Wednesday, November 3, 2021

"அரசியல் அறம்" மோடிக்கு பிடிக்காது.



 *நாளொரு கேள்வி: 03.11.2021*


தொடர் எண் : *521*

இன்று நம்மோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மூத்த தலைவர் *அமானுல்லாகான்* (தமிழில் கோவை ஜி.சுதா)

##########################


*காணவில்லை அரசியல் அறம்* 

கேள்வி: அரசியல் அறம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக இருக்கிற கவலைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

*அமானுல்லாகான்*

முன்னாள் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்த திரு *லால்பகதூர் சாஸ்திரி* அவர்கள் பல உயிர்களைப் பறித்த  ரயில் விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக இரண்டுமுறை முன்வந்தார். முதல் சந்தர்ப்பத்தில் ராஜினாமா செய்ய வேண்டாம் என அவரை பிரதமர் நேருவால் சமாதானப்படுத்த முடிந்தது எனினும் இரண்டாவது சந்தர்ப்பத்தில்   அவரால் வெற்றி பெற இயலவில்லை. திரு சாஸ்திரி அவர்கள் அமைச்சரவையிலி ருந்து விலகிக் கொண்டார் இதன் மூலம் அரசியல் அறத்திலும் பொது வாழ்விலும் மிக உயர்ந்த தரத்தை நிறுவினார். இந்த செயல் சாஸ்திரி அவர்களை சுதந்திர இந்தியாவின் மிகவும் மதிப்புக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக ஆக்கியது. 

ஆனால் அரசியல் லட்சியம் மிகுந்த *அந்த நாட்களில் இருந்து இந்தியா இன்று வெகு தூரம் விலகிச் சென்று விட்டது.*   அரசியலின் தரம்  மிகவும் தாழ்ந்து விட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் கண்மூடித்தனமான நோக்கத்தில் அரசியல் அமைப்பு மீதான நம்பிக்கை அரசியல் அறம் மற்றும் பொது பொறுப்பு இவையெல்லாம் அர்த்தமற்றவையாக மாறிவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் ஏற்றுக் கொள்ளவே முடியாத செயல்களை செய்துள்ள அவரது மகன் ஆகியோர்களை பாதுகாக்கும் பொறுப்பு உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள *திரு சாஸ்திரி அவர்களின் மகனுக்கு அளிக்கப் பட்டிருப்பது இதனை தெளிவாக்குகிறது.* வரலாற்றின் வேதனை நிறைந்த முரண் பாருங்கள். 

லக்கிம்பூர் கேரியில் அமைதியான முறையில் நடைபெற்ற *விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் செலுத்தப்பட்ட கார் தனக்கு சொந்தமானது என்பதை அமைச்சர் மறுக்கவில்லை.* குற்றத்தில் ஈடுபட்ட காரில் அமைச்சரின் மகன் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்கொடூர சம்பவம் 4 விவசாயிகள் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரத்தில் 3 பாஜக உறுப்பினர்களின் உயிரை பறித்தது நியாயமான முறையில் புலன் விசாரணை நடைபெற ஏதுவாக, சட்டம்-ஒழுங்கு நிர்வாகங்கள் அறிக்கை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி விலகுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நடைபெறவில்லை 

கடந்த காலத்தைப் போலவே அரசு கார்ப்பரேட் ஊடகங்களின் துணையுடன் இப்பிரச்சனையை நீர்த்துப்போகச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. *சதித் திட்டங்களும் தேச விரோதிகளும் காலிஸ்தானியர்களுமே இச் சம்பவத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது.* அமைச்சர் மகன் மீது முதல் தகவல் அறிக்கையினை பிரிவு 302 கீழ் பதிவு செய்து காவல்துறை ஒட்டுமொத்த பிரச்சினையையும் மிகவும் மென்மையாக கையாண்டது. முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த குற்றவாளிகளிடம் இரண்டு நாட்களுக்கும் மேலாக முதற்கட்ட விசாரணை கூட மேற்கொள்ளப்படவில்லை. *உச்சநீதிமன்றம் தலையிட்டு வலுவான கருத்துக்களைத் தெரிவித்த பின் தான்* உ.பிஅரசு நடவடிக்கை எடுத்தது. அமைச்சரின் மகன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இறுதியில் கைது செய்யப்பட்டார். சிபிஐ மீது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து, *முக்கிய விசாரணை அமைப்புகள் சட்ட அமலாக்க முகமைகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்துவதை விட அதிகாரத்திலுள்ள அரசாங்கத்திற்கே விசுவாசமாக இருக்கிறார்கள்* என்பதை உறுதிப்படுத்துகிறது. 

*லக்கிம்பூர் கொடூரம் ஒரு சாதாரண சம்பவம் அல்ல.* நிலப்பிரபுத்துவ பாணியில் பழிவாங்குதல் மற்றும் காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும்  இதன் மூலம் எங்கள் வழிக்கு வர வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற செய்தி தெளிவாக உரக்க கூறப்பட்டுள்ளது.

இத்தகையதொரு சூழல் முன்னேற்பாடாகவே உருவாக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அமைச்சர் அஜய் மிஸ்ரா சில தினங்களுக்கு முன்பு தான் விவசாயிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அவர்களது நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார் .இது தெளிவாக வன்முறையை தூண்டும் ஒரு வழக்கு. *அரசியலமைப்பு பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்த மத்திய அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரிடம் இருந்து வரும் அச்சுறுத்தல் சாதாரண விஷயம் அல்ல.* ஆனால் தற்போது இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன்பு ஹரியானா முதலமைச்சர் தனது ஆதரவாளர்களிடம் தடைகளை எடுத்து விவசாயிகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவின் பிரித்தாளும் கொள்கைகளின் விளைவாக அசாமில் நிகழ்ந்த வன்முறைகளில் *உயிரற்ற உடலின் அருகே நடனமாடிய நிகழ்வு* உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எந்த ஒரு முதிர்ந்த ஜனநாயக நாட்டிலும் காலம் தாழ்த்தப்படாமல் இத்தகைய நபர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் அதிதீவிர வேகத்துடன் செய்வதில் முனைப்பு காட்டும் *நமது பிரதமர் இதுகுறித்து கருத்து  தெரிவிப்பார், தனது ஆதரவாளர்களை நல்வழிப்படுத்துவார்* என நம்பப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு அதீதமானது.  அவர் அமைதி காத்தது மட்டுமல்ல; லக்கீம்பூரில் உயிரிழந்தவர்களுக்காக  இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. அதே சமயம் மனித உரிமை ஆர்வலர்கள் இந்தியாவிற்கு அவப்பெயர் வாங்கித் தருவதாகவும் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும் எச்சரித்துள்ளார். அவர்களது செயல்களை விமர்சித்துள்ளார். ஆனால் பிரதமரே தேர்ந்தெடுத்து செயல்படுபவர் என்பது மறுக்க முடியாத உண்மை. *அவர் எந்தெந்த நிகழ்வுகளில் அமைதி காப்பார்* என பட்டியலிடத் தேவையில்லை.

நாம் பெருமிதம் கொண்டுள்ள பன்முகத்தன்மை மிக்க, உயர்ந்த இந்திய மக்களாட்சிக்கு இது மிகுந்த கடினமான காலம் ஆகும். ஐனநாயகத்தின் பல்வேறு விழுமியங்களில் இருந்து இந்தியா நழுவிச் சென்று கொண்டுள்ளது. *எந்த ஒரு ஜனநாயகத்திலும் மிக அடிப்படையான அம்சம் அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதாகும்.* இதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டமும் எவ்வித சந்தேகமும் இன்றி வலியுறுத்துகிறது. ஆனால் இன்று ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவை மிகவும் பலவீனப்பட்டு உள்ளது. எண்ணற்ற பிரச்சினைகளை தேசம் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தேசத்தை ஒன்றிணைப்பது உடனடித் தேவையாகும்.

நமது மக்களில் பெரும்பகுதியினர் அதீத பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். வருவாய் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் தேசம் மிகுந்த சமத்துவமின்மையை கண்டுவருகிறது. அரசு வருவாயை உயர்த்துவதற்கு மறைமுக வரிகளை முழுமையாக நம்பி இருப்பது ஏழைகள் மற்றும் நலிவுற்ற பிரிவினரை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.இப்பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வினைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக *அரசு பொய்யான ஒரு பிம்பத்தை தோற்றுவிக்கும் பணியில்* ஈடுபட்டு வருகிறது. இலவச தடுப்பூசியும், இலவச பொது விநியோகமும் ஆட்சியாளர்களின் மகத்தான சாதனைளாக விளம்பரப்படுத்தப்பட்டு அன்றாட வாழ்வின் கடினமான சூழல் சாதுரியமாக மூடி மறைக்கப்படுகிறது.

உண்மை நிலை யாதெனில் உலக பட்டினியால் வாடுவோர் குறியீட்டில் இந்தியா மேலும் பின்னோக்கி சென்றுள்ளது. 116 நாடுகளில் 101 வது இடத்தினைப் பெற்றுள்ளதன் மூலம் பசிக் கொடுமையில் இந்தியா மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வறிக்கை ஆதாரமற்றது என கூறி குறிப்பிடும் அதேவேளையில் அரசு 80 கோடி இந்தியர்களுக்கு இலவசப் பொது வினியோகத்தினை சாத்தியப்படுத்தி உள்ளதாக பெருமிதம் கொள்வது இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது வாழ்வதற்கான மிக முக்கியமான அடிப்படை உரிமைகளில் ஒன்றாக *உணவுக்கான உரிமை* உள்ள நிலையில் அரசு இலவச பொது விநியோகம் குறித்து பெருமிதம் கொள்ள முடியாது. அசுர வளர்ச்சி அடைந்த அதிக டாலர் பில்லியனர்களைக் கொண்ட ஒரு தேசத்தில் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பொருட்களை நம்பி இருப்பது மிகவும் கவலை கொள்ள வேண்டியதாகும் இத்தகைய தலைகீழ் வளர்ச்சி நீண்ட காலம் தக்க வைக்க முடியாததாகும்.

கடந்த சில வாரங்களில் *காஷ்மீரில்* அதிகரித்து வரும் வன்முறையிணையும், சிறுபான்மையினர் குறிவைத்துக் கொல்லப்படுவதையும் நாம் காண்கிறோம். காஷ்மீரில் அனைத்தும் நன்றாக நடப்பதாக அரசு கூறுக்கொள்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த கொடூரக்கொலைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பொது சமூகம் கண்டித்துள்ளன. சாதாரணக் காஷ்மீரியர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஜனநாயகத்தன்மை குறைந்துள்ளதை காண்கின்றனர். எனவே *அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கையை* தொடங்குவதே உடனடித் தேவையாகும்.

பிரதம மந்திரியால் *அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாய்* என வர்ணிக்கப்படும் நமது இந்திய ஜனநாயகம் உயிர் பிழைத்திருக்க வேண்டும் எனில் தேர்தல் லாபங்களுக்காக பிரித்தாளும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களின் பாதை கைவிடப்பட வேண்டும்.அதிகரித்துக் கொண்டிருக்கும் சொத்து மற்றும் வருவாய் சமத்துவமின்மையை குறைக்க அரசாங்கம் பொருளாதாரத்தில் முனைப்புடன்  பங்காற்ற வேண்டும். இத்தகைய சமத்துவமின்மையும், பிரித்தாளும் அரசியலும் சமூக முரண்பாடுகளை அதிகரிக்க வழிவகுக்கும். இது தேச நலனுக்கு ஆபத்தானது நமது அரசியலமைப்புச் சட்டத்தினை தான் புனிதமாகக் கருதுவதாக நமது பிரதமர் கூறுவது உண்மையாயின், அவர் வழி நடத்தும் இந்த அரசு அரசியலமைப்பின் மதிப்பினையும், அறநெறிகளையும் உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். அதை செயல்படுத்த நமது பிரதமர் லக்கிம்பூர் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் முதல் படியாக உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஷ்ராவினை மந்திரிசபையிலிருந்து நீக்க வேண்டும்.

*செவ்வானம்*

No comments:

Post a Comment