாலத்திலிருந்து பார்த்தது மனதுக்குள் வந்து போனது. அழகரைப் பார்க்க தமுக்கம் அஞ்சல் நிலையம் அருகே சென்ற போது அவரது மனைவியின் சக ஊழியர் குல்லாபாய் நீர் மோர் வினியோகித்துக் கொண்டிருந்ததும் நான்கு டம்ப்ளர் வாங்கி குடித்ததாகவும் நூலாசிரியர் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய முகநூல் பதிவு கூட நினைவுக்கு வந்தது.

மெல்லிசைக்குழுக்கள் பற்றிய கட்டுரையும் அருமை. ஒரு வைகுண்ட ஏகாதசி இரவன்று டி.எம்.எஸ் அவர்களின் மூத்த சகோதரர் கீழ வெளி வீதியில் பாடியதைக் கேட்டது மட்டுமா நினைவுக்கு வந்தது. 1980 களில் பிரபலமாக இருந்த ஸ்டைலான பாடகரின் ஒரு ஏராளமான இசைக்கருவிகள் கொண்ட  இசைக்குழு (சத்தியமாக பெயர் மறந்து விட்டது) பின்னாளில் ஒரு மதுரைத் தோழரின் மகளின் திருமணத்தின் போது அவரே தலை வழுக்கையோடும் தொப்பையோடும் ஒரே ஒரு கீ போர்ட், ஒரு ட்ரம்ஸ் மற்றும் இரண்டு பாடகிகளோடு “டைலமோ, டைலமோ, டைலோ டைலோ டைலமோ” என்று பாடிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட பரிதாப உணர்வு இப்போதும்,

ஆடி வீதியில் நடந்த இளையராஜாவின் கச்சேரியைப் பார்த்த பாக்கியசாலி அவர் மட்டுமல்ல, நானும்தான். அந்த நிகழ்வுக்கு புறப்பட்ட போதே என் அக்காவின் மாமனார் “நேத்து மகாராஜபுரம் சந்தானம் கச்சேரி. அதைக் கேட்க நூறு பேர் கூட இல்லை. இன்னிக்கு எல்லாரும் போவாங்க” என்று கடுப்படித்ததை கண்டு கொள்ளாமல் போக நான்கு ஆடி வீதிகளும் நிரம்பி இருந்தது. இங்கே திரைப்படப் பாடல்கள் பாட மாட்டேன். நீங்கள் யார் கேட்காவிட்டாலும்  பரவாயில்லை, அம்மா (மீனாட்சி அம்மன்) கேட்டால் போதும் என்று அவர் சொல்ல கிட்டத்தட்ட கால்வாசி பேர் வெளியேறினார்கள் என்பதும் மறக்க முடியாதது.

தோழர் சுப்பாராவ் குறிப்பிடுகிற உடற்பயிற்சிக் கூடங்கள்தான் என்றைக்குமே பரிச்சயமில்லாதவை.

அவர் வர்ணிக்கிற அந்த கால ஆரவாரமில்லாத மீனாட்சி ஊர்வலத்தை மட்டுமல்ல இந்த கால இரைச்சல் ஊர்வலத்தையும்  நானும் பார்த்துள்ளேன்.

பரவை முனியம்மா குறித்து அவர் எழுதுகையில் “ர” என்பதை உறுமி இசைக்கு தோதாக “ற” என்று அழுத்தமாக உச்சரிப்பார் என்று எழுதுகிறார். அதற்குப் பின்பு தூள் பாட்டை ஒரு முறை கவனித்து கேட்டேன். ஆமாம், “மதுற வீறந்தானே” என்றுதான் பாட்டு தொடங்குகிறது.

மதுரைக்கு சென்று வரும் போதெல்லாம் என் அப்பா வாங்கி வந்த பிரேமவிலாஸ் அல்வாவை நான் இப்போது என் மகனுக்கு வாங்கிச் செல்கிறேன். ஜம்ஜம் சமோசாவும் மசாலா டீயும் நானும் பல முறை ருசித்துள்ளேன். என்னவென்றே அறியாமல் முட்டை பஜ்ஜியை சாப்பிட்டது கூட மதுரையில் ஏதோ ஒரு தியேட்டரில்தான். ஆரம்பத்தில் மிகவும் தரமாக அறிமுகமான செந்நிற ஃப்ரூட் மிக்ஸர் பிறகு அழுகிய பழங்களின் கலவையாகி மதிப்பிழந்து போனது.

நாடகக் கலைஞர்களுடனான அனுபவம் ஒரு சிறப்பான கட்டுரை. சங்கரன் என்று அக்கட்டுரையில் சொல்லப்படுவது சங்கரதாஸ் சுவாமிகள் என்பது புரியத்தான் கொஞ்சம் நேரமானது. அதிலே அவர் குறிப்பிடுகிற நடிகையை நானும் யூட்யூப் மூலம் “பொன்னு ஊருக்கு புதுசு” பட “ஒரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது” பாட்டில் பார்த்து விட்டேன்.

சபரிமலை ஐயப்பன் மதுரையின் இரண்டாவது மாப்பிள்ளை என்றும் அவருக்கு சௌராஸ்டிர இனத்தவர் ஒவ்வொரு வருடமும் திருமண சீர் எடுத்துச் செல்வார்கள் என்பது புதிய செய்தி. (முதல் மாப்பிள்ளை மீனாட்சியை திருமணம் செய்து கொண்ட சுந்தரேஸ்வரர்). அதே போல அழகருக்காக ஆண்டாளின் மாலை ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் என்பதும் அதுவே தனியான ஒரு விழா போல நடக்கும் என்பதை சொல்கிற ஆசிரியர் அந்த வழக்கங்கள் இப்போது இல்லை என்ற ஆதங்கத்தையும் சொல்கிறார்.

மதுரையோடு நான் மனதளவில் மிகவும் நெருக்கமானது என்பது  உலகத் தமிழ் மாநாட்டின் போதுதான். அது பற்றி தோழர் சுப்பாராவ் ஏன் எழுதவில்லை என்று தெரியவில்லை. முதல் நாள் துவக்க விழா தொடங்கி இந்திரா அம்மையார் கலந்து கொண்ட நிறைவு விழா வரை ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். மதுரை நகரின் பல பகுதிகளுக்கும் தனியாக சென்றது என்பது அப்போதுதான், மார்பளவு சிலைகள் (திருவள்ளுவர் மற்றும் தொல்காப்பியர் நீங்கலாக) ஆய்வு நிகழ்வுகள் அறிஞர்களுக்கென்றால் கவியரங்கம், பட்டி மன்றம், நடனம், நாடகம் ஆகியவை மக்களுக்காக. ஹெரான் ராமசாமியின் கம்பீரக் குரலில் கரிகாலன் நாடகம், எம்.ஜி.ஆர் தரையில் அமர்ந்து பார்த்த மேஜர் சுந்தரராஜனின் கல்தூண் நாடகம், ஜெயலலிதா மீண்டும் ஒளி வட்டம் பெற்ற நாட்டிய நாடகம் என உலகத்தமிழ் மாநாடு மறக்க இயலா ஒன்று.

எல்.ஐ.சி மதுரை நகர் கிளை 1 ஒன்று பற்றியும் அவர் எழுதியுள்ளார். 1995 ம் வருட இறுதியில் அந்த வளாகத்தில் நடந்த தென் மண்டல செய்ற்குழுக் கூட்டத்தில்தான் அடுத்த வருடம் நடக்க வேண்டிய தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்துகிறோம் என்று கேட்டுப் பெற்றது 2022 ம் ஆண்டு தென் மண்டல மாநாட்டை மீண்டும் நடத்த உள்ள காலகட்டத்தில் நினைவுக்கு வருகிறது.

மிகவும் அருமையான நூல். இந்த பதிவில் நான் சொல்லாதது ஏராளம்.  சிறப்பாக எழுதிய தோழர் சுப்பாராவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். திரைப்படங்களில் காண்பிக்கிற சட்டைக்குப் பின்னே அரிவாள் வைத்துள்ள மனிதர்களின் நகரமல்ல மதுரை என்பதை உணர்த்துவது என்ற நூலின் நோக்கம் மகத்தான முறையில் நிறைவேறியுள்ளது.

குறைவான அனுபவம் கொண்ட எனக்கே நினைவுகள் மலர்ந்து கொண்டே இருந்தது என்றால் மதுரைக்காரர்களுக்கு இந்த நூலை தொடர்ச்சியாக படிப்பது மிகவும் கஷ்டம்தான்.

மதுரை பற்றிய நினைவுகளோடு நாளை அங்கே நடைபெறவுள்ள “எல்.ஐ.சி பங்கு விற்பனை எதிர்ப்பு மாநில மாநாட்டில் பங்கேற்க  இன்று இரவு தோழர்களோடு மதுரை புறப்படவுள்ளேன், நூலாசிரியரை நேரிலும் பாராட்ட  வேண்டும்  என்ற திட்டத்தோடும்.





பிகு 1 : இந்த பதிவை எழுதுவதற்காக நான் நூலை இன்னொரு முறை புரட்டிப் பார்க்கவே இல்லை. குறிப்பு என்று கூட எதுவும் எடுத்து வைக்கவில்லை. அந்த அளவிற்கு மனதில் பதிந்து போய் விட்டது.

பிகு 2 : மேலே உள்ள புகைப்படங்கள் மதுரையில் எங்கள் கல்லூரியிலும் பின்னொரு நாள் நாயக்கர் மஹால் சென்ற போதும் எடுக்கப்பட்டவை.

பிகு 3 : ஆமாம். இந்த நூலைப் பற்றி மதுரை மண்ணின் மைந்தரான தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் ஏன் இன்னும் எழுதவில்லை? “பத்த வச்சுட்டியே பரட்டை” என்ற உங்கள் மனதின் குரல் எனக்கு கேட்டு விட்டது.  என் கேள்விக்கான பதில்தான் பதிவின் தலைப்பு.

3 comments:

  1. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.

    ReplyDelete
  2. படித்தே ஆக வேண்டும் என ஆவலைத் தூண்டும் விமர்சனம்

    ReplyDelete
  3. படிக்க தூன்றும் நூல் போல இருக்கு. நானும் மதுரைக்காரன் என்ற முறையில் பல விஷயங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் எனக்கு தெரியாத அல்லது மறந்து போன விஷயங்கள் இருக்கலாம். உங்கள் விமர்ச்சனும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete