Friday, November 19, 2021

நம்பிக்கை நாயகர்கள்

 



 இன்னும் ஏழு நாட்கள் கடந்திருந்தால் ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்திய போராட்டம் இன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.

 விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஜனநாயகத்திற்கு புறம்பாக, வாக்கெடுப்பு நடத்தாமல் மோசடியாக நிறைவேற்றியது.

 விவசாயிகளுக்கு *"சுதந்திரம்"* தருபவை என இந்தியப் பிரதமர் 

சொன்னார்

 ஆனால் இச் சட்டங்கள் விவசாயம் சந்தித்துள்ள இன்னல்களுக்கு 

மருந்தாக  அமையாது.

 விவசாயிகளுக்கு கிடைத்துள்ள சுதந்திரம் 

சுரண்டலுக்கு *அவர்கள் தங்களைளை சுதந்திரமாக ஆட்படுத்திக் 

கொள்ளலாம்* என்பதுதான். 

கார்ப்பரேட்டுகளின்  *அடிமைகளாக மாறிக் கொள்வதற்கான* சுதந்திரம். 

 தற்கொலை செய்து கொள்வதற்கான* சுதந்திரம். 

 இந்த சட்டங்கள் விவசாயப் பிணிகளை மேலும் மோசமாக்கக் கூடியவை.. 

ஒரே வரியில் சொல்வதானால் இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலன் கிட்டச் செய்யும் ஏற்பாடுகளே ஆகும். 

இவை விவசாயிகள்,  நுகர்வோர்  நலன்களுக்கு  முற்றிலும் எதிரான சட்டங்களே.

பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தையை ஊக்குவிக்கிற  பெரு வணிகர்களின் ஆன்லைன் சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்கும் சட்டம்.

 

குறைந்த பட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு தர வேண்டுமென்பதைப் பற்றிப் பேசாமல் ஒப்பந்த விவசாயத்தை வளர்ப்பது பற்றிப் 
பேசியது.

 

.மிகவும் பலவீனமான அதிகார மட்ட சட்ட முறையைத்தான்   விவசாயிகள் குறைகளைத்   தீர்க்க முன் மொழிகிறது.   

 

மொத்த விவசாயச் சந்தையும் கார்ப்பரேட் வசம் கை மாற்றப்படும். 

 

இதற்கு எதிராகத்தான்

 

26 நவம்பர் 2020 அன்று விவசாயிகளின் “டெல்லி சலோ” போராட்டம் தொடங்கியது.

 

அவர்கள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்காக எத்தனையோ தடைகளை உருவாக்கினார்கள். சாலைகள் வெட்டப்பட்டது. முள் வேலிகள் கொண்டு வரப்பட்டது. அகழிகளை வெட்டி முதலைகளை விடவில்லை. மற்றபடி எல்லா அடக்குமுறை ஆயுதங்களும் பிரயோகிக்கப்பட்டது.

 எத்தனை தடைகளை உருவாக்கினாலும் அவற்றை தகர்த்து எறிந்து விட்டு உறுதியாக போராடினார்கள்.. லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் டெல்லிக்கு சென்று அவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். மோசமான பனியிலும் கடுங்குளிரிலும் கடுமையான வெயிலிலும் வெட்ட வெளியில் அவர்கள் காட்டிய தீரம் பிரமிக்கத் தக்கது.

 பிரிவினைவாதிகள்,

காலிஸ்தானிகள்,

அர்பன் நக்ஸல்கள்,

தரகர்கள்,

வெளி நாட்டு சதிகாரர்கள்,

இந்திய விரோதிகள்

 என்று எத்தனையோ அவதூறுகள் அள்ளி வீசப்பட்டது.

 குடியரசு தினத்தன்று குழப்பங்களை உருவாக்க முயற்சிகள் செய்தார்கள். ஒருவரை கொலை செய்து மத மோதலை உருவாக்கவும் முயற்சித்தனர். காரேற்றிக் கொண்டு அச்சுறுத்தினார்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள் கொண்டு விஷத்தைக் கக்கினார்கள். திரைப்பட நட்சத்திரங்களும் கிரிக்கெட் தெய்வங்களும் செல்லாக்காசினராய் தங்களை அம்பலப் படுத்திக் கொண்டனர்.

 எதற்கும் அவர்கள் அசையவில்லை. எஃகு போன்ற உறுதியை வெளிப்படுத்தினார்கள்.

 ஒன்றுபட்ட போராட்டத்தை முறியடிப்பது சாத்தியமில்லை என்ற சரித்திரத்தை உருவாக்கினார்கள்,

 500 ஆண்டுகள் போராடினாலும் ஒரு கமா கூட மாற்றப்படாது, ஏனென்றால் இது பாஜக அரசு என்று அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகள் உளறி கொண்டிருந்த போதுதான்

 மோடி சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

 இடைத் தேர்தல்களில் பெற்ற அடி, நெருங்கி வரும் உபி, பஞ்சாப் தேர்தல்கள் அச்சத்தை அளித்திருக்கும். ராணுவ வீரர்களை பலி கொடுத்து அவர்களின் சடலங்களைக் காட்டி வெற்றி பெறுவது ஒவ்வொரு முறையும் சாத்தியமல்ல என்ற உண்மையும் புரிந்திருக்கும்.

 மோடி தன் முடிவுகளை அறிவிக்க மேற்கண்ட காரணங்கள் ஒரு தூண்டுதலாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர ஒரு ஆண்டாக நடைபெறும் உறுதியான போராட்டம்தான் அடிப்படையான காரணம்.

 உறுதியான போராட்டத்தைத் தவிர வெற்றிக்கு வேறு குறுக்கு வழி கிடையாது என்பதையும் மிக மோசமான அடக்குமுறை ஆட்சியாளர்களையும் முறியடிக்க முடியும் என்பதையும் இந்திய விவசாயிகள் உலகிற்கே உணர்த்தியுள்ளார்கள்.

 19.11.2021 – இந்திய வரலாற்றின் பொன் நாள்.

 தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றியதற்கு எதிராக போராடும் தொழிலாளர்கள்,

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராக போராடும் ஊழியர்கள்,

எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக போராடும் எங்கள் சங்கம்

 என அனைவருக்கும்  உற்சாகத்தையும் எழுச்சியையும் உறுதியையும் அளித்துள்ளார்கள் நம்பிக்கை நாயகர்களான இந்திய விவசாயிகள்.

 கிட்டத்தட்ட எழுநூறு விவசாயிகள் தம் இன்னுயிர் நீத்து இந்திய விவசாயிகளின் போராட்டத்தை வெற்றிபெறவைத்துள்ளனர். அந்த தியாகிகளுக்கு வீர வணக்கம்.

 மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாகவே விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றையும் அவர்கள் கண்டிப்பாக வென்றெடுப்பார்கள்.

 வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை நீங்கள் அளித்துள்ளீர்கள். இத்தனை நாள் தயக்கமாக இருந்த அமைப்புக்களும் கூட இனி போராட்டப் பாதையில் பயணிக்கும்.

பிகு : மேலே உள்ள ஓவியம் தோழர் ரவி பாலேட் அவர்களின் கைவண்ணம்.

No comments:

Post a Comment